Saturday 12 May 2018

ஐங்குறுநூறு - நெய்தல்



அடுத்ததாக ஐங்குறுநூறில் நெய்தல் நிலப் பாடல்கள் 100 பற்றி அறிவோம், சுவைப்போம்.
ஐங்குறுநூறு, சங்க இலக்கியத்தில் அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை நூல்களுக்கு காலத்தாற் பிற்பட்டது எனவும், ஐந்திணைகளின் மரபுகளை ஒருங்கே தெளிவுபடுத்தும் வகையாக திட்டமிட்டு தொகுக்கப்பட்ட நூல் என்பதும் அறிஞர்கள் கருத்து. ஒவ்வொருத் திணையிலும் முதல், உரி மற்றும் கருப்பொருள் தோன்ற உள்ளுறையாகவும் இறைச்சிப்பொருள் அமைய பாடப்பட்ட அகநூல். ஆசிரியப்பாவால் அமைந்தது. இதனைப் பாடியவர் அம்மூவனார். இதன் சொல்லாட்ச்சியும் செறிவும் அறிந்து போற்றத்தக்கன. சுவைபோம் வாருங்கள்.

ஐங்குறுநூறில் இரண்டாவது 100 நெய்தல் நிலத்திற்குறியது.
நெய்தல் – கடலும் கடல் சார்ந்த இடமும், இரங்கலும் இரங்கல் நிமித்தமும்- மனதிற் கொள்வோம்

இதில்
தாய்க்குரைத்த பத்து
தோழிக்குரைத்த பத்து
கிழவற்குரைத்த பத்து
பாணற்குரைத்த பத்து
ஞாழற் பத்து
வெள்ளாங்குருகுப் பத்து
சிறுவெண்காக்கைப் பத்து
தொண்டிப் பத்து
நெய்தற் பத்து
வளைப் பத்து
என ஒவ்வொன்றிலும் பத்து பாடல்களாக 100 பாடல்கள் உள்ளன. 

தலைப்புகளுக்கொப்ப ஒவ்வொரு பத்திலும் கருப்பொருள் உள்ளுரை உவமையாக, இறைச்சி அமைய பாடல்கள் அமைந்துள்ளன.

சிலவற்றை இங்கே காண்போம்.

தாய்க்குரைத்த பத்து

அன்னை வாழிவேண் டன்னை உதுக்காண்
ஏர்கொடிப் பாசடும்பு பரியஊர்பு இழிபு
நெய்தல் மயக்கி வந்தன்று நின்மகள்
பூப்போல் உண்கண் மரீஇய
நோய்க்குமருந் தாகிய கொண்கன் தேரே.

அன்னை – அன்னை,
வாழி– வாழ்வாயாக,
வேண்டன்னை – விரும்புவாய் அன்னையே
உதுக்காண் – அங்கே பார், 
ஏர்கொடி – அழகியக் கொடி, 
பாசடும்பு – பசிய அடும்பு, 
பரிய – விரைவாக,
ஊர்பு – நகரும்,
இழிபு – மேலும் கீழும்,  
நெய்தல் – குவளை மலர்கள், 
மயக்கி – கலந்து,
வந்தன்று – வந்துள்ளது, 
நின் மகள் – உன்னுடைய மகள், 
பூப்போல் – பூப் போன்ற, 
உண்கண் – மை உண்ட கண்கள்,
மரீஇய – தோன்றிய, 
நோய்க்கு மருந்தாகிய – பசலை நோய்க்கு மருந்து ஆகிய,
கொண்கன் – தலைவன், 
தேரே – தேர்

