Showing posts with label மற்றவை. Show all posts
Showing posts with label மற்றவை. Show all posts

Friday, 30 August 2019

கல்லிலே கலைவண்ணம்

பழந்தமிழகத்தின் வரலாற்றை அறிய, இலக்கியங்கள், கல்வெட்டுகள், அகழ்வாராச்சிகள் போன்றவை மிகுந்த உதவியாயிருக்கின்றன. அவ்வாறே பழந்தமிழ் மன்னர்கள் கட்டிய கோயில்கள், அம்மன்னர் காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வு அன்று சிறப்புற்றிருந்த கலைகள், அவர்களின் பல்துறைச் சார்ந்த அறிவு ஆகியவற்றை நாமறிய உதவுகின்றன.
தமிழகத்தில் சோழர்களின் காலம் மிகச் செழிப்பானகாலம். அன்று பல இலக்கியங்கள் படைக்கப்பட்டன, நாட்டியம், நாடகம், இசை, சிற்பம், ஓவியம் போன்ற பல கலைகள் சிறப்புற்றிருந்தன. இதற்கு சாட்சியாக அமைவது சோழ மன்னர்கள் கட்டிய பல கற்கோயில்கள்.
சோழர்கள் தம் கோவில்களை வழிப்பாட்டுத் தலமாக மட்டுமல்லாமல் கருவூலமாகவும் கோட்டையாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள்
கோவில்களின் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலுக்கும் கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோவிலுக்கும் செல்லும் வாய்ப்புச் சமீபத்தில் எனக்குக் கிடைத்தது.
மிக அற்புதமான இவ்விரண்டு கோவில்களைப் பற்றிய சிறு அறிமுகம் செய்வதன் மூலம், இக்கோவில்களை நேரில் காணும் ஆவலை ஏற்படுத்துவதும், அவ்வாறு காணும் போது அவற்றை உணர்ந்து இரசிக்க வைப்பதுமே இக்கட்டுரையின் நோக்கம்.

கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோவில்

மிகவும் பிரசித்திப் பெற்ற தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய இராஜராஜ சோழனின் மகனான இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோவில்.
இம் மன்னன் கங்கைவரைச் சென்று வெற்றி பெற்ற தன் நினைவாக அங்கிருந்து கொண்டு வரப்பட்ட கிரானைட் கற்களால் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. போக்கு வரத்து வசதிகள் இன்றிருப்பது போல் அன்றில்லாத நிலையில் அப்பெரிய கோவிலைக் கட்ட அவ்வளவு கற்கள் எவ்வாறு கொணரப்பட்டன என்பது இன்றும் ஆச்சரியம்.
வரலாற்றில் தனது தந்தையின் புகழ்மங்கி விடக் கூடாது என்றே இக்கோவிலைச் சற்று சிறியதாக இராஜேந்திரசோழன் கட்டினான் என்பர். என்றாலும் இங்குள்ளச் சிற்பங்களின் மேன்மை அனைத்தையும் விஞ்சி நிற்கிறது.
இக்கோவிலைக் கட்டிய சிற்பி குணவன், தஞ்சைக் கோவிலைக் கட்டிய இராஜராஜ பெருந்தச்சனின் மாணவன் என்பதும் அவனது திறமையைக் கண்டு  ‘நித்த வினோத பெருந்தச்சன்’ என்ற பட்டத்தைச் சூட்டினான் இராஜராஜ சோழன் என்பதும் நமக்குத் தெரியவரும் வரலாற்றுச் செய்திகள். இவற்றை இங்கே குறிப்பிடுவது மிகவும் அவசியம். ஏனெனில் இக்கோவில்கள் சிற்பக் கலைக்கு சிறந்த உதாரணமாக விளங்குகின்றன..
இனி வரலாற்றைக் கடந்து, கண் முன்னே நாம் கண்ட இக்கோவில் சிற்பங்களின் அழகைப் பகிர்ந்து கொள்வோம்.

கோவில் நுழைவாயில்
நீண்ட பாதையில் நடந்துச் செல்லும் போது உயர்ந்து நிற்கும் கோபுர நுழைவாயில் இடிந்த நிலையிலிருந்தாலும் அன்றைய முழு கோபுர வாயிலின் பிரம்மாண்டத்தை நாம் கற்பனைச் செய்யத் தூண்டுகிறது.
கருவறை வெளிச்சுவர்
அதைத் தாண்டி உள்நுழைந்தால் துவஜஸ்தம்பத்திற்கு அருகில் மிக அற்புதமான, சுண்ணாம்புக் கல்லால் செய்யப்பட்ட மிகப் பெரியநந்தி சிலை கம்பீரமாய் நம்மை வியக்கவைக்கிறது. இதில் ஒரு அதிசயம் சூரிய ஒளியானது நந்தி சிலையின் மேல் பட்டு கருவறையிலுள்ள பிரகதீஸ்வர் மேல் மிக நேர்த்தியாக விழுகிறது.
அகண்ட படிகள் ஏறிச் சென்றால் கருவறையில் பெருவுடையார், பிரகதீசுவர் என்றழைக்கப்படும் சோழீசுவரர் பிரம்மாண்டமான லிங்க வடிவில் காட்சித் தருகிறார். தஞ்சை பெரிய கோவிலுக்கும் இக்கோவிலுக்கும் மிகுந்த ஒற்றுமைகள் காணப்படுகின்றன. 
கருவறை கோபுரத்தின் வெளிப்புறத்தில் பல சிற்பங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்வதாய் அமைந்துள்ளது. முக்கியமாக அங்கு அமைந்துள்ள நடராசர் சிலை
நடராசர் சிலை
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற்பால் வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே

என்று நம்மை நெக்குருகச் செய்யும். 



