வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே! … (பாரதியார்)
சி.உமா, பொது
நிர்வாகத் துறை
தமிழ் தொன்மையான மொழி. இதன் சிறப்பை
உணரவும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழரின் நாகரீகம்,
பண்பாடு, வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை உலகம் தெரிந்து கொள்ளவும், சங்க இலக்கியங்கள் பெரிதும் உதவுகின்றன. தமிழில் எண்ணிறந்த
இலக்கியங்கள் இருந்திருக்கின்றன என்றாலும் பேச்சு வழக்காகவே இருந்தமையாலும் ஓலைகளில்
எழுதப்பட்டமையாலும் முறையாக பாதுகாக்கப்படாததாலும் கால வெள்ளத்தில் பல அழிந்துவிட்டன.
இன்று நாம் அறிய கிடைத்துள்ள இலக்கியங்கள் அவற்றின் ஒரு பகுதியே.
ஆயினும் இவற்றைக் கண்டறிந்து தொகுத்து அச்சில் ஏற்றி தமிழ் நிரந்தரமாக
வாழ, வளர வழிவகுத்தவர் பலர். இப்படி தமிழுக்கு
சீரிய தொண்டாற்றியவர்கள் பற்றி நாம் அறிய வேண்டியது மிகவும் அவசியமானது. இதுவே இக்கட்டுரையின் நோக்கம்.
இன்று ‘ஒரு மனிதன்
தன் வாழ்நாளில் முயன்று படித்தாலும் முழுவதுமாகப் படித்துவிட முடியாத அளவிற்கு மிக
அதிக இலக்கிய வளம் கொண்டது தமிழ்’ என்று சொல்லும் படி இலக்கியங்கள்
மீட்கப் பட்டதில் தமிழ் அச்சுக் கலையின் தோற்றமும் வளர்ச்சியும் மிக முக்கியமான காரணமாக
விளங்குகிறது. அச்சுக்கலை
உலகில் அறிமுகமான போது கிருஸ்துவ மத போதகர்களால் தென்னிந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் இருந்துதான் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு அச்சுக் கலைப்
பரவியது.
மத போதகர்கள் தம் காரியத்திற்கு
உள்ளூர் மக்களின் மொழி அவசியம் என்பதை உணர்ந்து தமிழ் மொழியைத் தாமே பயின்றதோடு அச்சுக்கலையையும்
அறிமுகப்படுத்தினர். தம் மதம் பரப்ப வந்தவர்கள் தமிழ் மணம் பரப்பி நின்றதனை வரலாறு நமக்குச் சொல்லும்.
முதலில் மத கோட்பாடுகளே அச்சிடப்பட்டாலும் பிறகு வீரமாமுனிவர் போன்றவர்களால்
மற்ற தமிழ் நூல்களும் அச்சிடப்பட்டன.
|
வீரமாமுனிவர் |
மதம் பரப்பும் நோக்கோடு
வந்த இத்தாலியரான
(கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி) வீரமாமுனிவர் தமிழ்
வரிவடிவத்தில் பல மாற்றங்களைச் செய்தார். குறில் நெடில் வேற்றுமை
படுத்தல், மெய் எழுத்தில் புள்ளி சேர்த்தல் என்று பல சீர்திருத்தங்கள்
செய்ததோடு அகரமுதலி, கொடுந்தமிழ் இலக்கணம் ஆகியவற்றை வெளியிடவும்
செய்தார். தேம்பாவனி இவர் இயற்றிய காவியம். தமிழ் மொழியை தாய் மொழியாக கொள்ளாத ஒருவர் இயற்றிய காவியம் என்பது இதன் சிறப்பு.
பல அரிய சுவடிகளைத் தேடி அச்சிட்டதால் இவர் ‘சுவடித்
தேடும் சாமியார்’ என்றும் அழைக்கப் பட்டார். இவர் செய்த சீர்த்திருத்தங்களால் தமிழ் அச்சுக்கலை மிகுந்த வளர்ச்சி அடைந்தது.
அதனால் தமிழ் மொழியும் பயனடைந்தது. முதலில் செவிவழிக்
கதைகளான பரமார்த்த குருவின் கதை, பஞ்சதந்திர கதைகள், விக்கிரமாதித்தன் கதை ஆகியவை தமிழில் அச்சிடப்பட்டன. அதே நேரத்தில் திருக்குறள், நாலடியார் போன்றவையும் அச்சிடப்பட்டன.
|
ஆறுமுக நாவலர் |
மதபோதகர்களின் கட்டுப்பாட்டில்
இருந்த அச்சுச் துறையில் ஆறுமுக நாவலர் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தார். சைவ சித்தாந்தியான
இந்த இலங்கைத் தமிழர் பழந்தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தொகுத்து பதிப்பித்தார்.
