Showing posts with label ஐங்குறுநூறு. Show all posts
Showing posts with label ஐங்குறுநூறு. Show all posts

Sunday, 3 June 2018

ஐங்குறுநூறு - முல்லை 2


முல்லை நிலத்தில் அடுத்த பத்து
பருவங்கண்டு கிழத்தி உரைத்த பத்து.

இது முல்லையுள் பாலைத் தோன்ற அமைந்த பாடல்களின் தொகுப்பு. தலைவன் பிரிவை ஆற்றியிருத்தல் முல்லை. ஆயின் குறித்த பருவம் வந்தும் தலைவன் வராமையால் தலைவி பிரிவுத்துயரால் வாடி கூறுவது இப்பாடல்காளில் காட்டப்பட்டுள்ளது.

வறந்த ஞாலம் தெளிர்ப்ப வீசிக்
கறங்கு குரல் எழிலி கார் செய்தன்றே;
பகை வெங் காதலர் திறை தரு முயற்சி
மென் தோள் ஆய்கவின் மறைய,
பொன் புனை பீரத்து அலர் செய்தன்றே.

நீர் வற்றிய பூமி துளிக்கும் படியாக சுழன்று பெருங்குரலோடு வீசி மேகமானது கார்கால மழையை பெய்தது. பகையை வென்று திறை பெறும் எங்காதலரின் முயற்சி, மென்மையான என் தோளின் மென்மை அழகு மறைந்து பொன் போன்ற பீர்க்கம்பூ போல் பசலை மேவ பிறர் அறியும் படி செய்கின்றதே!
கார்காலம் வந்தாலும் வினைமுடியா நிலையில் தலைவன் வராமையால் தன் பிரிவுத்துயரை தலைவி இப்படிக்கூறுவதாய் அமைந்துள்ளது இப்பாடல்.

அவல்தொறும் தேரை தெவிட்ட, மிசைதொறும்
வெங் குரல் புள்ளினம் ஒலிப்ப, உதுக்காண்,
கார் தொடங்கின்றால் காலை; அதனால்,
நீர் தொடங்கினவால் நெடுங் கண்; அவர்
தேர் தொடங்கு இன்றால் நம்வயினானே.

அவல் என்றால் குளம் அல்லது பள்ளம். கார்காலம் துவங்கி மழையும் பெய்து நீர்நிலைகளெல்லம் நிறைந்து விட்டன. அந்நீர் நிலைகளில் தவளைகள் சத்தம் செய்கின்றன. மிசை என்றால் வானம் அல்லது மேட்டுப்பகுதி, மேலே பறவைகளும் இனிய ஒலி எழுப்புகின்றன. அதோபார் கார்காலம் துவங்கிவிட்டதைப்பார். என் கணவரின் தேர்மட்டும் இன்னும் எம்மை நோக்கித் திரும்பவில்லை, அதனால் நெடிய என் கண்களும் நீர் வடிக்கின்றன.

இப்படி குறித்த பருவம் வரக்காண்டும் தலைவன் வராமையால், பிரிவாற்றா தலைவியின் கூற்றாய் அமைந்துள்ளது இப்பத்து.

கார்காலம் துவங்கி விட்டாலும் குறித்த காலத்தில் தலைவன் வரவில்லையே என தலைவி ஆற்றாதாளாய் வருந்த, காலம் வந்ததால் விரைவில் வந்துவிடுவார் என தோழி ஆற்றுவிக்கும் விதமாய் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுப்பு

தோழி வற்புறுத்த பத்து.

ஏதில பெய்ம் மழை கார் என மயங்கிய
பேதைஅம் கொன்றைக் கோதை நிலை நோக்கி,
எவன் இனி, மடந்தை! நின் கலிழ்வே? நின்வயின்
தகை எழில் வாட்டுநர் அல்லர்,
முகை அவிழ் புறவின் நாடு இறந்தோரே.

ஏதில பெய்ம் மழை – காரணமின்றி மழைப் பெய்வதைக் கண்டு மயங்கி அறியாமை கொண்ட கொன்றை மரமும் மாலை போன்று கொத்து கொத்தாக மலர்கிறது. அதைக்கண்டு, பெண்ணே! நீயும் கார் என நினைத்து கலங்கி நீர் வடிக்கின்றாய்.. மொட்டுக்கள் மலர்ந்து பூத்துக் கிடக்கும் முல்லை காட்டுப் வழியில் சென்றுள்ளத் தலைவன், உன் மேன்மை கொண்ட அழகை வாட்டுபவரல்லர், விரைவில் வந்துவிடுவார் என ஆற்றுவிக்கிறாள்.  

