Showing posts with label நற்றிணை. Show all posts
Showing posts with label நற்றிணை. Show all posts

Saturday, 21 April 2018

நற்றிணை 5 பாலை


குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல் என்பன நானிலங்கள். தமிழில் பாலை என்று நிலம் இல்லை. குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த நிலமும் மற்றும் முல்லை - காடும் காடு சார்ந்த நிலமும் ஆகிய நிலப்பகுதிகள் கால மாற்றங்களால் திரிந்து தம் இயல்புகளினின்றும் மாறுபட்டு நிற்கும். இங்ஙனம் மாறுபட்ட நிலப் பகுதி பாலை என்று அழைக்கப்பட்டது.

நற்றிணையின் 110வது பாடலான இப்பாடல் உடன் போகினாள் மகள் எனக் கேட்ட நற்றாய், சிறு விளையாட்டியாய் இருந்தவள் இல்லறம் நடத்தும் அறிவும் பண்பும் எப்படி பெற்றனள் என வியந்து கூறினாலும் இவ்வளவு நாள் பிரிந்தறியாதவள் பிரிவாற்றாளாய் வருந்தி கூறுவதாயும் அமைந்த பாடல். உரிப் பொருளால் இப்பாடல் பாலைத்திணைக்கானது.

பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால்   
விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்திப்
புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
உண்ணென்று ஒக்குபு புடைப்பத் தெண்ணீர்
முத்தரிப் பொன்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று
அரிநரைக் கூந்தல் செம்முது செவிலியர்
பரிமெலிந் தொழியப் பந்தர் ஓடி
ஏவல் மறுக்குஞ் சிறுவிளை யாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல்
கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்
ஒழுகுநீர் நுணங்கறல் போலப்
பொழுதுமறுத்து உண்ணுஞ் சிறுமது கையளே.

பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால்   
விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்திப்

தேன் கலந்ததையொத்த நல்ல சுவையுள்ள வெண்மையான இனிய பாலுணவை விரிந்து ஒளிவீசும் பொன்னாலாகிய கலத்தில் இட்டு அதை ஒருகையால் பிடித்து நின்று

புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
உண்ணென்று ஒக்குபு புடைப்பத்

புடைக்கும் பொழுது புடைக்கப்பட்டவரை சுற்றிக்கொள்ளும் தன்மையதான சிறு கோல், ஓங்கும் போது நோகாதிருக்க நுனியில் பூக்கள் இருப்பதாக ஒடித்துக் கொள்ளப்பட்ட சிறு பூங்கொம்பு. அக்கொம்பினை ஓங்கியப்படி உண்பாயாக எனவும்

தெண்ணீர்
முத்தரிப் பொன்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று

தெளிந்த ஒளியினையுடைய முத்துக்கள் பரலாகப் போடப்பட்ட பொன்னாலாகிய சிலம்பு ஒலிக்குமாறு பாய்ந்து ஓடி

அரிநரைக் கூந்தல் செம்முது செவிலியர்
பரிமெலிந் தொழியப்

மெல்லியதான நரைத்த கூந்தலைக்கொண்ட செவிலியர் மெலிந்து போகுமாறு

பந்தர் ஓடி
ஏவல் மறுக்குஞ் சிறுவிளை யாட்டி

பூப்பந்தலின் கீழ் ஓடி, உண் என்பதற்கு நான் உண்ணேன் என ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டுப் பெண்ணானவள்

கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்
ஒழுகுநீர் நுணங்கறல் போலப்
பொழுதுமறுத்து உண்ணுஞ் சிறுமது கையளே.

மணந்து கொண்ட கணவன் வீட்டில் வறுமை. ஆனாலும் தந்தை கொடுத்த மிகுந்த உணவை உண்ணாது ஓடுகின்ற நீரில் கலந்திருக்கும் நுண்மணல் போல் இடைவெளி விட்டு கிடைக்கும் போது மட்டும் உண்கிறாள்.

அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல்
அறிவும் ஒழுக்கமும் எங்கிருந்துப் பெற்றாள்

இப்பாடல் பள்ளி கூட பாடபுத்தகத்தில் படித்திருப்போம்.. மீண்டும் ஒருமுறை சுவைப்போம்.