அர்த்தநாரீஸ்வரர்
அர்த்தநாரீஸ்வர் சிலை மற்றும் ஞான நிலையிலிருக்கும்  சரஸ்வதி மற்றும் லஷ்மி சிலைகள் சிற்பக்கலை மிக உயர்ந்த நிலையில் இருந்ததைக் காட்டும் வகையில் மிக நேர்த்தியாக அமைந்திருக்கின்றன.


இங்குள்ள நர்த்தன விநாயகர் சிலையின் ஏழு உறுப்புக்களிலிருந்து ஏழுசப்தங்கள் எழுவதாக அங்கிருப்போர் நமக்குத் தெரிவிக்கின்றனர்.
 
நர்த்தனவிநாயகர்
இங்குள்ள சிம்மக் கிணறு வருவோரைக் கவரும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. சிம்ம வடிவில் அமைந்த குகைப் போன்ற படிகள் அமைக்கப்பட்டு அது பக்கத்திலுள்ள பெரிய கிணறுக்குச் செல்லும்படி அமைக்கப்பட்டுள்ளது. இக்கிணறு இராஜ வம்சத்தவரால் உபயோகிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. மன்னர்களின் குடும்பத்தார் போர்காலங்களில் மறைந்திருக்க பாதாள வழிகள் இங்குள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

சிம்மக் கிணறு
கோவிலில் தாயார் பெரிய நாயகி அம்மைக்கு தனியாக சன்னதி அமைந்துள்ளது. பெயருக்கேற்றார் போல் 9 அடி பெரிய வடிவில் தாயார் அருள் பாலிக்கிறார்.
இடிந்த சன்னதி
கல்வெட்டுகள்
இக்கோவிலில் இடிந்த நிலையில் சில சிலைகள், கட்டமைப்புகள் காணப்படுகின்றன. இவை பல காலகட்டத்தில் போர் போன்ற காரணங்களால் இடிபாட்டிற்கு உள்ளானதாய் அறியப்படுகின்றன. இக்கோவிலில் இன்றும் பல கல்வெட்டுகளை நாம் காணமுடிகிறது. தமிழக தொல்லியல் துறை இக்கல்வெட்டுகளைப் படியெடுத்து ஆராய்ந்து பல தகவல்களுடன் நூல்களை வெளியிட்டிருக்கின்றது.


பல ஆண்டுகள் முன்பாக, இக்கோவில் கட்டப்பட்ட காலத்தில் மக்கள் நடமாட்டம் எப்படி இருந்திருக்கும், சோழமன்னர்களின் தலைநகரமாக விளங்கிய இவ்விடம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்கும் என்பதை நினைக்கையில், இக்கோவில் பற்றிய பல வரலாற்று புதினங்களில் வருவதை போன்ற நிகழ்வுகள் நம் கற்பனையில் தெரிகின்றன.
இக்கோவிலை விட்டு வெளிவரும் போது

ஐயபொட் டிட்ட அழகுவாள் நுதலும்
அழகிய விழியும்வெண்ணீறும்
சைவம்விட் டிட்ட சடைகளும் சடைமேல்
தரங்கமும் சதங்கையும் சிலம்பும்
மொய்கொள்எண் திக்கும் கண்டநின் தொண்டர்
முகமலர்ந்து இருகணீர் அரும்பக்
கைகள்மொட் டிக்கும் என்கொலோ கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே !

என்ற கருவூர் தேவரின் பாடல் சொல்வதைப்போல் பக்தியால் நம் கைகள் குவிகின்றன கூடவே வியப்பால் நம் கண்கள் விரியவும் செய்கின்றன.முழுதும் காணமுடியா நிலையில் கோவிலை விட்டு நகர்ந்து, சற்றே மனக்குறையுடன் தாராசுரம் நோக்கி பயணப்பட்டோம்...

தாராசுரம் ஐராவதேசுவரர் கோவில் நம்மை வியப்பின் எல்லைக்கே இட்டுச் செல்கிறது...

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில்

‘பொன்னியின்செல்வன்’ கதையில் நமக்கு அதிகமாக பரிச்சயமான பழையாறை நகரின் ஒரு பகுதிதான் தாராசுரம் என்பது. இன்றும் சோழமன்னர் காலத்தில் வணங்கப்பட்ட பிரம்மாணடமான சோமநாத சுவாமி கோவில் இடிந்த நிலையில் இங்குக் காணப்படுகின்றது. இதன் அமைப்பை ஒட்டி அமைந்தது தான் தாராசுரம் கோவில். யுனஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரியச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இத்தாராசுரம் கோவில் இன்று முறையாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இரண்டாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோவில் ஆச்சரியத்தின் உச்சம். பக்தி உணர்வோடு மட்டுமல்லாமல், மிகுந்த கலையுணர்வோடும் இக்கோவிலைச் சுற்றி வர வேண்டும். இக்கோவிலின் அழகிய சிற்பங்களைக் கண்டு இரசிக்க ஒருநாள் போதுமானதாக இருக்காது. கண்டிப்பாக பலமுறை இக்கோவிலுக்கு விஜயம் செய்ய வேண்டும். இச்சிற்பங்கள் அக்கால மக்களின் கலை, பண்பாடு, வாழ்க்கையை தெரிவிக்கும் கண்ணெதிர் தெரியும் ஆதாரங்களாக உள்ளன. ஒரு துளி இடம் கூட வீணாகாமல் ஒவ்வொரு சென்டிமீட்டரிலும் சிற்பங்கள் அலங்கரிப்பதை நம்மால் வியக்காமலிருக்க முடியவில்லை. வாருங்கள் இரண்டாம் இராஜராஜன் பெருமையோடு வருகைத்தந்த அந்த பழைய கோபுர நுழைவயிலைப் பார்ப்போம்.
பழைய நுழைவாயில்
இன்று சிதிலமடைந்த நிலையில் பயன்படாமலிருக்கும் இக்கோபுர நுழைவாயில் கோவிலின் பிரம்மாண்டத்தையும், இரண்டாம் இராஜராஜனின் கம்பீரததையும் நமக்குப் பறைச் சாற்றுவதாய் உள்ளது. இன்று பக்கவாட்டு வழியாகவே மக்கள் அனுமதிக்கப் படுகின்றனர். இதன் முழுவடிவையும் அதன் வழியே யானையில் இரண்டாம் இராஜராஜன் படைச்சூழ வரும் காட்சியை சற்று கற்பனைச் செய்து பாருங்கள். ஆம் இவர்களோடு தான் நாம் இக்கோவிலைச் சுற்றிப் பார்க்கப் போகிறோம்.