அன்னையே, வாழ்க! மகிழ்வோடு அங்கே பார்! உன் மகளின் பூப்போன்ற மை இட்ட கண்களில் தோன்றிய பசலை நோயைத் தீர்க்கும் மருந்தாகிய நெய்தல் நிலத்துத் தலைவனின் தேர் ஊர்ந்து, மேலும் கீழும் அசைந்து, அழகிய அடும்புக் கொடிகளைச் சக்கரத்தால் அறுக்கின்றது. அறுக்கப்பட்ட அந்தக் கொடிகள் குவளை மலர்களுடன் கலக்கின்றன.
அன்னை என்பவள் இங்கு செவிலித்தாய். செவிலித் தாயிடம் தோழி கூறும் செய்திகள் இந்தப் பத்துப் பாடல்களில் சொல்லப்பட்டுள்ளன. காதலன் காதலி உறவு திருமணமாக மாறுகிறது. தலைவனின் தேர் கடலோரக் கானல் மணலில் வருகிறது. திருமணச் செய்தியுடன் வருகிறது. தோழிக்கும் தலைவிக்கும் மகிழ்ச்சி. தாயும் மகிழவேண்டும் என்பது அவர்களின் ஆவல்.
இங்கு தேரானது அடும்புக்கொடிகளைச் சக்கரத்தால் அறுக்க வருகின்றது என்றது, களவு வெளிப்பட்டும் மணமுடிக்காது பிரிந்தான் தலைவன் என அலர்கூறுவோர் மனமழியும் படியாக மணமுடிக்க வந்தான் தலைவன் என்பதாம்.

அடுத்து

நீல் நிறப் பெருங் கடல் புள்ளின் ஆனாது,
துன்புறு துயரம் நீங்க,
இன்புற இசைக்கும், அவர் தேர் மணிக் குரலே.   
 Image result for நெய்தல்
இங்கு
நெடுங்கடலின் மேற் சென்றவர்களுக்கு கடற் பறவைகளின் ஒலி, பட்டத்துன்பத்தினையெல்லாம் போக்கி எவ்வளவு இன்பத்தைத் தருமோ அப்படி இவள் பட்ட துன்பமெல்லாம் நீங்கி இன்புரும் வகையில் தலைவன் தேரின் மணியானது ஒலிக்கின்றது என்கிறாள்.
கடற்பறவையின் ஒலி கடற்மேற் சென்றவர்க்கு நிலம் அருகிலிருப்பதைக் காட்டும். கடற்மேற் பட்டத்துன்பம் போக தன் சுற்றத்தினரை சேரும் இன்பம் கொள்வர். பறவை ஒலி தேரின் ஒலிக்கு உவமையானது. தேரின் ஒலி மணம் முடிக்க தலைவன் வந்ததைக்காட்டுகிறது. இவள் துன்பம் தீர்ந்து இன்புறுமாறு தலைவன் விரைவில் வரைந்துக் கொள்வான் என்பதை உணர்த்துவதாம்.

இப்படி வரைந்து கொள்ள – மணம் முடிக்க தலைவன் வருவதை பற்றியும் அவன் செல்வ வளம் பற்றியும், தலைவி அடையும் இன்பம் பற்றியும் வரைவு நீட்டித்தல் பற்றியும் செவிலிக்கு தோழி உரைப்பதாய் அமைகிறது இப்பத்துப் பாடல்கள்.

அடுத்த பத்து தோழிக்குரைத்த பத்து

தலைவன் வரவுக்காக மனம் இரங்குதலைக் கூறுவது நெய்தல் திணை. நெய்தல் நிலத் தலைவி இப்படி மனம் இரங்கித் தன் தோழியிடம் கூறும் செய்திகள் இதில் உள்ளன.  அம்ம வாழி தோழிஎன்று எல்லாப் படல்களும் தோழியை விளித்துக் கூறுகிறது.

அம்ம வாழி, தோழி! பாணன்
சூழ் கழிமருங்கின் நாண் இரை கொளீஇச்
சினைக் கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை
பிரிந்தும் வாழ்துமோ நாமே
அருந் தவம் முயறல் ஆற்றாதேமே?

கழியில் வாழும் சினை கொண்ட கயல்மீன் தூண்டில் கயிற்றில் தொங்கும் இரையை விழுங்கிவிட்டுத் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் துறையை உடையவனின் நட்பினைக் கொண்ட நான் அவனைப் பிரிந்து வாழமுடியுமா? அவனோடு சேர்ந்து வாழத் தவம் செய்து ஊழ்வலிமையைப் பெற்றிருக்கவில்லையே. (அவன் உறவால் அவள் கருவுற்றிருத்தல் சினைக்கயல் என்னும் இறைச்சிப் பொருளால் உணர்த்தப்பட்டுள்ளது.)