பாணன் பத்து

பருவம் வந்தும் தலைவன் வர இயலாமையால் பாணன் தூதாக செல்கிறான். இப்பத்துப் பாடல்காளும் தூதாக வந்த பாணனிடம் கூறும் கூற்றாக அமைந்திருக்கின்றன.

எல் வளை நெகிழ, மேனி வாட,
பல் இதழ் உண்கண் பனி அலைக் கலங்க,
துறந்தோன் மன்ற, மறம் கெழு குருசில்;
அது மற்று உணர்ந்தனை போலாய்
இன்னும் வருதி; என் அவர் தகவே?

ஒளிமிக்க வளையல்கள் கழன்று விழ, மேனி வாடும் படியாக, பல இதழ்கள் கொண்ட குவளை மலர் போன்ற மையிட்ட கண்கள் நீர் வடித்து கலங்கும் படியாக விட்டுச் சென்றவரல்லவா வலிமை மிக்க தலைவன்.. அதை உணராமல் அவர் பெருமை பேசி இன்னும் வருகின்றாயே அது சரியோ!

அடுத்ததாக

தேர் வியங்கொண்ட பத்து.

வினைமுடிந்து இல்லம் திரும்பும் தலைவன் தேரை விரைந்து செலுத்துமாறு தந்தேர்பாகனுக்குச் சொல்லியது

இது மன் பிரிந்தோர் உள்ளும் பொழுதே;
செறிதொடி உள்ளம் உவப்ப
மதிஉடை வலவ! ஏமதி தேரே.

இதுவே பிரிந்தவர் நினைக்கும் பொழுது. நெருங்கிய வளையல்கள் கொண்ட தலைவி மகிழும் படியாக, அறிவுக்கூர்மையுடய பாகனே தேரை விரைந்து செலுத்துவாயாக!

கருவி வானம் பெயல் தொடங்கின்றே;
பெரு விறல் காதலி கருதும் பொழுதே;
விரி உளை நன் மாப் பூட்டி,
பருவரல் தீர, கடவுமதி தேரே!

மேகம் திரண்டு வானம் மழைப்பொழிய தொடங்கியது, பெருமையுடைய காதலி தலைவனை நினைக்கும் பொழுது இது, விரிந்த பிடறி மயிர்கொண்டதும், விரைந்து செல்வதுமான நல்ல குதிரையைப்பூட்டி, நம் துன்பம் தீருமாறு தேரைச் செலுத்துவாயாக!

தலைவியின் கொஞ்சும் மொழி நினைவிற்கு வருகிறது. ஆதலால் அழகிய மணிப்பொருந்திய தேரை ஓட்டுவாயாக என பலவாறு தலைவன் கூறுவதாய் அமைந்துள்ள பத்துப்பாடல்களின் தொகுப்பு இது.

வரவுச் சிறப்புரைத்த பத்து

குறித்த கார்காலம் வருமுன்னே வினைமுடித்து மீளும் தலைவன் தலைவியிடம் கூறும் கூற்றாக அமைந்த பத்துப் பாடல்களின் தொகுப்பு இது.

நின்னே போலும் மஞ்ஞை ஆல, நின்
நல் நுதல் நாறும் முல்லை மலர,
நின்னே போல மா மருண்டு நோக்க,
நின்னே உள்ளி வந்தனென்
நல் நுதல் அரிவை! காரினும் விரைந்தே.

நல்ல நெற்றியைக் கொண்ட அரிவை பருவத்தவளே! அங்கே உன்னைப் போலவே மயிலானது ஆட, உன் நெற்றியைப் போல் மணங்கொண்ட முல்லை மலர, உன்னைப்போலவே மானும் மருண்டு நோக்க, அதைக்கண்டு உன் நினைவோடு நான் கார் காலத்தைக் காட்டிலும் விரைவாக வந்தேன், என தான் கார்காலத்திற்கு முன்னே வந்ததை கூறும் விதமாக இப்பத்துப்பாடல்கள் அமைந்துள்ளன.

தலைவன் பிரிவை ஆற்றியிருக்கும் தலைவி, கார் கால நிகழ்வுகள், தலைவியின் நினைவால் விரைந்து வரும் தலைவன் அவர்கள் இல்லற வாழ்வின் மாண்புகள் என அழகிய முல்லை நில நிகழ்வுகள் பயின்று வரும் இந்த நூறு பாடல்களும் மேலும் மேலும் படித்து இன்புறத்தக்கன.

