அகம்
சொல்லும் குறுந்தொகையில் சில அழகிய குறிப்புகள், செய்திகள் நாம் அறிய கிடைக்கின்றன.
கருங்கட் டாக்கலை
பெரும்பிறி துற்றேனக்
கைம்மை யுய்யாக்
காமர் மந்தி
கல்லா வன்பறழ்
கிளைமுதற் சேர்த்தி
ஓங்குவரை
யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்
சார னாட நடுநாள்
வாரல் வாழியோ
வருந்துதும் யாமே.
கரு கண் தா கலை - கரிய கண்ணையும்
தாவுதலையும் உடைய ஆண்குரங்கு,
பெரும்பிறிது உற்றேன - இறந்து பாட்டை
அடைந்ததாக,
கைம்மை உய்யா - கைம்மைத் துன்பத்தைப்
போக்கமாட்டாத,
காமர் மந்தி - விருப்பத்தையுடைய
பெண்குரங்கானது,
கல்லா வன்புறழ் - மரமேறுதல் முதலிய
தம் தொழிலைக் கல்லாத வலிய குட்டியை,
கிளைமுதல் - சுற்றத்தினிடத்து,
சேர்த்தி - கையடையாக ஒப்பித்து,
ஓங்குவரை அடுக்கத்து - ஓங்கிய மலைப்
பக்கத்தில்,
பாய்ந்து உயிர் செகுக்கும் - தாவி
உயிரை மாய்த்துக் கொள்ளும்,
நடுநாள் - நள்ளிரவில்,
வாரல் - வாரற்க;
யாம் வருந்துதும் - அங்ஙனம் நீவரின்
நினக்குத் தீங்குண்டாகு மென்றெண்ணி நாம் வருந்துவோம்,
வாழி - நீ தீங்கின்றி வாழ்வாயாக!
தனது
துணை இறந்து விட்டதால் துன்பமடைந்த பெண்குரங்கானது தனது தாவவும் தெரியாத குட்டியை தனது
சுற்றத்தினிடத்தில் ஒப்படைத்துவிட்டு ஓங்கிய மலைப்பக்கத்தில் தாவித் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும்.
அப்படிப்பட்ட மலைப்பக்கத்தை உடைய நாட்டுக்குத் தலைவனே,
நீ நள்ளிரவில் தலைவியைக்காண வரவேண்டாம். இரவில் வருவதால் உனக்குத் தீங்குண்டாகும் என்பதால்
யாம் வருந்துவோம் என்கிறாள் தோழி. இதன் மூலம் இரவுக்குறி மறுத்து தலைவியை விரைந்து
மணமுடிக்க அறிவுறுத்துவதாய் அமைகிறது பாடல். அழகிய இப்பாடலில் தன் துணையிறந்ததும் தானும்
உயிர்விடும் குரங்கின் செய்கையை நாமறியமுடிகிறது. உன் மலையிலுள்ள விலங்குகளும் தன்
துணைக்கு இன்னலென்றால் உயிர்வாழா எனின் உனக்கு ஒரு தீங்குண்டாகுமெனில் இவள் உயிர்வாழாள்
என்று தலைவியின் துன்பத்தின் மிகுதியை எடுத்துக்கூறி விரைவில் மணந்துக்கொள்ள அறிவுறுத்துகிறாள்.