இசைப் படிகள்
தரைப் பகுதியிலிருந்து சற்றுத் தாழ்வாக 7 அல்லது 8 படிகள் இறங்கி வரும்படியாக அமைந்துள்ள நந்தி மண்டபமும் பலிபீடமும் தான் நாம் முதலில் காணக்கூடியவை.  இந்த பலிபீடத்தின் படிகளில் சப்தஸ்வரங்கள் எழுவதாக சொல்கிறார்கள். இன்று, பாதுகாப்புக் கருதி இரும்புக் கம்பிகளிடப்பட்டிருக்கிறது.
நந்தியையும் விநாயகரையும் வணங்கி உள் நுழைந்தால் நாம் காண்பது இராஜகம்பீர திருமண்டபம். ஒவ்வொரு அணுவையும் பார்த்து வியக்கக் கூடிய வகையில் அமைந்தது இம்மண்டபம்.
இராஜ கம்பீர மண்டபம்
தூண்களில் நடன சிற்பம்


ஒருபுறம் குதிரையும் மறுபுறம் யானையும் இழுத்துச் செல்லும் ஒரு தேர்போல் அமைக்கப்பட்டுள்ளது.  இராஜராஜனின் யானை போரில் ஆவேசத்துடன் போரிடும் காட்சியை நம் கண்முன்னே காட்டுகிறது இந்த யானை. குதிரையின் வேகத்தில் மண்டபம் நகர்ந்து விடுமோ என எண்ணத் தோன்றுகிறது. சூரிய சக்கரம் போல் அமைந்த தேர்ச் சக்கரங்கள் சிற்பக் கலையின் வியப்பு. மண்டபத்தில் 120 தூண்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இத்தூண்களில் பல புராணக்கதைகள் மிக நுணுக்கமாக சில சென்டிமீட்டர் அளவேயுள்ள சிற்பங்களாக செதுக்கியுள்ளனர். இத்தூண்களில் நாட்டிய கலையின் அனைத்து நிலைகளையும், முக்கியமாக முத்திரைகள் மிக நேர்த்தியாக, சில சென்டிமீட்டர் அளவில் சிறியதாக கற்சிற்பமாக வடித்திருப்பது ஆச்சரியமானது. 
மண்டபத்தை அடுத்து கருவறையில் ஐராவதேஸ்வரர் அருள்பாலிக்கின்றார். இந்திரனின் யானையாகிய ஐராவதம் சாப விமோசனம் பெற்றதால் மூலவர் ஐராவதேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். தாயார் தெய்வநாயகி அம்மைக்கு தனியாக வலப்புறம் கோவில் அமைந்திருப்பது சிறப்பு.
கருவறையைச் சுற்றி வெளிப்புறச் சுவற்றில் 63 நாயன்மார்களின் கதை கற்சித்திரமாக செதுக்கியிருப்பது இக்கோவிலின் மிகச் சிறப்பான அம்சம்.  சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் அமைந்த வரிசைப் படியே கருவறையின் வலப்புறம் துவங்கி, தில்லை வாழ் அந்தணர் முதலாக 63 நாயன்மார்களின் கதையும் மிகச் சிறிய சிற்பங்களாக செதுக்கியிருப்பது வியக்க வைக்கிறது.
மேலும் இங்கு மனித சக்கரம் என்று சொல்லும் படி இருவர் பிணைந்து சக்கரம் போல் இருக்கும் காட்சி,  பெண் ஒருத்திக்கு இருவர் பிரசவம் பார்க்கும் காட்சி,  ஜிம்னாஸ்டிக் என்பது போல் உடலை வளைத்து செய்யும் சாகசங்கள் போன்ற சிற்பங்கள் நம்மை வியக்க வைக்கின்றன.
அக்காலத்தில் பெண்களும் போரிட்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டும் போரிடும் பெண்கள் சிற்பம்,  மேலும் இசைக் கருவிகளோடு கலைஞர்களும் பெண்களும் நடமாடும் வழக்கத்தைக் காட்டும் இசைக் குழுவினர் சிற்பம்,  என அற்புதமான சிற்பங்கள் மிகச் சிறிய அளவில் வடிவமைக்கப் பட்டுள்ளன. இவை இம்மக்களின் பல் கலை திறனை நமக்கு எடுத்துக் காட்டுவதாக உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற  அன்னப்பூரணி சிலை ஒன்றும் இருக்கிறது.  இங்குதான் ஒட்டக்கூத்தர் தனது ‘தக்கயாக பரணி’யை அரங்கேற்றம் செய்ததாகக் கூறுகின்றனர். தக்கயாக பரணி எங்கிற இலக்கியம், தக்கனின் யாகத்தை சிவபெருமான் தடுத்து வென்றதையும் சோழமன்னன் ஈழத்தை வென்றதையும் குறிக்கும் விதமாக சிலேடையாக பாடப்பட்டது என்பர். இங்கு இன்னும் பலசிற்பங்களும் நாகராஜன், 8 கைகளுடன் கூடிய அர்த்தநாரீஸ்வரர் என எங்கும் காணப்பெறாத கடவுள் சிலைகளும் இருக்கின்றன. ஆனால் இவ்வளவு வரலாற்று சிறப்புகளை பார்வையாளர்கள் தெரிந்துக் கொள்ளுமாறு குறிப்புகள் அங்கில்லாதிருப்பது சற்று வருத்தத்திற்குரியதே. வலைத்தளங்களில் பார்த்து தெரிந்துக் கொண்டு வருபவர்களுக்குக்கூட நேரில் அவற்றைத் தேடி கண்டுபிடிப்பது சிரமான காரியமே.
இக்கோவில்களின் சிற்ப அழகைக் காண கண்ணாயிரம் வேண்டும். இக்கோவிலைச் சுற்றி வருகையில், இவற்றின் பின்னனியில் இருக்கும் புராண கதைகள், வரலாற்று நிகழ்வுகள்,  சமயக் கருத்துக்கள் இவற்றையெல்லம் தெரிந்துக் கொள்ளும் பேரார்வம் நம்மை வந்தடைகிறது. அது மட்டுமல்லாது பன்னிருத் திருமறையையும் அதில் பாடப்பட்டுள்ள அத்தனைத் தலங்களையும் அறிந்து சுற்றி வர பேராசைக் கொள்கிறது மனது.
வாழ்க தமிழ்! வாழ்க தமிழ்நாடு!
வளர்க தமிழர்தம் புகழ்!










