பத்துப்பாட்டு தொகுப்பில் நாம் அடுத்து ஒன்பதாவதாக பார்க்க இருப்பது பட்டினப்பாலை.
பட்டினம் என்பது கடற்கரை நகரைக்குறிக்கும். அன்று சிறப்பாக
காவிரிபூம்பட்டினத்தையே குறித்து நின்றது.
இந்நகரின் சிறப்பும், பாலை நிலத்தின்
ஒழுக்கமாகிய பிரிதலும் பிரிதல் நிமித்தமும் பற்றி பாடுவதால் இந்நூல் பட்டினப் பாலை
எனப்பட்டது.
பாடலை எழுதியவர் பெரும் பாணாற்றுப்படை பாடிய கடியலூர் உருத்திரங்
கண்ணனார்.
பாட்டுடைத்தலைவன் திருமாவளவன் (கரிகால் பெருவளத்தான்).
பட்டினப்பாலை,
பொருநராற்றுப்படை, கலிங்கத்துப் பரணி, பழமொழி நானூறு முதலான நூல்களில் இவரைப் பற்றிய
குறிப்புகள் கிடைக்கின்றன.
இப்பாடலின் மொத்த அடிகள்: 301
பாவகை: வஞ்சிப்பா. வஞ்சிநெடும்பாட்டு என்றும் இதனை அழைப்பர்:
தமிழில் உள்ள வஞ்சிப்பா வகையில் மிகப் பெரியது இது.
பா வகைகளில் அரிதாக அமையக் கூடிய வஞ்சிப்பா என்பதை சற்றுத்
தெரிந்துக் கொள்வோம்.
வஞ்சிப்பா, தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி
என்று கனிச்சீர் கொண்டு வரும். இது வஞ்சிப்பாவுக்கே உரிய சீர் ஆதலால் வஞ்சியுரிச்சீர்
ஆகும். இவற்றோடு பிறசீர்களும் விரவி வரும். இப்பாடலுக்கு உரிய தளை வஞ்சித்தளை. இது
இருவகைப்படும்.
அ) ஒன்றிய வஞ்சித்தளை - அதாவது கனிமுன் நிரையசை வருவது.
ஆ) ஒன்றாத வஞ்சித்தளை - அதாவது கனிமுன் நேரசை வருவது.
பிற பாடல்களுக்குரிய தளைகளும் பெற்று வரும். வஞ்சிப்பா தூங்கலோசை
பெற்று அமையும். அடி வரையறை மூன்றடியாகும். இரண்டடியாகவும் வரலாம். இதற்கு மேல் எத்தனை
வேண்டுமானாலும் வரும். ஓரடியில் இரண்டு சீர்கள் கொண்டு வருவது குறளடி வஞ்சிப்பா, மூன்று
சீர்கள் கொண்டு வருவது சிந்தடி வஞ்சிப்பா. தனிச்சொல் சுரிதகம் பெற்றுவரும்.
இந்த இலக்கணம் தெரிந்துக் கொள்வதற்காக…
இனிப் பாடலுக்குள் வருவோம்.
இந்நூல் காவிரி ஆற்றின் சிறப்பை சொல்லித் துவங்குகிறது, சோழ
நாட்டின் சிறப்பு, தலைநகர் காவிரிபூம்பட்டினத்தின் வளம், அம்மக்களின் வாழ்வு, வாணிபம்
பற்றி சொல்லி, இப்படிப்பட்ட சிறப்புடைய பட்டினத்தைத் தந்தாலும் தலைவியை தான் பிரியேன்
என்று தன்நெஞ்சுக்கு சொல்கிறான் தலைவன். மேலும் இப்பாடலில் திருமாவளவனின் வீரம், போர் திறம், அவன் நாட்டையாண்ட திறம் சொல்லி, அவனது
பகைவர் நாடு அழிந்ததும் அவனது நாட்டில் வளம் பெருகியதும் சொல்லி, அப்படிப்பட்ட கரிகாலனின்
வேல் பகைவருக்கு தரும் வெம்மையைவிட அதிக துன்பம் தரக்கூடியது தலைவியைப் பிரிந்து நான் செல்லும்
கானகவழி. அத்திருமாவளவனின் வெண்கொற்றக் கொடியைப் போல தண்மையானது எனது தலைவியின் தோள். எனவே அவளைப் பிரியேன் என்று செலவழுங்குதல் துறையாக அமைந்துள்ளது இப்பாடல்.
