Saturday, 28 April 2018

குறுந்தொகை 2


குறுந்தொகை பாடல்களின் அக்கால மக்களின் சில பழக்க வழக்கங்களை அறியமுடிகிறது.
இப்போது நாம் காணவிருக்கும் பாடல் குறிஞ்சி நிலத்திற்குரியது.
தலைவியினுடைய மனத்தினை அறிய மாட்டாத தாயர் அவள் வேறுபாட்டின் காரணத்தை ஆராயும் பொருட்டு அகவன் மகளாகிய கட்டுவிச்சியை அழைத்துக் கட்டுப் பார்ப்பது வழக்கம். கட்டுவிச்சி முறத்தில் நெல்லையிட்டு அதனை எண்ணி அதனாற்போந்த சில நிமித்தங்களை அறிந்து, “இவள் முருகனால் அணங்கப்பட்டாள்” என்று கூறுவாள். அதுகேட்ட தாயர் வேலனை அழைத்து வெறியாட்டெடுப்பர். இவ்வகவன் மகள் தெய்வமேறிக் குறிகூறுதலும் உண்டு. இவளைப் பிற்காலத்தார் குறத்தி என்று கூறுவர். 
பாடலைப் பார்ப்போம்.
அகவன் மகளே யகவன் மகளே
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல் 
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே, அவர் 
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே.   
அகவல் மகளே அகவல் மகளே - தெய்வங்களை அழைத்துப் பாடுதலைச் செய்யும் கட்டுவிச்சியே,
தெய்வங்களை அழைத்துக் கூறும் இயல்புடையாளாதலின் இப் பெயர் பெற்றாள்; ‘அகவர் என்றார், குலத்தோர் எல்லாரையும் அழைத்துப் புகழ்வர் என்பது செய்தி.
- மனவு கோப்பு அன்ன - சங்கு மணியினால் ஆகிய கோவையைப் போன்ற வெண்மையாகிய, நல்நெடு கூந்தல் - நல்ல நீண்ட கூந்தலை உடைய, அகவன் மகளே -,
அவள் அணிந்த அணியையே அவள் கூந்தலுக்கு உவமை கூறி அழைக்கிறாள். இவ்வுவமையால் கட்டுவிச்சி நரை மூதாட்டி என்பது பெறப்படும். நன்னெடுங் கூந்தலென்றது இகழ்ச்சிக் குறிப்பு,
பாட்டுப் பாடுக - பாட்டுக்களைப் பாடுவாயாக; இன்னும் பாட்டுப் பாடுக -, அவர் நல் நெடு குன்றம் பாடிய பாட்டு - நீ பாடிய பாட்டுக்களுள் அவருடைய நல்ல நெடிய குன்றத்தைப் புகழ்ந்து பாடிய பாட்டை, இன்னும் பாடுக - மீண்டும் பாடுவாயாக.
மலைவாழ் சாதியினளாகிய அகவன்மகள் தான்கண்ட மலைகளின் வளத்தைப் பாடுவது இயல்பாதலின் அவள் பல மலை வளங்களைப் பாடினாள்; அவற்றுள் தலைவனது மலை வளத்தைக் கேட்பதில் தலைவிக்குப் பெரு விருப்பம் உளதாமாதலின் தோழி அதனை மீண்டும் பாடென்றாள்.
இஃது கட்டுக்காண நின்றவிடத்துத் தோழி அறத்தொடு நின்றது. அகவன் மகளே என்று மும்முறைக்கூறியது தான் கூறும் கூற்றின் உண்மையைக் கூர்ந்து அறியும் பொருட்டு. இவள்பால் அன்பு பூண்ட தலைவருடைய குன்றத்தைப் பாடின் இவளது வேறுபாடு நீங்கும் என்று குறிப்பாக கூறியது, ‘அவர் யார்?’ என்னும் ஆராய்ச்சி தாயரிடையே பிறந்து உண்மை அறிதற்கு ஏதுவாகும் என்பதனால் இஃது  அறத்தொடு நிற்றலாயிற்று.
இப்படி நற்றாயும் செவிலியும் குறி காணுதல் போன்றவைச் செய்யும் பொழுது தோழி உண்மையைக்கூறி மணமுடிக்கச் செய்வாள்.

