Thursday, 26 April 2018

குறுந்தொகை -1, குறிஞ்சி


     சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்களுள் நற்றிணைக்கு அடுத்ததாக ‘நல்லகுறுந்தொகை’ என்று அடைமொழியோடு அறியப்படும் குறுந்தொகை 4 அடி முதல் 8 அடிகள் கொண்ட அகவற்பாவினால் (ஆசிரியப்பா) ஆன பாடல்களின் தொகுப்பு. குறுகிய அடிகளைக்கொண்டதால் குறுந்தொகை எனப்பட்டது. அகப்பொருள் பற்றியது. இப்பாடல்களில் சில வரலாற்று நிகழ்வுகளையும், அன்றைய மக்களின் சில பழக்க வழக்கங்களையும் அறியமுடிகிறது...
முதற் பாடல் குறிஞ்சி திணைக்குரியது...
சுவைப்போம் வருங்கள்..
செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்
கழறொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.

செங்களம் பட- போர்க்களம் இரத்தத்தால் செந்நிறமாகும்படி, அவுணர் கொன்று தேய்த்த - அசுரர்களைக் கொன்று இல்லை என்று ஆக்கிய, செங்கோல் அம்பின்செம்மையான, வளைவில்லாத, இரத்தத்தால் சிவந்த திரண்ட அம்பையும், செங்கோடு யானைபகைவரைக் குத்தி சிவந்த கொம்பினை உடைய யானையையும், கழல் தொடி - உழல இட்ட வீர வளையையும் உடைய, சேஎய் குன்றம் - முருகக் கடவுளுக்குரிய இம் மலையானது, குருதிப் பூவின் குலை காந்தட்டு - சிவப்பாகிய பூங்கொத்துள்ள காந்தளை உடையது.

குறிஞ்சி மலைக்கடவுள் முருகன்.முருகக் கடவுளின் ஊர்திகளுள் யானை ஒன்றென்பதும், அதன் பெயர் பிணிமுகம் என்பதும், அருள் செய்வதற்கும் போர் செய்வதற்கும் எழுந்தருள்கையில் அதனை அவர் ஊர்ந்து செல்வார் என்பதும் பல சங்க இலக்கியங்களிலிருந்து நாம் அறிய கிடைக்கும் தகவல்கள்.
குருதிப்பூ என்றது குருதியைப்போன்று சிவந்த நிறமுடையப்பூ செங்காந்தள்பூ
குலைக்காந்தட்டே - கொத்தாகவே பூத்தலின் குலைக் காந்தள் உடையதே என்கிறாள். இப்படி இயற்கை காட்சிகளை நுணுக்கமான விவரங்களுடன் காட்சிப்படுத்துவது சிறப்பான ஒன்று. உணர்ந்து மகிழ தக்கது.
     தலைமகளை சேர நினைத்த தலைவன் செங்காந்தள் பூங்கொத்தை தோழியின் கையில் கையுறையாக கொடுத்து அவள் உதவி நாடுகிறான். தோழி கையுறை மறுத்து இப்பூ எங்கள் மலையிலும் அதிகமாயுடையதே, அதில் எமக்கு குறையில்லை என்பதன் மூலம் வரைவு-மணமுடிக்க அறிவுறுத்துகிறாள். கையூட்டு அன்றும் இருந்திருக்கிறது போலும்!

அடுத்ததாக ஒரு பாடல்

கொங்கு தேர் வாழ்க்கை அம் சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயி்லியது கெழீஇய நட்பின் மயில் இயல்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே? 

இப்பாடலை அறியாதார் யார். திரைப்படங்கள் பாமரர்க்கும் கொண்டு சேர்த்த சில நல்ல விடயங்களில் இதுவும் ஒன்று. தருமி பொற்கிழிக்காக ஏங்கியதை மறக்க முடியுமா? என்றாலும் இப்பாடலின் கருத்தாழம் அனைவராலும் அறியப்பட்டதா என்பது சந்தேகம் தான்.
    கொங்குதேர் வாழ்க்கை – பூந்தாதை, தேனை ஆராய்ந்து உண்ணுகின்ற வாழ்க்கையினையும், அகம் சிறை தும்பி - உள்ளிடத்தே சிறையையும் உடைய வண்டே, சிறிய இறக்கைகளைக் கொண்ட தும்பியானது பூக்களில் தேனெடுக்கச் சென்று அப்பூக்களிலேயே சிறைப்படும், காமம் செப் பாது - என் நிலத்து வண்டாதலின் யான் விரும்பியதையே கூறாமல், கண்டது மொழிமோ - நீ கண்கூடாக அறிந்ததையே சொல்வாயாக: நீ அறியும் பூ - நீ அறியும் மலர்களுள், பயிலியது கெழீஇய நட்பின் - எழுமையும் என்னோடு பயிலுதல் பொருந்திய நட்பையும், மயில் இயல் - மயில் போன்ற மென்மையையும், செறி எயிறு - நெருங்கிய பற்களையும் உடைய, அரிவை கூந்தலின் - இவ்வரிவையின் கூந்தலைப் போல, நறியவும் - நறுமண முடைய பூக்களும், உளவோ - உள்ளனவோ?
     தும்பி கொங்குதேரும் காலம் இளவேனில் காலம். வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கும் காலம். மணம் பற்றி கூறுவதால் தும்பியைத் துணைக்கழைக்கிறான்.என் நிலத்து வண்டு என்பதால் என் விருப்பத்திற்காக கூறாமல் நீ கண்டதையே கூறுவாய் என்கிறான். வண்டு கூறவல்லது அல்ல என்றாலும் கூறுவதாய் சொல்வது செய்யுள் மரபு. பயி்லியது கெழீஇய நட்பின் மயில் இயல் செறி எயிற்று அரிவை என்றது தலைவனும் தலைவியும் நன்று அறிந்து பழகியவர்கள் என்பதாம். நறியவும் உளவோ என்பது தலைவியின் கூந்தல் இயற்கை மணம் உடையது என்ற முடிபுடையது.