தமிழ் நூல்களை முதன் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர் இவர்.
திருக்குறள் பரிமேலழகருரை, சூடாமணி நிகண்டு, நன்னூற் காண்டிகை, போன்ற இலக்கிய, இலக்கண நூல்களையும் திருவாசகம், திருக்கோவையார் திருவிளையாடல்
புராணம், பெரியபுராணம் போன்ற நூல்களையும் பிழையின்றிப் பதித்தவர்.
பிற்காலத்தில் சென்னையில்
பல அச்சுக்கூடங்கள் நிருவப்பட்டு, அச்சுத்துறை வணிக ரீதியாக வளர்ந்தது.
இக்காலக்கட்டத்தில்
|
சி.வை.தாமோதரம் பிள்ளை |
சி. வை.
தாமோதரம்பிள்ளை பண்டைய சங்கத் தமிழ் நூல்கள் செல்லரித்து அழிந்து போகாது, தமது
அரிய தேடல்கள் மூலம் அவற்றை மீட்டெடுத்து, காத்து, ஒப்பிட்டு பரிசோதித்து, அச்சிட்டு பெரும் பணிசெய்தார்.
தமிழின் நூல்கள் தொடர்ந்து
தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும். தமிழின் பெருமையை, அருமையை
தமிழர் உணர்ந்து உயர வேண்டும் என்ற அரிய நோக்கங்களோடு தொண்டாற்றியவர் இவர். இதனால்
தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி என அறியப்பட்டவர்.
|
உ.வே.சாமிநாத அய்யர் |
உ. வே. சாமிநாதையர் சிலப்பதிகாரம், மணிமேகலை,
புறநாநூறு பத்துப்பாட்டு, சீவகசிந்தாமணி போன்ற
சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள்,
சிற்றிலக்கியங்கள், எனப் பலவகைப்பட்ட 90க்கும்
மேற்பட்ட ஓலைச்சுவடிகளுக்கு நூல்வடிவம் தந்து அவற்றை அழிவில் இருந்து காத்தது
மட்டுமின்றி அடுத்த தலைமுறையினர் அறியத் தந்தார். சங்ககாலத் தமிழும் பிற்காலத்
தமிழும், புதியதும் பழையதும், நல்லுரைக்
கோவை போன்ற பல உரைநடை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவற்றை அச்சிட இவர் பல சிரமங்களைச்
சந்தித்தார். பலர் பணம் பெற்றுக்கொண்டும் சுவடுகள் தறாமல் ஏமாற்றினர்.
சில தனியாரிடமிருந்த சுவடுகள், அச்சுப்பிரதிகள்
அக்கரையின்மையாலும் அவற்றின் பெருமை உணரப்படாததாலும் பழையப் பொருட்களோடு போடப்பட்டு
பாதியழிந்த நிலையிலிருந்தன. என்றாலும் மிகுந்த வறுமைக்கு இடையிலும்
இச்சுவடுகள், பழைய அச்சுப் பிரதிகள் ஆகியவற்றை சேகரித்து பதிப்பித்தார்.
பதிப்பிக்கும் பொழுதும் மிகுந்த அக்கரையோடு பல அருஞ்சொற்களுக்கு விளக்கத்தையும்
உரைகளில் காணப்பட்ட பாட பேதங்களையும் மிகத் தெளிவாக தனியாக எடுத்துக் காட்டி பதிப்பித்தார்.
இதனால் இலக்கியத்தின் மூலப் பொருள் மயக்கமில்லாமல் அச்சிடப்பட்டது.
தமது வாழ்நாளில் தமிழ் இலக்கியங்களைப் புதிப்பித்து பதிப்பதை பற்றி மட்டுமே
சிந்தித்தவர் ‘தமிழ் தாத்தா’ என்று அழைக்கப்படும்
உ.வே.சாமிநாதய்யர்.
|
ச. வையாபுரிப்பிள்ளை |
ச. வையாபுரிப்பிள்ளை தமிழ் நூற்பதிப்புத் துறையில் சிறந்த
பதிப்பாசிரியராக விளங்கியவர். தமிழில் சிறந்த புலமை பெற்றவர். ஆய்வுக
கட்டுரையாளர், திறனாய்வாளர், கால மொழி
ஆராய்ச்சியாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர்,
கதை,கவிதைகள் புனையும் திறம் படைத்தவர் எனப்
பல்முகப் பரிமாணங்களைக் கொண்டவர். நாற்பதுக்கும் அதிகமான நூல்களையும்
நூற்றுக்கணக்கான ஆய்வுகளையும் கட்டுரைகளையும் எழுதிக் குவித்தவர் அவர்.