அடுத்ததாக ஒரு நெய்தல் பாடல்

நள்ளென்றன்றே, யாமம்; சொல் அவிந்து,
இனிது அடங்கினரே, மாக்கள்; முனிவு இன்று,
நனந்தலை உலகமும் துஞ்சும்;
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே.

தலைவியை மணப்பதற்காகப் பொருளீட்டத் தலைவன் பிரிந்து போயிருக்கிறான். பிரிவு ஆற்றாத தலைவி, இரவில் தனக்கு ஆறுதல் தரும் துணையாக விழித்திராமல் உறங்கிய தோழியைப் பழித்துத் தன் வருத்தம் தோன்றப் பேசுகிறாள். இது தலைவி கூற்று.

தலைவி தோழி கேட்குமாறு தன்னொடு பேசுகிறாள் : ‘இந்த நடு இரவுநள் என்ற ஓசையுடையதாயிருக்கிறது. என்னைப் பற்றி அலர் தூற்றுதலை விட்டு மக்களும் இனிதாக உறங்குகின்றனர். என்மீதுள்ள வெறுப்பை மறந்து இந்த அகன்ற உலகமும் துஞ்சுகிறது. நான் ஒருத்தி மட்டும்தான் துயிலாதிருக்கிறேன்

நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சாதேனே
(நனந்தலை = அகன்ற இடத்தை உடைய ; துஞ்சும் = உறங்கும்; மன்ற = மிகவும்)

நான் ஒருத்தி மட்டுமே துயிலாதிருக்கிறேன் என்று தலைவி சொல்வதன் குறிப்பு, துன்ப நேரத்தில் துணையாக இருக்க வேண்டிய தோழியும், இரவின் கொடிய கைகளில் தலைவியை விட்டுவிட்டு உறங்கிவிட்டாள் என்பதாகும். திருவள்ளுவர் படைத்த தலைவியும் இதே போன்ற உணர்வை வெளிப்படுத்துகிறாள்.

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்ல தில்லை துணை      (திருக்குறள்-1168)
எல்லா உயிர்களையும் உறங்கச் செய்துவிட்ட இந்த இரவு, பாவம், எந்த நேரமும் இறந்துபோகக்கூடிய என்னைப்போய்த் துணையாகக் கொண்டிருக்கிறது!’ என இரவுக்காக வருந்துவது போல் தன் வருத்தத்தை வெளிப்படுத்துகிறாள்.

இன்னும் சில பாடல்களுடன் விரைவில்

அன்புடன்
உமா

Thursday, 26 April 2018

குறுந்தொகை -1, குறிஞ்சி


     சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்களுள் நற்றிணைக்கு அடுத்ததாக ‘நல்லகுறுந்தொகை’ என்று அடைமொழியோடு அறியப்படும் குறுந்தொகை 4 அடி முதல் 8 அடிகள் கொண்ட அகவற்பாவினால் (ஆசிரியப்பா) ஆன பாடல்களின் தொகுப்பு. குறுகிய அடிகளைக்கொண்டதால் குறுந்தொகை எனப்பட்டது. அகப்பொருள் பற்றியது. இப்பாடல்களில் சில வரலாற்று நிகழ்வுகளையும், அன்றைய மக்களின் சில பழக்க வழக்கங்களையும் அறியமுடிகிறது...
முதற் பாடல் குறிஞ்சி திணைக்குரியது...
சுவைப்போம் வருங்கள்..
செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்
கழறொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.

செங்களம் பட- போர்க்களம் இரத்தத்தால் செந்நிறமாகும்படி, அவுணர் கொன்று தேய்த்த - அசுரர்களைக் கொன்று இல்லை என்று ஆக்கிய, செங்கோல் அம்பின்செம்மையான, வளைவில்லாத, இரத்தத்தால் சிவந்த திரண்ட அம்பையும், செங்கோடு யானைபகைவரைக் குத்தி சிவந்த கொம்பினை உடைய யானையையும், கழல் தொடி - உழல இட்ட வீர வளையையும் உடைய, சேஎய் குன்றம் - முருகக் கடவுளுக்குரிய இம் மலையானது, குருதிப் பூவின் குலை காந்தட்டு - சிவப்பாகிய பூங்கொத்துள்ள காந்தளை உடையது.

