அகநானூறு – முல்லை.
அகநானூறில் 4, 14, 24 என்பது போல் எண் கொண்ட 40 பாடல்கள் முல்லைத்திணை
சார்ந்தவை.
விணை முடிந்து மீண்ட தலைவன் தன் தேர்ப்பாகனை பாராட்டுவதாய் அமைந்த
பாடல் இது. பாடல் எண் 254
……..
வேந்து உறு தொழிலொடு வேறு புலத்து அல்கி,
வந்து வினை முடித்தனம்ஆயின், நீயும்,
பணை நிலை முனைஇய, வினை நவில், புரவி
இழை அணி நெடுந் தேர் ஆழி உறுப்ப,
நுண் கொடி மின்னின், பைம் பயிர் துமிய,
தளவ முல்லையொடு தலைஇ, தண்ணென
வெறி கமழ் கொண்ட வீ ததை புறவின்
நெடி இடை பின் படக் கடவுமதி, என்று யான்
சொல்லிய அளவை, நீடாது, வல்லென,
தார் மணி மா அறிவுறாஅ,
ஊர் நணித் தந்தனை, உவகை யாம் பெறவே!
இப்பாடலில் காணப்படுகின்ற புரவி கட்டியிருத்தலை விரும்பாத, போர்த்
தொழில் பயின்ற, அதுமட்டுமல்லாமல் குறிப்பறிந்து வினையாற்றக்கூடியதாகவும் உள்ளது. “பாகனே!
மனமறிந்து செயல்படும் குதிரையை உனது நெடுமையானத் தேரிலேப் பூட்டி வழியில் பூத்திருக்கும்
மின், தவளம் முல்லைக் கொடியெல்லாம் அறுந்து விழவும், முல்லை நிலமானது நமக்கு பின்னே
செல்லுமாறும் விரைந்து செலுத்துக” என்று தலைவன் சொன்ன அளவிலேயே ஊரின் அருகில் தேர்
வந்துவிட்டதாம். உவகையோடு பாகனைத் தலைவன் பாராட்டுவதாய் அமைகிறது பாடல்.
முல்லை நிலப் பாடல்களில் தேரின் வேகம் வியப்படைய வைக்கிறது.
மற்றொருப் பாடலில்
போருக்காகச் சென்ற தலைவன் இல்லத்திற்குத் திரும்புகின்றான். அவன்
தேரில் ஏறி அமர்ந்தது மட்டுமே அவனுக்குத் தெரிகிறது. வந்த வழியே தெரியவில்லை. வீடு
வந்துவிட்டது, தேரைவிட்டு இறங்குங்கள் என்று தேர்ப்பாகன் கூறுகின்றான். வியப்படைந்த
தலைவன் தேர்ப்பாகனைப் பார்த்து விண் வழியே செல்லும் காற்றைத் தேரில் பூட்டி ஓட்டினாயா?
அல்லது உனது மனத்தையே குதிரையாக்கித் தேரில் பூட்டி ஓட்டினாயா? என்று கேட்கின்றான்.
இவ்வியப்பு உணர்வை,
இருந்த வேந்தன் அருந்தொழில் முடித்தெனப்
புரிந்த காதலொடு பெருந்தேர் யானும்
ஏறிய தறிந்தன்று அல்லது வந்தவாறு
நனியறிந் தன்றோ இலனே --------
--------------------------------
--------------------------------
மெல்லியல் அரிவை இல்வயின் நிறீஇ
இழிமின் என்றநின் மொழிமருண் டிசினே
வான்வழங்கு இயற்கை வளிபூட் டினையோ?
மானுரு வாகநின் மனம்பூட் டினையோ?
உரைமதி வாழியோ வலவ ----------
இப்படி விணைமுடிந்து திரும்பும் தலைவனின் மனமறிந்து பாகனும் அப்பாகனின்
மனமறிந்து செல்லும் குதிரையும் முல்லை நிலப் பாடலில் நாம் காண முடியும்..
ஈங்கு நளவெண்பாவில் காட்டப்பட்டுள்ள நளனின் தேரோட்டும் திறன் ஒப்பிட்டு
மகிழ தக்கது. நளவெண்பாவில், கலி நீங்கு காண்டத்தில் 356/357 ம் பா க்கள்.
முந்தை வினைகுறுக மூவா மயல்கொண்டான்
சிந்தை யினுங்கடுகச் சென்றதே - சந்தவிரைத்
தார்குன்றா மெல்லோதி தன்செயலைத் தன்மனத்தே
தேர்கின்றா னூர்கின்ற தேர்.
