Friday, 30 August 2019

கல்லிலே கலைவண்ணம்

பழந்தமிழகத்தின் வரலாற்றை அறிய, இலக்கியங்கள், கல்வெட்டுகள், அகழ்வாராச்சிகள் போன்றவை மிகுந்த உதவியாயிருக்கின்றன. அவ்வாறே பழந்தமிழ் மன்னர்கள் கட்டிய கோயில்கள், அம்மன்னர் காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வு அன்று சிறப்புற்றிருந்த கலைகள், அவர்களின் பல்துறைச் சார்ந்த அறிவு ஆகியவற்றை நாமறிய உதவுகின்றன.
தமிழகத்தில் சோழர்களின் காலம் மிகச் செழிப்பானகாலம். அன்று பல இலக்கியங்கள் படைக்கப்பட்டன, நாட்டியம், நாடகம், இசை, சிற்பம், ஓவியம் போன்ற பல கலைகள் சிறப்புற்றிருந்தன. இதற்கு சாட்சியாக அமைவது சோழ மன்னர்கள் கட்டிய பல கற்கோயில்கள்.
சோழர்கள் தம் கோவில்களை வழிப்பாட்டுத் தலமாக மட்டுமல்லாமல் கருவூலமாகவும் கோட்டையாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள்
கோவில்களின் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலுக்கும் கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோவிலுக்கும் செல்லும் வாய்ப்புச் சமீபத்தில் எனக்குக் கிடைத்தது.
மிக அற்புதமான இவ்விரண்டு கோவில்களைப் பற்றிய சிறு அறிமுகம் செய்வதன் மூலம், இக்கோவில்களை நேரில் காணும் ஆவலை ஏற்படுத்துவதும், அவ்வாறு காணும் போது அவற்றை உணர்ந்து இரசிக்க வைப்பதுமே இக்கட்டுரையின் நோக்கம்.

கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோவில்

மிகவும் பிரசித்திப் பெற்ற தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய இராஜராஜ சோழனின் மகனான இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோவில்.
இம் மன்னன் கங்கைவரைச் சென்று வெற்றி பெற்ற தன் நினைவாக அங்கிருந்து கொண்டு வரப்பட்ட கிரானைட் கற்களால் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. போக்கு வரத்து வசதிகள் இன்றிருப்பது போல் அன்றில்லாத நிலையில் அப்பெரிய கோவிலைக் கட்ட அவ்வளவு கற்கள் எவ்வாறு கொணரப்பட்டன என்பது இன்றும் ஆச்சரியம்.
வரலாற்றில் தனது தந்தையின் புகழ்மங்கி விடக் கூடாது என்றே இக்கோவிலைச் சற்று சிறியதாக இராஜேந்திரசோழன் கட்டினான் என்பர். என்றாலும் இங்குள்ளச் சிற்பங்களின் மேன்மை அனைத்தையும் விஞ்சி நிற்கிறது.
இக்கோவிலைக் கட்டிய சிற்பி குணவன், தஞ்சைக் கோவிலைக் கட்டிய இராஜராஜ பெருந்தச்சனின் மாணவன் என்பதும் அவனது திறமையைக் கண்டு  ‘நித்த வினோத பெருந்தச்சன்’ என்ற பட்டத்தைச் சூட்டினான் இராஜராஜ சோழன் என்பதும் நமக்குத் தெரியவரும் வரலாற்றுச் செய்திகள். இவற்றை இங்கே குறிப்பிடுவது மிகவும் அவசியம். ஏனெனில் இக்கோவில்கள் சிற்பக் கலைக்கு சிறந்த உதாரணமாக விளங்குகின்றன..
இனி வரலாற்றைக் கடந்து, கண் முன்னே நாம் கண்ட இக்கோவில் சிற்பங்களின் அழகைப் பகிர்ந்து கொள்வோம்.