குறிஞ்சி மலைக்கடவுள் முருகன்.முருகக் கடவுளின் ஊர்திகளுள் யானை ஒன்றென்பதும், அதன் பெயர் பிணிமுகம் என்பதும், அருள் செய்வதற்கும் போர் செய்வதற்கும் எழுந்தருள்கையில் அதனை அவர் ஊர்ந்து செல்வார் என்பதும் பல சங்க இலக்கியங்களிலிருந்து நாம் அறிய கிடைக்கும் தகவல்கள்.
குருதிப்பூ என்றது குருதியைப்போன்று சிவந்த நிறமுடையப்பூ செங்காந்தள்பூ
குலைக்காந்தட்டே - கொத்தாகவே பூத்தலின் குலைக் காந்தள் உடையதே என்கிறாள். இப்படி இயற்கை காட்சிகளை நுணுக்கமான விவரங்களுடன் காட்சிப்படுத்துவது சிறப்பான ஒன்று. உணர்ந்து மகிழ தக்கது.
     தலைமகளை சேர நினைத்த தலைவன் செங்காந்தள் பூங்கொத்தை தோழியின் கையில் கையுறையாக கொடுத்து அவள் உதவி நாடுகிறான். தோழி கையுறை மறுத்து இப்பூ எங்கள் மலையிலும் அதிகமாயுடையதே, அதில் எமக்கு குறையில்லை என்பதன் மூலம் வரைவு-மணமுடிக்க அறிவுறுத்துகிறாள். கையூட்டு அன்றும் இருந்திருக்கிறது போலும்!

அடுத்ததாக ஒரு பாடல்

கொங்கு தேர் வாழ்க்கை அம் சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயி்லியது கெழீஇய நட்பின் மயில் இயல்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே? 

இப்பாடலை அறியாதார் யார். திரைப்படங்கள் பாமரர்க்கும் கொண்டு சேர்த்த சில நல்ல விடயங்களில் இதுவும் ஒன்று. தருமி பொற்கிழிக்காக ஏங்கியதை மறக்க முடியுமா? என்றாலும் இப்பாடலின் கருத்தாழம் அனைவராலும் அறியப்பட்டதா என்பது சந்தேகம் தான்.
    கொங்குதேர் வாழ்க்கை – பூந்தாதை, தேனை ஆராய்ந்து உண்ணுகின்ற வாழ்க்கையினையும், அகம் சிறை தும்பி - உள்ளிடத்தே சிறையையும் உடைய வண்டே, சிறிய இறக்கைகளைக் கொண்ட தும்பியானது பூக்களில் தேனெடுக்கச் சென்று அப்பூக்களிலேயே சிறைப்படும், காமம் செப் பாது - என் நிலத்து வண்டாதலின் யான் விரும்பியதையே கூறாமல், கண்டது மொழிமோ - நீ கண்கூடாக அறிந்ததையே சொல்வாயாக: நீ அறியும் பூ - நீ அறியும் மலர்களுள், பயிலியது கெழீஇய நட்பின் - எழுமையும் என்னோடு பயிலுதல் பொருந்திய நட்பையும், மயில் இயல் - மயில் போன்ற மென்மையையும், செறி எயிறு - நெருங்கிய பற்களையும் உடைய, அரிவை கூந்தலின் - இவ்வரிவையின் கூந்தலைப் போல, நறியவும் - நறுமண முடைய பூக்களும், உளவோ - உள்ளனவோ?
     தும்பி கொங்குதேரும் காலம் இளவேனில் காலம். வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கும் காலம். மணம் பற்றி கூறுவதால் தும்பியைத் துணைக்கழைக்கிறான்.என் நிலத்து வண்டு என்பதால் என் விருப்பத்திற்காக கூறாமல் நீ கண்டதையே கூறுவாய் என்கிறான். வண்டு கூறவல்லது அல்ல என்றாலும் கூறுவதாய் சொல்வது செய்யுள் மரபு. பயி்லியது கெழீஇய நட்பின் மயில் இயல் செறி எயிற்று அரிவை என்றது தலைவனும் தலைவியும் நன்று அறிந்து பழகியவர்கள் என்பதாம். நறியவும் உளவோ என்பது தலைவியின் கூந்தல் இயற்கை மணம் உடையது என்ற முடிபுடையது.

