Sunday, 28 October 2018

புறநானூறில் வரியும் வாணிபமும்


அடுத்ததாக புறநானூறில் கூறப்பட்டுள்ள நிதி மேலாண்மை அதாவது வரி விதித்தல் அவ்வரிக்கொண்டு நல்லாட்சி செய்தல் பற்றியக் குறிப்புகளைக் காணலாம்

புறநானூறு 184 வது பாடல்.

பாடியவர்: பிசிராந்தையார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் அறிவுடை நம்பி.
திணை: பாடாண்.
துறை: செவியறிவுறூஉ. 

செவியறிவுறுத்தல் என்பது மன்னனுக்கு அறிவுரைச் சொல்வதாய் அமைவது.

காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே,
மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம்போலத்,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.

மன்னன் எவ்விதம் வரிவசூலித்து நல்லாட்சி செய்யவேண்டும் என கூறுகிறார் புலவர்.

ஒரு குறிப்பிட்ட நிலத்தில் முற்றிக் காய்ந்திருக்கும் நெல்லை அறுத்து அரிசி உணவுக் கவளமாக்கி யானைக்குத் தந்தால் அது பல நாட்களுக்கு வரும். அதே நிலத்தில் யானை புகுந்து உண்டால் அதன் வாயில் புகும் உணவைக் காட்டிலும் காலால் மிதித்து வீணாகும் நெல் அதிகமாகும். இந்த உண்மை நெறியை அறிந்து அறிவுடை அரசன் வரி வாங்கும்போது நாட்டின் செல்வம் கோடி கோடியாகப் பெருகும். இந்த நெறியை உணராத அரசன் அறிவு வலிமை இல்லாமல் மெல்லியனாகி, வரிசைச்சிறப்பு அறியாத தன் சுற்றத்தாரொடு இரக்கம் இல்லாமல் வரிப்பிண்டத்தை விரும்பி வாங்கினால், யானை தானே புகுந்து உண்ணும் நிலம் போல அரசனும் துய்க்காமல் அவன் நாடும் கெட்டொழியும். இதை உணர்ந்து செயல்படுவாயாக.

இப்படி மிகச் சிறந்த நிதி மேலாணமையைச் சொல்லித்தரும் புலவர்கள் வாழ்ந்த காலம் எண்ணி மகிழத்தக்கது.

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு (குறள் 385)  என்பதும் ஈண்டு நோக்கத்தக்கது
மக்களின் நிலையறிந்து அதற்கேற்பவரிவசூல்நடந்தது. வரம்பு மீறிய வரியீட்டால்
 குடி புரவு இரக்கும் கூதிலாண்மைச் சிறியோன்
என மன்னன் புறநானூறு 75 ஆவது பாடலில் இகழப் படுகிறான். இப்படி ஏளனவரிகளை விதித்தவனாகச் சோழன் நலங்கிள்ளி என்பவன் குறிக்கப்படுகின்றான்.

அதுமட்டுமல்ல இதே நிதிக் கொள்கையை புலவர் தன் வீட்டிலும் நடைமுறைப் படுத்துகிறார். புறநானூறு 163 ம் பாடல் இதைக் காட்டுகிறது.

நின் நயந்து உறைநர்க்கும், நீ நயந்து உறைநர்க்கும்,
பன் மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும்,
கடும்பின் கடும் பசி தீர யாழ நின்
நெடுங்குறி எதிர்ப்பை நல்கியோர்க்கும்,
இன்னோர்க்கு என்னாது, என்னோடும் சூழாது,  5
வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி, மனை கிழவோயே,
பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்து வேல் குமணன், நல்கிய வளனே.

மனைக்கு உரியவளே, பழங்கள் தொங்கும் முதிர மலைக்குத் தலைவனான, திருந்திய வேலையுடைய குமணன் கொடுத்த செல்வத்தை, உன்னை விரும்பி வாழ்பவர்களுக்கும், நீ விரும்பி வாழ்பவர்களுக்கும், பல சிறந்த கற்புடைய உன்னுடைய சுற்றத்தாருள் மூதோர்க்கும், உறவினர்களின் கொடிய பசி தீர உனக்குக் கடன் தந்தவர்களுக்கும், யாரென்று நினையாது, என்னோடும் கலந்து ஆலோசிக்காமல், நாம் சிறப்பாக வாழலாம் என்றும் எண்ணாது, எல்லோருக்கும் கொடுப்பாயாக. பொருளை தனக்காக மட்டும் வைக்காமல் பிறருக்கு, தேவைப்பட்டோருக்கு கொடுத்து வாழ்தலை இப்பாடல் காட்டுகிறது.