செல்வ செழிப்பாக வளர்ந்தவள் தலைவி. பாலுணவை பொற்கலத்திலேந்தி உண் என்றாலும் முத்துப் பரல் கொண்ட சிலம்புகள் ஒலிக்க ஓடி ஒளிந்து உண்ணாமல் போக்குக் காட்டும் சிறு விளையாட்டியாக வளர்ந்தவள்.
தலைவனோடு உடன் போகிறாள். கணவன் வீடோ வறுமைக்குட்பட்டது. வேளைக்கு உணவு கிடைக்காது. இவளை செல்லமாக வளர்த்த தந்தை நிறைய உணவை கொடுத்தணுப்புகிறான். ஆனாலும் அதை உண்ணாமல், ஓடும் நீரில் நுண்மணற் கலந்திருப்பது போல். தன் கணவன் வீட்டு உணவை ஒரு வேளை பட்டினி கிடந்து மறு வேளை உண்கிறாள். இந்த நல்லறிவையும், ஒழுக்கலாற்றையும் எங்குக் கற்றுக்கொண்டாள்? என்று மகள் நிலைக்கண்டு தாய் வியக்கிறாள்.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
இப்பாடல் குறுந்தொகையி 40வது பாடல்.அனைவரும் அறிந்த பாடல்.
செம்மண்ணில் கலந்த நீர் மண்வேறு நீர்வேறு எனப்பிரித்தறிய முடியாவண்ணம் ஒன்றாக கலந்துவிடும் அதுபோல் அன்புடைய நெஞ்சம் தாம் கலந்தனவே என்று மிக அற்புதமான உவமை ஒன்றை காட்டி பாடலாசிரியர் செம்புல பெயர்நீரார் என்ற பெயர் பெறுகிறார்.

இதற்கு நேர் எதிராக இப்பாடலில் ஒழுகுநீர் நுணங்கறல் போல’ என்பது ஒன்றுபோலிலாமல் இடைவெளிவிட்ட தன்மைக்கு எடுத்துக்காட்டானது. தொடர்ந்து வேளாவேளைக்கு உணவு உண்ணாமல் கிடைக்கும் போது மட்டுமே உண்கிறாள். நுண்மையான மணல் ஓடும் நீரில் கலந்திருக்கும் போது கண்ணிற்கு தெரியாது. நீர் தெளிவாகவே காணும். ஆனால் மணல் நீரில் ஒன்றாக கரையாமல் தனித்தனியே தட்டுப்படும். அதுபோலவே வேளைக்கு உணவு உண்ணாமல் இடைவெளி விட்டு கிடைக்கும் போது மட்டுமே உண்கிறாள். தந்தையின் மிகுந்த உணவையும் மறுத்து

மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

என்பதற்கொப்ப மனைநலம் காக்கிறாள். வறுமை வெளித் தெரியாமல் வாழ்கிறாள்.

செல்வச் செழிப்பிலே வளர்ந்தாலும், வறுமையிலும் இல்லறம் காக்கும் இப்பண்பிணை எங்கிருந்து பெற்றாள் என்று நற்றாய் பிரிவாற்றமையிருந்தாலும் பெருமிதமாய் கூறுகிறாள்.

இன்றும் பெற்றோருக்கு தன் குழந்தைகள் சிறியவர்களாகவே தெரிகின்றனர். காலம் அவர்களை வளரச் செய்கிறது. ஒருகுறிப்பிட்ட காலத்தில் திருமணம் கருதியோ அல்லது அவர்கள் வாழ்வின் முன்னேற்றம் கருதியோ பிரிய நேர்கிறது. இவ்வளவு நாள் கைப்பிடித்து வந்தவர்கள் விலக நேரும் போது வரும் உணர்வு எல்லா காலங்களிலேயும் எல்லா தலைமுறையினரையும் தாக்கி யிருக்கிறது. இவ்வுணர்வை இப்பாடலில் மிக அழகாக பதித்திருக்கிறார் போதனார். அபியும் நானும் படத்தில் இதே உணர்வு அழகாக பதிக்கபட்டிருக்கிறது. மகனோ மகளோ உள்ள எல்லார் வீட்டிலும் அனுபவமாவது இவ்வுணர்வு..

