Friday, 22 March 2019

எட்டுத் தொகை நூல்கள் எடுத்துக்காட்டும் தமிழர் பண்பாடு


சென்னைத் துறைமுக நண்பர்கள் வட்டத்தின் ' அணியம்' இதழில் வெளியானது
தமிழர்களின் மாபெரும் செல்வமான சங்க இலக்கியங்கள் என்பன பெரும்பாலும் எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, பதினெங்கீழ் கணக்கு நூல்கள் என பெரும் பிரிவுகளைக் கொண்டது.
இவற்றில் எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களின் தொகுப்பு.
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை
என்ற வெண்பா எட்டுத் தொகை நூல்கள் எவை என அடுக்கிக் காட்டும்.

சங்கத் தமிழ் இலக்கியத்தில் அகம், புறம் என்ற இரு பெரும் பிரிவுகளில் பாடல்கள் அமைந்துள்ளன. அகம் என்பது மக்களின் அன்பும் காதலும் கொண்ட குடும்ப வாழ்வை சொல்வதாகவும், புறம் என்பது கல்வி, போர், வீரம், அறம், அரசாட்சி, வாழ்க்கை முறை என்று மக்களின் சமூக வாழ்க்கையை சொல்வதாகவும் அமைகிறது.
எட்டுத் தொகை நூல்களில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகியவை அகநூல்களாகும். பதிற்றுப்பத்தும், புறநானூறும் புறநூல்களாகும். பரிபாடல் அகமும், புறமும் கலந்த நூலாகும்.
இனி இப்பாடல்களில் காணக்கிடைக்கும் பண்பாட்டு கூறுகளை, வாழ்வியல் உண்மைகளை, நெறிகளைப் பார்ப்போம்:
1.  நற்றினை
மரஞ்சா மருந்துங் கொள்ளார் மாந்தர் 
உரஞ்சாச் செய்யார் உயர்தவம் வளங்கெடப் 
பொன்னுங் கொள்ளார் மன்னர்….
அகப்பொருள் கூறும் நற்றினையில் தலைவனின் பிரிவை தாங்கிக்கொள்ள இயலாத தலைவியின் கூற்றாக அமைந்த 226ம் பாடல் மிகச் சிறந்த வாழ்வியல் விழுமங்களை நமக்கு காட்டுகிறது.
1.  மருந்து மரமாக இருந்தாலும் அம்மரமே பட்டுப்போகும் அளவுக்கு, அதனிடத்தே உள்ள மருந்துக்காகும் பகுதிகளை எல்லாம் முற்றவும் எடுத்துக்கொள்ளவே மாட்டார்கள்
2.  உயர்ந்த தவம் மேற்கொள்வாரும் தம் உடல் நலம் குன்றும் அளவிற்கு தவம் செய்யார்.
3.  தம் நாட்டுக் குடி மக்களின் வளமெல்லாம் முழுவதும் கெட்டு போகும் வண்ணம், அவரிடமுள்ள பொன், பொருளை வரியாக கொள்ளமாட்டார் மன்னர்.
தலைவன் தலைவி பிரிவைக் கூறுமிடத்தும் மக்களும் அரசனும் எவ்வாறு அறம் சார்ந்து வாழ வேண்டும் என்பதைக் கூறுகிறது இப்பாடல். அன்றைய மக்களை வழி நடத்திய இயற்கையோடியைந்த வாழ்க்கை முறையால் இன்றுவரை இவ்வியற்கை வளங்கள் அழியாமல் காக்கப்பட்டன. ஆயின் இன்று பேராசையினால் இயற்கை வளங்களெல்லாம் அழிக்கப் படுவதை எண்ணுகையில் மனம் புண்ணாவது உண்மையே.
‘‘வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர்;
தையூண் இருக்கையில் தோன்றும் நாடன்’’
 