கோவில் நுழைவாயில்
நீண்ட பாதையில் நடந்துச் செல்லும் போது உயர்ந்து நிற்கும் கோபுர நுழைவாயில் இடிந்த நிலையிலிருந்தாலும் அன்றைய முழு கோபுர வாயிலின் பிரம்மாண்டத்தை நாம் கற்பனைச் செய்யத் தூண்டுகிறது.
கருவறை வெளிச்சுவர்
அதைத் தாண்டி உள்நுழைந்தால் துவஜஸ்தம்பத்திற்கு அருகில் மிக அற்புதமான, சுண்ணாம்புக் கல்லால் செய்யப்பட்ட மிகப் பெரியநந்தி சிலை கம்பீரமாய் நம்மை வியக்கவைக்கிறது. இதில் ஒரு அதிசயம் சூரிய ஒளியானது நந்தி சிலையின் மேல் பட்டு கருவறையிலுள்ள பிரகதீஸ்வர் மேல் மிக நேர்த்தியாக விழுகிறது.
அகண்ட படிகள் ஏறிச் சென்றால் கருவறையில் பெருவுடையார், பிரகதீசுவர் என்றழைக்கப்படும் சோழீசுவரர் பிரம்மாண்டமான லிங்க வடிவில் காட்சித் தருகிறார். தஞ்சை பெரிய கோவிலுக்கும் இக்கோவிலுக்கும் மிகுந்த ஒற்றுமைகள் காணப்படுகின்றன. 
கருவறை கோபுரத்தின் வெளிப்புறத்தில் பல சிற்பங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்வதாய் அமைந்துள்ளது. முக்கியமாக அங்கு அமைந்துள்ள நடராசர் சிலை
நடராசர் சிலை
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற்பால் வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே

என்று நம்மை நெக்குருகச் செய்யும். 



அர்த்தநாரீஸ்வரர்
அர்த்தநாரீஸ்வர் சிலை மற்றும் ஞான நிலையிலிருக்கும்  சரஸ்வதி மற்றும் லஷ்மி சிலைகள் சிற்பக்கலை மிக உயர்ந்த நிலையில் இருந்ததைக் காட்டும் வகையில் மிக நேர்த்தியாக அமைந்திருக்கின்றன.


இங்குள்ள நர்த்தன விநாயகர் சிலையின் ஏழு உறுப்புக்களிலிருந்து ஏழுசப்தங்கள் எழுவதாக அங்கிருப்போர் நமக்குத் தெரிவிக்கின்றனர்.
 
நர்த்தனவிநாயகர்
இங்குள்ள சிம்மக் கிணறு வருவோரைக் கவரும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. சிம்ம வடிவில் அமைந்த குகைப் போன்ற படிகள் அமைக்கப்பட்டு அது பக்கத்திலுள்ள பெரிய கிணறுக்குச் செல்லும்படி அமைக்கப்பட்டுள்ளது. இக்கிணறு இராஜ வம்சத்தவரால் உபயோகிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. மன்னர்களின் குடும்பத்தார் போர்காலங்களில் மறைந்திருக்க பாதாள வழிகள் இங்குள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

சிம்மக் கிணறு
கோவிலில் தாயார் பெரிய நாயகி அம்மைக்கு தனியாக சன்னதி அமைந்துள்ளது. பெயருக்கேற்றார் போல் 9 அடி பெரிய வடிவில் தாயார் அருள் பாலிக்கிறார்.
இடிந்த சன்னதி
கல்வெட்டுகள்
இக்கோவிலில் இடிந்த நிலையில் சில சிலைகள், கட்டமைப்புகள் காணப்படுகின்றன. இவை பல காலகட்டத்தில் போர் போன்ற காரணங்களால் இடிபாட்டிற்கு உள்ளானதாய் அறியப்படுகின்றன. இக்கோவிலில் இன்றும் பல கல்வெட்டுகளை நாம் காணமுடிகிறது. தமிழக தொல்லியல் துறை இக்கல்வெட்டுகளைப் படியெடுத்து ஆராய்ந்து பல தகவல்களுடன் நூல்களை வெளியிட்டிருக்கின்றது.


