ஆசிரியப்பாவால் அமைந்த அகப்பொருள் பாடல்கள்
நானூறு, அகநானூறு என்று தொகுக்கப்பட்டது.
பாண்டியன் உக்கிரப்பெருவழுதி என்ற மன்னனின் வேண்டுகோளுக்கு
இணங்க, உப்பூரிகுடிகிழார்
மகனார் உருத்திரசன்மன் என்ற புலவர் இந்நூலைத்
தொகுத்துள்ளார். 145 புலவர் பெருமக்கள் இந்நானூறு
பாடல்களையும் பாடியுள்ளனர்.
எட்டுத்தொகையில் உள்ள நற்றிணை, குறுந்தொகை,
ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய நூல்களும் முழுமையாக
அகம் பற்றியே அமைந்துள்ளன என்றாலும்
இந்நூலுக்கே அகம் என்ற சொல்
கொடுத்து அகநானூறு என்று வழங்கியுள்ளனர். இது
இந்நூலில் அகப்பொருள் சிறந்திருத்தலைக் காட்டுகிறது
இந்நூலுக்கு நெடுந்தொகை என்ற வேறு பெயரும்
உண்டு. எட்டுத்தொகையில் அகநானூற்றைக் காட்டிலும், பரிபாடல், கலித்தொகை ஆகிய இரு நூல்களும்
மிகுதியான அடிகளைக் கொண்ட பாடல்களைக் கொண்டிருப்பினும்
அகநானூற்றிற்கே நெடுந்தொகை என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் 'நெடு' என்ற அடை,
அடிகளின் மிகுதியைக் குறிக்கவில்லை எனத் தெரிகிறது. 'நெடு'
என்ற அடைமொழி அகநானூற்றுப் பாடல்களின்
பொருட் சிறப்பை வெளிப்படுத்துவதற்காகவே வழங்கப்பட்டுள்ளது.
களிற்றியானை நிரை, மணிமிடைபவளம், நித்திலக்கோவை
என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது
இந்நூல். இப்பகுப்பு ஐங்குறுநூறுபோலத் திணையையும் பாடல்களின் எண்ணிக்கையையும் கொண்டோ, கலித்தொகை போலத்
திணையை அடிப்படையாகக் கொண்டோ பகுக்கப்பட்டது அல்ல.
பாடல்களின் நடை அமைப்பைக் கொண்டு
பகுக்கப்பட்டதாகும். இதுவும் இந்நூலுக்குரிய தனிச்
சிறப்பாகும். பாடல் எண், மற்றும்
திணை முறைவைப்பில் ஓர் ஒழுங்கினைப் பின்பற்றியிருப்பதும்
இதன் தனிச் சிறப்பிற்குரியதாகும்.
களிற்றியானைநிரை
1 முதல் 120 வரையில் உள்ள 120 பாடல்கள்
இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள
பாடல்கள் யானைக்களிறு போல் பெருமித நடை
கொண்டவை. யானைகளின் அணிவகுப்பைப் போன்று ஓரினப் பாடல்களின்
அணிவகுப்பாக அவை அமைந்துள்ளன.
மணிமிடை பவளம்
121 முதல் 300 வரை உள்ள 180 பாடல்கள்
இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள
பாடல்கள் நீலநிற மணிகள் போலவும்,
செந்நிறப் பவளம் போலவும் பெருமதிப்பு
உடையனவாக அமைந்து ஈரினப் பாடல்களின்
தொகுப்பாக அமைந்துள்ளன. மணியும் பவளமும் கோத்த
ஆரம் போன்று இத்தொகுப்பு அமைந்துள்ளது.
நித்திலக் கோவை
301 முதல் 400 வரை உள்ள 100 பாடல்கள்
இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள
பாடல்கள் நித்தில முத்துக்கள் போலப்
பெருமதிப்பு கொண்டவையாக அமைந்து ஒரினக் கோவை
போல அமைந்துள்ளன. இத்தொகுப்பு முத்தாரம் போல் அமைந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல்
இத் தொகுப்பில்
1,3,5,7,9,11 என்பது
போல் ஒற்றை-எண் கொண்ட
200 பாடல்கள் பாலைத் திணையாகவும்.