என்ற நற்றினைப் பாடலில் தை மாதத்தில் நோன்பிருத்தல் காட்டப்பட்டிருக்கிறது. பொங்கல் விழா பற்றிய செய்திகள் சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை.
2.  குறுந்தொகை
குறுந்திணையிலும் மக்களின் பாண்பாடு மிக அழகாகக் காட்டப்பட்டுள்ளது. தலைவனைப் பார்த்துத் தலைவி கூறும் கூற்றாக வரும் குறுந்தொகையின் 49ம் பாடலில், இந்தப் பிறவியில் மட்டுமல்ல, இனி வரும் பிறவிகளிலும், உன் நெஞ்சினுள் நிறைந்து நிற்கும் காதலி நானாகத்தான் இருக்க வேண்டும் எனச் சுவைபடக் கூறுகிறாள் தலைவி.
இம்மை மாறி மறுமை யாயினும் நீயாகியர் என்கணவனை,
யானாகியர் நின் நெஞ்சுநேர் பவளே
தலைவனுக்கும் தலைவிக்குமான அன்பை எவ்வளவு சிறப்பாக காட்டுகிறது இப்பாடல்! காதலில் இவ்வளவு சிறப்பான பண்பாட்டை இன்று காணமுடியுமா என்றால் அது கேள்விக் குறியே!
3.  ஐங்குறுநூறு
அகம் கூறும் ஐங்குறுநூறில் பண்பாட்டுச் செய்திகள் பல உள்ளன.
….நன்றுபெரிது சிறக்க தீதில் ஆகுக
….நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க
….விளைக வயலே வருக இரவலர்
தலைவனைப் பிரிந்த தலைவியின் கூற்றாக வரும் இவ்வரிகள் அக்கால மக்களின் விருந்தோம்பல், ஈகை ஆகிய பண்புகளை அழகாக காட்டுகின்றன. இரவலர்கள் வரவேண்டும். அவர்களுக்கு ஈவதற்கு நெல் நிறைய விளைய வேண்டும் என்று வேண்டுகிறாள் தலைவி. அன்றைய பண்பாட்டை என்னவென்பது.
4.  பதிற்றுப்பத்து
அக்காலச் சேரநாட்டுப் பகுதியில் விளங்கிய பண்பாடு பதிற்றுப்பத்தால் அறியப்படுகின்றது. சேரநாட்டில் அக்காலத்திலேயே வேதநெறிக்கு மதிப்பிருந்தது. அந்தணர்க்கு அந்நாட்டு வேந்தர் மிக மதிப்பளித்தனர். அரசர்கள் தவம் செய்வதால் பெரும் செல்வங்கள் கைகூடும் எனக் கருதினர்.
நின் பணிவு பார்ப்பார்க்கல்லது இல்லை
நின் கண்ணோட்டம் நண்பர்களுக்கு அல்லது இல்லை.
நின் வணக்கம் மகளிர்க்கு அல்லது இல்லை.
நீ சொன்ன சொல் தவறுவது நிலவுலகமே மாறினாலும் இல்லை.
என்று சேர மன்னனைப் புகழும் இப்பாடலிலிருந்து பணிவு, கண்ணோட்டம், மரியாதை, சொன்ன சொல் காத்தல் ஆகிய குணங்கள் போற்றப்பட்டன என்பது அறியமுடிகிறது.
5.  பரிபாடல்
பரிபாடலில் பாண்டி நாட்டுப் பழக்க வழக்கங்கள் சிலவற்றை அறிய முடிகிறது. கண்ணன், பலதேவன் ஆகிய இருவரையும் அக்காலத்தவர் பெரும்பெயர் இருவர் எனக் கூறினர். மார்கழி மாதத்தில் திருவாதிரை நாளில் ஆகமம் அறிந்த பூசகர் விழா நடத்தினர். அப்போது பெண்கள் தைந்நீராடல் எனப்பெறும் நோன்பை மேற்கொண்டனர். நிலம் மழை பெற்றுக் குளிர்கஎன்று மகளிர் கூறி நீரில் மூழ்கி ஆடும் நீராடல் அம்பா ஆடல் எனப்பட்டது. இவ்வழக்கமே பிற்காலத்தில் பாவை நோன்பாகியிருக்கிறது. இன்றும் மார்கழி திருவாதிரை பூசை நடைபெறுவதை நாமறிவோம்.
6.  கலித்தொகை
கலித்தொகையில் இடம்பெறும் ஏறு தழுவுதல் பற்றிய செய்தி தமிழர் பண்பாட்டில் குறிக்கத்தக்கதாகும். ஏறு தழுவும் இடத்தை ‘தொழு’ என்பர். ஏறு தழுவுவதற்கு முன் நீர்த்துறைகளிலும், மரத்தடிகளிலும் உள்ள தெய்வங்களை வழிபடுவது மரபு. காளையின் கொம்புக்கு அச்சம் கொள்பவனை ஆயர்மகள் அடுத்த பிறவியில் கூடக் கணவனாக ஏற்கமாட்டாள். இக்கருத்தை
கொல்லேற்றுக் கோடுஅஞ்சு வானை மறுமையும் 
புல்லாளே ஆய மகள்
 