பல ஆண்டுகள் முன்பாக, இக்கோவில் கட்டப்பட்ட காலத்தில் மக்கள் நடமாட்டம் எப்படி இருந்திருக்கும், சோழமன்னர்களின் தலைநகரமாக விளங்கிய இவ்விடம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்கும் என்பதை நினைக்கையில், இக்கோவில் பற்றிய பல வரலாற்று புதினங்களில் வருவதை போன்ற நிகழ்வுகள் நம் கற்பனையில் தெரிகின்றன.
இக்கோவிலை விட்டு வெளிவரும் போது

ஐயபொட் டிட்ட அழகுவாள் நுதலும்
அழகிய விழியும்வெண்ணீறும்
சைவம்விட் டிட்ட சடைகளும் சடைமேல்
தரங்கமும் சதங்கையும் சிலம்பும்
மொய்கொள்எண் திக்கும் கண்டநின் தொண்டர்
முகமலர்ந்து இருகணீர் அரும்பக்
கைகள்மொட் டிக்கும் என்கொலோ கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே !

என்ற கருவூர் தேவரின் பாடல் சொல்வதைப்போல் பக்தியால் நம் கைகள் குவிகின்றன கூடவே வியப்பால் நம் கண்கள் விரியவும் செய்கின்றன.முழுதும் காணமுடியா நிலையில் கோவிலை விட்டு நகர்ந்து, சற்றே மனக்குறையுடன் தாராசுரம் நோக்கி பயணப்பட்டோம்...

தாராசுரம் ஐராவதேசுவரர் கோவில் நம்மை வியப்பின் எல்லைக்கே இட்டுச் செல்கிறது...

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில்

‘பொன்னியின்செல்வன்’ கதையில் நமக்கு அதிகமாக பரிச்சயமான பழையாறை நகரின் ஒரு பகுதிதான் தாராசுரம் என்பது. இன்றும் சோழமன்னர் காலத்தில் வணங்கப்பட்ட பிரம்மாணடமான சோமநாசுவாமி கோவில் இடிந்த நிலையில் இங்குக் காணப்படுகின்றது. இதன் அமைப்பை ஒட்டி அமைந்தது தான் தாராசுரம் கோவில். யுனஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரியச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இத்தாராசுரம் கோவில் இன்று முறையாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இரண்டாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோவில் ஆச்சரியத்தின் உச்சம். பக்தி உணர்வோடு மட்டுமல்லாமல், மிகுந்த கலையுணர்வோடும் இக்கோவிலைச் சுற்றி வர வேண்டும். இக்கோவிலின் அழகிய சிற்பங்களைக் கண்டு இரசிக்க ஒருநாள் போதுமானதாக இருக்காது. கண்டிப்பாக பலமுறை இக்கோவிலுக்கு விஜயம் செய்ய வேண்டும். இச்சிற்பங்கள் அக்கால மக்களின் கலை, பண்பாடு, வாழ்க்கையை தெரிவிக்கும் கண்ணெதிர் தெரியும் ஆதாரங்களாக உள்ளன. ஒரு துளி இடம் கூட வீணாகாமல் ஒவ்வொரு சென்டிமீட்டரிலும் சிற்பங்கள் அலங்கரிப்பதை நம்மால் வியக்காமலிருக்க முடியவில்லை. வாருங்கள் இரண்டாம் இராஜராஜன் பெருமையோடு வருகைத்தந்த அந்த பழைய கோபுர நுழைவயிலைப் பார்ப்போம்.
பழைய நுழைவாயில்
இன்று சிதிலமடைந்த நிலையில் பயன்படாமலிருக்கும் இக்கோபுர நுழைவாயில் கோவிலின் பிரம்மாண்டத்தையும், இரண்டாம் இராஜராஜனின் கம்பீரததையும் நமக்குப் பறைச் சாற்றுவதாய் உள்ளது. இன்று பக்கவாட்டு வழியாகவே மக்கள் அனுமதிக்கப் படுகின்றனர். இதன் முழுவடிவையும் அதன் வழியே யானையில் இரண்டாம் இராஜராஜன் படைச்சூழ வரும் காட்சியை சற்று கற்பனைச் செய்து பாருங்கள். ஆம் இவர்களோடு தான் நாம் இக்கோவிலைச் சுற்றிப் பார்க்கப் போகிறோம்.