பாலையில் இன்னுமொரு பாடல் இதன் ஆசிரியர் நல்வெள்ளியார்.
இவர் பெண்பாற் புலவர் ஆவார். இவரது ஊர் மதுரை. நற்றிணையில் 2, குறுந்தொகையில் 1, அகநானூற்றில் 1 என இவரது பாடல்கள் நான்கே எனினும் அழகான வருணனைகளாலும், மறைமுக உணர்ச்சிச் சித்திரிப்பினாலும் உயர்ந்த தரமுடையவை.

சூருடை நனந்தலைச் சுனைநீர் மல்கப்   
பெருவரை அடுக்கத் தருவி யார்ப்பக்
கல்லலைத் திழிதருங் கடுவரற் கான்யாற்றுக்     
கழைமாய் நீத்தங் காடலை யார்ப்பத்
தழங்குகுர லேறொடு முழங்கி வானம்
இன்னே பெய்ய மின்னுமால் தோழி   
வெண்ணெ லருந்திய வரிநுதல் யானை
தண்ணறுஞ் சிலம்பின் துஞ்சுஞ்
சிறியிலைச் சந்தின வாடுபெருங் காட்டே.

முன்பு முல்லை நிலப்பாடலில் கார்காலம் துவங்க இருப்பதை அறிந்த தலைவன் தேரை விரைவாக செலுத்த பாகனை ஏவி நின்ற காட்சியைக் கண்டோம்.
இப்பாடலில்
பொருள் தேடச் சென்ற தலைமகன் வரவில்லையே என வருந்துகிறாள் தலைவி. கார் காலம் துவங்கி விட்டதால் விரைவில் தலைவன் வருவான். நீயும் அவனோடு இன்புருவாய் என தேற்றுவாளாய் தோழி கூறுகிறாள்.
வரியுடைய நெற்றியைக்கொண்ட யானை, மூங்கில் அரிசியைத் தின்று, வாசம் வீசும் மலைப்பக்கத்திலே போய் தூங்கும். மலைக்காட்டில் மழையின்றி சிறிய இலையுடைய சந்தன மரங்கள் வாடி நிற்கும்.
சந்தன மரத்தின் வாட்டம் நீங்கவும், அச்சத்தையுடைய பெரிய சுனையில் நீர் நிறையவும், பெரிய மூங்கில்களையுடைய மலைப்பக்கத்தில் அருவிகள் ஆரவாரிக்கவும், கற்களைப் புரட்டிக் கொண்டு ஓடிவருகின்ற கானியாற்றில், ஒலிக்கின்ற இடியோடு முழக்கம் செய்து, மேகம் பெய்த மழையில், மூங்கிலும் முழுகுமாறு வெள்ளம் உருவாகிக், காட்டில் சென்று மோதும்.
இக்காலத்தை நோக்கினவுடன் அவர் உடனே வந்து உன்னை வரைந்து (கூடி) கொள்வார். ஆகவே நீ வருந்தாதே!!
அச்சம் தரும் சுனையில் நீர் நிறையவும், பெரிய மலையடுக்கத்தில் அருவி கொட்டுமாறும்
பற்றுக் கோடாகிய மூங்கிலும் முழுகுமாறு காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து பாயுமாறும்
ஒலிக்கின்ற இடியேற்றொடு முழக்கஞ் செய்து முகில்கள் இப்பொழுதே மழை பெய்யவேண்டி மின்னா நிற்கும்

தோழியின் பேச்சு வெறும் மழை வருணனையாக மட்டுமே நின்று விடுகிறது. வெறும் வருணனையை மட்டுமே நோக்கமாகக் கொண்டு கவிதை அமைவது சங்க இலக்கியத்தில் இல்லை. ஆகவே தோழியின் பேச்சில் மறைபொருள் இருக்க வேண்டும்.

