Showing posts with label அகநானூறு. Show all posts
Showing posts with label அகநானூறு. Show all posts

Wednesday, 7 November 2018

அகநானூறு பிற திணைகள்


அகநானூறு – முல்லை.
அகநானூறில் 4, 14, 24 என்பது போல் எண் கொண்ட 40 பாடல்கள் முல்லைத்திணை சார்ந்தவை.

விணை முடிந்து மீண்ட தலைவன் தன் தேர்ப்பாகனை பாராட்டுவதாய் அமைந்த பாடல் இது. பாடல் எண் 254
……..
வேந்து உறு தொழிலொடு வேறு புலத்து அல்கி, 
வந்து வினை முடித்தனம்ஆயின், நீயும்,
பணை நிலை முனைஇய, வினை நவில், புரவி
இழை அணி நெடுந் தேர் ஆழி உறுப்ப,
நுண் கொடி மின்னின், பைம் பயிர் துமிய,
தளவ முல்லையொடு தலைஇ, தண்ணென
வெறி கமழ் கொண்ட வீ ததை புறவின்
நெடி இடை பின் படக் கடவுமதி, என்று யான்
சொல்லிய அளவை, நீடாது, வல்லென,
தார் மணி மா அறிவுறாஅ,
ஊர் நணித் தந்தனை, உவகை யாம் பெறவே!

இப்பாடலில் காணப்படுகின்ற புரவி கட்டியிருத்தலை விரும்பாத, போர்த் தொழில் பயின்ற, அதுமட்டுமல்லாமல் குறிப்பறிந்து வினையாற்றக்கூடியதாகவும் உள்ளது. “பாகனே! மனமறிந்து செயல்படும் குதிரையை உனது நெடுமையானத் தேரிலேப் பூட்டி வழியில் பூத்திருக்கும் மின், தவளம் முல்லைக் கொடியெல்லாம் அறுந்து விழவும், முல்லை நிலமானது நமக்கு பின்னே செல்லுமாறும் விரைந்து செலுத்துக” என்று தலைவன் சொன்ன அளவிலேயே ஊரின் அருகில் தேர் வந்துவிட்டதாம். உவகையோடு பாகனைத் தலைவன் பாராட்டுவதாய் அமைகிறது பாடல்.

முல்லை நிலப் பாடல்களில் தேரின் வேகம் வியப்படைய வைக்கிறது.

மற்றொருப் பாடலில்

போருக்காகச் சென்ற தலைவன் இல்லத்திற்குத் திரும்புகின்றான். அவன் தேரில் ஏறி அமர்ந்தது மட்டுமே அவனுக்குத் தெரிகிறது. வந்த வழியே தெரியவில்லை. வீடு வந்துவிட்டது, தேரைவிட்டு இறங்குங்கள் என்று தேர்ப்பாகன் கூறுகின்றான். வியப்படைந்த தலைவன் தேர்ப்பாகனைப் பார்த்து விண் வழியே செல்லும் காற்றைத் தேரில் பூட்டி ஓட்டினாயா? அல்லது உனது மனத்தையே குதிரையாக்கித் தேரில் பூட்டி ஓட்டினாயா? என்று கேட்கின்றான். இவ்வியப்பு உணர்வை,

இருந்த வேந்தன் அருந்தொழில் முடித்தெனப்
புரிந்த காதலொடு பெருந்தேர் யானும்
ஏறிய தறிந்தன்று அல்லது வந்தவாறு
நனியறிந் தன்றோ இலனே --------
--------------------------------
--------------------------------
மெல்லியல் அரிவை இல்வயின் நிறீஇ
இழிமின் என்றநின் மொழிமருண் டிசினே
வான்வழங்கு இயற்கை வளிபூட் டினையோ?
மானுரு வாகநின் மனம்பூட் டினையோ?
உரைமதி வாழியோ வலவ ----------

இப்படி விணைமுடிந்து திரும்பும் தலைவனின் மனமறிந்து பாகனும் அப்பாகனின் மனமறிந்து செல்லும் குதிரையும் முல்லை நிலப் பாடலில் நாம் காண முடியும்..