இசைப் படிகள்
தரைப் பகுதியிலிருந்து சற்றுத் தாழ்வாக 7 அல்லது 8 படிகள் இறங்கி வரும்படியாக அமைந்துள்ள நந்தி மண்டபமும் பலிபீடமும் தான் நாம் முதலில் காணக்கூடியவை.  இந்த பலிபீடத்தின் படிகளில் சப்தஸ்வரங்கள் எழுவதாக சொல்கிறார்கள். இன்று, பாதுகாப்புக் கருதி இரும்புக் கம்பிகளிடப்பட்டிருக்கிறது.
நந்தியையும் விநாயகரையும் வணங்கி உள் நுழைந்தால் நாம் காண்பது இராஜகம்பீர திருமண்டபம். ஒவ்வொரு அணுவையும் பார்த்து வியக்கக் கூடிய வகையில் அமைந்தது இம்மண்டபம்.
இராஜ கம்பீர மண்டபம்
தூண்களில் நடன சிற்பம்


ஒருபுறம் குதிரையும் மறுபுறம் யானையும் இழுத்துச் செல்லும் ஒரு தேர்போல் அமைக்கப்பட்டுள்ளது.  இராஜராஜனின் யானை போரில் ஆவேசத்துடன் போரிடும் காட்சியை நம் கண்முன்னே காட்டுகிறது இந்த யானை. குதிரையின் வேகத்தில் மண்டபம் நகர்ந்து விடுமோ என எண்ணத் தோன்றுகிறது. சூரிய சக்கரம் போல் அமைந்த தேர்ச் சக்கரங்கள் சிற்பக் கலையின் வியப்பு. மண்டபத்தில் 120 தூண்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இத்தூண்களில் பல புராணக்கதைகள் மிக நுணுக்கமாக சில சென்டிமீட்டர் அளவேயுள்ள சிற்பங்களாக செதுக்கியுள்ளனர். இத்தூண்களில் நாட்டிய கலையின் அனைத்து நிலைகளையும், முக்கியமாக முத்திரைகள் மிக நேர்த்தியாக, சில சென்டிமீட்டர் அளவில் சிறியதாக கற்சிற்பமாக வடித்திருப்பது ஆச்சரியமானது. 
மண்டபத்தை அடுத்து கருவறையில் ஐராவதேஸ்வரர் அருள்பாலிக்கின்றார். இந்திரனின் யானையாகிய ஐராவதம் சாப விமோசனம் பெற்றதால் மூலவர் ஐராவதேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். தாயார் தெய்வநாயகி அம்மைக்கு தனியாக வலப்புறம் கோவில் அமைந்திருப்பது சிறப்பு.
கருவறையைச் சுற்றி வெளிப்புறச் சுவற்றில் 63 நாயன்மார்களின் கதை கற்சித்திரமாக செதுக்கியிருப்பது இக்கோவிலின் மிகச் சிறப்பான அம்சம்.  சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் அமைந்த வரிசைப் படியே கருவறையின் வலப்புறம் துவங்கி, தில்லை வாழ் அந்தணர் முதலாக 63 நாயன்மார்களின் கதையும் மிகச் சிறிய சிற்பங்களாக செதுக்கியிருப்பது வியக்க வைக்கிறது.
மேலும் இங்கு மனித சக்கரம் என்று சொல்லும் படி இருவர் பிணைந்து சக்கரம் போல் இருக்கும் காட்சி,  பெண் ஒருத்திக்கு இருவர் பிரசவம் பார்க்கும் காட்சி,  ஜிம்னாஸ்டிக் என்பது போல் உடலை வளைத்து செய்யும் சாகசங்கள் போன்ற சிற்பங்கள் நம்மை வியக்க வைக்கின்றன.
அக்காலத்தில் பெண்களும் போரிட்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டும் போரிடும் பெண்கள் சிற்பம்,  மேலும் இசைக் கருவிகளோடு கலைஞர்களும் பெண்களும் நடமாடும் வழக்கத்தைக் காட்டும் இசைக் குழுவினர் சிற்பம்,  என அற்புதமான சிற்பங்கள் மிகச் சிறிய அளவில் வடிவமைக்கப் பட்டுள்ளன. இவை இம்மக்களின் பல் கலை திறனை நமக்கு எடுத்துக் காட்டுவதாக உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற  அன்னப்பூரணி சிலை ஒன்றும் இருக்கிறது.  இங்குதான் ஒட்டக்கூத்தர் தனது ‘தக்கயாக பரணி’யை அரங்கேற்றம் செய்ததாகக் கூறுகின்றனர். தக்கயாக பரணி எங்கிற இலக்கியம், தக்கனின் யாகத்தை சிவபெருமான் தடுத்து வென்றதையும் சோழமன்னன் ஈழத்தை வென்றதையும் குறிக்கும் விதமாக சிலேடையாக பாடப்பட்டது என்பர். இங்கு இன்னும் பலசிற்பங்களும் நாகராஜன், 8 கைகளுடன் கூடிய அர்த்தநாரீஸ்வரர் என எங்கும் காணப்பெறாத கடவுள் சிலைகளும் இருக்கின்றன. ஆனால் இவ்வளவு வரலாற்று சிறப்புகளை பார்வையாளர்கள் தெரிந்துக் கொள்ளுமாறு குறிப்புகள் அங்கில்லாதிருப்பது சற்று வருத்தத்திற்குரியதே. வலைத்தளங்களில் பார்த்து தெரிந்துக் கொண்டு வருபவர்களுக்குக்கூட நேரில் அவற்றைத் தேடி கண்டுபிடிப்பது சிரமான காரியமே.
இக்கோவில்களின் சிற்ப அழகைக் காண கண்ணாயிரம் வேண்டும். இக்கோவிலைச் சுற்றி வருகையில், இவற்றின் பின்னனியில் இருக்கும் புராண கதைகள், வரலாற்று நிகழ்வுகள்,  சமயக் கருத்துக்கள் இவற்றையெல்லம் தெரிந்துக் கொள்ளும் பேரார்வம் நம்மை வந்தடைகிறது. அது மட்டுமல்லாது பன்னிருத் திருமறையையும் அதில் பாடப்பட்டுள்ள அத்தனைத் தலங்களையும் அறிந்து சுற்றி வர பேராசைக் கொள்கிறது மனது.
வாழ்க தமிழ்! வாழ்க தமிழ்நாடு!
வளர்க தமிழர்தம் புகழ்!