வாடுகின்ற பெருங்காட்டிலே அக்காடு தழைப்ப மழைபெய்யத் தொடங்குமென்றது வாடி நிற்கின்ற தலைவி மகிழுமாறு தலைவன் வருவான். மழை பெய்து பெருக்கெடுப்பிற் காட்டில் வருதற்கியலாதாதலிற், பெருக்கெடுக்குமாறு மழைபெய்தற் பொருட்டு முகில்கள் திரண்டு நிற்கும் என்றாள். கார் காலத்தைக் கண்டதும் விரைந்து வருவான் என்பது குறிப்பு.
நெல்லருந்திய யானை கவலைகெடத் துயிலு மென்றது காதலனொடு இன்ப நுகர்ந்து நீயும் கவலையழிவாய் என்னும் குறிப்பாக ஆற்றுவிக்கிறாள் தோழி.

சங்க காலத்தில் ஆண்பாற் புலவர்களுக்குச் சளைக்காமல் பெண்பாற் புலவர்களும் இலக்கிய ஆளுமை மிக்கவர்களாகக் காணப்பட்டனர். சிறந்த பல தனிப்பாடல்களை, தொகுப்புக்களை இப்பெண்பாற் புலவர்கள் தமிழ் உலகுக்கு ஈந்தபோதும் அவர்களின் இயற்பெயர் அத்தொகுப்புக்களிலோ, தனிப்பாடல்களிலோ ஈண்டு குறிப்பிடப்படவில்லை என்பது இலக்கியங்களை ஆராச்சியாளர் கூறும் கருத்து.
அழகும் கற்பனையும் நிறைந்த இப்பாடலை சுவைப்போம். மகிழ்வோம்.

பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பாற் போல் நற்றிணை நலம் வியக்க சில பாடல்களை இங்கு கண்டோம்.
இன்னும் பல பாடல்களை பின்பு அறிவோம், சுவைப்போம்.

அடுத்ததாக குறுந்தொகையில் சில பாடல்களோடு விரைவில்…

அன்புடன்
உமா.




            

Wednesday, 18 April 2018

நற்றிணை 4, முல்லை

முல்லை : காடும் காடு சார்ந்த நிலமும், கார் காலமும் மாலை நேரமும் முல்லைக்குரியது.
வினைமுடித்து மீளும் தலைவன், தலைவியை காணும் அவாவினால், விரைந்து தேர் செலுத்துமாறு பாகற்கு சொல்லியது.

இலையில் பிடவம் ஈர்மலர் அரும்பப்
புதலிவர் தளவம் பூங்கொடி அவிழப்
பொன்னெனக் கொன்றை மலர மணியெனப்
பன்மலர்க் காயாங் குறுஞ்சினை கஞலக்
கார்தொடங் கின்றே காலை வல்விரைந்து
செல்க பாகநின் தேரே உவக்காண்
கழிப்பெயர் களரில் போகிய மடமான்
விழிக்கண் பேதையொடு இனனிரிந் தோடக்
காமர் நெஞ்சமொடு அகலாத்
தேடூஉ நின்ற இரலை ஏறே.

பாக! இலை இல் பிடவம் ஈர் மலர் அரும்ப –
பழுத்து உதிர்ந்ததாலே இலைகளில்லாத பிடாவெல்லாம் (பிடவு - ஒரு காட்டுச் செடி) மெல்லிய மலர்கள் நிறையும்படி அரும்பு தோன்றியிருக்க
புதலிவர் தளவம் பூங்கொடி அவிழப் –
  
 
புதர்மேலேறிப் படர்கின்ற முல்லைக்கொடியில் பூக்கள் மலர்ந்திருக்க
கொன்றை பொன் என மலர –
 
கொன்றைகள் அனைத்தும் பொன்போல மலர்தலைச் செய்ய
Memecylon umbellatum (Ironwood).JPG
காயாங் குறுஞ்சினை மணியெனப் பன்மலர்க் கஞலக் –
நீலமணி போலப் பலவாய மலர்களையுடைய காயாவின் குறுமையாகிய கிளைகள் விளங்கி நிற்ப 
(காயா என்பது ஒரு வகை மரம். அதன் பூ காயாம் பூ நீலநிறமானது. காயான் எனவும் அழைக்கப்படுகிறது. இப்பூவைப் பாருங்கள் - மணியென பன்மலர் கஞல - எவ்வளவு அழகாக காயாம் பூவை நம் முன்னே காட்டியிருக்கிறார் பாடலாசிரியர்)