Thursday, 18 April 2019

'அணியம்' சித்திரை சிறப்பிதழில் வெளிவந்த கட்டுரை


வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!  …  (பாரதியார்)
சி.உமா, பொது நிர்வாகத் துறை

தமிழ் தொன்மையான மொழி. இதன் சிறப்பை உணரவும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழரின் நாகரீகம், பண்பாடு, வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை உலகம் தெரிந்து கொள்ளவும், சங்க இலக்கியங்கள் பெரிதும் உதவுகின்றன. தமிழில் எண்ணிறந்த இலக்கியங்கள் இருந்திருக்கின்றன என்றாலும் பேச்சு வழக்காகவே இருந்தமையாலும் ஓலைகளில் எழுதப்பட்டமையாலும் முறையாக பாதுகாக்கப்படாததாலும் கால வெள்ளத்தில் பல அழிந்துவிட்டன. இன்று நாம் அறிய கிடைத்துள்ள இலக்கியங்கள் அவற்றின் ஒரு பகுதியே. ஆயினும் இவற்றைக் கண்டறிந்து தொகுத்து அச்சில் ஏற்றி தமிழ் நிரந்தரமாக வாழ, வளர வழிவகுத்தவர் பலர். இப்படி தமிழுக்கு சீரிய தொண்டாற்றியவர்கள் பற்றி நாம் அறிய வேண்டியது மிகவும் அவசியமானது. இதுவே இக்கட்டுரையின் நோக்கம்.
இன்று ‘ஒரு மனிதன் தன் வாழ்நாளில் முயன்று படித்தாலும் முழுவதுமாகப் படித்துவிட முடியாத அளவிற்கு மிக அதிக இலக்கிய வளம் கொண்டது தமிழ்’ என்று சொல்லும் படி இலக்கியங்கள் மீட்கப் பட்டதில் தமிழ் அச்சுக் கலையின் தோற்றமும் வளர்ச்சியும் மிக முக்கியமான காரணமாக விளங்குகிறது.   அச்சுக்கலை உலகில் அறிமுகமான போது கிருஸ்துவ மத போதகர்களால் தென்னிந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் இருந்துதான் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு அச்சுக் கலைப் பரவியது.
மத போதகர்கள் தம் காரியத்திற்கு உள்ளூர் மக்களின் மொழி அவசியம் என்பதை உணர்ந்து தமிழ் மொழியைத் தாமே பயின்றதோடு அச்சுக்கலையையும் அறிமுகப்படுத்தினர். தம் மதம் பரப்ப வந்தவர்கள் தமிழ் மணம் பரப்பி நின்றதனை வரலாறு நமக்குச் சொல்லும். முதலில் மத கோட்பாடுகளே அச்சிடப்பட்டாலும் பிறகு வீரமாமுனிவர் போன்றவர்களால் மற்ற தமிழ் நூல்களும் அச்சிடப்பட்டன.
வீரமாமுனிவர்
மதம் பரப்பும் நோக்கோடு வந்த இத்தாலியரான (கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி) வீரமாமுனிவர் தமிழ் வரிவடிவத்தில் பல மாற்றங்களைச் செய்தார். குறில் நெடில் வேற்றுமை படுத்தல், மெய் எழுத்தில் புள்ளி சேர்த்தல் என்று பல சீர்திருத்தங்கள் செய்ததோடு அகரமுதலி, கொடுந்தமிழ் இலக்கணம் ஆகியவற்றை வெளியிடவும் செய்தார். தேம்பாவனி இவர் இயற்றிய காவியம். தமிழ் மொழியை தாய் மொழியாக கொள்ளாத ஒருவர் இயற்றிய காவியம் என்பது இதன் சிறப்பு. பல அரிய சுவடிகளைத் தேடி அச்சிட்டதால் இவர் ‘சுவடித் தேடும் சாமியார்’ என்றும் அழைக்கப் பட்டார். இவர் செய்த சீர்த்திருத்தங்களால் தமிழ் அச்சுக்கலை மிகுந்த வளர்ச்சி அடைந்தது. அதனால் தமிழ் மொழியும் பயனடைந்தது. முதலில் செவிவழிக் கதைகளான பரமார்த்த குருவின் கதை, பஞ்சதந்திர கதைகள், விக்கிரமாதித்தன் கதை ஆகியவை தமிழில் அச்சிடப்பட்டன. அதே நேரத்தில் திருக்குறள், நாலடியார் போன்றவையும் அச்சிடப்பட்டன.