மற்றொருப்பாடல்

அம்ம வாழி தோழி! நென்னல்
ஓங்கு திரை வெண் மணல் உடைக்கும் துறைவற்கு
ஊரார் பெண்டென மொழிய, என்னை
அது கேட்டஅன்னாய் என்றனள் அன்னை,
பைபய, ‘எம்மை என்றனென் யானே.

தோழி, நீ நீடு வாழ்வாயாக! உயர்ந்து வரும் அலைகள் வெள்ளை மணலை அரிக்கும் கடற்கரைத் துறையை உடையவனாகிய தலைவனுக்கு என்னைப் பெண்டு என ஊரார் பழித்துப் பேசினார்கள். அன்னை என்னை நோக்கி, அது உண்மையா என்று கேட்டாள். நான் மெதுவாக அது சரி தான் என்று கூறினேன்.
கடலலையானது கரையிலுள்ள மணலை அரிப்பதுப் போன்று, ஊராரின் அலர்- பழிச்சொல் என் வெள்ளை மனத்தினை புண்படுத்தியது என்பது இறைச்சியாக அமைந்துள்ளது.

கிழவற்கு உரைத்த பத்து

பரத்தையரை நாடிச் சென்ற தலைவன் திரும்புகிறான். தோழியிடம் ஊடல் தீர்க்க கேட்க, தீர்க்கும் விதமாக
கண்டிகும் அல்லமோ, கொண்க! நின் கேளே?
என்று தலைவனை அழைத்து தோழி கூறுவதாய் அமைந்த பாடல்கள் இப்பத்தும். இதில் பரத்தையுடன் கடலாடியதையும்,பரத்தையரின் செயல்களையும் அதன் மூலம் தலைவன் பரத்தையரை நாடி இருந்ததை கண்டித்தும் ஊடல் நீக்குவதாய் பாடல்கள் அமைந்துள்ளன.

அடுத்து பரத்தையர் இல்லிலிருந்து மீளும் தலைவனை ஏற்றுக் கொள்ளுமாறு தலைவியைப் பாணன் வேண்டுகிறான். தலைவி ஏற்க மறுத்து அவனுக்குச் சொல்லும் சொற்கள் பாணர்க்குரைத்த பத்தாயிற்று

நன்றே, பாண! கொண்கனது நட்பே
தில்லை வேலி இவ் ஊர்க்
கல்லென் கௌவை எழாஅக்காலே.

தலைவன் பரத்தையரை நாடி நின்றதை ஊர்மக்கள் ஆங்காங்கே பேசிக்கு கொள்ளாதிருந்த போது அவனோடு நான் கொண்ட நட்பு நன்றாகவே இருந்தது. இப்போது இல்லை என மறுத்ததாம்.

பண்பு இலை மன்ற, பாண! இவ் ஊர்
அன்பு இல கடிய கழறி,
மென் புலக் கொண்கனைத் தாராதோயே!

பாண! நீ பண்பே இல்லாதவன். இந்த ஊர் அவனைக் கடிந்து பேசுவது போல நீயும் அவனைக் கடிந்து பேசி என்னிடம் கொண்டுவராதவன் ஆயிற்றே என்று கூறி வாயில் மறுக்கிறாள்

ஞாழற்பத்து

ஞாழல் என்பது ஒரு வகை மரம்ஞாழல் இடம் பெறும் வகையிலும் அதன்வழி உட்பொருள் விளங்கவும் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி ஞாழற் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

எக்கர் ஞாழல் சிறியிலைப் பெருஞ் சினை
ஓதம் வாங்கும் துறைவன்
மாயோள் பசலை நீக்கினன், இனியே!

ஞாழற் சினையை ஓதம் வளைக்கும் துறைவனென்றது
தன்வழிவாராத சுற்றத்தாரைத் தன்வழியாக்குகின்றானென்றதாம். சுற்றத்தாரை உடன்படச்செய்து தலைவியின் பசலை நீக்கினான் என்பதாம்.

வெள்ளாங்குருகுப் பத்து

நீர்ப்பறவை இனத்துள் ஒன்று வெள்ளாங்குருகு. வெள்ளாங்குருகு இடம் பெறும் வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி வெள்ளாங்குருகுப் பத்து என்ற பெயரால் குறிக்கப் படுகிறது. இப்பகுதியில் தலைவி, வெள்ளாங்குருகை உள்ளுறையாக வைத்து, தலைவனுக்கு வாயில் மறுக்கும் செய்தி இடம் பெற்றுள்ளது.