காலை கார் தொடங்கின்று –
இப்படிப்பட்டப் பொழுதில் மேகம் தான் மழைபெய்யுந் தொழிலைத் தொடங்கியது கண்டாய்;
இங்கு காலை என்பது காலை வேளையையல்லாது காலத்தைக் குறிப்பதாகும். முல்லையின் சிறு பொழுது மாலை. காலையல்ல என்பதனால் காலம் என்றே கொண்டு கார் பருவம் துவங்கியது என்பதே சிறப்பு.
கழிப் பெயர் களரில் போகிய மடமான் விழிக்கண் பேதையொடு இனன் இரிந்து ஓட – 
Image result for மான் குட்டி   deer
(இத்தளத்திலுள்ளப் படங்கள் பல்வேறு இணைய பக்கங்களிலிருந்து எடுத்தாளப்பட்டது.)
கழிந்து பெயர்கின்ற களர்நிலத்திலே சென்ற பிணைமான் மருண்டு விழித்தலையுடைய கண்களையுடைய தன் குட்டியோடு கூட்டத்தினின்று இரிந்தோடுதலும்
காமர் நெஞ்சமொடு அகலாத் தேடூஉ நின்ற இரலை ஏறு உவக்காண் –
அதன்பால் உற்ற விருப்பமிக்க நெஞ்சத்தோடு சென்று தேடிநின்ற ஆண்மானை உவ்விடத்தே பாராய்
நின் தேர் வல் விரைந்து செல்க –
ஆதலின் நின்தேர் மிக விரைந்து செல்வதாக!

கார்காலத்தில் திரும்பி வருவதாகச் சொல்லிச் சென்ற தலைவன் வினைமுடிந்து திரும்புகிறான். வழியில் கொன்றையும், முல்லையும் பிலவும் பூத்திருக்கின்றன. மழையும் பெய்யத்துவங்கி கார்கால வரவை அறிவுறுத்துகின்றது. தலைவன் தன் சொல் பழுதறாவண்ணம் விரைந்து சென்று தலைவியைக்காண விழைகிறான்.
இங்கு மலர்கள் மலரும் நிலைக்கு அரும்ப, அவிழ, மலர என தமிழுக்கே உரிய சிறப்போடு கையாண்டிருப்பது எண்ணி மகிழ தக்கது.
தன் தேர்பாகனை அழைத்து பாக! உவக்காண் , மருண்டு விழிக்கும் கண்களைக்கொண்ட தன் குட்டிகளோடிருக்கும் பெண்மானைத் தேடி நிற்கும் ஆண்மானைப் பார், உன் தேரை விரைந்து செலுத்துவாயாக! என்கிறான்.
அருகில் இருப்பது இங்கே என்றும், சேய்மையிலிருப்பதை அங்கே என்றும், அருகிலும் இல்லாது தொலைவிலுமில்லாது இரண்டிற்கும் இடையே இருப்பதை உவன் என்பதும் தமிழ் சுட்டெழுத்துகள்.
தேர் செல்லுதலால் மான் அருகில் இருக்காது. மிகத்தொலைவிலிருந்தால் ஆண்மான் மருண்ட விழிக்கொண்ட குட்டிகளோடுள்ள பெண்மானைத் தேடி நிற்பதை காணமுடியாது. எனவே மான் அவர்கள் காணும் வகையிலிருந்தது என்பதாகும்.
தலைவன், பாகனே ஆண்மான் பெண்மானையுங் குட்டியையுந் தேடி நினறதனைப் பார். எனவே யான் என் காதலியையும் புதல்வனையுங் காண மிகவிருப்பமுடையேன் எனப் பிறிதொன்றன் மேல்வைத்து அறிவுறுத்துவதாய் அமைந்துள்ளது பாடல்.
மடமான் விழிக்கண் பேதையொடு
என்று விழிக் கண்பேதை என மான்குட்டிக்குக் கூறிய அடைச்சிறப்பால் ஆசிரியர் பெருங் கண்ணனார், விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார் என அறியப்படுகிறார் என்பது சிறப்பு.