ஈங்கு நளவெண்பாவில் காட்டப்பட்டுள்ள நளனின் தேரோட்டும் திறன் ஒப்பிட்டு மகிழ தக்கது. நளவெண்பாவில், கலி நீங்கு காண்டத்தில் 356/357 ம் பா க்கள்.

முந்தை வினைகுறுக மூவா மயல்கொண்டான்
சிந்தை யினுங்கடுகச் சென்றதே - சந்தவிரைத்
தார்குன்றா மெல்லோதி தன்செயலைத் தன்மனத்தே
தேர்கின்றா னூர்கின்ற தேர்.

மேலாடை வீழ்ந்த தெடுவென்றா னவ்வளவில்
நாலாறு காதம் நடந்ததே - தோலாமை
மேல்கொண்டா னேறிவர வெம்மைக் கலிச்சூதில்
மால்கொண்டான் கோல்கொண்ட மா.

நளனின் தேர், மன்னனின் சிந்தையைவிட விரைந்து சென்றதாம். வேகத்தில் மன்னனின் மேலாடை வீழ்கின்றது. `வீழ்ந்தது எடு` என்று சொல்லும் நேரத்திற்குள்ளாக தேர் நாலாறு காதம் தாண்டியதாம் நளனின் தேர்.

அகநானூறு மருதம்

மருதத் திணையின் ஒழுக்கம் ஊடலும் நிமித்தமும். இதில் தலைவன் செய்கையை உள்ளுறையாக காட்டும் பாடல்கள் அமைந்துள்ளன.
316ம் பாடல்
------
துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை
அரிமலர் ஆம்பல் மேய்ந்த நெறிமருப்பு
ஈர்ந்தண் எருமைச் சுவல்படு முதுபோத்துத்
தூங்குசேற்று அள்ளல் துஞ்சிப் பொழுதுபடப்
பைந்நிண வராஅல் குறையப் பெயர்தந்து
குரூஉக்கொடிப் பகன்றை சூடி மூதூர்ப்
போர்ச் செறி மள்ளரின் புகுதரும் ஊரன்……

இப்பாடலில் எருமை ஒன்று பொய்கையிலே இருக்கின்ற ஆம்பல் மலர்களைத் தின்று, சேற்றிலே கிடந்து உறங்கி, விடியற் காலையிலே வரால் மீன்கள் துண்டாகும்படி அவற்றை மிதித்து, பகன்றைக் கொடிகளை மேலே பற்றிக்கொண்டு போர் வீரரைப்போல ஊருக்குள் நுழைகிறது என்ற செய்தி ஒரு பாடலில் இடம்பெற்றுள்ளது. இது, தலைவன் ஒருவன் பரத்தையர் ஒழுக்கம் மேற்கொண்டு, இரவில் அங்கேயே தங்கி, விடியற்காலையில் எல்லாரும் பார்க்கும் வகையில் வெளியேறி, குடிப்பெருமையைச் சிதைத்து, அடையாளங்களுடன் வந்தான் என்ற செய்தியை மறைமுகமாகத் தருகிறது.

அகநானூறு நெய்தல்.

நெய்தல் நிலத்தில் 160ம் பாடல்

நிறைச்சூல் யாமை மறைத்துஈன்று புதைத்த
கோட்டுவட்டு உருவின் புலவுநாறு முட்டை
பார்ப்புஇடன் ஆகும் அளவை, பகுவாய்க்
கணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்.

(யாமை) ஆமை ஒன்று மறைவான இடத்தில் முட்டையிட, அதனைக் குஞ்சு பொறிக்கும்வரை ஆண் யாமை பேணிக் காக்கும் எங்கிறச் செய்தி செல்லப்பட்டிருக்கிறது. இது, தலைவன் களவொழுக்கத்தைத் திருமணம் வரை யார்க்கும் தெரியாமல் மறைத்துக் காப்பான் என்ற செய்தியை உள்ளுறையாகத் தருகிறது.

அகநானூறு பாலை

பிரிதலைப்பற்றி பேசும் பாலை நிலப் பாடல்களில் காட்டுப் பாதையின் கடுமை பயங்கரமானதாகக் காட்டப்பட்டுள்ளது.