வெள்ளாங்குருகின் பிள்ளை செத்துவிட்டது என்று எண்ணிக்கொண்டு பார்ப்பதற்காக அருகில் சென்ற நாரை என்ன செய்தது என்று நிலத்தின் தன்மையைத் தமிழரின் பண்பாட்டோடும், நாகரிகத்தோடும் இணைத்துக் கூறும் பாடல்கள் 10 இந்தப் பத்தில் உள்ளன.

வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென,
காணிய சென்ற மட நடை நாரை
கானல் சேக்கும் துறைவனோடு
யான் எவன் செய்கோ? பொய்க்கும் இவ் ஊரே?

வெள்ளாங்குருகென்றது பரத்தையாகவும் பிள்ளையென்றது பரத்தையோடு தலைமகனிடை உளதாகிய ஒழுக்கமாகவும், காணிய சென்ற மடைநடை நாரையென்றது வாயில்களாகவும் கொள்க. இது இப்பத்துபாடல்களுக்கும் பொருந்தும்.

வெள்ளாங்குருகின் பிள்ளை இறந்து விட்டதால் காணச்சென்ற நாரை கானலில்லேயே தங்கிவிட்டது. அந்தக் கானல்நிலத் துறைவன் அவன். அந்த நாரை போல் அவன் ஊரிலேயே அவன் தங்கிவிட்டான். அதற்காக நான் என்ன செய்வேன்? இந்த ஊர் என்னைப் பொய் பேசுகிறதே.

சிறுவெண்காக்கைப் பத்து

சிறுவெண் காக்கை இடம் பெறவும் அதன்வழி உட்பொருள் விளங்கவும் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி சிறுவெண்காக்கைப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
கருங்கோட்டுப் புன்னைத் தங்கும் துறைவற்குப்
பயந்துநுதல் அழியச் சாஆய்
நயந்த நெஞ்சம் நோய்ப்பால் அஃதே!

(கருங்கோடு = கரிய கிளை; புன்னை = புன்னை மரம் ; பயந்து = பசந்து; நுதல் அழிய = நெற்றி ஒளி மங்க; சாய் = மெலிந்து; நயந்த = விரும்பிய; நோய்ப்பாலஃது = நோய்வாய்ப்பட்டது)
என்ற பாடலில் தலைவன் ஒருவழித்தணந்த வழி, தலைவி ஆற்றாமை மிக்கு உரைக்கும் செய்தி இடம் பெற்றுள்ளது. இப்பாடலில்
சிறுவெண் காக்கை
கருங்கோட்டுப் புன்னைத் தங்கும்
என்றது வரைவு முடிக்க ஆவனச் செய்யாமல் தன் ஊரிலேயே தங்கினான் என்பதாக உள்ளுறை வெளிப்பட்டுள்ளது. (ஒருவழித் தணத்தல் - அலர் அடங்குவதற்காகத் தலைவன் சில நாட்களுக்குத் தலைவியைக் காண வாராதிருத்தல்)

தொண்டிப் பத்து

தொண்டி என்பது ஒரு கடற்கரை நகரம். இந்நகரம் பெண்ணின் அழகுக்கு உவமையாகும் வகையிலும் நகரின் நிகழ்வுகளைக் கூறும் வகையிலும் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி தொண்டிப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

திரைஇமிழ் இன்னிசை அளைஇ அயலது
முழவுஇமிழ் இன்னிசை மறுகுதொறும் இசைக்கும்
தொண்டி அன்ன பணைத்தோள்
ஒண்தொடி அரிவைஎன் நெஞ்சு கொண்டோளே
 (மறுகு = தெரு)

என்ற பாடலில், இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன், தலைவியின் அழகை, தொண்டி நகரத்தால் உவமிக்கும் செய்தி இடம் பெற்றுள்ளது.

