குறுந்தொகை பாடல்களின் அக்கால
மக்களின் சில பழக்க வழக்கங்களை அறியமுடிகிறது.
இப்போது நாம் காணவிருக்கும் பாடல் குறிஞ்சி நிலத்திற்குரியது.
தலைவியினுடைய மனத்தினை
அறிய மாட்டாத தாயர் அவள் வேறுபாட்டின் காரணத்தை ஆராயும் பொருட்டு அகவன் மகளாகிய கட்டுவிச்சியை
அழைத்துக் கட்டுப் பார்ப்பது வழக்கம். கட்டுவிச்சி முறத்தில் நெல்லையிட்டு அதனை எண்ணி
அதனாற்போந்த சில நிமித்தங்களை அறிந்து, “இவள் முருகனால் அணங்கப்பட்டாள்” என்று கூறுவாள்.
அதுகேட்ட தாயர் வேலனை அழைத்து வெறியாட்டெடுப்பர். இவ்வகவன் மகள் தெய்வமேறிக் குறிகூறுதலும்
உண்டு. இவளைப் பிற்காலத்தார் குறத்தி என்று கூறுவர்.
பாடலைப் பார்ப்போம்.
அகவன் மகளே யகவன் மகளே
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே, அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே.
அகவல் மகளே அகவல் மகளே - தெய்வங்களை
அழைத்துப் பாடுதலைச் செய்யும் கட்டுவிச்சியே,
தெய்வங்களை அழைத்துக் கூறும்
இயல்புடையாளாதலின் இப் பெயர் பெற்றாள்; ‘அகவர் என்றார், குலத்தோர் எல்லாரையும் அழைத்துப்
புகழ்வர் என்பது செய்தி.
- மனவு கோப்பு அன்ன - சங்கு மணியினால்
ஆகிய கோவையைப் போன்ற வெண்மையாகிய, நல்நெடு கூந்தல் - நல்ல நீண்ட கூந்தலை உடைய, அகவன்
மகளே -,
அவள் அணிந்த அணியையே அவள் கூந்தலுக்கு
உவமை கூறி அழைக்கிறாள். இவ்வுவமையால் கட்டுவிச்சி நரை மூதாட்டி என்பது பெறப்படும்.
நன்னெடுங் கூந்தலென்றது இகழ்ச்சிக் குறிப்பு,
பாட்டுப் பாடுக - பாட்டுக்களைப்
பாடுவாயாக; இன்னும் பாட்டுப் பாடுக -, அவர் நல் நெடு குன்றம் பாடிய பாட்டு - நீ பாடிய
பாட்டுக்களுள் அவருடைய நல்ல நெடிய குன்றத்தைப் புகழ்ந்து பாடிய பாட்டை, இன்னும் பாடுக
- மீண்டும் பாடுவாயாக.
மலைவாழ் சாதியினளாகிய அகவன்மகள்
தான்கண்ட மலைகளின் வளத்தைப் பாடுவது இயல்பாதலின் அவள் பல மலை வளங்களைப் பாடினாள்; அவற்றுள்
தலைவனது மலை வளத்தைக் கேட்பதில் தலைவிக்குப் பெரு விருப்பம் உளதாமாதலின் தோழி அதனை
மீண்டும் பாடென்றாள்.
இஃது கட்டுக்காண நின்றவிடத்துத் தோழி அறத்தொடு நின்றது.
அகவன் மகளே என்று மும்முறைக்கூறியது தான் கூறும் கூற்றின் உண்மையைக் கூர்ந்து அறியும்
பொருட்டு. இவள்பால் அன்பு பூண்ட தலைவருடைய குன்றத்தைப் பாடின் இவளது வேறுபாடு நீங்கும்
என்று குறிப்பாக
கூறியது, ‘அவர் யார்?’ என்னும் ஆராய்ச்சி தாயரிடையே பிறந்து உண்மை அறிதற்கு ஏதுவாகும்
என்பதனால் இஃது அறத்தொடு நிற்றலாயிற்று.
இப்படி நற்றாயும் செவிலியும்
குறி காணுதல் போன்றவைச் செய்யும் பொழுது தோழி உண்மையைக்கூறி மணமுடிக்கச் செய்வாள்.
அடுத்ததாக ஒரு நெய்தல் பாடல்
நள்ளென்றன்றே, யாமம்; சொல் அவிந்து,
இனிது அடங்கினரே, மாக்கள்; முனிவு இன்று,
நனந்தலை உலகமும் துஞ்சும்;
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே.
தலைவியை மணப்பதற்காகப் பொருளீட்டத் தலைவன் பிரிந்து போயிருக்கிறான். பிரிவு ஆற்றாத தலைவி, இரவில் தனக்கு ஆறுதல் தரும் துணையாக விழித்திராமல் உறங்கிய தோழியைப் பழித்துத் தன் வருத்தம் தோன்றப் பேசுகிறாள். இது தலைவி கூற்று.
தலைவி தோழி கேட்குமாறு தன்னொடு பேசுகிறாள் : ‘இந்த நடு இரவு ‘நள்’ என்ற ஓசையுடையதாயிருக்கிறது. என்னைப் பற்றி அலர் தூற்றுதலை விட்டு மக்களும் இனிதாக உறங்குகின்றனர். என்மீதுள்ள வெறுப்பை மறந்து இந்த அகன்ற உலகமும் துஞ்சுகிறது. நான் ஒருத்தி மட்டும்தான் துயிலாதிருக்கிறேன்’
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சாதேனே
(நனந்தலை = அகன்ற இடத்தை உடைய ; துஞ்சும் = உறங்கும்; மன்ற = மிகவும்)
நான் ஒருத்தி மட்டுமே துயிலாதிருக்கிறேன்’ என்று தலைவி சொல்வதன் குறிப்பு, துன்ப நேரத்தில் துணையாக இருக்க வேண்டிய தோழியும், இரவின் கொடிய கைகளில் தலைவியை விட்டுவிட்டு உறங்கிவிட்டாள் என்பதாகும். திருவள்ளுவர் படைத்த தலைவியும் இதே போன்ற உணர்வை வெளிப்படுத்துகிறாள்.
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்ல தில்லை துணை (திருக்குறள்-1168)
’எல்லா உயிர்களையும் உறங்கச் செய்துவிட்ட இந்த இரவு, பாவம், எந்த நேரமும் இறந்துபோகக்கூடிய என்னைப்போய்த் துணையாகக் கொண்டிருக்கிறது!’ என இரவுக்காக வருந்துவது போல் தன் வருத்தத்தை வெளிப்படுத்துகிறாள்.
இன்னும்
சில பாடல்களுடன் விரைவில்
அன்புடன்
உமா
No comments:
Post a Comment