உச்சி வெயில் சுட்டெரிக்கும் வழி. மழை வறண்டுபோன நிலப்பரப்பு. பேய்த்தேர் என்னும் கானல் நீரோட்டம், நீர் போலத் தோன்றி ஏமாற்றும் வழி. புல் வளர்ந்து சாய்ந்துகிடக்கும் மலைப்பிளவுகளில் இருந்துகொண்டு கோட்டான் சேவல் அச்சம் தரும் குரலைக் கொடுக்கும் வழி. வேல மரத்தில் இருக்கும் சில்வண்டு, கவணிலிருந்து வீசப்படும் கல் செல்லும் ஓசை போல் ஒலி கேட்கும்படி கத்தும் வழி. உலர்ந்த நெற்றுக்கள் வேல மரத்திலிருந்து உதிர்ந்து கிடக்கும் வழி.
வில்லேந்திய மறவர் வேட்டையாடிய விலங்கின் கறியைச் சுட்டுத் தின்பார்கள். தோள் வலிமை மிக்க கழுதையின் மேல் சுமையை ஏற்றிக்கொண்டு வழிப்போக்கர்கள் வருவர். வாள் வீரர்கள் அவர்களோடு போரிட்டு அவர்களின் தலையை வெட்டி வீழ்த்துவர். அவை புலால் நாற்றம் அடிக்கும். வழிப்போக்கரின் அரிய செல்வ வளங்ககளை மறவர்கள் எடுத்துக்கொண்டு வந்து ஊரில் (குறும்பு) உள்ள அனைவரையும் துடி முழக்கி அழைத்து குடும்பத்தார் எண்ணிக்கையில் பங்கிட்டுத் தருவர். இப்படிப் பட்ட கடுமையான பாதையில் தன் மகள் செல்கிறாளே என்று செவிலித்தாய் கலக்கமுறுகிறாள்.

பாலை நிலத்தில் 89ம் பாடல்

தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின்,
உறு பெயல் வறந்த ஓடு தேர் நனந் தலை,
உருத்து எழு குரல குடிஞைச் சேவல்,
புல் சாய் விடரகம் புலம்ப, வரைய
கல் எறி இசையின் இரட்டும் ஆங்கண்,            
சிள்வீடு கறங்கும் சிறிஇலை வேலத்து
ஊழுறு விளைநெற்று உதிர, காழியர்
கவ்வைப் பரப்பின் வெவ் உவர்ப்பு ஒழிய,
களரி பரந்த கல் நெடு மருங்கின்,
விளர் ஊன் தின்ற வீங்குசிலை மறவர்  
மை படு திண் தோள் மலிர வாட்டி,
பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய
திருந்து வாள் வயவர் அருந் தலை துமித்த
படு புலாக் கமழும் ஞாட்பில், துடி இகுத்து,
அருங் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர்,            
வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும்
கொல்லை இரும் புனம் நெடிய என்னாது,
மெல்லென் சேவடி மெலிய ஏக
வல்லுநள்கொல்லோ தானே தேம் பெய்து
அளவுறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள்,            
இடு மணற் பந்தருள் இயலும்,
நெடு மென் பணைத் தோள், மாஅயோளே?

காழியர் (துணி துவைத்துத் தரும் வண்ணார்) உவர் மண் தோண்டி எடுத்த நிலப்பரப்பில் தன் மகள் செல்லவேண்டும். (வண்ணார் துணியை வெளுப்பர். துணியில் இருக்கும் அழுக்கை முழுமையாக நீக்குவதற்காக அழுக்குத் துணிகளை நீரில் நனைத்து உப்பு மண்ணில் புரட்டி, நீராவி வரும்படி, சூளையில் வைப்பர். பின் நீரில் துவைப்பர்.) களர் நிலத்திலும், கல் நிலத்திலும் நீண்ட தூரம் செல்ல வேண்டும்.
இங்கு நான் பாலில் தேனைக் கலந்து அவளுக்கு ஊட்டுவேன். அவள் உண்ணமாட்டாள். நான் உண்ணும்படி அடிப்பேன். அவள் பந்தல் மணலில் அங்குமிங்கும் ஓடுவாள். இப்பொழுது வருந்துவாளோ என கூறுவதாய் அமைந்த இப் பாடலில் தாயின் பிரிவுத்துயரும் காட்டு வழியின் கடுமையும் சொல்லப்படும் அதேகாணம் துணி துவைக்கும் வண்ணார்காளின் வழக்கங்களும் அழகாக காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு அகநானூறில் அக பொருள் பற்றி மிக அழகாக காட்டும் அதே வேளையில் பல வரலாற்று செய்திகளையும், அக்கால வாழ்க்கை பழக்கங்கள், வாழ்க்கை முறை, பண்பாடு, அக்கால வாணிப முறை ஆகியனவும் மிக அருமையாக காட்டப்பட்டிருக்கின்றன.