ஆறுமுக நாவலர்
மதபோதகர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அச்சுச் துறையில் ஆறுமுக நாவலர் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தார். சைவ சித்தாந்தியான இந்த இலங்கைத் தமிழர் பழந்தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தொகுத்து பதிப்பித்தார். தமிழ் நூல்களை முதன் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர் இவர். திருக்குறள் பரிமேலழகருரை, சூடாமணி நிகண்டு, நன்னூற் காண்டிகை, போன்ற இலக்கிய, இலக்கண நூல்களையும் திருவாசகம், திருக்கோவையார் திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் போன்ற நூல்களையும் பிழையின்றிப் பதித்தவர்.
பிற்காலத்தில் சென்னையில் பல அச்சுக்கூடங்கள் நிருவப்பட்டு, அச்சுத்துறை வணிக ரீதியாக வளர்ந்தது. இக்காலக்கட்டத்தில்
சி.வை.தாமோதரம் பிள்ளை
சி. வை. தாமோதரம்பிள்ளை பண்டைய சங்கத் தமிழ் நூல்கள் செல்லரித்து அழிந்து போகாது, தமது அரிய தேடல்கள் மூலம் அவற்றை மீட்டெடுத்து, காத்து, ஒப்பிட்டு பரிசோதித்து, அச்சிட்டு பெரும் பணிசெய்தார்.  தமிழின் நூல்கள் தொடர்ந்து தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும். தமிழின் பெருமையை, அருமையை தமிழர் உணர்ந்து உயர வேண்டும் என்ற அரிய நோக்கங்களோடு தொண்டாற்றியவர் இவர். இதனால் தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி என அறியப்பட்டவர்.
உ.வே.சாமிநாத அய்யர்
உ. வே. சாமிநாதையர் சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநாநூறு பத்துப்பாட்டு, சீவகசிந்தாமணி போன்ற சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், எனப் பலவகைப்பட்ட 90க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளுக்கு நூல்வடிவம் தந்து அவற்றை அழிவில் இருந்து காத்தது மட்டுமின்றி அடுத்த தலைமுறையினர் அறியத் தந்தார். சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும், புதியதும் பழையதும், நல்லுரைக் கோவை போன்ற பல உரைநடை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவற்றை அச்சிட இவர் பல சிரமங்களைச் சந்தித்தார். பலர் பணம் பெற்றுக்கொண்டும் சுவடுகள் தறாமல் ஏமாற்றினர். சில தனியாரிடமிருந்த சுவடுகள், அச்சுப்பிரதிகள் அக்கரையின்மையாலும் அவற்றின் பெருமை உணரப்படாததாலும் பழையப் பொருட்களோடு போடப்பட்டு பாதியழிந்த நிலையிலிருந்தன. என்றாலும் மிகுந்த வறுமைக்கு இடையிலும் இச்சுவடுகள், பழைய அச்சுப் பிரதிகள் ஆகியவற்றை சேகரித்து பதிப்பித்தார். பதிப்பிக்கும் பொழுதும் மிகுந்த அக்கரையோடு பல அருஞ்சொற்களுக்கு விளக்கத்தையும் உரைகளில் காணப்பட்ட பாட பேதங்களையும் மிகத் தெளிவாக தனியாக எடுத்துக் காட்டி பதிப்பித்தார். இதனால் இலக்கியத்தின் மூலப் பொருள் மயக்கமில்லாமல் அச்சிடப்பட்டது. தமது வாழ்நாளில் தமிழ் இலக்கியங்களைப் புதிப்பித்து பதிப்பதை பற்றி மட்டுமே சிந்தித்தவர் ‘தமிழ் தாத்தா’ என்று அழைக்கப்படும் உ.வே.சாமிநாதய்யர்.
ச. வையாபுரிப்பிள்ளை
ச. வையாபுரிப்பிள்ளை  தமிழ் நூற்பதிப்புத் துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர். தமிழில் சிறந்த புலமை பெற்றவர். ஆய்வுக கட்டுரையாளர், திறனாய்வாளர், கால மொழி ஆராய்ச்சியாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், கதை,கவிதைகள் புனையும் திறம் படைத்தவர் எனப் பல்முகப் பரிமாணங்களைக் கொண்டவர். நாற்பதுக்கும் அதிகமான நூல்களையும் நூற்றுக்கணக்கான ஆய்வுகளையும் கட்டுரைகளையும் எழுதிக் குவித்தவர் அவர். மனோன்மணியம் உரையுடன் தொடங்கி 1955 இல் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை உரையுடன் பதிப்பித்தது வரை தமிழுக்குப் பெரும் தொண்டு ஆற்றியவர். அவரது வீட்டில் இருந்த நூலகத்தில் மட்டும் 2,943 புத்தகங்கள் இருந்தன. அதுமட்டுமல்லாமல் ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு, ஜெர்மன், மலையாளம் போன்ற மொழிகளிலான குறிப்புகளும், ஓலைச்சுவடிகளும் நூற்றுக்கணக்கில் இருந்தன. அவை அனைத்தையும் கொல்கத்தாவில் இருந்த தேசிய நூலகத்துக்கு நன்கொடையாக அளித்துவிட்டார் வையாபுரிப் பிள்ளை.
தந்தை பெரியார்
அடுத்ததாக தந்தை பெரியாரின் தமிழ் எழுத்து சீர்திருத்தம் தமிழ் தட்டச்சிலும் இன்றைய கணிணியிலும் தமிழ் எளிதாக பயில அடிப்படையாக அமைந்ததை நாமறிவோம்.
இவர்களின் தன்னலம் மறந்த பணியாலேயே தமிழின் இன்றைய இலக்கிய வளம் உலகுக்கு தெரிய வந்தது. இன்றும் தமிழ் உயிர்ப்போடு வாழ்ந்து கொண்டிருக்கிறது. இவர்களின் பணிக்கு நாம் என்றும் கடமைப்பட்டவர்கள்.
இன்றும் தமிழில் மிகச் சிறந்த முறையில் கதை, கவிதை, உரைநடை, கட்டுரைகள், ஆய்வுநூல்கள் என பலத்துறைகளிலும் படைப்புகள் வெளியாகின்றன. பலச் செயலிகள் தமிழ் மொழியில் உருவாக்கப்பட்டுள்ளன. கணிணியுகத்திற்கு தமிழர் தம்மை தயார் செய்தே வருகின்றனர்.
என்றாலும், இன்று ஒருதலைமுறையினர் ஆங்கில வழியில் கற்று இரண்டாம் பாடமாகவும் அந்நிய மொழியே பயின்று வளர்கின்றனர். தமிழ் அவர்கள் பேச்சில் கூட அழிந்து வரும் நிலையே காணப்படுகிறது. மொழிக்கலப்பு பலக்காலகட்டத்திலும் நிலவி வந்தாலும் இக்காலத்தில் தமிழ் மொழி சிதைக்கப்பட்டு அந்நிய மொழி விதைக்கப்படுவது வருத்தத்திற்குறியது.
இவ்வளவு அரும்பாடுபட்டு மீட்கப்பட்ட, நமது பண்பாட்டை, வாழ்வியல் விழுமங்களைப் பறைச்சாற்றும் இலக்கியங்கள் இன்று ஒரு காட்சிப் பொருளாகவே, பழம் பெருமை பேசவே பயன் படுத்தப்படுகின்றன. வாழ்க்கைக் கல்வியாகப் பயிலப்படுவதில்லை என்பது கவலைக்குறியது.