அடுத்தாக பாலை நிலப்பாடல்கள். தலைவி தலைவனுடன் உடன் போக்கித் தமரைப் பிரிதல் அல்லது தலைவன் தலைவியைப் பிரிதல் என பிரிவின் நிலைக்காட்டும் பாலை நிலப்பாடல்களுடன் விரைவில்

அன்புடன்
உமா

Friday, 1 June 2018

ஐங்குறுநூறு - முல்லை 1


பேயனார் பாடிய முல்லைநிலப் பாடல்களில் அமைந்த பத்து தொகுப்புகள்
1.       செவிலி கூற்றுப் பத்து
2.       கிழவன் பருவம் பாராட்டுப் பத்து
3.       விரவுப் பத்து
4.       புறவணிப் பத்து
5.       பாசறைப் பத்து
6.       பருவம் கண்டு கிழத்தி உரைத்த பத்து
7.       தோழி வற்புறுத்த பத்து
8.       பாணன் பத்து
9.       தேர் வியங்கொண்ட பத்து
10.   வரவுச்சிறப்பு உரைத்த பத்து

காடும் காடு சார்ந்த இடமும் முல்லையாகிறது என்பதை அறிவோம். இருத்தல் இருத்தல் நிமித்தமும் அதன் உரிப்பொருள்.

முதல் பத்து செவிலி கூற்று, தலைவியின் இல்லம் சென்று வந்த செவிலி நற்றாய்க்கு தலைவியின் இல்லற வாழ்வை மகிழ்வோடு கூறுவதாய் அமைகிறது இப்பத்து. இப்பாடல்களில்  இல்லற பண்புகள் மிக அழகாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

குட்டி மானை இடையிலே கொண்ட ஆண், பெண் மான்களைப் போல பெற்ற மகனை நடுவில் கிடத்தி அவனும் அவளும் உறங்குவது இனிய காட்சியாகும். சினமே இல்லாமல் நீல நிற வானத்தில் வாழும் தேவரும் இவர்களைப் போல இன்பம் பெற முடியாது.

மறி இடைப்படுத்த மான் பிணை போல,
புதல்வன் நடுவணன் ஆக, நன்றும்
இனிது மன்ற அவர் கிடக்கை; முனிவு இன்றி
நீல் நிற வியலகம் கவைஇய
ஈனும், உம்பரும், பெறலருங்குரைத்தே.

தலைவி மகனைத் தழுவிக்கொண்டு படுத்திருக்கிறாள்.
தலைவன் அவள் முதுகைத் தழுவிக்கொண்டு படுத்திருக்கிறான்.
பாணர் கையில் யாழைத் தழுவியிருப்பது போல இது இனிமையாக உள்ளது.
இதில் நல்லதொரு பண்பாடும் இருக்கிறது.

புதல்வற் கவைஇய தாய் புறம் முயங்கி
நசையினன் வதிந்த கிடக்கை, பாணர்
நரம்பு உளர் முரற்கை போல,
இனிதால்; அம்ம! பண்புமார் உடைத்தே.

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு

என்ற வள்ளுவன் வாக்கிற்கொப்ப தலைவனும் தலைவியும் தங்கள் புதல்வனோடும் கொண்ட மிகுந்த அன்பால் விளைந்த இல்லற மாண்பை மிக அழகாக படம்பிடித்துக்காட்டுகின்றன இப்பத்துப் பாடல்கள்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்கை
பண்பும் பயனும் அது.
என்பது வள்ளுவன் வாக்கு. 


அடுத்ததாக கிழவன் பருவம் பாராட்டுப் பத்து

பெண்ணே!
இதுதான் நாம் விரும்பிய பருவ காலம்.
அதுதான் நாம் நினைத்த முல்லை நிலம்
இருவரும் சேர்ந்து இன்பமாக கழித்தால் நம் இளமை இனிதாகும்
இனியவர் சேர்ந்திருப்பதுதான் இன்பம்.

இதுவே, மடந்தை! நாம் மேவிய பொழுதே;
உதுவே, மடந்தை! நாம் உள்ளிய புறவே;
இனிது உடன் கழிக்கின், இளமை
இனிதால் அம்ம, இனியவர்ப் புணர்வே!