அகநானூறின் இலக்கிய நயம் அறிவோம், சுவைப்போம்….

அடுத்த பதிவுடன் விரைவில்

அன்புடன்
உமா




Friday, 21 September 2018

அகநானூறு - குறிஞ்சி


ஆசிரியப்பாவால் அமைந்த அகப்பொருள் பாடல்கள் நானூறு, அகநானூறு என்று தொகுக்கப்பட்டது.  பாண்டியன் உக்கிரப்பெருவழுதி என்ற மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க,  உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மன் என்ற புலவர் இந்நூலைத் தொகுத்துள்ளார். 145 புலவர் பெருமக்கள் இந்நானூறு பாடல்களையும் பாடியுள்ளனர்.

எட்டுத்தொகையில் உள்ள நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய நூல்களும் முழுமையாக அகம் பற்றியே அமைந்துள்ளன என்றாலும் இந்நூலுக்கே அகம் என்ற சொல் கொடுத்து அகநானூறு என்று வழங்கியுள்ளனர். இது இந்நூலில் அகப்பொருள் சிறந்திருத்தலைக் காட்டுகிறது

இந்நூலுக்கு நெடுந்தொகை என்ற வேறு பெயரும் உண்டு. எட்டுத்தொகையில் அகநானூற்றைக் காட்டிலும், பரிபாடல், கலித்தொகை ஆகிய இரு நூல்களும் மிகுதியான அடிகளைக் கொண்ட பாடல்களைக் கொண்டிருப்பினும் அகநானூற்றிற்கே நெடுந்தொகை என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 'நெடு' என்ற அடை, அடிகளின் மிகுதியைக் குறிக்கவில்லை எனத் தெரிகிறது. 'நெடு' என்ற அடைமொழி அகநானூற்றுப் பாடல்களின் பொருட் சிறப்பை வெளிப்படுத்துவதற்காகவே வழங்கப்பட்டுள்ளது.

களிற்றியானை நிரை, மணிமிடைபவளம், நித்திலக்கோவை என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது இந்நூல். இப்பகுப்பு ஐங்குறுநூறுபோலத் திணையையும் பாடல்களின் எண்ணிக்கையையும் கொண்டோ, கலித்தொகை போலத் திணையை அடிப்படையாகக் கொண்டோ பகுக்கப்பட்டது அல்ல. பாடல்களின் நடை அமைப்பைக் கொண்டு பகுக்கப்பட்டதாகும். இதுவும் இந்நூலுக்குரிய தனிச் சிறப்பாகும். பாடல் எண், மற்றும் திணை முறைவைப்பில் ஓர் ஒழுங்கினைப் பின்பற்றியிருப்பதும் இதன் தனிச் சிறப்பிற்குரியதாகும்.
களிற்றியானைநிரை
1 முதல் 120 வரையில் உள்ள 120 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் யானைக்களிறு போல் பெருமித நடை கொண்டவை. யானைகளின் அணிவகுப்பைப் போன்று ஓரினப் பாடல்களின் அணிவகுப்பாக அவை அமைந்துள்ளன.
மணிமிடை பவளம்
121 முதல் 300 வரை உள்ள 180 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நீலநிற மணிகள் போலவும், செந்நிறப் பவளம் போலவும் பெருமதிப்பு உடையனவாக அமைந்து ஈரினப் பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ளன. மணியும் பவளமும் கோத்த ஆரம் போன்று இத்தொகுப்பு அமைந்துள்ளது.
நித்திலக் கோவை
301 முதல் 400 வரை உள்ள 100 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நித்தில முத்துக்கள் போலப் பெருமதிப்பு கொண்டவையாக அமைந்து ஒரினக் கோவை போல அமைந்துள்ளன. இத்தொகுப்பு முத்தாரம் போல் அமைந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் இத் தொகுப்பில்
1,3,5,7,9,11 என்பது போல் ஒற்றை-எண் கொண்ட 200 பாடல்கள் பாலைத் திணையாகவும்.
2, 8, 12, 18 என்பது போல் எண் கொண்ட 80 பாடல்கள் குறிஞ்சித்திணையாகவும்
4, 14, 24 என்பது போல் எண் கொண்ட 40 பாடல்கள் முல்லைத்திணையாகவும்
6, 16, 26 என்பது போல் எண் கொண்ட 40 பாடல்கள் மருதத்திணையாகவும்
10, 20, 30 என்பது போல் எண் கொண்ட 40 பாடல்கள் நெய்தல்-திணையாகவும் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.