காவிரியின் பெருமை
வசையில் புகழ் வயங்கு வெண்மீன்,
திசை திரிந்து தெற்கு ஏகினும்,
தற்பாடிய தளி உணவின்
புள் தேம்பப் புயல் மாறிங
வான் பொய்ப்பினும், தான் பொய்யா
மலைத் தலைய கடல் காவிரி,
புனல் பரந்து பொன் கொழிக்கும். (1-7)
சூரியன் திசை மாறி தெற்கே சென்றாலும், மழைத்துளியை உணவாக
கொள்ளும் வானம் பாடி எனும் பறவை வருந்துமாறு மழை பொய்த்தாலும்,
மலைத் தலைய கடல் காவிரி,
புனல் பரந்து பொன் கொழிக்கும்.
மலையில் பிறந்த கடல் போன்ற காவிரியானது, தான் பொய்க்காமல்,
நீர் மிகுந்து, நிலத்தில் பொன் கொழிக்கச் செய்யும் என்று மிக அருமையாக காவிரியின் வளம்
இங்கு காட்டப்படுகிறது.
சிலப்பதிகாரத்தில் காவிரியின் சிறப்பை அழகாகக் கூறும் புகார் காண்டத்து கானல் வரி பாடலும் இங்கே நினைவு கூறத்தக்கது.
உழவர் ஓதை, மதகு ஓதை,
உடை நீர் ஓதை, தண்பதம் கொள்
விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப,
நடந்தாய்; வாழி, காவேரி!
புதுப்புனல் கண்டு உழவர் மகிழ்ந்து எடுக்கும் விழாக்களின் ஓசை, மதகுகளில் மோதும் நீரின் ஓசை, வரப்புக்களை உடைத்து ஓடும் நீரின் ஓசை, மகிழ்ந்து
மக்கள் எழுப்பும் ஓசை ஆகியன இருபுறமும் ஆர்ப்பரிக்க நடந்தாய் வாழி காவேரி…
என்று மிகச் சிறப்பாக சிலப்பதிகாரமும் நமக்கு காவிரி ஆற்றை
காட்டி மகிழ்கிறது.
இன்றைய நிலை என்ன? எங்கே பிழைத்தோம்? இன்று ‘நடந்தாய் வாழி
காவேரி’ என்ற திட்டம் தீட்டி காவிரியை காப்பாற்ற வேண்டிய நிலை. இயற்கையை காப்பாற்றத் தவறி வெகு தொலைவு நாம் நகர்ந்து விட்டோமல்லவா? சிந்திப்போம்…
அடுத்து மருத நில வளம் காட்டும் போது
விளைவு அறா வியன் கழனி
கார்க் கரும்பின் கமழ் ஆலைத்
தீத் தெறுவின் கவின்
10
வாடி, நீர்ச் செறுவின் நீள் நெய்தல்
பூச்சாம்பும் புலத்து ஆங்கண்,
காய்ச் செந்நெல் கதிர் அருந்து
மோட்டு எருமை முழுக் குழவி
கூட்டு நிழல் துயில் வதியும்,
அன்று கரும்பைப் பிழிந்து பாகு எடுக்கும் ஆலை இருந்ததை இப்பாடல்
தெரிவிக்கின்றது. அதுமட்டுமல்லாமல் சாதாரணமாக நெற்கதிர் அறுவடைக்குப்பின் இருக்கும்
தாள் தான் மாடுகளுக்கு உணவாக தரப்படும். ஆனால் இங்கே மிகுந்த செழிப்பின் காரணமாக நெற்கதிரையே
உணவாக உண்ட எருமைகள் அங்கு குவிக்கப்பட்டிருந்த நெற்குவியலின் நிழலிலேயே உறங்குகின்றன
எனக் காட்டப்பட்டுள்ளது. காவிரியின் வளத்தால் சோழ நாடு சோறுடைத்து என்று சிறப்பிக்கப்பட்டதல்லவா?