தாம் கூறிய பருவம் வருமுன்னரே வந்த தலைவன் தலைவியை நோக்கி, பொன்னைப் போல் கொன்றையும் நீல மணிபோல் காயாவும் பூத்து குலுங்குகின்றன, அதோ பூக்களில் வண்டுகள் தேனுன்டு இனிது பாடுகின்றன, பூக்கள் மலர்ந்து பூந்தாதுக்கள் கொட்டிருக்கின்றன, ஆண் யாணையானது தன் பெண் யாணையின் உறவை நாடுகின்றது என இனிய முல்லை நிலத்தின் கண் காணும் கார்கால நிகழ்வுகளை எல்லாம் கூறி வா நாமும் இன்பம் நுகர்வோம் என்பதாய் அமைந்திருப்பது இப்பத்துப் பாடல்கள்.

விரவுப் பத்து

வலிமை மிக்க சக்கரம் கொண்டதும், விரைந்து பாயும் குதிரை பூட்டியதுமான தேரை, நீண்ட கொடியில் பூத்திருக்கும் முல்லையும் தளவமும் உதிரும்படி விரைந்து செலுத்திக்கொண்டு நாம் சென்றால் முன்னங்கையில் நிறைந்த வளையல்களை உடைய அவள் வருந்தமாட்டாள்.

கடும் பரி நெடுந் தேர்க் கால் வல் புரவி,
நெடுங் கொடி முல்லையொடு தளவமலர் உதிர,
விரையுபு கடைஇ நாம் செல்லின்,
நிரை வளை முன்கை வருந்தலோ இலளே.

கார்காலத்தில் விரைந்து தேர் செலுத்தி வரும் தலைவனை நாம் முன்பும் கண்டிருக்கிறோம். இப்பத்துப் பாடல்கள் முல்லை நிலத்திற்கான பல துறைச் செய்திகள் கொண்டதாய் அமைந்திருக்கின்றன.

புறவணிப் பத்து

முல்லை நிலத்தின் அழகை கூறும் பாடல்கள் அமைந்த தொகுப்பு. பிரிவுக்கு உடன்பட்டாலும் தலைவி தலைவன் செல்லும் வழி அரிது என ஆற்றாதவளாய் கூற, கார்காலத்தில் சென்றமையால் சுரம் –வழி நன்றே என்பதாய் அமைந்துள்ளன இப் பத்துப்பாடல்கள்

அவர் சென்ற வழி நல்ல வழி. குட்டியுடன் பெண்மான் துள்ளி விளையாடும். ஈர மழை பொழியும் இன்பமும் அங்கு உண்டு.

நன்றே, காதலர் சென்ற ஆறே!
மறியுடை மான்பிணை உகள,
தண் பெயல் பொழிந்த இன்பமும் உடைத்தே.

பாசறைப் பத்து

போர்ப் பாசறையில் இருக்கும் தலைவன் தலைவியின் நினைவில் கலங்குகிறான். கார்காலம் வருவேன் எனக்கூறி பிரிந்த தலைவன் வினை முடியாமையால் மீள முடியாது தலைவியிடம் சென்று வந்த தூரர்கள் மொழி கேட்டு வருந்துவதாய் அமைந்துள்ளன இப்பத்துப்பாடல்கள்.

செம்மையானவளாகிய என்னவளிடம் யான் சொன்ன உறுதி மொழி பொய்மை உடைத்தாயின. கார் காலம் இடியுடன் வந்திருக்கிறது. நான் செய்வதறியாமல் கையற்றுப் பிரிந்திருக்கிறேன்.  எனக்கே இது துன்பம் தருகிறது.  என்னவளுக்கு எப்படி இருக்கும்?  நான் படும் வேதனையை அவள் அறிந்தால் நல்லது.

ஐய ஆயின, செய்யோள் கிளவி;
கார் நாள் உருமொடு கையறப் பிரிந்தென,
நோய் நன்கு செய்தன எமக்கே;
யாம் உறு துயரம் அவள் அறியினோ நன்றே.

முல்லை நிலத்தின் மற்ற ஐந்து தொகுப்புகளுக்கான பாடல்களுடன் விரைவில்

அன்புடன்
உமா.


Sunday, 27 May 2018

ஐங்குறுநூறு - குறிஞ்சி 2

மலையும் மலைச் சார்ந்த இடமுமான குறிஞ்சியில் மற்ற பாடல்களை இப்போது காண்போம்..

குறிஞ்சித் திணைக்கு உரிய கருப்பொருளில் குறவர் முக்கியப் பங்கு வகிப்பர். குன்றத்தில் வாழும் குறவன் என்ற பொருளால் குன்றக் குறவன் என்ற சிறுதொடர் பயின்று வரும் பத்துப் பாடல்களின் தொகுதி குன்றக் குறவன் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.