வினை முடிந்தது, கார்காலம் துவங்கி உள்ளது. தலைவனோ தலைவியை காணும் அவாவிலுள்ளான். கார்காலம் துவங்கியதைக்கண்ட தலைவியும் அவனுக்காக காத்திருப்பாள். ஆண்மானும் அன்போடு பெண்மானைத் தேடி நிற்கும். மலர்கள் பூத்து குலுங்கும் இக்கானகத்தை தாண்டி அவர்கள் தேர் செல்லட்டும்…
நாமும் இம்முல்லை நிலம் விட்டுச் செல்ல மனமில்லாமல் மீளுவோம், பாலையில் சந்திப்போம்.
விரைவில்…
அன்புடன்
உமா.

Sunday, 15 April 2018

நற்றிணை 3 நெய்தல்

நெய்தல் கடலும் கடல் சார்ந்த இடமும். இப் பாடல் நற்றிணையில் 183 வது பாடல். பொருளீட்ட தலைவன் பிரிந்து செல்கிறான். தோழியானவள் தலைவியின் பிரிவுத் துன்பம் எப்படிப் பட்டதாயிருக்கும் என்பதை பிறிது மொழிதலால் அழகாக இப்படிக்கூறுவாள்:-

தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து
பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி
நெறி நெடு ஒழுகை நிலவு மணல் நீந்தி
அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து
உமணர் போகலும் இன்னாதாகும்
மடவை மன்ற கொண்க வயின்தோறு
இன்னாது அலைக்கும் ஊதையடு ஓரும்
நும் இல் புலம்பின் மாலையும் உடைத்தே
இன மீன் ஆர்ந்த வெண் குருகு மிதித்த
வறு நீர் நெய்தல் போல
வாழாள் ஆதல் சூழாதோயே


இப்பாடலில் அக்கால வணிக முறை அழகாக காட்டப்பட்டுள்ளது.

தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து
பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி

மருத நாட்டு வணிகர் தம் நாட்டில் விளைந்த நெல்லை பண்டிகளில் (வண்டிகள்) ஏற்றி சென்று தந்து, அயல்நாடாகிய நெய்தல் நிலங்களில் உப்பை மாறாக பெற்றுக் கொண்டு அதனை ஊர்கள் தோறும் சென்று விலைபேசி விற்பர்.

நெறி நெடு ஒழுகை நிலவு மணல் நீந்தி
அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து
உமணர் போகலும் இன்னாதாகும்

அப்படி உப்பை பெற்று அவர்கள் தம் வண்டிகளோடு நீண்ட மணல் வழிகளில், தனியே சுற்றத்தோடு செல்லும் பொழுது அவர்களோடு பழகிய ஊராருக்கு பிரிவு உணர்ச்சியைத் தரும். அவர் தங் குழுவோடும் பண்டிகளோடும் சென்றது அவ்வூர்க்கு இன்னாமையைத் தருவதாயிருக்குமன்றோ? அப்படியே நீயும் எம்மைக் கையிகந்து பெயர்வது எமக்கும் இன்னாமையைத் தருவதாகும் என்று பிறிது மொழிதலாகக் கூறுகிறாள். ஒரு நாள் பழகியவரின் பிரிவையே தாங்க முடியாத போது, நெருங்கி பழகிய உன் பிரிவை இவள் எங்கணம் தாங்குவாள்.

..............வயின்தோறு
இன்னாது அலைக்கும் ஊதையடு ஓரும்
நும் இல் புலம்பின் மாலையும் உடைத்தே

செல்லும் வழியெல்லாம் துன்பத்தை தரக்கூடிய ஊதைக்காற்றோடு நீயில்லாத மாலை பொழுதும் உள்ளதே. அதுவும் எமக்கு ஏதுவுடையதாகயிராது.

இன மீன் ஆர்ந்த வெண் குருகு மிதித்த
வறு நீர் நெய்தல் போல
வாழாள் ஆதல் சூழாதோயே
அம்ம மன்ற மடவை

வற்றிய நிலத்திலுள்ள மீங்களையெல்லம் தின்ற வெண்குருகின் காலால் மிதிக்கப்படும் அக்குளத்திங்கண் உள்ள நெய்தல் மலர் போல, இவள் ஒரு பொழுதும் உயிரை வைத்திருக்கமாட்டாள் என்பதை அறியாதவனாய் இருக்கிறாயே!