வரி வசூலித்தலைப் பார்த்தோம். இன்னும் வாணிபம் எவ்வாறு நடந்தது என்பதைப் பார்ப்போம்.

புறநாநூற்றில் பணட மாற்று முறையில் வாணிபம் நடந்ததை பல பாடல்கள் தெரிவிக்கின்றன.

343 வது பாடலில்

'மீன் நொடுத்து நெல் குவைஇ,
மிசை அம்பியின் மனை மறுக்குந்து,
மனைக் குவைஇய கறி மூடையால்,
கலிச் சும்மைய கரை கலக்குறுந்து;
கலம் தந்த பொற் பரிசம் 5
கழித் தோணியான், கரை சேர்க்குந்து;
மலைத் தாரமும் கடல் தாரமும்
தலைப் பெய்து, வருநர்க்கு ஈயும்
புனல்அம் கள்ளின் பொலந் தார்க் குட்டுவன்
முழங்கு கடல் முழவின் முசிறி அன்ன,

மீனை நிரப்பிக்கொண்டு ஆற்றில் செல்லும் அம்பி நெல்லை நிரப்பிக்கொண்டு வீடு திரும்பும். வீட்டில் இருக்கும் மிளகு மூட்டைகள் அந்த அம்பியில் கடறகரைக்குக் கொண்டு செல்லப்படும். கப்பல் கலங்களில் கொண்டுவரப்பட்ட பொன் கழியில் செல்லும் தோணியால் கரைக்குக் கொண்டுவரப்படும். இப்படி மலைச்செல்வமும், கடல்செல்வமும் சேர்த்து வைத்துக்கொண்டு வந்தவர்களுக்கெல்லாம் வாரி வழங்குபவன் குட்டுவன். அவன் புனல் போலக் கள் தருபவன். பொன்மாலை அணிந்தவன். அவன் ஊர் முசிறி.

நெல்மூட்டைகள் நிறைந்த வீடும், தோணியாகிய மரக்கலமும் பிரித்து அறிய முடியாத அளவுக்குத் தோணிகள் உயர்ந்திருந்தன எனவும், அதுபோல வீட்டில் குவிக்கப் பெற்றிருந்த மிளகு மூட்டைகளும் கப்பல்களால் கொண்டுவரப் பட்ட பொருள்களும் பிரித்து அறிய முடியாதபடி மயக்கத்தைத் தரும் என்றும் கூறப்பட்டுள்ளது. மரக்கலத்தில் கொண்டு வந்த வியாபாரப் பொருள்கள் படகுகளால் கரைக்குக் கொண்டு வரப்பட்டு, மலைவளம் தந்த பொருள்களும் கடல் மூலம் கொண்டு வரப்பட்ட பொருள்களும் வாணிபம் செய்யப்படும் என்ற செய்தியைத் தருகிறது இப்பாடல். இவ்வாறு மரக்கல வாணிகம் பற்றிய செய்திகள் புறநானூற்றில் கூறப்பெற்றுள்ளன.
மீனுக்கு நெல் விலையாக கொண்டதும் அன்று வாணிபம் நடந்த விதத்தையும் மிக அழகாக படம் பிடித்துக்காட்டுகிறது இப்பாடல்.

