Monday 21 May 2018

ஐங்குறுநூறு - குறிஞ்சி

குறிஞ்சித்திணைப் பாடல்களைப் பாடியவர் கபிலர்.
 
குறிஞ்சித் திணை – புணர்ச்சியும் புணர்ச்சி நிமித்தமும். 
 
இந்நூலிலுள்ள 10 பத்துகள்
அன்னாய் வாழிப் பத்து
அன்னாய்ப்பத்து
அம்ம வாழிப் பத்து
தெய்யோப் பத்து
வெறிப் பத்து
குன்றக் குறவன் பத்து
கேழற் பத்து
குரக்குப் பத்து
கிள்ளைப் பத்து
மஞ்ஞைப் பத்து

அன்னாய் வாழி! வேண்டு அன்னை! நீ மற்று
யான் அவர் மறத்தல் வேண்டுதி ஆயின்,
கொண்டல் அவரைப்  பூவின் அன்ன
வெண் தலை மா மழை சூடித்
தோன்றல் அனாது அவர் மணி நெடுங்குன்றே. 

நீடு வாழ்வாயாகத் தோழி! நான் கூறுவதைக் கேட்க வேண்டுகின்றேன். நான் அவரை மறக்க வேண்டும் என்று நீ கூறுகின்றாய்.  கீழ்க்காற்றால் மலரும் அவரைப் பூக்கள் போன்ற வெள்ளை மேகங்கள் அலங்கரிக்கும் மலை உச்சியை உடைய, அவருடைய நீலமணியைப் போன்ற மலை என் கண்ணை விட்டு அகலாது நிற்கின்றது. அவரை நான் எப்படி மறக்க முடியும்? 

மழை பெய்வதற்காக இருண்டு இருந்தாலும் தான் மறையப் பெறாது விளங்கித் தோன்றும் அவர் மணி நெடுங்குன்றம் என்றது, என்ன தான் நாணும் அச்சமும் கொண்டு யான் அடக்கி மறைத்தற்கு முயலினும் என் உள்ளத்துத் துயரம் என்னை நலிவிப்பதனால் புறத்தும் வெளிப்படத் தோன்றி விடுகின்றது என்பது. 


நறுவடி மாஅத்து மூக்கு இறுபு உதிர்த்த
ஈர்ந்தண் பெருவடுப் பாலையில் குறவர்
உறை வீழ் ஆலியல் தொகுக்கும் சாரல்
மீமிசை நல் நாட்டவர் வரின்,
யான் உயிர் வாழ்தல் கூடும், அன்னாய். 

தோழி! நறுமணமுள்ள பெரிய மா வடுக்கள் காம்பு அறுந்து, மழைத் துளிகளுடன் கீழே உதிர்ந்து விடும். அவற்றைப் பாலை நிலத்து மலை நாட்டவர் மலைச் சரிவில் ஆலங்கட்டியை குவித்து வைத்தது போல் குவித்து வைப்பார்கள். உயர்ந்த உச்சியையுடைய நல்ல நாட்டவன் என்னை மணம் புரிய வந்தால் தான் நான் உயிரோடு இருப்பேன். 

இற்று வீழும் வடுக்களை குறவர் தொகுப்பர் என்றது, பாலை நிலத்தின்கண் வெம்பி வீழும் வடுக்களைத் தொகுக்கும் குறவர் போன்று நம்பெருமானும் யான் துயரத்தாலே நைந்து இறந்துபடும் எல்லைவரை வாளாவிருந்து அவ்வெல்லைக்கண் வரைதற்கு வர முயல்வாயாயினன் எனத் தலைவனை பழித்தபடியாம். விரும்பியதை முயன்று பெறாமல் தானாக காலம் கனியும் என வாளாவிருத்தலால் பழித்துக் கூறியமை. 

தொய்யோ பத்து. “ஐயோ” /“அய்யோ”என்பது அழுகை ஒலிக்குறிப்பு. “தெய்யோ” என்பது  மகிழ்ச்சி ஒலிக்குறிப்பு. தொய்யோ என முடியும் பத்துப் பாடல்களைக்க் கொண்டது இத்தொகுப்பு. 

அன்னையு மறிந்தன ளலருமாயின்று
நன்மனை நெடுநகர் புலம்புகொள வுறுதரும்.
இன்னா வாடையு மலையும்
நும்மூர்ச் செல்க மெழுகமோ தெய்யோ.

களவொழுக்கம் வெளிப்பட்டமையும் தம் மெலிவும் உணர்த்தித் தோழி உடன்போக்க கூறுவது போன்று வரைவு , மணமுடிக்க வேண்டியது. 

அன்னையும் அறிந்தனள், ஊரார் அலர் கூறுவாராயினர், வீட்டில் உள்ளவரும் தனிமை கொண்டு புலம்பித் துன்புறுகின்றனர். தீண்டும் வாடையும் துன்பந்தருகிறது. தலைவனே எழுக! உன் ஊருக்குச் செல்வோம். புறப்படலாமா? என தலைவி சொல்வதாக தோழி கூறுகிறாள். இதன் வழி விரைந்து மணமுடிக்க வறுபுறுத்துவதாய் அமைகிறது பாடல். 

வெறி பத்து
தலைவனை எண்ணி தலைவி ஏங்குகிறாள். அவள் மேனி வாடுகிறது. மாற்றம் கண்ட தாய் காரணமறிய குறி சொல்லும் வேலனை அழைத்து வினவுகிறாள். வேலன் ‘முருகன் குறை’, வெறியாட்ட வேண்டும் எங்கிறான். இந்த வெறியாட்டம் பற்றி இப்பாடல்கள் குறிக்கின்றன. 

அம்ம வாழி, தோழி! பல் மலர்
நறுந் தண் சோலை நாடு கெழு நெடுந்தகை
குன்றம் பாடான் ஆயின்,
என் பயம் செய்யுமோ வேலற்கு வெறியே? 

இது தலைவியிடம் தோழி கூறுவதாய் அமைகிறது.
தோழி நீ வாழ்வாயாக! பல மலர்கள் செறிந்த நாட்டையுடயவன் உன் தலைவன். வேலன் அவன் குன்றத்தைப் பாடான் ஆயின் வெறியாட்டத்தால் என்ன பயன் விளையப் போகிறது. 
 
தாய் வெறியாட்டு போன்றவை நிகழ்த்தும் போது தோழி அறத்தோடு நின்று தலைவியின் மாற்றத்திற்கு காரணம் தலைவனைப் பிரிந்தமையே என்று கூறுவாள். அத்தலைவன் குன்றத்தைப் பாடும் போது அவனே அத்தலைவன் என்பதைக் குறிப்பால் உணர்த்துவாள். குறுந்தொகையிலும் இப்பழக்கம் காட்டப்படுகிறது. கட்டுவிச்சியை கொண்டு குறி காணும் போது தோழி இவ்வாறு கூறி அறத்தொடு நிற்பாள். 

அகவன் மகளே அகவன் மகளே இப்போது பாடினாயே அந்த தலைவனின் குன்றத்தை மீண்டும் பாடுக என்று கூறுவதாய் அமையும் பாடல். இதன் வழி யார் அந்த தலைவன் என் தாயறியும் படி கூறுவாள்.

மேலும் குறவன், கோழல்(பன்றி), குரக்கு(குரங்கு), கிள்ளை (கிளி), மஞ்ஞை(மயில்) என்ற கருப்பொருட்கள் தோன்றும் மற்ற குறிஞ்சி நிலப் பாடல்களுடன் விரைவில்…

அன்புடன்
உமா

No comments:

Post a Comment