Showing posts with label மருதம். Show all posts
Showing posts with label மருதம். Show all posts

Monday, 7 May 2018

ஐங்குறுநூறு - மருதம் – 2


மருத நில பாடலில் அடுத்ததாக
வேழப் பத்து

மருத நிலத்துக் கருப்பொருள்களில் ஒன்று வேழம் எனக் குறிக்கப்படும் வேழக் கரும்பு. இவ்வேழக் கரும்பு இடம் பெறும் பத்துப் பாடல்களின் தொகுதி வேழப் பத்து என்று குறிக்கப்படுகிறது.

மனைநடு வயலை வேழம் சுற்றும்
துறைகேழ் ஊரன் கொடுமை நாணி
நல்லன் என்னும் யாமே;
அல்லன் என்னும்என் தடமென் தோளே!

(வயலை = பசலைக்கொடி; வேழம் = வேழக் கரும்பு)
என்ற பாடலில் வீட்டில் நட்ட பசலைக்கொடி வெளியே வேழக்கரும்பில் சுற்றிப் படர்வது போல் தலைவன் பரத்தையை நாடிச் சென்றான். அவன் அப்படிச் சென்றாலும் பிறர் அலருக்கு வெட்கி, தலைவன் நல்லவன் என்று நாங்கள் கூறுகிறோம்; ஆனால் பிரிவால் மெலிந்துள்ள என் தோள்கள் அவன் நல்லவனல்லன் என்று சுட்டுகின்றன என்று கூறுகிறாள்.

மற்றொரு பாடலில்

கரைசேர் வேழம் கரும்பிற் பூக்கும்
துறைகேழ் ஊரன் கொடுமை...

எங்கிறாள். 
அஃதாவது கரையிலிருக்கும் வேழம் வயலிலுள்ள தீங்கரும்பைப் போல் பூக்கும் துறையுடை ஊரன் என்றது தலைவன் பொது மகளிருக்கு குல மகளிரைபோல் சிறப்புச் செய்கிறான் என்பதாம். அவனது கொடுமையை பெரிதும் தான் பொறுத்துக் கொண்டாலும், அணிகளையெல்லாம் இழக்கும் படி மெலிந்த என் தோள்கள் பொறுத்துக்கொள்ளவிலை என்கிறாள்

புதர் மிசை நுடங்கும் வேழ வெண் பூ
விசும்பு ஆடு குருகின் தோன்றும் ஊரன்,
புதுவோர் மேவலன் ஆகலின்,
வறிதாகின்று, என் மடங்கெழு நெஞ்சே.

இப்பாடலில்
முட் புதரிலே நின்று அதன் மேல் அசையும் மணமற்ற இழிந்த வேழ வெண்பூ தூயதான வானத்தில் பறக்கும் சிறந்த அன்னம் போலக் காணப்படுதல் போன்று இவனுக்கும் இழிகுலத்தில் தோன்றி நடிக்கும் பரத்தையர், தூயவரும் சிறந்தவருமாகிய குலமகளிர் போலக் காணப்படுகின்றனர் என்பதாம்.

இப்படி கருப்பொருள் வேழக்கரும்பை உவமையாகக் கொண்டு உள்ளுரையாக பரத்தமையைக் கொண்டொழுகும் தலைவன் செயல் ஏசப்படுகிறது.

மூன்றாவது பத்து களவன் பத்து

களவன்= நண்டு
நண்டு இடம் பெற்ற பத்துப் பாடல்களின் தொகுதி களவன் பத்து என்று குறிக்கப்படுகிறது.

முள்ளி நீடிய முதுநீர் அடைகரைப்
புள்ளிக் கள்வன் ஆம்பல் அறுக்கும்
தண்துறை ஊரன் தெளிப்பவும்
உண்கண் பசப்பது எவன்கொல் அன்னாய்!

என்ற பாடலில் ஆம்பல் தண்டினை அறுக்கும் நண்டு உள்ளுறைக்காக இடம் பெற்றுள்ளது. தலைவன் தனக்குப் பரத்தைத் தொடர்பு இல்லை என்று தெளிவுபடுத்தியும் உன் கண் ஏன் சிவக்கிறது என்று தோழி தலைவியைக் கேட்கிறாள்.