‘‘எருதே இளைய நுகம்உண ராவே
சகடம் பண்டம் பெரிதுபெய தன்றே
அவல்இழியினும் மிசைஏறினும்
அவணது அறியுநர் யார்என உமணர்
கீழ்மரத்து யாத்த சேமஅச்சு அன்ன" 

102 ஆவது பாடலில் வண்டியில் பூட்டப் பெற்ற எருதுகள் இளமை வாய்ந்தன. வண்டியில் ஏற்றப்பட்டப் பொருளோ சுமை பெரிது.  ஆகையால் பள்ளம் மேடுகளில் ஏறி இறங்கும் பொழுது, அச்சு முறியாத பாதுகாப்பிற்காக அச்சிற்குப் பக்கத்தில் பாதுகாப்பு அச்சு என்ற சேம அச்சு இணைக்கப் படும் என்ற செய்தி பொருளாக அமைந்துள்ளது.  இதனால் உப்பு வண்டியானது காளைகள் பூட்டப் பெற்றுச் செலுத்தக் கூடியது என்பதும், வாணிகத்திற்கு அடுத்த ஊருக்கு ஒட்டிச் செல்லக் கூடியது என்பதும், நீர்ச்சத்துக் கூடிய உப்பு என்பதால் ஏற்றப்படும் சுமை கடினமாகிறது என்பதும் பெறப்படுகிறது. உப்பு வாணிபம் செய்பவரை புறநானூறு உமணர் என் சொல்கிறது.

கழியே சிறுவெள் உப்பின் கொள்ளை சாற்றி
 பெருங்கல் நன்னாட்டு உமண்ஒலிக் குந்து"  (புறநானூறு பாடல் 386)

என்ற இப்பகுதியில் உப்பு வாணிகம் செய்வோர் உப்பு விலையை உரக்கக் கூறி விற்பர் என்பதும், உயர்ந்த மலைப் பகுதிக்குச் சென்று விற்பர் என்பதும் பெறப்படுகிறது. உப்பு வாணிகம் சிறப்பானதாக புறநானூறு பதிவு செய்துள்ளது.

‘‘நெடுங்கழைத் துண்டில் விடுமீன் நொடுத்துக்
  கிணைமகள் அட்ட பாவற் புளிங்கூழ்" 
என்ற புறப்பாடல் 399 ல்

என்ற பகுதி மூங்கில் குச்சியால் தூண்டில் செய்யப் பெற்று, மீன் பிடிக்கப் பெற்றது என்றும், அது நொடுத்து என்பதால் விற்கப் பெற்றது என்பதும் , பண்ட மாற்று முறைமையால்  உணவுப் பொருள்கள் வாங்கப் பெற்றுப் பாணர் மகள் புளிச்சுவையை உடைய கூழைத் தயாரித்தாள் என்பதும் பெறப்படுகிறது.

கரும்புச்சாறு வாணிகம்

கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது
இருஞ்சுவல் வாளை பிறழும் ஆங்க்ண்"
322 ம் பாடல்
இப்பகுதியில் போர் வீரனின் ஊரில் கரும்பைப் பிழியும் ஆலை இருந்திருக்கிறது.  அந்த ஆலையில் எழுந்த ஒலியால் பக்கத்து நீர் நிலையில் உள்ள வாளை மீன்கள் துள்ளிப் பாய்ந்தன என்று கூறப்பெற்றுள்ளது.

இப்படி அக்காலத்தில் நடந்த பல்வேறு வாணிபங்கள் பற்றியக் குறிப்புகள் அக்கால வாழ்க்கை முறை எவ்வளவு சிறந்ததாக இருந்தது என்பதைக் காட்டுகிறது.

படிக்க படிக்க வியக்கவைக்கும் இப்புறநானூற்றில் மன்னர்களின் வீரம் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்..

விரைவில் அடுத்தப் பதிவோடு

அன்புடன்
உமா


2 comments:

  1. உமணர் என்போர் எந்த நில பகுதி
    உழமல் உப்பு செய்வோர் உமணர் என்று உள்ளது
    ஒரு வேளை காய்ச்சி தயாரித்து இருக்கலாமா
    25 வகை உப்பு உள்ளத்தை அகத்தியர் சொல்கிறார்
    உமணர் பற்றி குறிப்பு இடவும்

    ReplyDelete
  2. நெய்தல் நில மக்கள் பரதவர் உப்பை விளைவிப்பவர். அதை விலைக்கூறி விற்பவர் உமணர் என சங்க இலக்கியுங்களில் கூறப்பட்டிருக்கிறது. இவர் வண்டியில் உப்பை ஏற்றி பிற நிலங்களில் விலைக்கூறி விற்பர். பிற நில மக்களும் நெய்தல் நிலம் வந்து உப்பை பண்ட மாற்றாக பெறுதலும் உண்டு.

    ReplyDelete