வற்றிய குளத்தில் சிறிதளவே உள்ள நீரைக்கொண்டு மலர்ந்த மலரை குருகும் மிதித்து துன்பப்படுத்தியதென்பது, பொருளீட்ட பலநாள் பிரிந்து இருந்து வாடிய தலைவி சில நாட்கள் உன் வரவால் சிறிது நன்மையடைந்தாலும் மீண்டும் நின் பிரிவு குருகின் கால் பட்ட மலராய் வாட்டும் என பிறிது மொழிதலால் கூறுவதாய் உள்ளது..

அகப்பொருள் இலக்கியமாம் நற்றிணையில் அக்கால வாழ்வியல் மிக அழகாக கூறப்பட்டுளது அறிந்து சுவைக்க வேண்டியது.

அறிவோம், சுவைபோம். அடுத்து ஒரு முல்லை நிலப் பாடலுடன் விரைவில்...

அன்புடன்
உமா...




Saturday, 14 April 2018

நற்றிணை 2 குறிஞ்சி


வணக்கம்
முன்பு நாம் பார்த்த பாடல் மருத நிலப் பாடல். வயல், வயலைச்சார்ந்த நிலத்தின் அழகை இரசித்தோம்.
அடுத்த பாடல் நற்றிணையில் 182 வது பாடல்.
இது குறிஞ்சி நிலத்திற்குரியது. மலையும் மலைச்சார்ந்த இடமும் – சற்றே சுற்றி வருவோம் வாருங்கள்...
    
நிலவு மறைந்தன்று இருளும் பட்டன்று 
    
ஓவத் தன்ன இடனுடை வரைப்பின் 
    
பாவை யன்ன நப்புறங் காக்குஞ் 
    
சிறந்த செல்வத்து அன்னையுந் துஞ்சினள் 
கெடுத்துப்படு நன்கலம் எடுத்துக் கொண்டாங்கு 
    
நன்மார்பு அடைய முயங்கி மென்மெலக் 
    
கண்டனம் வருகஞ் சென்மோ தோழி 
    
கீழும் மேலும் காப்போர் நீத்த 
    
வறுந்தலைப் பெருங்களிறு போலத் 
தமியன் வந்தோன் பனியலை நிலையே. 

தலைவன் மணம்புரிந்துகொள்ள காலம் நீட்டித்தமையால் தலைவி வருந்துவதறிந்த தோழி, இரவுக்குறிக்கண் வந்த தலைவன் அறியுமாறு கூறுவதாக அமைந்த பாடல்.

தோழி ! நிலவு மறைந்தன்று இருளும் பட்டன்று 
தோழீ ! நிலாவும் மறைந்தொழிந்தது, இருளும் வந்து பொருந்தியது;

ஓவத்து அன்ன இடன் உடை வரைப்பின்
ஓவியம் வரைந்தாற் போன்ற அழகிய அகன்ற இடங்கொண்ட வீட்டில்

பாவை யன்ன நப்புறங் காக்குஞ் 
சிறந்த செல்வத்து அன்னையுந் துஞ்சினள்
அழகிய பெண்ணான உன்னை, சிறந்த செல்வம் போல் காக்கும் தாயும் உறங்கிவிட்டாள்.

கீழும் மேலும் காப்போர் நீத்த 
வறுந்தலைப் பெருங்களிறு போலத் 
தமியன் வந்தோன் பனியலை நிலையே. 

கீழிருந்து தன்னை நடத்துவோரும், மேலமர்ந்து தன்னைச் செலுத்துவோரும் இல்லாது தனித்து வந்த சிறிய தலையினைக்கொண்ட பெரிய களிறினைப் போல் தனித்து வந்துள்ளான் தலைவன். நீ வருந்த வேண்டாம்.

கெடுத்துப்படு நன்கலம் எடுத்துக் கொண்டாங்கு 
நன்மார்பு அடைய முயங்கி மென்மெலக் 
கண்டனம் வருகஞ் சென்மோ தோழி 

கீழே விழுந்து இழந்து போன நல்ல அணிகலன் கிடைத்ததைப் போன்று மகிழ்ச்சியைத் தரக்கூடிய அவனது மார்பை சேர்ந்து மெல்ல வருவோமா, ஆராய்ந்து கூறுவாயாக!