மேலாடை வீழ்ந்த தெடுவென்றா னவ்வளவில்
நாலாறு காதம் நடந்ததே - தோலாமை
மேல்கொண்டா னேறிவர வெம்மைக் கலிச்சூதில்
மால்கொண்டான் கோல்கொண்ட மா.
நளனின் தேர், மன்னனின் சிந்தையைவிட விரைந்து சென்றதாம். வேகத்தில்
மன்னனின் மேலாடை வீழ்கின்றது. `வீழ்ந்தது எடு` என்று சொல்லும் நேரத்திற்குள்ளாக தேர்
நாலாறு காதம் தாண்டியதாம் நளனின் தேர்.
அகநானூறு மருதம்
மருதத் திணையின் ஒழுக்கம் ஊடலும் நிமித்தமும். இதில் தலைவன் செய்கையை
உள்ளுறையாக காட்டும் பாடல்கள் அமைந்துள்ளன.
316ம் பாடல்
------
துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை
அரிமலர் ஆம்பல் மேய்ந்த நெறிமருப்பு
ஈர்ந்தண் எருமைச் சுவல்படு முதுபோத்துத்
தூங்குசேற்று அள்ளல் துஞ்சிப் பொழுதுபடப்
பைந்நிண வராஅல் குறையப் பெயர்தந்து
குரூஉக்கொடிப் பகன்றை சூடி மூதூர்ப்
போர்ச் செறி மள்ளரின் புகுதரும் ஊரன்……
இப்பாடலில் எருமை ஒன்று பொய்கையிலே இருக்கின்ற ஆம்பல் மலர்களைத்
தின்று, சேற்றிலே கிடந்து உறங்கி, விடியற் காலையிலே வரால் மீன்கள் துண்டாகும்படி அவற்றை
மிதித்து, பகன்றைக் கொடிகளை மேலே பற்றிக்கொண்டு போர் வீரரைப்போல ஊருக்குள் நுழைகிறது
என்ற செய்தி ஒரு பாடலில் இடம்பெற்றுள்ளது. இது, தலைவன் ஒருவன் பரத்தையர் ஒழுக்கம் மேற்கொண்டு,
இரவில் அங்கேயே தங்கி, விடியற்காலையில் எல்லாரும் பார்க்கும் வகையில் வெளியேறி, குடிப்பெருமையைச்
சிதைத்து, அடையாளங்களுடன் வந்தான் என்ற செய்தியை மறைமுகமாகத் தருகிறது.
அகநானூறு நெய்தல்.
நெய்தல் நிலத்தில் 160ம் பாடல்
நிறைச்சூல் யாமை மறைத்துஈன்று புதைத்த
கோட்டுவட்டு உருவின் புலவுநாறு முட்டை
பார்ப்புஇடன் ஆகும் அளவை, பகுவாய்க்
கணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்.
(யாமை) ஆமை ஒன்று மறைவான இடத்தில் முட்டையிட, அதனைக் குஞ்சு பொறிக்கும்வரை ஆண் யாமை பேணிக் காக்கும் எங்கிறச் செய்தி செல்லப்பட்டிருக்கிறது. இது, தலைவன் களவொழுக்கத்தைத் திருமணம் வரை யார்க்கும் தெரியாமல் மறைத்துக் காப்பான் என்ற செய்தியை உள்ளுறையாகத் தருகிறது.
அகநானூறு
பாலை
பிரிதலைப்பற்றி
பேசும் பாலை நிலப் பாடல்களில் காட்டுப் பாதையின் கடுமை பயங்கரமானதாகக் காட்டப்பட்டுள்ளது.
உச்சி
வெயில் சுட்டெரிக்கும் வழி. மழை வறண்டுபோன நிலப்பரப்பு. பேய்த்தேர் என்னும் கானல் நீரோட்டம்,
நீர் போலத் தோன்றி ஏமாற்றும் வழி. புல் வளர்ந்து சாய்ந்துகிடக்கும் மலைப்பிளவுகளில்
இருந்துகொண்டு கோட்டான் சேவல் அச்சம் தரும் குரலைக் கொடுக்கும் வழி. வேல மரத்தில் இருக்கும்
சில்வண்டு, கவணிலிருந்து வீசப்படும் கல் செல்லும் ஓசை போல் ஒலி கேட்கும்படி கத்தும்
வழி. உலர்ந்த நெற்றுக்கள் வேல மரத்திலிருந்து உதிர்ந்து கிடக்கும் வழி.