இனி பாடல்களைக் காண்போம்.

முதலில் குறிஞ்சித் திணைக்குரிய பாடல், அகநானூரில் 2வது பாடல்

கோழ் இலை வாழை கோள் முதிர் பெரும் குலை
ஊழுறு தீம் கனி உண்ணுநர் தடுத்த
சாரல் பலவின் சுளையொடு ஊழ் படு
பாறை நெடும் சுனை விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது
கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
குறியா இன்பம் எளிதின் நின் மலை
பல் வேறு விலங்கும் எய்தும் நாட
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய
வெறுத்த ஏஎர் வேய் புரை பணை தோள்
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின் மாட்டு
இவளும் இனையள் ஆயின் தந்தை
அரும் கடி காவலர் சோர் பதன் ஒற்றி
கங்குல் வருதலும் உரியை பைம் புதல்
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன
நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே

இதற்கான நேரடி பொருளை முதலில் பார்ப்போம்.

கொழுத்த இலைகளைக் கொண்ட வாழையின், அடுக்குகள் முற்றிய பெரிய குலையின் நன்கு பழுத்த இனிய கனிகள், உண்பவருக்குத் திகட்டும்படியாக இனிமைக்கொண்ட, மலைச்சரிவின் பலாச் சுளைகளுடன் கலந்து, நாட்பட்டு, பாறையின் குழிந்த பகுதியில் சுனை போல் உண்டாகிய தெளிந்த சாறை, தேறல் என அறியாமல் குடித்த ஆண்குரங்கு, அருகிலிருக்கும் மிளகுக் கொடிகள் படர்ந்த சந்தனமரத்தில் ஏறாமல், நறிய பூக்களாலான படுக்கையில் களிப்புற்றுத் தூங்கும் எண்ணி முயலாத இன்பத்தை எளிதாக, நின் மலையிலுள்ள பல்வேறு விலங்குகளும் எய்தும் நாடனே!
நீ எண்ணி முயன்ற இன்பம் நினக்கு எங்ஙனம் அரிதாக இருக்கும்? மிக்க அழகினையுடைய மூங்கில் போன்ற பருத்த தோளைக் கொண்ட இவளும், கட்டுப்படுத்த எண்ணியும் அடங்காத நெஞ்சமுடன், உன்னிடம் இத்துணை காதல் கொண்டவளாயின், இவளது தந்தையின் கடும் காவலையுடைய காவலர்கள் சோர்ந்திருக்கும் தக்க சமயத்தை உளவறிந்து கண்டு இரவில் வருவதுவும் நினக்கு உரியதே, பசுமையான புதர்கள் சூழ்ந்த வேங்கை மரங்களும் நல்ல பூங்கொத்துகளை மலரப்பெற்றுள்ளன, மிகுந்த வெண்மை நிறமுள்ள திங்களும் ஒளிவட்டம் கொண்டுள்ளது.