களவன் ஆம்பல் அறுக்கும் 'தண்துறை யூரன்' எனறது, நீரில் உள்ள நாண்டு அங்கிருக்கும் ஆம்பலை அறுக்கும். அவ்வாறே, தலைவனும் தன்னுடைய கரை கடந்த காமத்தினால் கொண்ட மடமையினலே, இல்லறத்தின் இனிமையான மனைவாழ்வைச் சிதைத்தனன் என்பதாம். எனவே, தலைவி, அவன் தெளிவித்தாலும் தெளியாளாகித் தான் மெலிந்தனள் என்பதுவாம்.

தோழிக்கு உரைத்த பத்து
அக இலக்கியத்தில் இன்றியமையாத இடம் வகிப்பவள் தோழி. தோழியே தலைவிக்கு உற்ற துணையாவாள். தலைவி, தோழியிடம் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ கூற்றுகள் (பேச்சு) நிகழ்த்திய பாடல்களின் தொகுதி தோழிக்கு உரைத்த பத்து என்று குறிக்கப்படுகிறது.

புலவிப் பத்து
மருதத்திணைக்குரிய உரிப்பொருள் ஊடல். ஊடலின் வேறு பெயர் புலவி. புலவியை மையமாகக் கொண்டு அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி புலவிப் பத்து என்று வழங்கப்படுகிறது.

தோழி கூற்றுப் பத்து
தோழி கூற்றில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி தோழி கூற்றுப் பத்து என்று குறிக்கப்படுகிறது.

கிழத்தி கூற்றுப் பத்து
தலைவனின் புறத்தொழுக்கம் (பரத்தையர் ஒழுக்கம்) கண்ட தலைவி, அவனோடு புலந்து உரைக்கும் வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி கிழத்தி கூற்றுப் பத்து என்று குறிக்கப்படுகிறது.

புனலாட்டுப் பத்து
ஆற்று நீரில் விளையாடுதல் என்பது மருத நிலத்துக் கருப்பொருளாகும் விளையாட்டில் ஒன்று. ஆற்று நீரில் விளையாடுதலே புனலாட்டு என்பதாகும். புனலாட்டு இடம் பெறும் பத்துப் பாடல்களின் தொகுதி புலனாட்டுப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

புலவி விராய பத்து
புலவி குறித்துத் தலைவி, தோழி, பரத்தை ஆகியோர் கூறுவதும் வாயில் மறுத்துக் கூறுவதுமாக வரும் பத்துப் பாடல்களின் தொகுதி புலவி விராய பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

எருமைப் பத்து
மருத நிலத்தின் கருப்பொருள்களில் ஒன்று எருமை. எருமை இடம் பெறும் வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி எருமைப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

நெறிமருப்பு எருமை நீல இரும்போத்து 
வெறிமலர்ப் பொய்கை, ஆம்பல் மயக்கும்
 
கழனி ஊரன் மகளிவள்
 
பழன வெதிரின் கொடிப் பிணையலளே!

(இரும்போத்து = பெரிய ஆண் விலங்கு; மயக்கும் = சிதைக்கும்) இந்த பாடலில்
வளைந்த கொம்புகளையுடைய கரு நீல ஆண் எருமை, மிக்க நறுமணமுள்ள, குளத்தில் வளரும் வெள்ளை ஆம்பலின் மலர்களைச் சிதைக்கும் வயல்கள் நிறைந்த ஊரனின் மகள் இவள். வயலில் உள்ள கரும்பு மலர்களை மாலையாகப் பின்னி அணிந்துள்ளாள். இங்கு எருமை ஆம்பலை அழிக்கும் என்றது நற்றன்மையை ஆராயாது கெடுக்கும் தன்மையன் தலைவன் என்றதாம். கரும்பின் பூவைச் சூட்டினாள் என்பது தலைவி பேதையாக உளாள் என்பதாம்.


ஐங்குறுறூறின் பிற திணைகளுக்கான பாடலுடன்...