கடலலைகளின் முழக்கத்தோடே கலந்து மக்கள் முழக்கும் முழவுகளின் முழக்கொலியும் இனிதாக ஒலிக்கும் தெருக்களையுடையது தொண்டி என்பது, அதன் களிப்பான வாழ்வைப் புலப்படுத்தக் கூறியதாம். இன்னிசை' என்றது, கேட்பார்க்கு இனிமை தருதலோடு, மென்மேலும் கேட்பதிலே விருப்பமும் மிகச்செய்யும் இசையொலி என்ற தாம். 'மறுகுதொறு இசைக்கும் என்றது, ஒரு தெருவும் விடாதே எழுந்து ஒலிக்கும் என்பதாம். தெருதொறும் முழவொலி எழுதல், அங்கு வாழ்வாரின் மகிழ்வினைக் காட்டுவதாம். பணைத்தோளுக்கு அத்தகு தொண்டியை உவமை சொன்னது, அதுவும் நினைவில் அகலாதே நின்று களிப்பூட்டி வருதலால். 'என் நெஞ்சம் அவளோடேயே செல்லுகின்றதே என்றதாம்.
திரையொலியோடு முழவொலி கலந்து இனிதாக ஒலிக்கும் என்றது, உடன்போகும் ஆயமகளிரின் ஆரவார ஒலியோடு, எதிர்வருகின்ருரான உழையரின் மகிழ்ச்சி யொலியும் ஒன்றுகலந்து இனிதாக எழுந்ததன. வியந்து கூறிய தாம். இவர்களோடு கலந்துவிட்ட தலைவியை இனி எங்கனம் காண்பேன் என்பதுவுமாம்.

இத் தொண்டி பத்து பாடல்களில் மற்றொரு சிறப்பு இவை அந்தாதியாக அமைந்திருப்பது. முதல் பாடலின் கடைசிவரி அடுத்த பாடலின் துவக்கத்தில் வருமாரு அமைக்கப்பட்டுள்ளது அறிந்து மகிழதக்கது.

நெய்தற் பத்து

நெய்தல் நிலக் கருப்பொருள்களில் ஒன்று நெய்தல் மலர். இந் நெய்தல் மலர் இடம் பெறும் வகையிலும் அதன் வழிப் பொருள் விளக்கமுறும் நிலையிலும் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி நெய்தற் பத்து என்ற பெயரால் குறிக்கப் படுகிறது. இப்பகுதியில் நெய்தல் மலர் உவமையாக இடம் பெற்றுள்ளது.

வளைப்பத்து

வளை என்ற சொல் சங்கைக் குறிக்கும்; இது நெய்தல் நிலக் கருப்பொருள்களில் ஒன்று. வளை - வளையல் இடம் பெறும் வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி வளைப்பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

கடற்கோடு செறிந்த வளைவார் முன்கைக்
கழிப்பூத் தொடர்ந்த இரும்பல் கூந்தல்
கானல் ஞாழல் கவின்பெறும் தழையள்
வரையர மகளிரின் அரியளென்
நிறையரு நெஞ்சம் கொண்டொளித் தோளே.

பாங்கன், உன் மனத்தைக் கவர்ந்தவள் எத்தகையவள் என்று கேட்க, தலைவன் அவளைப் பற்றிக் கூறிய கருத்தமைந்த பத்துப் பாடல்களைக் கொண்டது இந்தப் பகுதி.

கடற்சங்காலாயின செறிந்த வளைகள் விளங்கும் முன்னங் கைகளையும், கழிப்பூக்களால் தொடுக்கப் பெற்ற மாலை விளங்கும் கரிய பலவான கூந்தலையும், கானலிடத்து ஞாழலின் அழகிய தழையாலாயின தழையுடைனையும் கொண்டவளாகவும், வரையிடத்துச் சூரர் மகளிரிரைக்காட்டிலும் அரிய வனப்புடையவளாகவும் விளங்குபவளே. அவள் நினைவால் நிறைந்துள்ள, கட்டுக்கு உட்படுத்த இயலாதே சிதைந்து தளர்வுற்ற என் நெஞ்சத்தினைக் கைப்பற்றிக் கொண்டு, மறைந்து போயினவள் ஆவாள்! அவளை அடைந்தாலன்றி யான் இனிக் கணமும் உயிர்வாழேன்' என்றதாம்.
வளை சிறப்பாகச் சங்குக்கே வழங்கப்பெறும் பெயராகும். சங்கறுத்து வளைகள் செய்வது அந்நாளிலும் மிகப்பெரிய கைவினைத் தொழிலாகவே விள்ங்கியிருக்கின்றது. சங்கறுப் போர்' என்றே சிலர் தம் குலத்தைக் குறிப்பதனையும் இலக்கியங்களில் காண்கின்றோம்.