பாடலுக்கான பின்புலம்

தலைவியின் வீட்டு திணைபுலத்திலே திணைகள் முற்றி அறுவடைக்கு தயாராகி இருக்கின்றன. தலைவி திணைபுலம் காத்து இருக்கையில் தலைவனைக் கண்டு காதலுறுகிறாள். இருவரும் களவில் இன்பமாக கழிக்கிறார்கள். இப்போது திணைமுற்றிவிட்டது. அறுவடைக்கான நேரம், அறுடைக்குப்பின் இற்செறிப்புத்தான். அதாவது தலைவி வீட்டைவிட்டு வெளிவர இயலாது. தலைவியின் முக வாட்டத்தின் காரணம் அறிந்து தோழி தலைவனிடம் சொல்லியது தான் இப்பாடல்.

என்ன சொல்கிறாள்?  விரைவில் மணமுடிக்க வேண்டுகிறாள்.  எங்கே சொன்னாள் அப்படி?
பாடலில் பார்ப்போம்.

பாடலில் ஒரு குரங்கின் கதைதான் உள்ளது. குரங்கு என்ன செய்கிறது? மரத்திலேயே நன்கு பழுத்துவிட்ட குலைகளினின்றும் வாழைப் பழங்கள் கனிந்து, கீழே இருக்கும் பாறையில் உதிர்ந்து விழுகின்றன. அருகிலிருக்கும் பலா மரத்திலிருந்து அதன் பழம் பழுத்து, வெடித்துச் சிதறி, அந்த வாழைக்குலையின் மேல் விழுகிறது. அந்த இரண்டு பழங்களின் கலவை, சாறாக வழிந்தோடி பாறையின் பெரிய குழிவான பகுதியில் சேர்ந்து, ஒரு சுனை போல் ஆகிறது. நாட்பட்ட அந்தச் சாறு நொதித்துப்போய் மதுவின் நிலையை அடைந்து தெளிந்து நிற்கிறது. அந்தப் பக்கம் நீர் குடிக்க வந்த ஒரு குரங்கு இந்தத் தெளிவை நீர் என்று எண்ணிக் குடிக்கிறது. அப்புறம் என்ன ஆகும்? போதை தலைக்கேற அது, மிளகுக்கொடிகள் படர்ந்த ஒரு சந்தன மரத்தில் ஏறுவதை விட்டுவிட்டு, அதன் கீழுள்ள மலர்களின் குவியலில் படுத்துத் தூங்கிவிடுகிறது.
இதுதான் கதை. இதில் எங்கு வந்தது மணப் பேச்சு? பார்ப்போம்!
என்னை மணமுடித்துக்கொள்என்று ஒரு பெண் நேரிடையாகக் கூறுவது பெண்ணுக்கு அழகல்ல. அதைத் தோழிகூடச் சொல்வதில்லை என்பதைக் கபிலர் மிக அழகாகக் இப்பாடலில் காட்டுகிறார்.

தலைவியின் தாய் வாழைப்பழக் குலை போல ஓர் இனிமையான பெரிய செல்வர் குடும்பத்தைச் சேர்ந்தவள். தலைவியின் தந்தையோ, பலாப்பழத்தைப் போன்று ஒரே குடும்பமாக, அதன் இனிக்கும் சுளைகளைப் போன்ற பல உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக்குடும்பத்தைச் சேர்ந்தவன். இவர்கள் இருவரின் மணம் நடந்து வாழையும் பலாவும் சேர்ந்த மயக்கும் தேறலின் சுவையைப் போன்ற தலைவி பிறந்து, பாறை சுனையில் விளைந்த தேறல் போல் வளருகிறாள். ஊழின் முறையால் தலைவன் தற்செயலாகத் தலைவியைச் சந்தித்து காதலுறுகிறான். எவ்வளவு அழகான ஒப்பீடு.

மரமேறுதல் குரங்கின் இயல்பு ஆனால் மதுவுண்ட குரங்கோ மரமேறாது பூப்படுக்கியயில் தூங்குகிறது.
அதுபோல் தலைவன் காதலின்பத்திலேயே திளைக்கிறான். மணமுடிக்க ஆவனச் செய்யவில்லை.
இதை மிக அழக்காக சுட்டிக்காட்டுகிறாள் தோழி.