மீண்டும் விரைவில்...

அன்புடன்
உமா...

Saturday, 5 May 2018

ஐங்குறுநூறு -1


ஐங்குறுநூறு எட்டுத்தொகை நூல்களுல் ஒன்று. பாடல்களைப் பார்க்கும் முன் இதன் அமைப்பை தெரிந்துக்கொள்வது சிறப்பாக இருக்கும். குறிஞ்சி, முல்லை,மருதம்,நெய்தல்,பாலை என ஐந்து திணைக்கும் 100 பாடல்கள் வீதம் 500 பாடல்களைக் கொண்டது. இது 5 புலவர்களால் பாடப்பட்டது.
மருதத் திணைப் பாடல்கள் (100) – ஓரம்போகியார்
நெய்தல் திணைப் பாடல்கள் (100) - அம்மூவனார்
குறிஞ்சித் திணைப் பாடல்கள் (100) - கபிலர்
பாலைத் திணைப் பாடல்கள் (100) - ஓதலாந்தையார்
முல்லைத் திணைப் பாடல்கள் (100) – பேயனார்

எட்டுத்தொகை நூல்களில் தொல்காப்பியம் கூறும் வரிசைப்படி குறிஞ்சித் திணையை முதலில் வைக்காமல் மருதத் திணையை முதலில் வைத்துப் பாடிய பாடல் இது ஒன்றே ஆகும்.
ஒவ்வொரு 100 பாடலும் பத்து பத்து பாடல்களால் ஆன பத்து தொகுப்பினைக் கொண்டது. சொல்லாட்சியினாலோ அல்லது பொருளாலோ இவை பத்து பத்து பாடல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு திணைக்கான பாடலையும் காணும் முன் திணைக்கான நிலம் சொல்லும் முதற்பொருளும், மக்களின் ஒழுக்கம் கூறும் உரிப்பொருளும் தெரிந்துக்கொள்வோம்.
குறிஞ்சித் திணைமலை, மலை சார்ந்த நிலம், புணர்ச்சியும் புணர்ச்சி நிமித்தமும்
முல்லைத் திணைகாடும் காடு சார்ந்த நிலமும், இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
மருதத் திணைவயலும் வயல் சார்ந்த நிலமும், ஊடலும் ஊடல் நிமித்தமும்
நெய்தற்  திணைகடலும் கடல் சார்ந்த நிலமும், இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
பாலைத் திணைமணல் பரப்பு, தமிழில் பாலை என்பது குறிஞ்சியும் முல்லையும் தம் இயல்பினின்றும் மாறிய நிலை, பிரிதலும் பிரிதல் நிமித்தமும்.

முதலில் மருத நிலப்பாடல்...
மருதத் திணைவயலும் வயல் சார்ந்த நிலமும், ஊடலும் ஊடல் நிமித்தமும்
இதை மனதிற்கொண்டு பாடலைப்பார்ப்போம்.
முதல் பத்து - வேட்கைப் பத்து , வேட்கை என்றால் விருப்பம்

வாழி ஆதன் வாழி அவினி
நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க
எனவேட் டோளே யாயே யாமே
நனைய காஞ்சிச் சினைய சிறுமீன்
யாணர் ஊரன் வாழ்க
பாணனும் வாழ்க எனவேட் டேமே

வாழி ஆதன் வாழி அவினி – வாழ்க ஆதன் வாழ்க அவினி (இவை சேர மன்னர்கள்),
நெல் பல பொலிக – நெல் நிறைய விளையாட்டும்,
பொன் பெரிது சிறக்க – செல்வம் கொழிக்கட்டும்,
என வேட்டோளே யாயே – இவ்வாறு விரும்புகின்றாள் என் தோழி,
யாமே – நாங்கள்,
நனைய காஞ்சி – மொட்டுக்களையுடைய காஞ்சி மரங்கள்,
சினைய சிறு மீன் – சிறிய சினை மீன்கள்,
யாணர் ஊரன் – செல்வம் பொருந்திய ஊர் தலைவன்,
வாழ்க – வாழ்க,
பாணனும் வாழ்க – அவனுடைய பாணனும் வாழ்க,
என வேட்டேமே – என்று நாங்கள் விரும்பினோம்