2, 8, 12, 18 என்பது
போல் எண் கொண்ட 80 பாடல்கள்
குறிஞ்சித்திணையாகவும்
4, 14, 24 என்பது
போல் எண் கொண்ட 40 பாடல்கள்
முல்லைத்திணையாகவும்
6, 16, 26 என்பது
போல் எண் கொண்ட 40 பாடல்கள்
மருதத்திணையாகவும்
10, 20, 30 என்பது
போல் எண் கொண்ட 40 பாடல்கள்
நெய்தல்-திணையாகவும் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.
இனி பாடல்களைக் காண்போம்.
முதலில் குறிஞ்சித் திணைக்குரிய பாடல், அகநானூரில் 2வது
பாடல்
கோழ் இலை வாழை கோள்
முதிர் பெரும் குலை
ஊழுறு தீம் கனி உண்ணுநர்
தடுத்த
சாரல் பலவின் சுளையொடு ஊழ்
படு
பாறை நெடும் சுனை விளைந்த
தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது
கறி வளர் சாந்தம் ஏறல்
செல்லாது
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து
கண்படுக்கும்
குறியா இன்பம் எளிதின் நின்
மலை
பல் வேறு விலங்கும் எய்தும்
நாட
குறித்த இன்பம் நினக்கு எவன்
அரிய
வெறுத்த ஏஎர் வேய் புரை
பணை தோள்
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்
மாட்டு
இவளும் இனையள் ஆயின் தந்தை
அரும் கடி காவலர் சோர்
பதன் ஒற்றி
கங்குல் வருதலும் உரியை பைம் புதல்
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன
நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே
இதற்கான நேரடி பொருளை முதலில்
பார்ப்போம்.
கொழுத்த இலைகளைக் கொண்ட வாழையின், அடுக்குகள்
முற்றிய பெரிய குலையின் நன்கு
பழுத்த இனிய கனிகள், உண்பவருக்குத்
திகட்டும்படியாக இனிமைக்கொண்ட, மலைச்சரிவின் பலாச் சுளைகளுடன் கலந்து,
நாட்பட்டு, பாறையின் குழிந்த பகுதியில் சுனை
போல் உண்டாகிய தெளிந்த சாறை, தேறல்
என அறியாமல் குடித்த ஆண்குரங்கு, அருகிலிருக்கும்
மிளகுக் கொடிகள் படர்ந்த சந்தனமரத்தில்
ஏறாமல், நறிய பூக்களாலான படுக்கையில்
களிப்புற்றுத் தூங்கும் எண்ணி முயலாத இன்பத்தை
எளிதாக, நின் மலையிலுள்ள பல்வேறு
விலங்குகளும் எய்தும் நாடனே!
நீ எண்ணி முயன்ற இன்பம்
நினக்கு எங்ஙனம் அரிதாக இருக்கும்?
மிக்க அழகினையுடைய மூங்கில் போன்ற பருத்த தோளைக்
கொண்ட இவளும், கட்டுப்படுத்த எண்ணியும்
அடங்காத நெஞ்சமுடன், உன்னிடம் இத்துணை காதல் கொண்டவளாயின்,
இவளது தந்தையின் கடும் காவலையுடைய காவலர்கள்
சோர்ந்திருக்கும் தக்க சமயத்தை உளவறிந்து
கண்டு இரவில் வருவதுவும் நினக்கு
உரியதே, பசுமையான புதர்கள் சூழ்ந்த வேங்கை மரங்களும்
நல்ல பூங்கொத்துகளை மலரப்பெற்றுள்ளன, மிகுந்த வெண்மை நிறமுள்ள
திங்களும் ஒளிவட்டம் கொண்டுள்ளது.
பாடலுக்கான பின்புலம்
தலைவியின் வீட்டு திணைபுலத்திலே திணைகள்
முற்றி அறுவடைக்கு தயாராகி இருக்கின்றன. தலைவி
திணைபுலம் காத்து இருக்கையில் தலைவனைக்
கண்டு காதலுறுகிறாள். இருவரும் களவில் இன்பமாக கழிக்கிறார்கள்.
இப்போது திணைமுற்றிவிட்டது. அறுவடைக்கான நேரம், அறுடைக்குப்பின் இற்செறிப்புத்தான்.