குன்றக் குறவன் புல் வேய் குரம்பை
மன்று ஆடு இள மழை மறைக்கும் நாடன்
புரையோன் வாழி, தோழி! விரை பெயல்
அரும் பனி அளைஇய கூதிர்ப்
பெருந் தண் வாடையின் முந்து வந்தனனே


மணமுடிக்க பிரிந்துச் சென்ற தலைவன் குறிப்பிட்ட காலம் தோன்றும் முன்னே திரும்பியமைக் கண்ட தோழி மகிழ்ந்து தலைவிக்கு சொல்லியது..,

குன்றக் குறவன் வாழும் புல்லால் வேயப்பட்ட குடிசையை மன்றத்தில் நகரும் மூடுபனி மறைக்கும்.இப்படி மூடுபனி மறைக்கும் நாட்டின் தலைவன் உன் காதலன். அவன் மிகவும் உயர்ந்த பண்புள்ளவன். மணத்துடன் கூடிய பனி மூட்டம் கலந்து குளிர் மிகும் கூதிர் காலம் வருவதற்கு முன்பே திருமணம் செய்துகொள்ள உன்னைத் தேடி வந்துவிட்டான்.

குறவனது புல்வேய்குரம்பை மன்று ஆடு இள மழை மறைக்கும் நாடனென்றது, பிரிவின்கண் தங்கட்கு வந்த துன்பத்தை இவன் மறைத்தது என்பதாம். வறுமை கூர்ந்த புல்வேய் குரம்பையை மழை புறமறைத்தாற் போல வாடை செய்யும் நோய் மறையுமாறு, துன்பம் மறையுமாறு தலைவன் வந்தான் என்றது உள்ளுறையுவமாக கூறப்பட்டுள்ளது.


கேழல் பத்து 


காட்டுப் பன்றியைக் கேழல் என்றும், பன்றி என்றும் குறிப்பிட்டு தலைவன் செயல் அந்தப் பன்றி போல உள்ளதாக உள்ளுறைப் பொருள் வைத்து, அது வாழும் நாட்டை உடையவன் எனக் கூறும் 10 பாடல்கள் இப்பகுதியில் உள்ளன


நன் பொன் அன்ன புனிறு தீர் ஏனல்
கட்டளை அன்ன கேழல் மாந்தும்
குன்று கெழு நாடன் தானும்
வந்தனன்; வந்தன்று தோழி! என் நலனே


பொன் நிறத்தில் தினை விளைந்திருக்கும். அதனை மேயும் பன்றி பொன்னை மாற்றுப் பார்க்க உறைக்கும் கட்டளைக் கல் போலத் தோன்றும். அந்தப் பன்றி வாழும் மலை நாட்டை உடையவன் என் காதலன். அவன் இன்று வந்திருக்கிறான். அதனால் என் மேனி பொலிவுடன் திகழ்கிறதுபொன்போன்ற தினையைக் கேழல் மாந்தும் நாடனென்றது தன் நாட்டுவாழும் விலங்குகளும் தமக்கு வேண்டுவன குறைவின்றிப் பெற்று இன்பம் நுகரும் நாடன் என்பது உணர்த்துமாறு வந்தது. தலைவன் வந்ததால் தன் நலனும் வந்தது என்று கூறுகிறாள் தலைவி


குரக்குப் பத்து


குரங்கு/மந்தி வாழும் மலையின் தலைவன் அவன்.குரங்கு வாழ்வது போல் வாழ முயல்கிறான் என்று பேசும் பாடல்கள் பத்து இந்தப் பகுதியில் உள்ளன.


அத்தச் செயலைத் துப்பு உறழ் ஒண் தளிர்,
புன்தலை மந்தி வன் பறழ் ஆரும்
நன் மலை நாட! நீ செலின்,
நின் நயத்து உறைவி, என்னினும் கலிழ்மே.


காட்டில் தழைத்திருக்கும் செயலை மரத்தின் தளிர்கள் பவளம் போல் சிவப்பு நிறத்தில் இருக்கும். அந்தத் தளிர்களைப் பெண்குரங்கும், அதன் குட்டியும் உண்ணும். இப்படிப்பட்ட மலையின் தலைவனே, நீ இவளை விட்டுவிட்டுப் பொருள் தேடச் சென்றால் உன்னை விரும்பி வாழும் என் தலைவி நான் அழுவதைக் காட்டிலும் பெரிதும் அழுவாள்.