தான் நினைத்து முயலாத இன்பத்தை எளிதாக உன் மலையின் விலங்கினங்கள் கூட அடையும் நாட்டுக்கு உரியவனே நீ விருபுகின்ற இன்பம் உனக்கு அரியதோ?

நீ உன் முயற்சியை செய் என்பது கருத்து.

அதுமட்டுமல்ல தலைவியின் உள்ளத்தையும் அவனுக்கு உரைக்கிறாள்.
இவளும் கட்டுப் படுத்த இயலாத நெஞ்சத்தோடு இருக்கிறாள் என்பதை அறிவிக்கிறாள்.

அடுத்து
இவளது தந்தையின் கடும் காவலையுடைய காவலர்கள் சோர்ந்திருக்கும் தக்க சமயத்தை உளவறிந்து கண்டு இரவில் வருவதுவும் நினக்கு உரியதே என்று கூறுகிறாள்.
இது இரவுக்குறியில் வா என்பது போல் தோன்றினாலும் அதுவல்ல அவள் சொன்னது. இரவில் காவல் அதிகம். தலைவியை காணுதல் அரிது என்று இரவுக்குறி மறுப்பதே அவள் எண்ணம்.

மேலும் வேங்கை மரம் பூத்திருக்கிறது, வெள்ளி நிலாவை ஒளிவட்டம் சுழ்ந்திருக்கிறது' என்கிறாள் அவள். நிலவை ஒளிவட்டம் சுற்றியிருத்தல் மழை வருவதற்கான அறிகுறி. நிலவின் அருகில் பனித்துளிகள் உருவாகி அதில் படும் ஒளி சிதறல் அடைந்து வட்டமாக தோன்றும். அப்பொழுது மழை வரும். வேங்கை பூத்திருப்பதும் கார்கால துவக்கத்தின் அறிகுறி. அதற்கு முன் அறுவடை விரைவில் மேற்கொள்ளப்படும். அறுவடை முடிந்து விட்டால் தலைவியைப் பார்க்க இயலாது. அதுமட்டுமல்லாமல் அறுவடைக்காலமே பெண் கொள்ளும் காலமாதலின் தலைவியின் வீட்டில் அவள் மணம் பற்றிய பேச்சு எழும்பும். முழு நிலவாக இருப்பதால் இன்னும் 15 நாட்களே உள்ளது. வளர்பிறையில் மணம் பற்றிய பேச்சு எழும்பும் எனவே தலைவன் உடனே மணமுடிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துவதாக அமைகிறது இப்பாடல்.

ஆசிரியப்பா என்ற பா கட்டமைபிற்குள், முதல், கரு, உரிப் பொருள்கள் அமைய அகப் பொருள் பற்றி மரபு மீறாது பாட வேண்டும் என்பது கபிலரின் கற்பனைக்குத் தடையாக இல்லாமல் அதுவே தூண்டுகோலாக அமைந்திருப்பது அறிந்து மகிழ தக்கது. இவ்வகப் பாடல்கள் தலைவன் தலைவியின் வாழ்க்கையை முழுவதுமாக காட்டுவதல்ல, ஒரு புகைப்படம் போல் அவர்கள் காதல் வாழ்வின் ஒரு பகுதியை மட்டும்  படம் பிடித்துக் காட்டுவதாய் அமையும்.
இங்கு தோழி தலைவனிடம் பேசுவதும் அவர்கள் பின் புலத்திலே மலையாகிய முதற்பொருளும், வாழை, பலா, குரங்கு, திணைப்புலம், வேங்கை மரம் ஆகிய கருப்பொருள்களும் தோன்றியிருக்க, வானில் மழைக்கால நிலஒளியோடு ஒரு முப்பரினாம புகைப்படம் நம் கண்முன்னே விரிவதை, இப்பாடலை அறிந்து படிக்கும் போது உணரலாம்.

வருவது மழைக்காலம். வானத்தில் முழு நிலவு காணும் போது இப்பாடல் நம் நினைவைத் தொடாமல் போகாது.

மழைக்காகவும் நிலவுக்காகவும் காத்திருப்போம்!

மற்றத்திணைக்குரிய பாடல்களுடன் விரைவில்
அன்புடன்
உமா.