காவிரிபூம்பட்டினத்தின் சிறப்பு
நேர் இழை மகளிர் உணங்கு உணாக் கவரும்
கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை,
பொற்கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்
முக்கால் சிறு தேர் முன் வழி விலக்கும், 25
விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியா,
காவிரிபூம்பட்டினம் செல்வச் செழிப்பு மிக்கதாக இருந்தது.
அங்கே நெற்கதிர்களை உண்ணவரும் கோழிகளை, பெண்கள் தங்கள் காதில் அணிந்த பொன்னாலான குழை
என்ற அணிகலனை எறிந்து துரத்துவராம்.
பொன் கழல் அணிந்த சிறுவர் உருட்டி விளையாடும் முக்கால்
தேர் தவிர வழி மறைக்கும் பகை எதுவுமில்லாதிருந்ததாம் அந்நகரம்.
அங்கு உப்பை விலைகூறி மாற்றாக நெல் பெற்று வந்த படகுகள் கட்டப்பட்டிருக்கும்.
அது குதிரையை வரிசையாகக் கட்டி வைத்ததைப் போலிருக்கும் என்கிறது பாடல்.
அரண்மனையின் வெளிச்சுவர் தூசி படிந்து காணப்படுகிறது. அதற்கு புலவர் காட்டும் உவமை அழகு.
சோறு வாக்கிய கொழுங் கஞ்சி,
யாறு போலப் பரந்து ஒழுகி, 45
ஏறு பொரச் சேறு ஆகி,
தேர் ஓடத் துகள் கெழுமி
நீறு ஆடிய களிறு போல,
வேறுபட்ட வினை ஓவத்து
ஓவியம் வரையப்பட்ட அரண்மனையில் தேர் ஓடிக் கிளப்பிய தூசிப் படிந்ததிருந்தது. அது புழுதியில் விளையாடிய ஆண் யானையைப் போன்று இருந்ததாம். கம்பீரமான உவமை.
சமையல் அறைகளில் சோற்றிலிருந்து வடித்த கொழுமையான கஞ்சி,
ஆற்றினைப் போலப் பரந்து தெருவில் ஓடியது, அங்கு காளைகள் போராடுகின்றன. அதனால் அங்கு சேறாகிறது.
இப்படி வளம் நிறைந்ததாக இருந்தது அப்பட்டினம்.
அங்கு தவப்பள்ளிகள், வேள்விச் சாலைகள் இயங்கிக் கொண்டிருந்தன.
மறவர் ஆயுதத்தாலும், உடலாலும் தீண்டி சண்டையிட்டு தம் திறமைகளைக் காட்டினர்.
காவிரிபூம் பட்டினத்தில் அன்று உறைக்கிணறு இருந்ததை இவ்வரிகள்
காட்டுகின்றன.
பறழ்ப் பன்றி, பல் கோழி, 75
உறைக் கிணற்றுப் புறச்சேரி,
ஏழகத் தகரொடு சிவல் விளையாட
இப்படிச் சேரி மட்டுமல்ல அங்கு பரதவர் குடியிருப்பு, அவர்களின்
விளையாட்டு, வழிப்பாடு ஆகியவையும் வர்ணிக்கப்படுகின்றன.
காவிரி கடலோடு கலப்பது எப்படி இருந்தது என்பது மிக அழகான
உவமையோடு இங்கு காட்டப்பட்டுள்ளது..
மா மலை அணைந்த கொண்மூ போலவும், 95
தாய் முலை தழுவிய குழவி போலவும்,
தேறு நீர்ப் புணரியோடு யாறு தலைமணக்கும்
பெரிய மலையை அணைந்து நிற்கும் மேகத்தைப்போலவும், தாயின் முலை தழுவிய
குழவிப் போலவும் காவிரி ஆறானது தெளிந்த நீர்கொண்ட கடலில் கலக்கும் என்றது நயமிக்கது. கடலின் குழவி
அல்லவா காவிரி என்கிற ஆறு? அருமை..
அங்கு இரவிலும் மக்கள் மிகுந்த இன்பம் துய்த்து கிடந்தனர்.