அதாவது தலைவி வீட்டைவிட்டு வெளிவர
இயலாது. தலைவியின் முக வாட்டத்தின் காரணம்
அறிந்து தோழி தலைவனிடம் சொல்லியது
தான் இப்பாடல்.
என்ன சொல்கிறாள்? விரைவில்
மணமுடிக்க வேண்டுகிறாள். எங்கே
சொன்னாள் அப்படி?
பாடலில் பார்ப்போம்.
பாடலில் ஒரு குரங்கின் கதைதான்
உள்ளது. குரங்கு என்ன செய்கிறது?
மரத்திலேயே நன்கு பழுத்துவிட்ட குலைகளினின்றும்
வாழைப் பழங்கள் கனிந்து, கீழே
இருக்கும் பாறையில் உதிர்ந்து விழுகின்றன. அருகிலிருக்கும் பலா மரத்திலிருந்து அதன்
பழம் பழுத்து, வெடித்துச் சிதறி, அந்த வாழைக்குலையின்
மேல் விழுகிறது. அந்த இரண்டு பழங்களின்
கலவை, சாறாக வழிந்தோடி பாறையின்
பெரிய குழிவான பகுதியில் சேர்ந்து,
ஒரு சுனை போல் ஆகிறது.
நாட்பட்ட அந்தச் சாறு நொதித்துப்போய்
மதுவின் நிலையை அடைந்து தெளிந்து
நிற்கிறது. அந்தப் பக்கம் நீர்
குடிக்க வந்த ஒரு குரங்கு
இந்தத் தெளிவை நீர் என்று
எண்ணிக் குடிக்கிறது. அப்புறம் என்ன ஆகும்? போதை
தலைக்கேற அது, மிளகுக்கொடிகள் படர்ந்த
ஒரு சந்தன மரத்தில் ஏறுவதை
விட்டுவிட்டு, அதன் கீழுள்ள மலர்களின்
குவியலில் படுத்துத் தூங்கிவிடுகிறது.
இதுதான் கதை. இதில் எங்கு
வந்தது மணப் பேச்சு? பார்ப்போம்!
“என்னை
மணமுடித்துக்கொள்” என்று
ஒரு பெண் நேரிடையாகக் கூறுவது
பெண்ணுக்கு அழகல்ல. அதைத் தோழிகூடச்
சொல்வதில்லை என்பதைக் கபிலர் மிக அழகாகக்
இப்பாடலில் காட்டுகிறார்.
தலைவியின் தாய் வாழைப்பழக் குலை
போல ஓர் இனிமையான பெரிய
செல்வர் குடும்பத்தைச் சேர்ந்தவள். தலைவியின் தந்தையோ, பலாப்பழத்தைப் போன்று ஒரே குடும்பமாக,
அதன் இனிக்கும் சுளைகளைப் போன்ற பல உறுப்பினர்களைக்
கொண்ட கூட்டுக்குடும்பத்தைச் சேர்ந்தவன். இவர்கள் இருவரின் மணம்
நடந்து வாழையும் பலாவும் சேர்ந்த மயக்கும்
தேறலின் சுவையைப் போன்ற தலைவி பிறந்து,
பாறை சுனையில் விளைந்த தேறல் போல்
வளருகிறாள். ஊழின் முறையால் தலைவன்
தற்செயலாகத் தலைவியைச் சந்தித்து காதலுறுகிறான். எவ்வளவு அழகான ஒப்பீடு.
மரமேறுதல் குரங்கின் இயல்பு ஆனால் மதுவுண்ட
குரங்கோ மரமேறாது பூப்படுக்கியயில் தூங்குகிறது.
அதுபோல் தலைவன் காதலின்பத்திலேயே திளைக்கிறான்.
மணமுடிக்க ஆவனச் செய்யவில்லை.
இதை மிக அழக்காக சுட்டிக்காட்டுகிறாள்
தோழி.
தான் நினைத்து முயலாத இன்பத்தை எளிதாக
உன் மலையின் விலங்கினங்கள் கூட
அடையும் நாட்டுக்கு உரியவனே நீ விருபுகின்ற
இன்பம் உனக்கு அரியதோ?
நீ உன் முயற்சியை செய்
என்பது கருத்து.