அடுத்ததாக
தலைவன் வாடை வீசும் பருவத்தில் வருவதாகக்
கூறிச் சென்றான்; அப்பருவம் எப்பொழுது வருமென்று அறியும் பொருட்டுத் தோழி
அறிவரை வினாவினாள். அறிவர் என்பவர் துறவு உள்ளமும்,
முக்காலத்தையும் அறியும் ஆற்றலும் உடைய
பெரியோர் எனச் சிறப்பிக்கப் பெறுவர். இவர் எக்காலத்திலும், கற்பு
முதலிய நல்லவற்றைக் கற்பித்தலும் தீயவற்றைக் கடிதலுமாகிய செயல் உடையர் தலைவன் தலைவியாகிய இருவரும்
இவரது ஏவலைச் செய்துநிற்பர்; அவர்களை
இடித்து உரைத்து நல்வழியிலே நிறுத்துதல்
இவர் இயல்பு. இவர் வாயில்களுள் ஒரு வகையினர். இவர் கூற்றை
யாவரும் கேட்டு அதன் வழி
ஒழுகுவர். இவர் துறவு உள்ளத்தினராதலின் துறவியரைப்
போலவே பிச்சையூண் பெற்றுண்பரென்பது தொல்காபியம் காட்டும் செய்தி. இது இச்
செய்யுளால் பெறப்படுகின்றது.
ஆசு இல் தெருவின் ஆசு இல் வியன் கடை,
செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது
ஓர் இல் பிச்சை ஆர மாந்தி,
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்
சேமச் செப்பில் பெறீஇயரோ, நீயே-
'மின்னிடை நடுங்கும் கடைப் பெயல் வாடை,
எக் கால் வருவது?' என்றி;
அக் கால் வருவர், எம் காதலோரே.
மின்
இடை நடுங்கும் - மின்னைப் போன்ற இடையை உடைய
தலைவி நடுங்குதற்குக் காரணமான, மின்னல் பெண்ணின் இடைக்கு உவமையானது நெடுங்காலந்தொட்டே
பழகிவருகிறது.
கடை
பெயல் வாடை - இறுதியில் மழையை
உடைய வாடைக்கு உரிய காலம்,
எ
கால் வருவது என்றி - எப்பொழுது
வருவது என்பாயோ,
அ
கால் - அப்போது,
எம்
காதலர் - எம்முடைய தலைவர், வருவர்---; ஆதலின்
சொல்வாயாக; நீ---, ஆசு இல்
தெருவில் - குற்றமற்ற தெருவினிடத்தே,
நாய்
இல் வியன்கடை - நாய் இல்லாத அகன்ற
வாயிலில்,
செ
நெல் அமலை - செந்நெற் சோற்று
உருண்டையும்,
வெண்மை
வெள் இழுது - மிக வெள்ளிய
நெய்யும் ஆகிய,
ஓர்
இல் பிச்சை - ஒரு வீட்டில் இடும்
பிச்சையை,
ஆரமாந்தி
- பெற்று வயிறு நிரம்ப உண்டு,
அற்சிரம்
வெய்ய வெப்பம் தண்ணீர் - அற்சிரக்
காலத்திற்குரிய விரும்பத் தக்க வெப்பத்தை உடைய
நீரை,
சேமம்
செப்பில் - நீரைச் சேமித்து வைக்கும்
செப்பில்,
பெறீஇயர்
- பெறுவாயாக.
ஆசில்
தெருவென்றும், நாயில் வியன்கடை என்றும்
சிறப்பித்த மையால் இங்கே கூறியது
அந்தணர் தெருவென்று அறியப்படுகிறது.
ஆய்
இல் கடையென வைத்து, செல்வம்
சுருங்குதல் இல்லாதவாயில் என்று பொருளுரைத்தலும் பொருந்தும்.
செந்நெல்
நெல் வகையில் உயர்ந்தது. பல
வீடுகளில் சென்று ஐயம் பெற்றுண்ணும்
இரவலரது பிச்சை போலில்லாது ஒரு
வீட்டில் பெற்றுண்ணும் பிச்சை ஆதலின், ‘ஓரிற்
பிச்சை' என்றாள்.
வாடை
வரும் பொழுது வருவேன் என்ற தலைவன் அக்காலத்தில் கண்டிப்பாக வந்துவிடுவான். எனவே நீ
சென்று உண்டு அமர்வாயாக என்று சொல்வது தலைவன் மேல் இருந்த நம்பிக்கையை காட்டுகிறது.