Sunday, 4 August 2019

பத்துப் பாட்டு நெடுநல்வாடை


பத்துப்பாட்டுத் தொகை நூல்களில் ஏழாவதாக நாம் காண இருப்பது நெடுநல்வாடை. நெடிய நல்ல வாடை என்பதே இதன் பெயர் விளக்கம்.
தலைவனும் தலைவியும் பிரிந்திருக்கிறார்கள்.  வாடைக்காலம் துவங்குகிறது. பிரிவில் வாடும் தலைவிக்கு வாடைக்காலம் நீண்டதாக தோன்றுகிறது. ஒரு நொடி என்பது ஒரு யுகமாக கழிகிறது

அதேகணம் போருக்காக தலைவியைப் பிரிந்தத் தலைவன், வெற்றிப்பெற்ற நிலையில் தனக்கு இவ்வெற்றியை வாங்கித் தந்த வீரர்களைக் பாசறையில் கண்டு அவர்களைத் தேற்றுகையில் அவனுக்கு இவ்வாடைக்காலம் நன்மையைத் தந்து வரும் ஒரு நல்ல வாடையாக அமைகிறது.

இப்பாடல் 188 அடிகள் கொண்ட ஆசிரியப்பாவில் அமைந்த நூல்.

பாடியவர் : மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரன். கீரன் என்பது அவர் இயற்பெயர். ந என்பது சிறப்புக் கருதி விளிக்கப்பட்ட இடைச்சொல். நச்செள்ளையார், நக்கண்ணையார் நக்கீரனார் என அடைமொழிக் கொண்டு அழைக்கப்படும் வழக்கம் அன்று நிலவியிருக்கிறது.