பாங்குடன் படித்த லின்றி
பணத்தினைச் சேர்ப்போம் என்றே
ஏங்கிடு நெஞ்சத் தோடு
இங்கவர் தமிழை விட்டே
ஆங்கில வழியில் கற்று
அடுத்தவர் போலே வாழ
பூங்குயில் குரலை விட்டு
போலியைத் தேடி நின்றார்.


பேச்சிலே தமிழை விட்டார்
பெயரிலும் தமிழைக் காணோம்
கூச்சமே யின்றி நாளும்
குறைசொலித் திரிவார் வெட்கம்
வீச்சதும் அதிகம் அம்மா
வேற்றுவர் மொழியின் மோகம்
ஏச்சிலும் இவர்கள் பேச்சில்
எம்தமிழ்ச் சொல்லைக் காணோம்.



என்பதே இன்றைய நிலை. இந்த நிலை மாற வேண்டும். தமிழ் இலக்கியங்களை நமது அடுத்த தலைமுறையினரும் உணர்ந்து அறிந்து, வாழ்வில் கடைப்பிடிக்கும் படிச் செய்வது நமது கடமையாகும். இதற்காக தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிப்போம். இயன்றவரை இயல்பாக தமிழில் பேசுவோம்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழினம்!

Friday, 22 March 2019

எட்டுத் தொகை நூல்கள் எடுத்துக்காட்டும் தமிழர் பண்பாடு


சென்னைத் துறைமுக நண்பர்கள் வட்டத்தின் ' அணியம்' இதழில் வெளியானது
தமிழர்களின் மாபெரும் செல்வமான சங்க இலக்கியங்கள் என்பன பெரும்பாலும் எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, பதினெங்கீழ் கணக்கு நூல்கள் என பெரும் பிரிவுகளைக் கொண்டது.
இவற்றில் எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களின் தொகுப்பு.
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை
என்ற வெண்பா எட்டுத் தொகை நூல்கள் எவை என அடுக்கிக் காட்டும்.