அறிவர்
பெறும் உணவை ஓரிற் பிச்சை
என்று சிறப்பித்தமையால் இச் செய்யுள் இயற்றிய
புலவர் ஓரிற் பிச்சையார் என்று
பெயர் பெற்றார்.
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்
சேமச் செப்பில் பெறீஇயரோ,
என்றது வாடைக்காலத்திற்கேற்ற வெப்பம் மிகுந்த நீர், வெந்நீர்,
செப்பு கலத்தில் பிடித்து சேமித்து வைக்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது.
இப்படி குறுந்தொகையில் பல செய்திகள் நாமறிய கிடைக்கின்றன.
இன்னொருப்பாடல் முல்லை நிலத்திற்குரியது…
வண்டு
படத் ததைந்த
கொடி இணர் இடையிடுபு,
பொன் செய் புனை இழை கட்டிய
மகளிர்
கதுப்பின் தோன்றும் புதுப் பூங் கொன்றைக்
கானம்,
'கார்' எனக் கூறினும்,
யானோ தேறேன்; அவர் பொய் வழங்கலரே.
தோழி,
வண்டுபட - வண்டுகள் தேன் உண்ணுதற்கு வந்து வீழும்படி,
ததைந்த - செறிந்து மலர்ந்த,
கொடி இணர் - நீட்சியை உடைய பூங்கொத்துக்களை,
இடை இடுபு - தழைகளின் இடையே மேற்கொண்டு,
பொன் செய் புனை இழை - பொன்னால் செய்த அணிந்துகொள்ளுதற்குரிய
தலையணிகளை,
கட்டிய - கோத்துக் கட்டிய,
மகளிர் கதுப்பின் - மகளிருடைய கூந்தலைப் போல,
தோன்றும் - கண்ணிற்குத் தோன்றுகின்ற,
புது பூ கொன்றை - புதிய பூக்களை உடைய கொன்றை மரங்களை உடைய,
கானம் - காடானது,
கார் என - இது கார்ப் பருவமென்று, கூறினும் - அம் மலர்களால்
தெரிவிப்பினும்,
யான் தேறேன் - நான் தெளியேன்;
ஏனெனின், அவர் பொய் வழங்கலர் - தலைவர் பொய்ம்மொழியைக் கூறார்.
வண்டுகள் வந்து தேண்ணும்படி செறித்து மலர்ந்த மலர்களோடு
இக்கொன்றை மரமானது, பொன்னாலாகிய தலையணிகளை கோர்த்து கட்டிய கூந்தலைக்கொண்ட மகளிரைப்
போல் தோன்றி கார்கால வரவை கூறினாலும் நான் தேறேன். தலைவன் பொய் உரையார் என்வே இது கார்காலமில்லை
எங்கிறாள். கொன்றை மரத்திற்கு மகளிரும், தழைக்கு அவர் கூந்தலும், பூங்கொத்திற்குப்
பொன்னிழையும் உவமமாக காட்டப்படுகிறது.
கொன்றை, மகளிரைப் போலத் தோற்றினும் மகளிரல்ல வென்று தெளிவது
போல, இது கார்ப்பருவம் என்று தோற்றினும் அன்றென்று தெளிந்தேன் என்கிறாள். என்னே தலைவியின்
நம்பிக்கை..
இப்படி பல பாடல்களில் மிக அழகாக ஐவகை நிலங்களும், அவற்றிகான
கருப்பொருள்களும் தலைவன் தலைவியின் அக உணர்வுகளை எடுத்தியம்ப கையாளப்பட்டமை அறிந்து போற்றுதற்குரியது.
அடுத்ததாக பத்து பத்து பகுதிகளாக உள்ள ஐந்து நிலத்திற்குரிய
500 பாடல்களைக் கொண்ட 'ஐங்குறுநூறு' பாடல்களை அறிவோம் சுவைப்போம்… விரைவில்…
அன்புடன்
உமா.
அருமையான பதிவு.
ReplyDeleteமிக்க நன்றி...
ReplyDelete