     இப்பாடலின் வரலாற்றை நாமறிவோம்.இறையனார் பாடியதாக அறிகிறோம்.அன்று அரசவையில் தமிழுக்கு என்று ஒர் இருக்கை அல்ல பல இருக்கைகள் இருந்தன. அப்புலவர்கள் தங்களுக்குள் புலமையை பரீட்சித்துக் கொண்டனர். சாதாரண மக்களும் புலமையும் அறிவும் மிக்கவர்களாக காணப்பட்டனர்.
     ஆனால் இன்று ஹார்வேர்ட் பல்கலை கழகத்தில் ஒரு இருக்கைக்காக பலகோடி தந்து நாம் பெருமைப்படுகிறாம். மற்றவர்கள் தமிழை உயர்வாகச் சொன்னால் தான் நமக்கு மகிழ்ச்சி. அது அடிமை புத்தி.  தமிழாராச்சி யார்? எங்கு? செய்யவேண்டும். தமிழ் மண்ணில் அப்பொருளை தமிழுக்காக செலவழித்தால் ஒருவேளை தமிழ் பிழைக்கலாம். முதலில் தமிழில் படித்தால் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு கிடைக்கும் படி செய்யட்டும். தமிழில் படிப்பது பெருமை என்று தமிழர் நினைக்கட்டும். தமிழ் நாட்டிலுள்ளோர் தமிழறிந்திட வேண்டும் எனும் காலம் வரட்டும். முதலில் தமிழர் பல கலைகளும் மொழிகளும் அறியட்டும். அன்றைய தமிழரின் வீரமும் செருக்கும் அறிவும் எங்கே போயிற்று. அண்டிப்பிழைத்து ஆமாம் போடும் தமிழராய் என்று மாறினோம். பணமும் பதவியும் உள்ளவர் கிறுக்கினாலும் இலக்கியமானது ஏன். காக்காய் பிடிப்பதே கவிதையானது ஏன். நல்ல இலக்கியங்கள் நைந்து போனது ஏன்.
     அன்று செய்யுளில் தவறென்றால் அது யாராக இருந்தாலும்’ நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என எடுத்துரைக்கும் அறிவிற் சிறந்தவர் இருந்தனர். அவர்கள் அரசனானாலும் தைரியமாக குற்றம் சாட்டினர். தமிழ் உண்மையாக செம்மொழியாகத் திகழ்ந்தது. இன்று தமிழ் மன்றங்களில் கூட ழ கர ளகர லகர குழப்பங்கள். தமிழாசிரியர் கூட பிழையாக உச்சரிக்கும் அவலங்கள்.
     இன்று இவ்விலக்கிய செல்வங்களை முறையாக உணர்ந்தவர் மிகச்சிலரே. இன்று சொல் மட்டும் குற்றமல்ல, பொருள் மட்டும் குற்றமல்ல சிந்தனையே குற்றம், இன்று இரட்டுற மொழிதலோ பிறிது மொழிதலோ காணப்படுவதிலை. இரு பொருள் பட பேசலும் ,பிழையுற மொழிதலுமே காணமுடிகிறது. தமிழ் தமிழாயில்லாமல் தமிங்கிலமாய் சிதைந்து போனக் குற்றம் இது. தமிழர் தமிழராயில்லமல் மறந்து போன குற்றம் இது. தமிழர் வாழ்ந்தால் தமிழ் தானாய் செழிக்கும். செம்மொழியாய் இருக்கும். முயல்வோம்.

இன்னும் சில குறிஞ்சி நில பாடல்களுடன்
விரைவில்
அன்புடன்
உமா.

Saturday, 21 April 2018

நற்றிணை 5 பாலை


குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல் என்பன நானிலங்கள். தமிழில் பாலை என்று நிலம் இல்லை. குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த நிலமும் மற்றும் முல்லை - காடும் காடு சார்ந்த நிலமும் ஆகிய நிலப்பகுதிகள் கால மாற்றங்களால் திரிந்து தம் இயல்புகளினின்றும் மாறுபட்டு நிற்கும். இங்ஙனம் மாறுபட்ட நிலப் பகுதி பாலை என்று அழைக்கப்பட்டது.

நற்றிணையின் 110வது பாடலான இப்பாடல் உடன் போகினாள் மகள் எனக் கேட்ட நற்றாய், சிறு விளையாட்டியாய் இருந்தவள் இல்லறம் நடத்தும் அறிவும் பண்பும் எப்படி பெற்றனள் என வியந்து கூறினாலும் இவ்வளவு நாள் பிரிந்தறியாதவள் பிரிவாற்றாளாய் வருந்தி கூறுவதாயும் அமைந்த பாடல். உரிப் பொருளால் இப்பாடல் பாலைத்திணைக்கானது.

பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால்   
விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்திப்
புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
உண்ணென்று ஒக்குபு புடைப்பத் தெண்ணீர்
முத்தரிப் பொன்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று
அரிநரைக் கூந்தல் செம்முது செவிலியர்
பரிமெலிந் தொழியப் பந்தர் ஓடி
ஏவல் மறுக்குஞ் சிறுவிளை யாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல்
கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்
ஒழுகுநீர் நுணங்கறல் போலப்
பொழுதுமறுத்து உண்ணுஞ் சிறுமது கையளே.

பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால்   
விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்திப்

தேன் கலந்ததையொத்த நல்ல சுவையுள்ள வெண்மையான இனிய பாலுணவை விரிந்து ஒளிவீசும் பொன்னாலாகிய கலத்தில் இட்டு அதை ஒருகையால் பிடித்து நின்று

புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
உண்ணென்று ஒக்குபு புடைப்பத்

புடைக்கும் பொழுது புடைக்கப்பட்டவரை சுற்றிக்கொள்ளும் தன்மையதான சிறு கோல், ஓங்கும் போது நோகாதிருக்க நுனியில் பூக்கள் இருப்பதாக ஒடித்துக் கொள்ளப்பட்ட சிறு பூங்கொம்பு. அக்கொம்பினை ஓங்கியப்படி உண்பாயாக எனவும்

தெண்ணீர்
முத்தரிப் பொன்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று

தெளிந்த ஒளியினையுடைய முத்துக்கள் பரலாகப் போடப்பட்ட பொன்னாலாகிய சிலம்பு ஒலிக்குமாறு பாய்ந்து ஓடி

அரிநரைக் கூந்தல் செம்முது செவிலியர்
பரிமெலிந் தொழியப்

மெல்லியதான நரைத்த கூந்தலைக்கொண்ட செவிலியர் மெலிந்து போகுமாறு

பந்தர் ஓடி
ஏவல் மறுக்குஞ் சிறுவிளை யாட்டி

பூப்பந்தலின் கீழ் ஓடி, உண் என்பதற்கு நான் உண்ணேன் என ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டுப் பெண்ணானவள்

கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்
ஒழுகுநீர் நுணங்கறல் போலப்
பொழுதுமறுத்து உண்ணுஞ் சிறுமது கையளே.

மணந்து கொண்ட கணவன் வீட்டில் வறுமை. ஆனாலும் தந்தை கொடுத்த மிகுந்த உணவை உண்ணாது ஓடுகின்ற நீரில் கலந்திருக்கும் நுண்மணல் போல் இடைவெளி விட்டு கிடைக்கும் போது மட்டும் உண்கிறாள்.

அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல்
அறிவும் ஒழுக்கமும் எங்கிருந்துப் பெற்றாள்

இப்பாடல் பள்ளி கூட பாடபுத்தகத்தில் படித்திருப்போம்.. மீண்டும் ஒருமுறை சுவைப்போம்.

செல்வ செழிப்பாக வளர்ந்தவள் தலைவி. பாலுணவை பொற்கலத்திலேந்தி உண் என்றாலும் முத்துப் பரல் கொண்ட சிலம்புகள் ஒலிக்க ஓடி ஒளிந்து உண்ணாமல் போக்குக் காட்டும் சிறு விளையாட்டியாக வளர்ந்தவள்.
தலைவனோடு உடன் போகிறாள். கணவன் வீடோ வறுமைக்குட்பட்டது. வேளைக்கு உணவு கிடைக்காது. இவளை செல்லமாக வளர்த்த தந்தை நிறைய உணவை கொடுத்தணுப்புகிறான். ஆனாலும் அதை உண்ணாமல், ஓடும் நீரில் நுண்மணற் கலந்திருப்பது போல். தன் கணவன் வீட்டு உணவை ஒரு வேளை பட்டினி கிடந்து மறு வேளை உண்கிறாள். இந்த நல்லறிவையும், ஒழுக்கலாற்றையும் எங்குக் கற்றுக்கொண்டாள்? என்று மகள் நிலைக்கண்டு தாய் வியக்கிறாள்.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
இப்பாடல் குறுந்தொகையி 40வது பாடல்.அனைவரும் அறிந்த பாடல்.
செம்மண்ணில் கலந்த நீர் மண்வேறு நீர்வேறு எனப்பிரித்தறிய முடியாவண்ணம் ஒன்றாக கலந்துவிடும் அதுபோல் அன்புடைய நெஞ்சம் தாம் கலந்தனவே என்று மிக அற்புதமான உவமை ஒன்றை காட்டி பாடலாசிரியர் செம்புல பெயர்நீரார் என்ற பெயர் பெறுகிறார்.