அதுமட்டுமல்ல தலைவியின் உள்ளத்தையும் அவனுக்கு உரைக்கிறாள்.
இவளும் கட்டுப் படுத்த இயலாத
நெஞ்சத்தோடு இருக்கிறாள் என்பதை அறிவிக்கிறாள்.
அடுத்து
இவளது தந்தையின் கடும் காவலையுடைய காவலர்கள்
சோர்ந்திருக்கும் தக்க சமயத்தை உளவறிந்து
கண்டு இரவில் வருவதுவும் நினக்கு
உரியதே என்று கூறுகிறாள்.
இது இரவுக்குறியில் வா என்பது போல்
தோன்றினாலும் அதுவல்ல அவள் சொன்னது.
இரவில் காவல் அதிகம். தலைவியை
காணுதல் அரிது என்று இரவுக்குறி
மறுப்பதே அவள் எண்ணம்.
மேலும் வேங்கை மரம் பூத்திருக்கிறது,
வெள்ளி நிலாவை ஒளிவட்டம் சுழ்ந்திருக்கிறது'
என்கிறாள் அவள். நிலவை ஒளிவட்டம்
சுற்றியிருத்தல் மழை வருவதற்கான அறிகுறி.
நிலவின் அருகில் பனித்துளிகள் உருவாகி
அதில் படும் ஒளி சிதறல்
அடைந்து வட்டமாக தோன்றும். அப்பொழுது
மழை வரும். வேங்கை பூத்திருப்பதும்
கார்கால துவக்கத்தின் அறிகுறி. அதற்கு முன் அறுவடை
விரைவில் மேற்கொள்ளப்படும். அறுவடை முடிந்து விட்டால்
தலைவியைப் பார்க்க இயலாது. அதுமட்டுமல்லாமல்
அறுவடைக்காலமே பெண் கொள்ளும் காலமாதலின்
தலைவியின் வீட்டில் அவள் மணம் பற்றிய
பேச்சு எழும்பும். முழு நிலவாக இருப்பதால்
இன்னும் 15 நாட்களே உள்ளது. வளர்பிறையில்
மணம் பற்றிய பேச்சு எழும்பும்
எனவே தலைவன் உடனே மணமுடிக்க
வேண்டும் என்பதை அறிவுறுத்துவதாக அமைகிறது
இப்பாடல்.
ஆசிரியப்பா என்ற பா கட்டமைபிற்குள்,
முதல், கரு, உரிப் பொருள்கள்
அமைய அகப் பொருள் பற்றி
மரபு மீறாது பாட வேண்டும்
என்பது கபிலரின் கற்பனைக்குத் தடையாக இல்லாமல் அதுவே
தூண்டுகோலாக அமைந்திருப்பது அறிந்து மகிழ தக்கது.
இவ்வகப் பாடல்கள் தலைவன் தலைவியின் வாழ்க்கையை
முழுவதுமாக காட்டுவதல்ல, ஒரு புகைப்படம் போல்
அவர்கள் காதல் வாழ்வின் ஒரு
பகுதியை மட்டும் படம்
பிடித்துக் காட்டுவதாய் அமையும்.
இங்கு தோழி தலைவனிடம் பேசுவதும்
அவர்கள் பின் புலத்திலே மலையாகிய
முதற்பொருளும், வாழை, பலா, குரங்கு,
திணைப்புலம், வேங்கை மரம் ஆகிய
கருப்பொருள்களும் தோன்றியிருக்க, வானில் மழைக்கால நிலஒளியோடு
ஒரு முப்பரினாம புகைப்படம் நம் கண்முன்னே விரிவதை,
இப்பாடலை அறிந்து படிக்கும் போது
உணரலாம்.
வருவது மழைக்காலம். வானத்தில் முழு நிலவு காணும்
போது இப்பாடல் நம் நினைவைத் தொடாமல்
போகாது.
மழைக்காகவும் நிலவுக்காகவும் காத்திருப்போம்!
மற்றத்திணைக்குரிய
பாடல்களுடன் விரைவில்
அன்புடன்
உமா.
நன்றி
ReplyDeleteபடிக்க இலகுவாகவும் பயன்மிக்கதாகவும் உள்ளது.
ReplyDelete