மனோன்மணியம் உரையுடன் தொடங்கி 1955 இல் நாலாயிர திவ்யப்
பிரபந்தத்தை உரையுடன் பதிப்பித்தது வரை தமிழுக்குப் பெரும் தொண்டு ஆற்றியவர்.
அவரது வீட்டில் இருந்த நூலகத்தில் மட்டும் 2,943 புத்தகங்கள்
இருந்தன. அதுமட்டுமல்லாமல் ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு,
ஜெர்மன், மலையாளம் போன்ற மொழிகளிலான
குறிப்புகளும், ஓலைச்சுவடிகளும் நூற்றுக்கணக்கில் இருந்தன.
அவை அனைத்தையும் கொல்கத்தாவில் இருந்த தேசிய நூலகத்துக்கு நன்கொடையாக
அளித்துவிட்டார் வையாபுரிப் பிள்ளை.
|
தந்தை பெரியார் |
அடுத்ததாக தந்தை பெரியாரின்
தமிழ் எழுத்து சீர்திருத்தம் தமிழ் தட்டச்சிலும் இன்றைய கணிணியிலும் தமிழ் எளிதாக பயில
அடிப்படையாக அமைந்ததை நாமறிவோம்.
இவர்களின் தன்னலம் மறந்த
பணியாலேயே தமிழின் இன்றைய இலக்கிய வளம் உலகுக்கு தெரிய வந்தது. இன்றும்
தமிழ் உயிர்ப்போடு வாழ்ந்து கொண்டிருக்கிறது. இவர்களின் பணிக்கு
நாம் என்றும் கடமைப்பட்டவர்கள்.
இன்றும் தமிழில் மிகச்
சிறந்த முறையில் கதை,
கவிதை, உரைநடை, கட்டுரைகள்,
ஆய்வுநூல்கள் என பலத்துறைகளிலும் படைப்புகள் வெளியாகின்றன. பலச் செயலிகள் தமிழ் மொழியில் உருவாக்கப்பட்டுள்ளன. கணிணியுகத்திற்கு
தமிழர் தம்மை தயார் செய்தே வருகின்றனர்.
என்றாலும், இன்று
ஒருதலைமுறையினர் ஆங்கில வழியில் கற்று இரண்டாம் பாடமாகவும் அந்நிய மொழியே பயின்று வளர்கின்றனர்.
தமிழ் அவர்கள் பேச்சில் கூட அழிந்து வரும் நிலையே காணப்படுகிறது.
மொழிக்கலப்பு பலக்காலகட்டத்திலும் நிலவி வந்தாலும் இக்காலத்தில் தமிழ்
மொழி சிதைக்கப்பட்டு அந்நிய மொழி விதைக்கப்படுவது வருத்தத்திற்குறியது.
இவ்வளவு அரும்பாடுபட்டு
மீட்கப்பட்ட,
நமது பண்பாட்டை, வாழ்வியல் விழுமங்களைப் பறைச்சாற்றும்
இலக்கியங்கள் இன்று ஒரு காட்சிப் பொருளாகவே, பழம் பெருமை பேசவே
பயன் படுத்தப்படுகின்றன. வாழ்க்கைக் கல்வியாகப் பயிலப்படுவதில்லை
என்பது கவலைக்குறியது.
பாங்குடன் படித்த லின்றி
பணத்தினைச் சேர்ப்போம் என்றே
ஏங்கிடு நெஞ்சத் தோடு
இங்கவர் தமிழை விட்டே
ஆங்கில வழியில் கற்று
அடுத்தவர் போலே வாழ
பூங்குயில் குரலை விட்டு
போலியைத் தேடி நின்றார்.
பேச்சிலே தமிழை விட்டார்
பெயரிலும் தமிழைக் காணோம்
கூச்சமே யின்றி நாளும்
குறைசொலித் திரிவார் வெட்கம்
வீச்சதும் அதிகம் அம்மா
வேற்றுவர் மொழியின் மோகம்
ஏச்சிலும் இவர்கள் பேச்சில்
எம்தமிழ்ச் சொல்லைக் காணோம்.
என்பதே இன்றைய நிலை. இந்த நிலை மாற வேண்டும்.
தமிழ் இலக்கியங்களை நமது அடுத்த தலைமுறையினரும் உணர்ந்து அறிந்து, வாழ்வில் கடைப்பிடிக்கும் படிச்
செய்வது நமது கடமையாகும். இதற்காக தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிப்போம்.
இயன்றவரை இயல்பாக தமிழில் பேசுவோம்.
வாழ்க தமிழ்! வளர்க தமிழினம்!
No comments:
Post a Comment