பாடப்பட்டவன்: மதுரைக்காஞ்சியில் நாம் பார்த்த அதே வீர மன்னன், இளம் வயதிலேயே பகை அரசரை வென்று தமிழகத்தைத் தனித்தாண்ட தலைச் சிறந்த மன்னன் தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.

இந்நூல் அகம் பற்றி அதிகம் பேசுவதானாலும், பாண்டியனின் அடையாளச் சின்னமாகிய வேம்பு இதில் குறிக்கப்படுவதால் இது புறத்திணை நூல்களுல் வைக்கப்பட்டுள்ளது. எனவே வாகைத்திணையுமாயிற்று.

இப்பாடல் அழகான இரு காட்சிகளை நமக்கு காட்டுகிறது. வாடைக்காலத்தின் நடுங்கும் குளிர் பின்புலமாக அமைய தலைவனைப் பிரிந்து தலைவி வாடித் தவிக்கும் அரணமனைக் காட்சியும், வெற்றிப் பெற்றத் தலைவன் தன் வீரர்களின் காயம் பட்ட உடலைத் தழுவி அவர்களைத் தேற்றும் பாசறைக் காட்சியும் அழகுற காட்டப்பட்டுள்ளன.

முல்லைப்பாட்டில், தலைவி, “தலைவன் வரும் வரைக் கலங்கேன்” எனக்கூறி காத்திருக்கிறாள் என்றும். தலைவனோ “வந்துவிடுவேன்” என்று சொன்னச் சொல் தவறாவண்ணம் விரைந்து செல்லும் குதிரையை மிகவும் வேகமாகச் செலுத்தி வருகிறான் என்றும் முடிவதைப் பார்த்தோம்.

இந்நூலில் முடிவை நமது கற்பனைக்கு விட்டுவிடுகிறார் புலவர். தலைவியின் பிரிவுத் துயரும் தலைவனின் வெற்றியும் மட்டுமே காட்டப்படுகிறது.  படிக்கும் ஒவ்வொருவரும் பாண்டியனிடன் சென்று தலைவியை நினைவுக்கூறி அவள் துயரை நீக்காயோ என் கேட்கத் தோன்றும் படி விட்டுவிடுகிறார் புலவர்.

அற்புதமான இப்பாட்டில் சில வரிகளை இப்போது பார்ப்போம்…

நாம் முன்பு பார்த்த சங்க இலக்கியங்கள் சிலவற்றிலும் மழைப்பெய்தலை வர்ணிக்கும் பாடல்களைப் பார்த்தோம். இந்நூலிலும்

வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇப்,
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென

இவ்வுலகம் குளிரும் படியாக வலப்புறமாக சுழன்று, என்றும் பொய்க்காத வானம் புதிய மழையை பெய்தது என மழைப் பெய்தலின் வர்ணனையுடன் துவங்குகிறது. வலப்புறமாகச் சுழன்று வீசும் போது காற்றும் மழையும் மிகும் என்பது காட்டப்பட்டிருக்கிறது.  இது அன்றைய மக்களின் அறிவுத்திறனை நாமறிய உதவுகிறது.

இந்நூலின் சிறப்பே இவ்வாடைக்காலத்தின் வர்ணனைகள். இப்பாடல்களைப் படிக்கும் போது சற்றே நம் உடலும் குளிரில் நடுங்குவதாய் உணர்வோம். 