சங்கத் தமிழ் இலக்கியத்தில் அகம், புறம் என்ற இரு பெரும் பிரிவுகளில் பாடல்கள் அமைந்துள்ளன. அகம் என்பது மக்களின் அன்பும் காதலும் கொண்ட குடும்ப வாழ்வை சொல்வதாகவும், புறம் என்பது கல்வி, போர், வீரம், அறம், அரசாட்சி, வாழ்க்கை முறை என்று மக்களின் சமூக வாழ்க்கையை சொல்வதாகவும் அமைகிறது.
எட்டுத் தொகை நூல்களில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகியவை அகநூல்களாகும். பதிற்றுப்பத்தும், புறநானூறும் புறநூல்களாகும். பரிபாடல் அகமும், புறமும் கலந்த நூலாகும்.
இனி இப்பாடல்களில் காணக்கிடைக்கும் பண்பாட்டு கூறுகளை, வாழ்வியல் உண்மைகளை, நெறிகளைப் பார்ப்போம்:
1.  நற்றினை
மரஞ்சா மருந்துங் கொள்ளார் மாந்தர் 
உரஞ்சாச் செய்யார் உயர்தவம் வளங்கெடப் 
பொன்னுங் கொள்ளார் மன்னர்….
அகப்பொருள் கூறும் நற்றினையில் தலைவனின் பிரிவை தாங்கிக்கொள்ள இயலாத தலைவியின் கூற்றாக அமைந்த 226ம் பாடல் மிகச் சிறந்த வாழ்வியல் விழுமங்களை நமக்கு காட்டுகிறது.
1.  மருந்து மரமாக இருந்தாலும் அம்மரமே பட்டுப்போகும் அளவுக்கு, அதனிடத்தே உள்ள மருந்துக்காகும் பகுதிகளை எல்லாம் முற்றவும் எடுத்துக்கொள்ளவே மாட்டார்கள்
2.  உயர்ந்த தவம் மேற்கொள்வாரும் தம் உடல் நலம் குன்றும் அளவிற்கு தவம் செய்யார்.
3.  தம் நாட்டுக் குடி மக்களின் வளமெல்லாம் முழுவதும் கெட்டு போகும் வண்ணம், அவரிடமுள்ள பொன், பொருளை வரியாக கொள்ளமாட்டார் மன்னர்.
தலைவன் தலைவி பிரிவைக் கூறுமிடத்தும் மக்களும் அரசனும் எவ்வாறு அறம் சார்ந்து வாழ வேண்டும் என்பதைக் கூறுகிறது இப்பாடல். அன்றைய மக்களை வழி நடத்திய இயற்கையோடியைந்த வாழ்க்கை முறையால் இன்றுவரை இவ்வியற்கை வளங்கள் அழியாமல் காக்கப்பட்டன. ஆயின் இன்று பேராசையினால் இயற்கை வளங்களெல்லாம் அழிக்கப் படுவதை எண்ணுகையில் மனம் புண்ணாவது உண்மையே.
‘‘வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர்;
தையூண் இருக்கையில் தோன்றும் நாடன்’’
 
என்ற நற்றினைப் பாடலில் தை மாதத்தில் நோன்பிருத்தல் காட்டப்பட்டிருக்கிறது. பொங்கல் விழா பற்றிய செய்திகள் சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை.
2.  குறுந்தொகை
குறுந்திணையிலும் மக்களின் பாண்பாடு மிக அழகாகக் காட்டப்பட்டுள்ளது. தலைவனைப் பார்த்துத் தலைவி கூறும் கூற்றாக வரும் குறுந்தொகையின் 49ம் பாடலில், இந்தப் பிறவியில் மட்டுமல்ல, இனி வரும் பிறவிகளிலும், உன் நெஞ்சினுள் நிறைந்து நிற்கும் காதலி நானாகத்தான் இருக்க வேண்டும் எனச் சுவைபடக் கூறுகிறாள் தலைவி.
இம்மை மாறி மறுமை யாயினும் நீயாகியர் என்கணவனை,
யானாகியர் நின் நெஞ்சுநேர் பவளே…
தலைவனுக்கும் தலைவிக்குமான அன்பை எவ்வளவு சிறப்பாக காட்டுகிறது இப்பாடல்! காதலில் இவ்வளவு சிறப்பான பண்பாட்டை இன்று காணமுடியுமா என்றால் அது கேள்விக் குறியே!
3.  ஐங்குறுநூறு
அகம் கூறும் ஐங்குறுநூறில் பண்பாட்டுச் செய்திகள் பல உள்ளன.
….நன்றுபெரிது சிறக்க தீதில் ஆகுக
….நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க
….விளைக வயலே வருக இரவலர்
தலைவனைப் பிரிந்த தலைவியின் கூற்றாக வரும் இவ்வரிகள் அக்கால மக்களின் விருந்தோம்பல், ஈகை ஆகிய பண்புகளை அழகாக காட்டுகின்றன. இரவலர்கள் வரவேண்டும். அவர்களுக்கு ஈவதற்கு நெல் நிறைய விளைய வேண்டும் என்று வேண்டுகிறாள் தலைவி. அன்றைய பண்பாட்டை என்னவென்பது.
4.  பதிற்றுப்பத்து
அக்காலச் சேரநாட்டுப் பகுதியில் விளங்கிய பண்பாடு பதிற்றுப்பத்தால் அறியப்படுகின்றது. சேரநாட்டில் அக்காலத்திலேயே வேதநெறிக்கு மதிப்பிருந்தது. அந்தணர்க்கு அந்நாட்டு வேந்தர் மிக மதிப்பளித்தனர். அரசர்கள் தவம் செய்வதால் பெரும் செல்வங்கள் கைகூடும் எனக் கருதினர்.
நின் பணிவு பார்ப்பார்க்கல்லது இல்லை
நின் கண்ணோட்டம் நண்பர்களுக்கு அல்லது இல்லை.
நின் வணக்கம் மகளிர்க்கு அல்லது இல்லை.
நீ சொன்ன சொல் தவறுவது நிலவுலகமே மாறினாலும் இல்லை.
என்று சேர மன்னனைப் புகழும் இப்பாடலிலிருந்து பணிவு, கண்ணோட்டம், மரியாதை, சொன்ன சொல் காத்தல் ஆகிய குணங்கள் போற்றப்பட்டன என்பது அறியமுடிகிறது.
5.  பரிபாடல்
பரிபாடலில் பாண்டி நாட்டுப் பழக்க வழக்கங்கள் சிலவற்றை அறிய முடிகிறது. கண்ணன், பலதேவன் ஆகிய இருவரையும் அக்காலத்தவர் பெரும்பெயர் இருவர் எனக் கூறினர். மார்கழி மாதத்தில் திருவாதிரை நாளில் ஆகமம் அறிந்த பூசகர் விழா நடத்தினர். அப்போது பெண்கள் தைந்நீராடல் எனப்பெறும் நோன்பை மேற்கொண்டனர். ‘நிலம் மழை பெற்றுக் குளிர்க’ என்று மகளிர் கூறி நீரில் மூழ்கி ஆடும் நீராடல் அம்பா ஆடல் எனப்பட்டது. இவ்வழக்கமே பிற்காலத்தில் பாவை நோன்பாகியிருக்கிறது. இன்றும் மார்கழி திருவாதிரை பூசை நடைபெறுவதை நாமறிவோம்.
6.  கலித்தொகை
கலித்தொகையில் இடம்பெறும் ஏறு தழுவுதல் பற்றிய செய்தி தமிழர் பண்பாட்டில் குறிக்கத்தக்கதாகும். ஏறு தழுவும் இடத்தை ‘தொழு’ என்பர். ஏறு தழுவுவதற்கு முன் நீர்த்துறைகளிலும், மரத்தடிகளிலும் உள்ள தெய்வங்களை வழிபடுவது மரபு. காளையின் கொம்புக்கு அச்சம் கொள்பவனை ஆயர்மகள் அடுத்த பிறவியில் கூடக் கணவனாக ஏற்கமாட்டாள். இக்கருத்தை
கொல்லேற்றுக் கோடுஅஞ்சு வானை மறுமையும் 
புல்லாளே ஆய மகள்
 