என்ற கலித்தொகை அடிகள் எடுத்துரைக்கின்றன.
ஏறு தழுவல் முடிந்தபின் உறவினர் இசைவுடன் திருமணம் நிகழ்த்துவதே ஆயர் குல வழக்கமாகத் தெரிகிறது. சங்க இலக்கியத்தில், கலித்தொகையில் மட்டுமே ஏறு தழுவல் நிகழ்ச்சி இடம் பெறுகின்றது என்பது குறிப்பிடத் தக்கது.
அது மட்டும் அல்லாமல்
·        செல்வம் நிலையில்லாதது.
·        யாவர்க்கும் தீங்கு செய்பவன் இறுதியில் கெட்டு ஒழிவான்.
·        கொடைப்பண்பு இல்லாதவனின் செல்வம் அவனைச் சேர்ந்தவரைப் பாதுகாக்காது.
·        நிலவு நாள்தோறும் தேய்வது போல இளமையும் அழகும் தேயும்.
·        நேர்மையற்ற முறையில் தேடிய பொருள் இம்மையிலும் மறுமையிலும் பகையே தரும்.
போன்ற வாழ்வியல் உண்மைகள் காட்டப்பட்டுள்ளன.
7.  அகநானூறு
பண்டைக்காலத் திருமணமுறை, உணவு முறை, வழிபாடு, சிறுவர்களுக்கு ஐம்படைத்தாலி அணியும் வழக்கம் முதலிய பண்பாட்டுக் கூறுகளை அகநானூறு வெளியிடுகிறது. மணவிழாவில் மணப்பந்தலில் வெண்மணல் பரப்பி விளக்கேற்றி, மணமகளுக்கு நீராட்டி, தூய ஆடை அணிகள் அணிவித்து, இறைவழிபாடு நடத்தி, திங்கள் உரோகிணியைக் கூடிய நல்ல வேளையில் வாகை இலையோடு அருகின் கிழங்கையும் சேர்த்துக் கட்டப்பெற்ற வெண்ணூலை தலைவிக்குக் காப்பாகச் சூட்டுவர்"- என்று திருமண சடங்கு முறை இதில் காட்டப்படுகிறது.
8.  புறநானூறு
புற நானூற்றில் வரும்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
…….
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
என்ற அருமையானப் பாடல் அன்றும் இன்றும் என்றும் மிகச் சிறந்த வழிகாட்டியாக விளங்கக்கூடியது..
எல்லா ஊரும் எம் ஊர். எல்லா மக்களும் எம் உறவினரே. நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை, துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை, சாதல் புதுமையில்லை; வாழ்தல், இன்பமென்று மகிழ்ந்தது இல்லை, வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை, பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம் ஆதலினால், பிறந்து வாழ்வோரில் சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை. பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.
இதைவிடச் சிறப்பாக வாழ்வியல் உண்மைகளை யாராலும் எடுத்தியம்ப முடியுமா. அமானுஷ்யங்களை பாடிக்கொண்டிருந்த பிற இலக்கியங்களுக்கு இடையில் அக்காலத்திலேயே மக்களின் வாழ்வை, இன்றும் நிலைத்திருக்கும் வாழ்வியல் உண்மைகளை மிகச் சிறப்பாக பாடிய தமிழரின் பெருமையை என்னவென்பது!.
இன்று இந்நிலை நிலவுகிறதா? வாழ்வியல் உண்மைகள், விழுமங்கள் உணரப்படுகின்றனவா? போற்றப்படுகின்றனவா? வாழ்வில் வெற்றியும் தோல்வியும் எவ்வாறு பார்க்கப்படுகின்றன. நிலையில்லாப் பணமும் பொருளுமே வெற்றியை அளக்கும் கருவியாகி விட்டது. என்றாலும் தமிழர் என்றும் வீழ்ந்ததில்லை. உயர்வோம் என்ற நம்பிக்கையோடு கடமையாற்றுவோம்.

சி. உமா.
பொது நிர்வாகத் துறை.

No comments:

Post a Comment