நிலவும் மறைந்தது என்றது, களவின் கண் வருவதற்கு தலைவிக்கு ஏற்பட்டுள்ள இடைஞ்சலையும்,
இருளும் வந்தது என்றது வழியில் தலைவிக்குண்டாகும் துன்பத்தையும் மறைமுகமாக எடுத்துக்கூறி மணமுடிக்க விரைவுப்படுத்துகிறாள்.

களிற்றானையோடு தலைவனை ஒப்பிட்டமை பெருமிதம் கருதியமையும், அவனைக் காணுதல் தொலைத்தப் பொருளை மீண்டும் அடைந்தால் வரும் இன்பத்தை போன்ற இன்பந்தரும் என்பது தலைவன் பால் கொண்ட அன்பினையும் உணர்த்தும்.
என்றாலும் காப்போர் நீத்த களிறு என்றதனால், தன்னை வழி நடத்துவோரில்லது, மணமுடிக்க காலம் நீட்டிக்கின்றான் என்பதையும் மறைமுகமாக எடுத்துணர்த்துகிறாள்.

ஓவியத்தைக் குறிக்கும் ஓவம் என்ற சொல் சங்க இலக்கியதில் பல இடங்களில் பயிலபட்டுள்ளது. ஓவியம் தீட்டப்பட்ட சித்திர மாடங்களும், அந்தபுரங்களும் இருந்ததை எல்லாம் சங்க இலக்கியங்களிலிருந்து நாமறியலாம்.

அடுத்த பாடல் குறிஞ்சி நிலத்தின் வளத்தை அழகாக கட்டும்

கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினை 
முந்துவிளை பெருங்குரல் கொண்ட மந்தி
கல்லாக் கடுவனொடு நல்வரை யேறி
அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டுதன் 
திரையணற் கொடுங்கவுள் நிறைய முக்கி
வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர்
தையூ ணிருக்கையில் தோன்று நாடன்
வந்தனன் வாழி தோழி யுலகங்
கயங்கண் அற்ற பைதறு காலைப்
பீளொடு திரங்கிய நெல்லிற்கு
நள்ளென் யாமத்து மழைபொழிந் தாங்கே.
இதன் பொருள்
தோழீ! மலைப்பக்கத்தில் கொடிச்சியால் காக்கப்படுகின்ற பசிய பயிரை அறுப்பதற்கு முன்பாகவே பறித்து கொய்து கொண்ட பெண்குரங்கானது, பாய்தலன்றி அறியாத ஆண்குரங்கினோடு நல்ல மலை மீதேறி, மழைப்பெய்த்தனால் தன் முதுகு புறம் நனைந்தவாறு அமர்ந்து அப்பயிரை கயக்கி தூய்மையாக்கி தன் கவுள் நிறைய உண்டவாறு இருப்பது, தை நோன்புடையவர் நீரில் குளித்த ஈரத்துடன்,உணவை உண்பது போல இருக்கிறது.
அத்தகைய நாட்டைச் சேர்ந்த உன் தலைவன், உலகத்துக் குளங்கள் வரண்டுபோய், ஈரமில்லாமல்,உலர்ந்து வாடும் இளம் நெற்கதிர்களுக்கு நடு இரவில் மழை பொழிவது போல, மிகுந்த இன்பந்தரும் திருமணச் செய்தியுடன் வந்தான்! அவன் வாழ்க! என்பதாம்
தினைக் கதிர்களை மந்தி, கடுவனுடன் உண்பதுபோல, தலைவி மகிழ்வுடன் தலைவனுடன் திருமணம் செய்துகொண்டு மனையறம் புரிவாள் என்பது உள்ளுறை உவமமாக கூறப்பட்டுள்ளது.
பயிற் முற்றும் காலமே, பெண் கொள்ளும் காலம் என்பது பண்டைய மரபு. இப்படி மிக அழகாக இயற்கையோடு இயைந்த மக்கள் வாழ்க்கையையும் மரபையும் பண்பையும் சங்க இலக்கியங்களிலிருந்து நாமறியல்லாம்.

அறிவோம், சுவைப்போம்
அடுத்து ஒரு நெய்தல் நில நற்றிணை பாடலுடன் விரைவில்..
அன்புடன்
உமா