இதற்கு நேர் எதிராக இப்பாடலில் ஒழுகுநீர் நுணங்கறல் போல’ என்பது ஒன்றுபோலிலாமல் இடைவெளிவிட்ட தன்மைக்கு எடுத்துக்காட்டானது. தொடர்ந்து வேளாவேளைக்கு உணவு உண்ணாமல் கிடைக்கும் போது மட்டுமே உண்கிறாள். நுண்மையான மணல் ஓடும் நீரில் கலந்திருக்கும் போது கண்ணிற்கு தெரியாது. நீர் தெளிவாகவே காணும். ஆனால் மணல் நீரில் ஒன்றாக கரையாமல் தனித்தனியே தட்டுப்படும். அதுபோலவே வேளைக்கு உணவு உண்ணாமல் இடைவெளி விட்டு கிடைக்கும் போது மட்டுமே உண்கிறாள். தந்தையின் மிகுந்த உணவையும் மறுத்து

மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

என்பதற்கொப்ப மனைநலம் காக்கிறாள். வறுமை வெளித் தெரியாமல் வாழ்கிறாள்.

செல்வச் செழிப்பிலே வளர்ந்தாலும், வறுமையிலும் இல்லறம் காக்கும் இப்பண்பிணை எங்கிருந்து பெற்றாள் என்று நற்றாய் பிரிவாற்றமையிருந்தாலும் பெருமிதமாய் கூறுகிறாள்.

இன்றும் பெற்றோருக்கு தன் குழந்தைகள் சிறியவர்களாகவே தெரிகின்றனர். காலம் அவர்களை வளரச் செய்கிறது. ஒருகுறிப்பிட்ட காலத்தில் திருமணம் கருதியோ அல்லது அவர்கள் வாழ்வின் முன்னேற்றம் கருதியோ பிரிய நேர்கிறது. இவ்வளவு நாள் கைப்பிடித்து வந்தவர்கள் விலக நேரும் போது வரும் உணர்வு எல்லா காலங்களிலேயும் எல்லா தலைமுறையினரையும் தாக்கி யிருக்கிறது. இவ்வுணர்வை இப்பாடலில் மிக அழகாக பதித்திருக்கிறார் போதனார். அபியும் நானும் படத்தில் இதே உணர்வு அழகாக பதிக்கபட்டிருக்கிறது. மகனோ மகளோ உள்ள எல்லார் வீட்டிலும் அனுபவமாவது இவ்வுணர்வு..

பாலையில் இன்னுமொரு பாடல் இதன் ஆசிரியர் நல்வெள்ளியார்.
இவர் பெண்பாற் புலவர் ஆவார். இவரது ஊர் மதுரை. நற்றிணையில் 2, குறுந்தொகையில் 1, அகநானூற்றில் 1 என இவரது பாடல்கள் நான்கே எனினும் அழகான வருணனைகளாலும், மறைமுக உணர்ச்சிச் சித்திரிப்பினாலும் உயர்ந்த தரமுடையவை.

சூருடை நனந்தலைச் சுனைநீர் மல்கப்   
பெருவரை அடுக்கத் தருவி யார்ப்பக்
கல்லலைத் திழிதருங் கடுவரற் கான்யாற்றுக்     
கழைமாய் நீத்தங் காடலை யார்ப்பத்
தழங்குகுர லேறொடு முழங்கி வானம்
இன்னே பெய்ய மின்னுமால் தோழி   
வெண்ணெ லருந்திய வரிநுதல் யானை
தண்ணறுஞ் சிலம்பின் துஞ்சுஞ்
சிறியிலைச் சந்தின வாடுபெருங் காட்டே.