காவலுக்காக அரசர் வாழ்க
விருந்தோம்பலுக்காக நெல் நிறைந்து விளையட்டும்
இரவலருக்கு ஈவதற்காக பொன் மிகுதியாக உண்டாகட்டும் என இல்லத்திற்கு வேண்டியதையே என் தோழி விரும்புகின்றாள்.
ஆயினும் நீ ஒழுகிய ஒழுக்கத்தால் நினக்கும் அதற்கு துணையான பாங்கனுக்கும் தீங்குண்டாகுமென அஞ்சி யாணரூரன் வாழ்க பாணனும் வாழ்க என்கிறாள்.

அஃதாவது தலைவியை விட்டு பரத்தையரை நாடியிருந்த தலைவன் திரும்புகிறான். தலைவியின் ஊடலை தோழி இவ்வாறு உரைக்கிறாள்.
சிறப்பு மிக்க நெல்லையும் பொன்னையும் ஒப்பக் கூறுதல் மரபு. ஆயின் காஞ்சி மலர்களும், மீன்களையும் உடைய ஊரன் என்று பூவையும் புலாலையும் ஒன்றாக கூறியது, தலைவன் நல்ல குலமகளையும் பொதுமகளையும் ஒப்பக் கொண்டொழுகுவான் என்பதால்.

அடுத்தப்பாடலில்
வாழி ஆதன் வாழி அவினி
விளைக வயலே வருக இரவலர்
எனவேட் டோ ளே யாயே யாமே
பல்லிதல் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்
தண்துறை யூரன் கேண்மை
வழிவ்ழிச் சிறக்க எனவேட் டேமே.
இப்பாடலில்
வாழ்க ஆதன்! வாழ்க அவினி! வயல்களில் விளைச்சல் சிறக்கட்டும், இரவலர் வரட்டும் என்று விரும்பினாள் என் தோழி. பல இதழ்களையுடைய நீல மலர்கள் நெய்தல் மலர்களைப் போல் தோன்றும் குளிர்ச்சியான துறையின் ஊரன் என் தோழியோடு கொண்டுள்ள ஆழ்ந்த நட்பு என்றும் தழைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம் என்கிறாள்.
பல இதழ் கொண்ட நீல மலர்கள் நெய்தல் பூவினை ஒக்கும் என்றது தலைவன் குல மகளோடு பொதுமகளையும் ஒப்ப நினைப்பான் என கூறியதாகும்.

வாழி ஆதன்வாழி அவினி
நன்றுபெரிது சிறக்க தீதில் ஆகுக
என வேட் டோளே யாயே யாமே
கயலார் நாரை போர்வின் சேக்கும்
தண்துறை யூரன் கேண்மை
அம்பல் ஆகற்க எனவேட் டேமே.

இதில் நல்லது சிறக்க வேண்டும், தீது இல்லாது ஆக வேண்டும் என விரும்பினாள் என் தோழி. கயல் மீனை உண்ணும் நாரையானது நெற்போரில் தங்கும் நீர்த்துறையுடைய நாடனது நட்பு பிறர் பழிக்காளாக வேண்டாம் எனவும் விரும்பினோம் என்கிறாள். இங்கு நாரை நெற்போரில் தங்கும் என்றது தலைவன் தன்னிடம் விட்டு தகாத இடம் தங்கினான் என்பதாம்.

இப்படி ஒரு பொருள் பற்றி பல உவமைகளுடன் இறைச்சியாக பாடப்பட்ட 10 பாடல்களின் தொகுப்பு அறிந்து வியக்கத்தக்கது.
பாடல் புனைய விரும்புவோர் கற்பனைக்கும் கருத்தாழத்திற்கும் சொல்லாட்சிக்கும் இப்பாடல்களைப் பயின்றால் சிறப்புண்டு என்பதில் ஐயமில்லை.

அடுத்ததாக மருத நிலத்திலேயே மற்ற தொகுப்புகளை சுறுக்கமாகக் காண்போம்.
விரைவில் மீண்டும்

அன்புடன்
உமா.