காய் சினத்த கதிர்ச் செல்வன்
தேர் பூண்ட மாஅபோல,
வைகல் தொறும் அசைவு இன்றி
உல்கு செயக் குறைபடாது
அங்கு சுங்கம் வசூலிப்போர் கதிரவனின் தேரில் பூட்டிய குதிரைகளைப்
போல் சோம்பலின்றி குறையாத வரிகளை வசூலித்தார்கள் என்று வணிகச் சிறப்பு காட்டப்பட்டுள்ளது.
வான் முகந்த நீர் மலைப் பொழியவும்,
மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்
பண்டகச் சாலையில் பலப் பொருட்கள் குவிந்துள்ளன. அது எவ்வாறு
இருந்தது எனின் முகில் கடலிலிருந்து முகந்த நீரை மலை மேல் பொழியவும் மலையில் விழுந்த
மழை நீரை ஆறுகள் மூலம் கடலில் சேர்க்கவும், மழை பெய்யும் பருவம் போல,கடலிலிருந்த வந்த
பொருட்கள் நிலத்தில் இறங்கவும் நிலத்திலிருந்து பொருட்கள் கப்பல்களில் ஏற்றவும் அளவில்லாதப்
பொருட்கள் அங்கு குவிந்திருந்தன என்கிறது பாடல்.
அடுத்து விழாகோலம் கொண்ட கடைவீதிகளச் சொல்லும் போது
குழல் அகவ, யாழ் முரல,
முழவு அதிர, முரசு இயம்ப,
விழவு அறா வியல் ஆவணத்து
என்று சிறப்பாக கருவிகளில் இருந்து எழும்பும் ஒலி குறிக்கப்பட்டுள்ளது
அழகு. குழல் அகவி ஒலிக்கின்றது, யாழ் முரல இசைக்கின்றது, முழவு அதிர்ந்து ஒலிக்கிறது
முரசு முழங்கி ஒலிக்கின்றது.
பின்பு பல்வேறுவிதமான கொடிகள் அங்கு காட்டப்படுகிறது. தெய்வக்
கொடிகள், வீரர்களை வணங்குமிடத்தில் கொடிகள், பல் துறைச் சான்றோர் வாதிக்கும் இடங்களில்
கொடிகள், கப்பல்களில் கட்டப்பட்டக் கொடிகள், கள் விற்கும் இடத்தின் கொடி என பல கொடிகள்
கொண்டது அந்நகரம் எனக் காட்டப்பட்டுள்ளது.
இப்பாடலில் காட்டப்பட்டுள்ள காவிரிபூம் பட்டினத்தின் வளம் அறிந்து மகிழத்தக்கது.
செல்லா நல்லிசை அமரர் காப்பின்,
நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும், 185
காலின் வந்த கருங்கறி மூடையும்,
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்,
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்,
தென்கடல் முத்தும், குணகடல் துகிரும்,
கங்கை வாரியும், காவிரிப் பயனும், 190
ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்,
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி,
வளம் தலை மயங்கிய நனந்தலை மறுகின்
அந்நகரம் அமரர்களால் காக்கப்படுகிறது. அதனால் துன்பமில்லை.
குதிரைகள் நீர் வழி வந்தன எனக் கூறிருப்பதிலிருந்து
குதிரைகள் வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டது அறியப்படுகிறது. பல இடங்களிலிருந்து வந்த பொருட்கள் நிறைந்து வளமிக்கதாக அமைந்திருந்தன அகன்ற தெருக்கள்.
நெடு நுகத்துப் பகல் போல
நடுவு நின்ற நல் நெஞ்சினோர்,
வடு அஞ்சி வாய்மொழிந்து,
தமவும் பிறவும் ஒப்ப நாடிக்
கொள்வதூஉம் மிகை கொடாது,
கொடுப்பதூஉங் குறைகொடாது, 210
பல் பண்டம் பகர்ந்து வீசும்,
தொல் கொண்டி துவன்று இருக்கை
வணிகரின் நேர்மை மிக அழகாக காட்டப்பட்டுள்ள வரிகள் இவை…
நடுவுநிலை கொண்ட இவர்கள் பழிக்கு அஞ்சி, தன் பொருட்களையும்
பிறர் பொருட்களையும் ஒன்றாக, சமமாகக் கருதி, தான் கொடுப்பது குறையாமலும் கொள்வது மிகாமலும்
வாணிபம் செய்து நீண்ட நாட்களாக பொருளீட்டினர். சில காலம் மட்டுமல்ல அவர்கள் நேர்மையாயிருப்பது,
தொன்றுதொட்டு அவ்வாறே வாணிபம் செய்தனர்.