முன்பு முல்லை நிலப்பாடலில் கார்காலம் துவங்க இருப்பதை அறிந்த தலைவன் தேரை விரைவாக செலுத்த பாகனை ஏவி நின்ற காட்சியைக் கண்டோம்.
இப்பாடலில்
பொருள் தேடச் சென்ற தலைமகன் வரவில்லையே என வருந்துகிறாள் தலைவி. கார் காலம் துவங்கி விட்டதால் விரைவில் தலைவன் வருவான். நீயும் அவனோடு இன்புருவாய் என தேற்றுவாளாய் தோழி கூறுகிறாள்.
வரியுடைய நெற்றியைக்கொண்ட யானை, மூங்கில் அரிசியைத் தின்று, வாசம் வீசும் மலைப்பக்கத்திலே போய் தூங்கும். மலைக்காட்டில் மழையின்றி சிறிய இலையுடைய சந்தன மரங்கள் வாடி நிற்கும்.
சந்தன மரத்தின் வாட்டம் நீங்கவும், அச்சத்தையுடைய பெரிய சுனையில் நீர் நிறையவும், பெரிய மூங்கில்களையுடைய மலைப்பக்கத்தில் அருவிகள் ஆரவாரிக்கவும், கற்களைப் புரட்டிக் கொண்டு ஓடிவருகின்ற கானியாற்றில், ஒலிக்கின்ற இடியோடு முழக்கம் செய்து, மேகம் பெய்த மழையில், மூங்கிலும் முழுகுமாறு வெள்ளம் உருவாகிக், காட்டில் சென்று மோதும்.
இக்காலத்தை நோக்கினவுடன் அவர் உடனே வந்து உன்னை வரைந்து (கூடி) கொள்வார். ஆகவே நீ வருந்தாதே!!
அச்சம் தரும் சுனையில் நீர் நிறையவும், பெரிய மலையடுக்கத்தில் அருவி கொட்டுமாறும்
பற்றுக் கோடாகிய மூங்கிலும் முழுகுமாறு காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து பாயுமாறும்
ஒலிக்கின்ற இடியேற்றொடு முழக்கஞ் செய்து முகில்கள் இப்பொழுதே மழை பெய்யவேண்டி மின்னா நிற்கும்

தோழியின் பேச்சு வெறும் மழை வருணனையாக மட்டுமே நின்று விடுகிறது. வெறும் வருணனையை மட்டுமே நோக்கமாகக் கொண்டு கவிதை அமைவது சங்க இலக்கியத்தில் இல்லை. ஆகவே தோழியின் பேச்சில் மறைபொருள் இருக்க வேண்டும்.

வாடுகின்ற பெருங்காட்டிலே அக்காடு தழைப்ப மழைபெய்யத் தொடங்குமென்றது வாடி நிற்கின்ற தலைவி மகிழுமாறு தலைவன் வருவான். மழை பெய்து பெருக்கெடுப்பிற் காட்டில் வருதற்கியலாதாதலிற், பெருக்கெடுக்குமாறு மழைபெய்தற் பொருட்டு முகில்கள் திரண்டு நிற்கும் என்றாள். கார் காலத்தைக் கண்டதும் விரைந்து வருவான் என்பது குறிப்பு.
நெல்லருந்திய யானை கவலைகெடத் துயிலு மென்றது காதலனொடு இன்ப நுகர்ந்து நீயும் கவலையழிவாய் என்னும் குறிப்பாக ஆற்றுவிக்கிறாள் தோழி.

சங்க காலத்தில் ஆண்பாற் புலவர்களுக்குச் சளைக்காமல் பெண்பாற் புலவர்களும் இலக்கிய ஆளுமை மிக்கவர்களாகக் காணப்பட்டனர். சிறந்த பல தனிப்பாடல்களை, தொகுப்புக்களை இப்பெண்பாற் புலவர்கள் தமிழ் உலகுக்கு ஈந்தபோதும் அவர்களின் இயற்பெயர் அத்தொகுப்புக்களிலோ, தனிப்பாடல்களிலோ ஈண்டு குறிப்பிடப்படவில்லை என்பது இலக்கியங்களை ஆராச்சியாளர் கூறும் கருத்து.
அழகும் கற்பனையும் நிறைந்த இப்பாடலை சுவைப்போம். மகிழ்வோம்.

பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பாற் போல் நற்றிணை நலம் வியக்க சில பாடல்களை இங்கு கண்டோம்.
இன்னும் பல பாடல்களை பின்பு அறிவோம், சுவைப்போம்.

அடுத்ததாக குறுந்தொகையில் சில பாடல்களோடு விரைவில்…

அன்புடன்
உமா.