     இப்பாடலின் வரலாற்றை நாமறிவோம்.இறையனார் பாடியதாக அறிகிறோம்.அன்று அரசவையில் தமிழுக்கு என்று ஒர் இருக்கை அல்ல பல இருக்கைகள் இருந்தன. அப்புலவர்கள் தங்களுக்குள் புலமையை பரீட்சித்துக் கொண்டனர். சாதாரண மக்களும் புலமையும் அறிவும் மிக்கவர்களாக காணப்பட்டனர்.
     ஆனால் இன்று ஹார்வேர்ட் பல்கலை கழகத்தில் ஒரு இருக்கைக்காக பலகோடி தந்து நாம் பெருமைப்படுகிறாம். மற்றவர்கள் தமிழை உயர்வாகச் சொன்னால் தான் நமக்கு மகிழ்ச்சி. அது அடிமை புத்தி.  தமிழாராச்சி யார்? எங்கு? செய்யவேண்டும். தமிழ் மண்ணில் அப்பொருளை தமிழுக்காக செலவழித்தால் ஒருவேளை தமிழ் பிழைக்கலாம். முதலில் தமிழில் படித்தால் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு கிடைக்கும் படி செய்யட்டும். தமிழில் படிப்பது பெருமை என்று தமிழர் நினைக்கட்டும். தமிழ் நாட்டிலுள்ளோர் தமிழறிந்திட வேண்டும் எனும் காலம் வரட்டும். முதலில் தமிழர் பல கலைகளும் மொழிகளும் அறியட்டும். அன்றைய தமிழரின் வீரமும் செருக்கும் அறிவும் எங்கே போயிற்று. அண்டிப்பிழைத்து ஆமாம் போடும் தமிழராய் என்று மாறினோம். பணமும் பதவியும் உள்ளவர் கிறுக்கினாலும் இலக்கியமானது ஏன். காக்காய் பிடிப்பதே கவிதையானது ஏன். நல்ல இலக்கியங்கள் நைந்து போனது ஏன்.
     அன்று செய்யுளில் தவறென்றால் அது யாராக இருந்தாலும்’ நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என எடுத்துரைக்கும் அறிவிற் சிறந்தவர் இருந்தனர். அவர்கள் அரசனானாலும் தைரியமாக குற்றம் சாட்டினர். தமிழ் உண்மையாக செம்மொழியாகத் திகழ்ந்தது. இன்று தமிழ் மன்றங்களில் கூட ழ கர ளகர லகர குழப்பங்கள். தமிழாசிரியர் கூட பிழையாக உச்சரிக்கும் அவலங்கள்.
     இன்று இவ்விலக்கிய செல்வங்களை முறையாக உணர்ந்தவர் மிகச்சிலரே. இன்று சொல் மட்டும் குற்றமல்ல, பொருள் மட்டும் குற்றமல்ல சிந்தனையே குற்றம், இன்று இரட்டுற மொழிதலோ பிறிது மொழிதலோ காணப்படுவதிலை. இரு பொருள் பட பேசலும் ,பிழையுற மொழிதலுமே காணமுடிகிறது. தமிழ் தமிழாயில்லாமல் தமிங்கிலமாய் சிதைந்து போனக் குற்றம் இது. தமிழர் தமிழராயில்லமல் மறந்து போன குற்றம் இது. தமிழர் வாழ்ந்தால் தமிழ் தானாய் செழிக்கும். செம்மொழியாய் இருக்கும். முயல்வோம்.

இன்னும் சில குறிஞ்சி நில பாடல்களுடன்
விரைவில்
அன்புடன்
உமா.

No comments:

Post a Comment