Sunday, 8 April 2018

நற்றிணை 1 மருதம்

'வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் ' என்ற  ஒளவையார் வாக்கினை மனத்தில் இருத்தி , தமிழர்களின் மாபெரும் செல்வமான சங்க பாடல்கள் சிலவற்றை பகிர்வதன் மூலம் அதன் நலன் பாராட்டுவது மட்டுமின்றி நம் உளம் நலம் பெறும் என்ற நோக்கத்தில் சில பாடல்களை பகிர முனைந்துள்ளேன்.

கவிதை தவிர பிற எழுதுவதில் இது எனது முதல் முயற்சி.  எனை வளப்படுத்தும் வகையில் தங்கள் மறுமொழி இருக்குமாயின் மகிழ்வேன்.

சங்க இலக்கியங்கள் பற்றி அறிந்து கொள்ள பல இணைய பக்கங்கள் உள்ளன.

சங்க இலக்கியம் பெரும்பாலும் எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, பதினெங்கீழ் கணக்கு என பெரும் பிரிவுகளைக் கொண்டது.

முதலாவதாக நற்றிணையில் சில பாடல்களை அறிவோம் சுவைப்போம்..

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான நற்றிணை அகப்பொருள் பற்றியது.
சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறாது தலைவன், தலைவி, தோழி என்பார் கூற்றாக பாடல்கள் அமைக்கபட்டிருக்கும்.

சங்க இலக்கியங்கள் தமிழரின் வாழ்க்கையை இப்பாடல்கள் மூலம் படம் பிடித்துக் காண்பிக்கின்றன. தலைவனும் தலைவியும் ஒழுக்கத்தில் சிறந்தவர்களாகவும், தோழி என்பாள் அறிவுக்கூர்மையும், மிகுந்த பண்பும் உடையவளாகவும் காட்டப்படுகின்றனர்.

சுவைபோம் வாருங்கள்.

நற்றிணை 210 வது பாடல்

அரிகால் மாறிய அம் கண் அகல் வயல்
மறு கால் உழுத ஈரச் செறுவின்,
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர!
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வம் அன்று; தன் செய் வினைப் பயனே;
சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே.

இது தலைவனை நோக்கி தோழியின் கூற்றாக அமைந்த பாடல். இதனை எழுதியவர் மிளைகிழான் நல்வேட்டனார்.  

சங்க இலக்கியத்தில் பாடல் எழுதியவர் பெயர் தெரியாதிருப்பின் அவர் தம் பாடலின் மிகச்சிறந்த வரியாலோ அல்லது அவர் தனிச்சிறப்போடு எடுத்துரைத்த உவமையினாலோ அறியப்படுவார்.. இந்த அழகை நாம் வியக்காமலிருக்க முடியாது.

பாடலுக்கு வருவோம்...
அரிகால் மாறிய அம் கண் அகல் வயல்... அக்காலத்தில் ஆளுயர வளரும் நெற்கதிர்களை அறுவடை செய்த உடனேயே மறுபோகம் விளைவிக்கப் படுகிறது. அப்படி  நெற்கதிர்கள் வெட்டப்பட்டு அதன் அரிகால் அல்லது நெற்றாளின் அடி, தாளடி மட்டும் இருக்கும் வயல் அகலமானதாய் தெரிகிறது.

மறு கால் உழுத ஈரச் செறுவின்,
அந்த வயலில் மறுபடியும் உழுது , அது ஈரமானதாய் இருக்கும் பொழுது

வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர!
விதைப்பதற்காக விதை கொண்டு போனவர்கள், விதைத்து முடித்து விதை எடுத்து வந்த வட்டியில் பற்பல மீனொடு திரும்பக்கூடியவாறு வளமும் மிக்க வருவாயும் கொண்ட ஊரினைச் சேர்ந்தவனே!
என தலைவனை அழைக்கிறாள் தோழி..