என்ற கலித்தொகை அடிகள் எடுத்துரைக்கின்றன.
ஏறு தழுவல் முடிந்தபின் உறவினர் இசைவுடன் திருமணம் நிகழ்த்துவதே ஆயர் குல வழக்கமாகத் தெரிகிறது. சங்க இலக்கியத்தில், கலித்தொகையில் மட்டுமே ஏறு தழுவல் நிகழ்ச்சி இடம் பெறுகின்றது என்பது குறிப்பிடத் தக்கது.
அது மட்டும் அல்லாமல்
·        செல்வம் நிலையில்லாதது.
·        யாவர்க்கும் தீங்கு செய்பவன் இறுதியில் கெட்டு ஒழிவான்.
·        கொடைப்பண்பு இல்லாதவனின் செல்வம் அவனைச் சேர்ந்தவரைப் பாதுகாக்காது.
·        நிலவு நாள்தோறும் தேய்வது போல இளமையும் அழகும் தேயும்.
·        நேர்மையற்ற முறையில் தேடிய பொருள் இம்மையிலும் மறுமையிலும் பகையே தரும்.
போன்ற வாழ்வியல் உண்மைகள் காட்டப்பட்டுள்ளன.
7.  அகநானூறு
பண்டைக்காலத் திருமணமுறை, உணவு முறை, வழிபாடு, சிறுவர்களுக்கு ஐம்படைத்தாலி அணியும் வழக்கம் முதலிய பண்பாட்டுக் கூறுகளை அகநானூறு வெளியிடுகிறது. மணவிழாவில் மணப்பந்தலில் வெண்மணல் பரப்பி விளக்கேற்றி, மணமகளுக்கு நீராட்டி, தூய ஆடை அணிகள் அணிவித்து, இறைவழிபாடு நடத்தி, திங்கள் உரோகிணியைக் கூடிய நல்ல வேளையில் வாகை இலையோடு அருகின் கிழங்கையும் சேர்த்துக் கட்டப்பெற்ற வெண்ணூலை தலைவிக்குக் காப்பாகச் சூட்டுவர்"- என்று திருமண சடங்கு முறை இதில் காட்டப்படுகிறது.
8.  புறநானூறு
புற நானூற்றில் வரும்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
…….
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
என்ற அருமையானப் பாடல் அன்றும் இன்றும் என்றும் மிகச் சிறந்த வழிகாட்டியாக விளங்கக்கூடியது..
எல்லா ஊரும் எம் ஊர். எல்லா மக்களும் எம் உறவினரே. நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை, துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை, சாதல் புதுமையில்லை; வாழ்தல், இன்பமென்று மகிழ்ந்தது இல்லை, வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை, பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம் ஆதலினால், பிறந்து வாழ்வோரில் சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை. பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.
இதைவிடச் சிறப்பாக வாழ்வியல் உண்மைகளை யாராலும் எடுத்தியம்ப முடியுமா. அமானுஷ்யங்களை பாடிக்கொண்டிருந்த பிற இலக்கியங்களுக்கு இடையில் அக்காலத்திலேயே மக்களின் வாழ்வை, இன்றும் நிலைத்திருக்கும் வாழ்வியல் உண்மைகளை மிகச் சிறப்பாக பாடிய தமிழரின் பெருமையை என்னவென்பது!.
இன்று இந்நிலை நிலவுகிறதா? வாழ்வியல் உண்மைகள், விழுமங்கள் உணரப்படுகின்றனவா? போற்றப்படுகின்றனவா? வாழ்வில் வெற்றியும் தோல்வியும் எவ்வாறு பார்க்கப்படுகின்றன. நிலையில்லாப் பணமும் பொருளுமே வெற்றியை அளக்கும் கருவியாகி விட்டது. என்றாலும் தமிழர் என்றும் வீழ்ந்ததில்லை. உயர்வோம் என்ற நம்பிக்கையோடு கடமையாற்றுவோம்.

சி. உமா.
பொது நிர்வாகத் துறை.