நெய்தல் மகளிரே அல்லாமல், பிற நானில மகளிரும் சங்குவளையல்களை விரும்பி வாங்கி அணிந்திருக்கின்றனர். 'வளை' என்னும் சங்கின் பெயரே, பிற எல்லாவற்றானும் செய்தணியும் கையணிகளையும் குறிப்பதால், இதுவே முற்காலத் தில் பெருவழக்கிலிருந்த அணியென்பதனைக் காட்டும்.
பெண்கள் வளையணிதல் இயல்பாதலோடு, அது கழன்று வீழா வண்ணம் செறிவாகவும் பார்த்து அணிவார்கள். இதுவே, தலைவியர் பிரிவுத்துயரால் வருந்தி மெலியும்போது வளை நெகிழ்தலும் கழல்தலும் நிகழ்பனவாகி பிரிவுத்துன்பம் காட்டிநின்றன.
இவ்வாறு, செய்யுள்தோறும் வளையாகிய காதற் கருப் பொருள் சிறந்துவர அமைந்த பத்துச் செய்யுட்களைக் கொண்ட பகுதியாதலால், இதனை வளைப்பத்து' என்றனர். வளையொலியே அடையாளம் காட்டி அகத்தே அவளை நினைப்பித்தும் காதல் தலைவனின் அக நெகிழ்ச்சி காட்டியும் நின்றது எனதாம்.
சங்கு வளையல்

சங்கை பற்றிய இன்னொரு தகவல்.
‘கொங்குதேர் வாழ்க்கை’ இறையனார் பாடியதாக அமைந்த பாடலை நாமறிவோம்.. அந்நிகழ்வில்
சிவபெருமான்:
அங்கம் புழுதிபட, அரிவாளில் நெய்பூசி
பங்கம் படவிரண்டு கால் பரப்பிசங்கதனைக்
கீர்கீர் என அறுக்கும் நக்கீரனோ எம்கவியை
ஆராய்ந்து சொல்லத் தக்கவன்?

நக்கீரனின் குல தொழில் சங்கை அறுத்து வளையல் செய்து விற்பது. அதை தான், சிவனார், உடலெல்லாம் புழுதிபட, சங்கு பொறுக்கி, அரிவாளில் நெய் தடவி(அறுக்கும் போது, சங்கின் துகள் சிதறாமல், பறக்காமல் அரிவாளுடன் ஒட்டிக்கொள்ளும்), சங்கினை இரண்டாக பங்கம் செய்ய உன் கால்கள் இரண்டையும் பரப்பி, கீர் கீறென்று சங்கை கீறும் நக்கீரனோ என் பாடலில் பிழை சொல்வது? என

நக்கீரன்:

சங்கறுப்பது எங்கள் குலம்,
சங்கரனார்க்கு ஏது குலம்? – சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனே உம் போல்
இரந்துண்டு வாழ்வதில்லை..!!!

அதற்கு மறுமொழியாக, "சங்கு அறுப்பது எங்கள் குலம், ஆனால் சிவனாகிய உனக்கு என்ன குலம் இருக்கிறது. மேலும் சங்கினை அறுத்து உழைத்து சாப்பிடுவது எங்கள் பழக்கம் ஆனால், சிவனாரே!, அந்த சங்கினை பிச்சைப்பாத்திரமாக்கி இரந்துண்டு(பிச்சை பெற்று) உண்ணுதல் உன்னுடைய வழக்கம்" என்று கூறுயதாக காட்டப்பட்டிருக்கிறது. சங்கறுத்து ஆபரணம் செய்யும் வழக்கம் இருந்ததை இதனால் அறியமுடிகிறது…

மற்ற திணைகளுக்கான பாடலுடன் விரைவில்…
அன்புடன்
உமா



No comments:

Post a Comment