வில்லேந்திய
மறவர் வேட்டையாடிய விலங்கின் கறியைச் சுட்டுத் தின்பார்கள். தோள் வலிமை மிக்க கழுதையின்
மேல் சுமையை ஏற்றிக்கொண்டு வழிப்போக்கர்கள் வருவர். வாள் வீரர்கள் அவர்களோடு போரிட்டு
அவர்களின் தலையை வெட்டி வீழ்த்துவர். அவை புலால் நாற்றம் அடிக்கும். வழிப்போக்கரின்
அரிய செல்வ வளங்ககளை மறவர்கள் எடுத்துக்கொண்டு வந்து ஊரில் (குறும்பு) உள்ள அனைவரையும்
துடி முழக்கி அழைத்து குடும்பத்தார் எண்ணிக்கையில் பங்கிட்டுத் தருவர். இப்படிப் பட்ட
கடுமையான பாதையில் தன் மகள் செல்கிறாளே என்று செவிலித்தாய் கலக்கமுறுகிறாள்.
பாலை
நிலத்தில் 89ம் பாடல்
தெறு
கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின்,
உறு
பெயல் வறந்த ஓடு தேர் நனந் தலை,
உருத்து
எழு குரல குடிஞைச் சேவல்,
புல்
சாய் விடரகம் புலம்ப, வரைய
கல்
எறி இசையின் இரட்டும் ஆங்கண்,
சிள்வீடு
கறங்கும் சிறிஇலை வேலத்து
ஊழுறு
விளைநெற்று உதிர, காழியர்
கவ்வைப் பரப்பின்
வெவ் உவர்ப்பு ஒழிய,
களரி பரந்த கல்
நெடு மருங்கின்,
விளர்
ஊன் தின்ற வீங்குசிலை மறவர்
மை
படு திண் தோள் மலிர வாட்டி,
பொறை
மலி கழுதை நெடு நிரை தழீஇய
திருந்து
வாள் வயவர் அருந் தலை துமித்த
படு
புலாக் கமழும் ஞாட்பில், துடி இகுத்து,
அருங்
கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர்,
வில்
கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும்
கொல்லை
இரும் புனம் நெடிய என்னாது,
மெல்லென்
சேவடி மெலிய ஏக
வல்லுநள்கொல்லோ
தானே தேம் பெய்து
அளவுறு
தீம் பால் அலைப்பவும் உண்ணாள்,
இடு
மணற் பந்தருள் இயலும்,
நெடு
மென் பணைத் தோள், மாஅயோளே?
காழியர்
(துணி துவைத்துத் தரும் வண்ணார்) உவர் மண் தோண்டி எடுத்த நிலப்பரப்பில் தன் மகள் செல்லவேண்டும்.
(வண்ணார் துணியை வெளுப்பர். துணியில் இருக்கும் அழுக்கை முழுமையாக நீக்குவதற்காக அழுக்குத்
துணிகளை நீரில் நனைத்து உப்பு மண்ணில் புரட்டி, நீராவி வரும்படி, சூளையில் வைப்பர்.
பின் நீரில் துவைப்பர்.) களர் நிலத்திலும், கல் நிலத்திலும் நீண்ட தூரம் செல்ல வேண்டும்.
இங்கு
நான் பாலில் தேனைக் கலந்து அவளுக்கு ஊட்டுவேன். அவள் உண்ணமாட்டாள். நான் உண்ணும்படி
அடிப்பேன். அவள் பந்தல் மணலில் அங்குமிங்கும் ஓடுவாள். இப்பொழுது வருந்துவாளோ என கூறுவதாய்
அமைந்த இப் பாடலில் தாயின் பிரிவுத்துயரும் காட்டு வழியின் கடுமையும் சொல்லப்படும்
அதேகாணம் துணி துவைக்கும் வண்ணார்காளின் வழக்கங்களும் அழகாக காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு
அகநானூறில் அக பொருள் பற்றி மிக அழகாக காட்டும் அதே வேளையில் பல வரலாற்று செய்திகளையும்,
அக்கால வாழ்க்கை பழக்கங்கள், வாழ்க்கை முறை, பண்பாடு, அக்கால வாணிப முறை ஆகியனவும்
மிக அருமையாக காட்டப்பட்டிருக்கின்றன.
அகநானூறின்
இலக்கிய நயம் அறிவோம், சுவைப்போம்….
அடுத்த
பதிவுடன் விரைவில்
அன்புடன்
உமா
No comments:
Post a Comment