அத்தச் செயலைத் துப்பு உறழ் ஒண் தளிர்,
புன்தலை மந்தி வன் பறழ் ஆரும்


எனறது, இவள் இளமை நலனை நின் பிரிவு கெடுக்கும். நின் பிரிவாற்றாள் தலைவி. எனவே இளமை கழியுமுன்னே மணமுடிப்பாயாக என்பதாம்… 

கிள்ளைப் பத்து.. 

கிள்ளை என்பது கிளியைக் குறிக்கும் சொல். குறிஞ்சித் திணைக் கருப்பொருள்களில் ஒன்றான கிளி இடம் பெறும் வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி கிள்ளைப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

பின் இரும் கூந்தல் நல் நுதல் குறமகள்
மெல் தினை நுவணை உண்டு தட்டையின்
ஐவனச் சிறுகிளி கடியும் நாட!
வீங்கு வளை நெகிழப் பிரிதல்
யாங்கு வல்லுநையோ ஈங்கு இவள் துறந்தே?


பின்னிய அடர்ந்த கூந்தலையும் நல்ல நெற்றியையும் உடைய குறவனின் மகள் தினை மாவை உண்டு, ஐவன நெல்லைப் பாதுக்காக்க தட்டியால் கிளிகளை விரட்டும் நாடவனே, இறுக்கமாக இருந்த இவளுடைய வளையல்கள் இப்பொழுது வழுக்கி விழுகின்றன. இவளை இவ்வாறு துறக்க எப்படி உன்னால் முடிகின்றது?


குறமகள் தினைமாவை உண்டபடி, திணைபுறத்து கிளிகளைக் கடியும் நாட என்றது, இவளும் நீ முன் செய்த தண்ணளியை மனங்கொண்டு தன்னை வருத்தவரும் காமநோயினைப் பிறர் காணாதவாறு, தன் பொறுமையால் காத்து வருகின்றாள் என்பதாம்.


அளியதாமே, செவ் வாய்ப் பைங் கிளி
குன்றக் குறவர் கொய் தினைப் பைங் கால்
இருவி நீள்புனம் கண்டும்.
பிரிதல் தேற்றாப் பேர் அன்பினவே


சிவந்த வாயை உடைய பச்சைக்கிளி இரங்கத் தக்கது. குன்றக் குரவர் தினையைக் கொய்துகொண்டு சென்றுவிட்டனர். எனினும் அவை கதிர் இல்லாத வெற்றுத் தாள்களின் மேல் அமர்ந்திருக்குன்றன. அவற்றைப் பிரிய முடியாத பேரன்பினவாக உள்ளன. திணை அறுக்கப்பட்டமையால் திணைப்புறம் தலைவியைக் காண வந்த தலைவன் கேட்குமாறு தோழிகூறியது.

மஞ்ஞை பத்து

கொடிச்சி கூந்தல் போலத் தோகை
அம் சிறை விரிக்கும் பெருங்கல் வெற்பன்
வந்தனன், எதிர்ந்தனர் கொடையே,
அம் தீம் கிளவி பொலிக நின் சிறப்பே.


குறிஞ்சி நிலப் பெண்ணின் கூந்தலைப் போன்று உள்ள தன் அழகிய சிறகுகளை விரித்து ஆடும் மயில்களை உடைய பெரிய மலை நாடன் வந்தான், உன்னைப் பெண் கேட்பதற்கு. நம் குடும்பத்தார் உன்னை அவனுக்குத் தருவதற்குச் சம்மதித்து விட்டார்கள். அழகிய இனிய சொற்களையுடையவளே! பொலிவு அடையட்டும் உன்னுடைய சிறப்பு.

கொடிச்சி கூந்தல் போல மஞ்ஞை சிறகை விரிக்கும் வெற்பன் என்றது, நின் மகிழ்ச்சிக்கு தகுந்தவாறு தமரும் மகிழ்ச்சியோடு அவனுக்கே நின்னை கொடை நேர்ந்தனர் என்பது.


அருமையான இப்பாடல்களை படிக்கும் போதுகுறிஞ்சிக்கோர் கபிலன்என்ற அடைமொழி மிகையல்ல என்பதை உணர முடிகிறதல்லவா
மலையை சற்று கடந்து காட்டினை அடைவோம். முல்லை நிலப் பாடல்களுடன் விரைவில்.


அன்புடன்
உமா