வயலில் மீன்கள் வாழும் வகையில் நீர் வளம் மிக்கதாம் அவன் ஊர்.
இதன்படி,
• அறுவடையின் போதே மீண்டும் விதைக்கப்பட்டது
• அறுவடையின்போதும் வயலில் மீன் வாழுமளவு நீர் இருந்தது
• விதைப்புக்காக, நீரை வடித்தனர். அப்போது மீன்கள் சிக்கின
-ஆகிய செய்திகளை உணர முடிகிறது.
பண்டைய விவசாய முறைகளை எடுத்தியம்பும் பல பாடல்ள் சங்க இலக்கியத்தில் இருக்கின்றன.


....நெடுநீர் பொய்கை பிறழிய வாளை
நெல்லுடை நெடுநகர் கூட்டுமுதல் பிறழும் – (புறம் 287)
என்ற புறப்படலும்

கீழ்நீரால் மீன்வழங்குந்து
மீநீரான் கண்ணன்ன மலர்பூக் குந்து
கழிசுற்றிய விளை கழனி – புறம் 396
(அதாவது வயலில், நீரின் அடியில் மீன், மேலே குவளை மலர், இவற்றுக்கிடையே நெற் பயிர்)

என்ற மற்றொறு புறப்பாடலும் வயலில் மீன்கள் வாழும் நீர் வளச்சிறப்பை எடுத்துரைக்கின்றன..

இபபடி விதைக்கச் சென்றவர்கள் மீனொடு திருப்புவது போல் பரத்தையரொடு நீ திரும்பாதே...
என்பது தோழி வஞ்சினமாய், மறைமுகமாய் தலைவனுக்கு சொல்லும் செய்தி..

நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வம் அன்று; தன் செய் வினைப் பயனே;

நெடிய மொழிதல் -- தலைவனின் வருகையை தெரிவிக்கும் போது அவனது வீரச் செயல்கள்,அவன் மேன்மையான பண்புகளைச்சொல்லி இன்னார் வருகிறார் என உரைப்பது வழக்கம்...
இப்படி நெடிய பெயரால் அழைக்கப்படுவதோ அல்லது தேர், யானை போன்றவற்றில் ஏறி செல்லுதலாகிய அருஞ்செயல்களெல்லாம் செல்வமல்ல, அவை தான் முன்பு செய்த வினைப்பயனே.

சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே.

 சான்றோர் செல்வம் எனக்கூறுவது தன்னை அடைக்கலமாக வந்தாரின் துன்பத்திற்கு அஞ்சி , அவர் துன்பப்படாமல் காத்தலாகிய பண்பே ஆகும் எனத் தோழி கூறுகிறாள். இதன் மூலம் தலைவனைப்பிரிந்த தலைவியின் துன்பத்தினைப் போக்கி காத்தலே தலைவனுக்கு உகந்த செயல் என்பதை அறிவிக்கிறாள் தோழி. 
அக்காலத்தில் சான்றோர் பழிக்கும் செயல்களைச் செய்ய அஞ்சினர் மக்கள்.
இப்பாடலில் மருத நில வளமும், அக்கால மக்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வும் அவர்தம் பண்பு நலனும்  மிக அருமையாக விளக்கப்பட்டிருப்பது எண்ணி வியக்கத்தக்கது.

சற்று இந்த வளமிக்க மருத நிலத்தில் பண்புடைத் தலைவனுக்கும் தலைவிக்குமான காதல் வாழ்வை கற்பனை செய்து பாருங்கள்..

இன்று ஆறில்லை, நீரில்லை, வரண்ட வயலில் விளைச்சலில்லை ...
குறிஞ்சி, முல்லை,மருதம் , நெய்தல் என்ற நானிலங்களில்லை.
அத்தனை நிலங்களும் பாலையாய் பொய்த்து போன நிலை...


இன்று விவசாயத்தைப்பற்றிய குறைந்தபட்ச அறிவுகூட இல்லாமல் வளரும் தலைமுறை..
எங்கு தவறினோம்...

சிந்திப்போம்...  சிந்தனை செயலாகலாம்.... முயற்சிப்போம்

இன்னுமொரு பாடலுடன் விரைவில்

அன்புடன் 
உமா...