அடுத்ததாக ஒரு அழகான பாடல்.
தலைவன் பிரிந்திருக்கிறான், தலைவி சோர்வுறுகிறாள். தலைவியிடம் கண்ட பொலிவிழந்த நிலைக்கு தோழி கவலையுறுகிறாள். தன் நிலைக்குறித்து தோழிக்கு தலைவி இவ்வாறு சொல்லுகிறாள்.
தலைவன் பிரிந்திருக்கிறான், தலைவி சோர்வுறுகிறாள். தலைவியிடம் கண்ட பொலிவிழந்த நிலைக்கு தோழி கவலையுறுகிறாள். தன் நிலைக்குறித்து தோழிக்கு தலைவி இவ்வாறு சொல்லுகிறாள்.
காதலர் உழையர் ஆகப் பெரிது உவந்து,
சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற;
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்
புலப்பில் போலப் புல்லென்று
அலப்பென்-தோழி!-அவர் அகன்ற ஞான்றே
தோழி - , காதலர் உழையர் ஆக - தலைவர் பக்கத்தவராக இருப்ப,
பெரிது உவந்து - மிக மகிழ்ச்சியுற்று,
சாறுகொள் ஊரின் - விழாக்கொண்ட ஊரினர் மகிழ்வதைப் போல,
மன்ற - நிச்சயமாக,
புகல்வேன் - விரும்பி மகிழ்வேன்;
அவர் அகன்ற ஞான்று - அவர் என்னைப் பிரிந்து சென்ற காலத்தில், அத்தம் நண்ணிய - பாலைநிலத்திற் பொருந்திய,
அம் குடிசிறு ஊர் - அழகிய குடியையுடைய சிறிய ஊரில்,
மக்கள் போகிய - மனிதர் நீங்கிச் சென்ற ,
அணில் ஆடு முன்றில் - அணில் விளையாடுகின்ற முற்றத்தையுடைய, புலம்பு இல் போல - தனிமையுள்ள வீட்டைப்போல,
புல்லென்று - பொலிவழிந்து, அலப்பென் - வருந்துவேன்.
விழாகாலத்தில் இயல்பைவிட மக்கள் மிகவும் இன்புற்றிருப்பர் என்பதனால், தலைவன் அருகாமையில் தலைவி இயல்பைக்காட்டிலும் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாயும் அவர் தன்னை விட்டுப் பிரிந்திருக்கையில், பாலை நிலத்தின் வெம்மைத் தாங்காது குடிலை விட்டு மக்கள் போயினப்பின் தனித்திருக்கும் அக்குடிலில் தனியாக ஆடுகின்ற அணிலைப்போல் துன்புற்றிருப்பேன் எனவும் கூறுகிறாள். இதன் மூலம் தன் வேறுபாட்டிற்கு காரணம் தலைவன் பிரிந்ததே என்பதை தோழிக்குத் தெரிவிக்கிறாள்.
மக்களில்லா தனித்த வீடு பொலிவிழந்திருப்பதுப்போன்று தானும் பொலிவிழந்து காண்பேன் எங்கிறாள்.
தலைவன் அருகில் இருந்தால் விழாக்காலத்தில் மக்களின் இன்பம் போல் தனது இன்பம் மிகுதியாகவும், இல்லாத போது பாலை வெப்பத்தில் தனித்திருக்கும் அணிலாடும் முற்றம் போல் துன்பம் மிகுந்ததாகவும் இருக்கும் என்று மிக அழகாக தன் நிலை குறித்து கூறுகிறாள் தலைவி.
மக்கள் போகிய வீட்டு முற்றத்தை அணிலாடு முன்றிலென்று சிறப்பித்ததனால் இச்செய்யுளை இயற்றிய ஆசிரியர் அணிலாடு முன்றிலார் என்னும் பெயர் பெற்றார் என்பது சிறப்புச் செய்தி.
மற்றொரு குறிஞ்சி நிலப்பாடல்.
அமிழ்துபொதி செந்நா வஞ்ச வந்த
வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவையைப்
பெறுகதில் லம்ம யானே பெற்றாங்
கறிகதில் லம்மவிவ் வூரே மறுகில்
நல்லோள் கணவ னிவனெனப்
பல்லோர் கூறயா நாணுகஞ் சிறிதே
இப்பாடலில் மடலேறுதல் என்ற வழக்கம் காட்டப்படுகிறது. தோழியால் குறை மறுக்கப்பட்ட தலைவன் என் துன்பத்திற்கு காரணம் இவள் என்பதை யாவரும் அறியுமாறு மடலேறுவேன் எங்கிறான்.
அமிழ்து பொதி- அமுதத்தின் இனிமை நிரம்பிய,
செ நா- செவ்விய நாவானது,
அஞ்ச- அஞ்சும்படி,
வந்த-முளைத்த, வார்ந்து இலங்கு-
நேராகி விளங்குகின்ற,
வை எயிறு- கூர்மையாகிய பற்களையும்,
சின்மொழி- சிலவாகிய சொற்களையும் உடைய,
அரிவையை- தலைவியை,
யான் பெறுகதில்- நான் மடன்மா ஏறுதலாற் பெறுவேனாக;
பெற்றாங்கு-பெற்றபின்பு,
இ ஊர்- இந்த ஊரில் உள்ளார்,
அறிகதில்- அறிவாராக;
பல்லோர்-பலர்,
மறுகில்- வீதியில், நல்லோள் கணவன் இவன் எனக் கூற-இந்த நல்லாளுடைய தலைவன் இவன் என்று சொல்லா நிற்க,
யாம் சிறிது நாணுகம்-நாம் சிறிது நாணுவேம்!
அமிழ்து என்றது எயிற்றில் ஊறிய நீரை. பற்கள் கூரியனவாதலின் நா அஞ்சியது; அஞ்சினமையின் அது சில மொழி கூறியது. சின் மொழியாள் என்றது, அதிகம் பேசியறியான் என்பதால். அரிவை என்றது பருவம் குறியாமல் பெண் என வந்தது.’
தலைவன் தன்னுடைய உருவத்தையும் தலைவியினது உருவத்தையும்எழுதி அமைத்த படத்தைக் கையில் ஏந்தி, மடன்மாவிலேறி மறுகிற்செல்வானாதலின், அந்நிலை, இன்னாள் கணவன் இவன் என்று ஊரினர் அறிதற்கு ஏதுவாயிற்று. இவ்வாறு ஊரறிய தன் விருப்பத்தைத் தெரிவித்து தலைவியை அடைதல் உண்டு.
மடலேறத் தொடங்கும்போது நாணத்தை முற்ற நீத்தவனாதலின், ‘சிறிது நாணுகம்’ என்றான்
தலைவன் தலைவியைத் தானடையும் பொறுட்டு மடலேறுவேன் என்று கூறி நிற்பது வழக்கம். ஆண் மடலேறுவது உண்டு ஆயின் பெண் மடலேறுவேன் என்பதாக கூறுவது மட்டுமே உண்டு.
இன்னும் சில பாடல்களுடன் விரைவில்
அன்புடன்
உமா
No comments:
Post a Comment