அங்கு பல நாட்டவரும் அன்புடன் பழகி வாழ்ந்தனர்.
பெறினும்,
வார் இருங் கூந்தல் வயங்கு இழை ஒழிய
வாரேன், வாழிய நெஞ்சே
இப்பாடலின் அகப்பொருள் உணர்த்தும் வரிகள் இவை..
இவ்வளவு சிறப்பு மிக்க காவிரிபூம்பட்டினத்தை பெறுவதானாலும்
என் தலைவியைப் பிரிந்து வாரேன் நெஞ்சே!! என்று தலைவன் தன் நெஞ்சிடம் சொல்வதாக அமைகிறது
பாடல்
இதன் பின் திருமாவளவனின் சிறப்பு, அரசுரிமைப் பெறுதல், அவன்
போர் திறம், அவன் பல திசை மன்னர்களும் கலங்கும் படி போரிட்டது, அவனது போரால் விழா இழந்த
நகரம், சிறப்பிழந்த மருத நிலம், அவனது கருதியது முடிக்கும் திறன் என்று பலவும் மிக அழகாக காட்டப்படுகிறது.
தொடுதோல் அடியர் என்று சொல்லியிருப்பதால் அன்று
மக்கள் காலுக்கு தோலாலான செருப்பு அணிந்தது தெரிகிறது.
மேலும்
காடு கொன்று நாடாக்கிக்
குளம் தொட்டு வளம் பெருக்கிப்
என்று காட்டை நாடாக்கி, குளம் வெட்டி வளம் பெருக்கியவன் கரிகாலன்
என்கிறது பாடல். பின்பு அவனது அக வாழ்வும் புறவாழ்வும் அழகாக சித்தரிக்கப்பட்டு
திருமாவளவன் தெவ்வர்க்கு ஓக்கிய
வேலினும் வெய்ய கானம், அவன்
கோலினும் தண்ணிய, தட மென் தோளே
இப்படி பகைவருக்கு மிகுந்த அச்சத்தைத் தரக்கூடிய திருமாவளவனின்
வேலைக்காட்டிலும் மிகுந்த துன்பத்தைத் தரக்கூடியது தலைவியை பிரிந்து நான் செல்லக்கூடிய
காட்டு வழி, அவனது செங்கோல் தன்னைச் சார்ந்தவருக்கு
எவ்வாறு தண்மையைச் செய்யுமோ, அதைவிட மிகுந்த குளிர்ச்சியைத் தரக்கூடியது எனது தலைவியின்
பெரிய நீண்டத் தோள்கள்…
எனவே அவளை விட்டுப் பிரியேன் என்று உயர்வு நவிற்சியாக தலைவன்
சொல்வதாக முடிகிறது பாடல்.
மிகச் சிறப்பாக காவிரிபூம் பட்டினமும் அக்காலத்தில் அங்கு
வாழ்ந்த மக்களின் வாழ்வும் அறமும் வீரமும் வாணிபமும் திறமையும்கூறி நமக்குச் சிறிது நேரம் அக்காலத்தில் அவர்களோடு வாழ்ந்த அனுபவத்தைத் தருவதாக அமைந்துள்ள இப்பாடல் படித்து படித்து
இன்புறத்தக்கது..
அடுத்தப் பதிவுடன் விரைவில்
அன்புடன்
உமா…
உங்கள் தமிழ்ப்பணி எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாகவும், உங்கள் வலைதளத்தில் ஒரு அழகான இலக்கிய சோலையும் உள்ளது, மகிழ்ச்சி...
ReplyDeleteநன்றி
ReplyDelete