மழைப் பொழிந்து வெள்ளம் கடல் போல் சூழ்கிறது.  கையிலே வளைந்த கோலை கொண்டுள்ள கோவலர்கள் இவ்வெள்ளத்தை வெறுத்தனர். கையிலே கொடுங்கோல் வைத்திருப்பதை முன்பும் முல்லைப்பாட்டில் பார்த்தோம். கோவலர் இக்கழிகளைக் கொண்டு தம் நிரைகளுக்கு இலைத் தழைகளை செடிகளினின்றும் வளைத்துக் கொடுப்பர். அவற்றைக் கொண்டு தட்டியவாறே மேய்த்தும் செல்வர். வெள்ளத்தில் ஆநிரைகளை காத்தல் அரிது என்பதால் தம் நிலம் விட்டு நீங்கி வேறு இடம் பெயர்ந்தனர். அதனால் வெள்ளத்தை அவர் வெறுத்தனர். அது மட்டுமல்ல இவர்கள் இக்குளிரை தாங்க நெருப்பில் தம் கைகளைக் காட்டி சூடேற்றி தன் கண்ணங்களில் ஒற்றிக் கொண்டனர். எனவே இவர்களை “கைக்கொள் கொள்ளியர்” எங்கிறார் புலவர். இன்றும் தீமூட்டி கையைக்காட்டி உடலைச் சூடுபடுத்திக்கொள்வதை நாமறிவோம்.

மக்கள் மட்டுமா? ஆநிரைகளும் மேய்ப்பதை மறந்தன, குரங்குகளின் உடல் குளிரால் கூனிப் போயின.  பறவைகள் குளிரால் நடுங்கி மரத்தின் மீதிருந்து கீழே விழுந்தன.  கன்றுகளுக்குப் பால் கொடுக்கும் மாடுகள் பால் குடிக்க வரும் கன்றுகளைத் தவிர்த்து கோபத்தோடு உதைத்துத் தள்ளின. குன்றையே குளிர்விக்கும் படியாக இருந்தது அந்த குளிர்கால இரவு.
இப்படி நடுக்கத்துடன் துவங்குகிறது இப்பாடல்.

இம்மழை நடுக்கத்தை மட்டுமல்ல பெருக்கத்தையுமல்லவாக் கொடுக்கின்றது. அடுத்து மழைக்காலச் செழிப்பை மிகச் சிறப்பாக காட்டுகிறார் புலவர்.

முசுண்டைக் கொடியில் பொறிப்பொறியாக வெண்ணிறப் பூக்கள் பூத்துக் கிடக்கின்றன. அதனோடு புதர்தோறும் பீர்க்கம் பூ பொன் நிறத்தில் பூத்துக் கிடக்கிறது. ஈர மணலில் இருக்கும் பசுமை நிறக் கால்களை உடைய கொக்கு, சிவந்த கால்களை உடைய நாரை ஆகியவை எளிமையாகக் கவர்ந்துண்ணும்படி கயல் மீன்களை ஆற்று வெள்ளம் அடித்துவந்தது. வயலில் விளைந்திருக்கும் நெற்கதிர் வளைந்து தொங்குகிறது. பாக்கு மரத்தில் காய்கள் சதைப் பிடிப்புடன் முற்றித் தொங்குகின்றன. காட்டில் பூத்திருக்கும் குளிர்கால மலர்களில் பனித்துளிகள் தூங்குகின்றன. இப்படி மிகுந்த அழகையும் வளத்தையும் வாடைக்காலம் கொண்டு வருகிறது.

இப்பொழுது மழைப் பெய்தல் நின்று தூவலாக காணப்படுகிறது இதனை

பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண்மழை
அகல் இரு விசும்பில் துவலை கற்ப,   2  
என அழகாகக் காட்டுகிறார்

மிகுந்த நீரைப் பொழிந்து பொழிந்து பழகிய மேகம், இனிமேலும் பொழிதல் தவறு என உணர்ந்தனவாய் வறண்ட வெண்மேகமாகி, சிறிதாகத் தூவ பழகுவதுப்போல் பெய்ததாம் மழை. என்னே ஒரு நயம்.
அடுத்து ஊரையும், அங்கு வாழும் மக்கள் செய்கைகளையும் நமக்குக்காட்டுகிறார்.

மாட மோங்கிய மல்லன் மூதூர்
ஆறுகிடந் தன்ன அகனெடுந் தெருவிற்

பழமையான ஊர். வளமான ஊர். ஓங்கிய மாடமாளிகைகள். ஆறு கிடந்தது போல் அகன்ற தெருக்கள் இருக்கின்றன. முழு வலிமை பெற்று முறுக்கான உடல் கொண்ட மக்கள் குளிரில் முதுகு கூனி முடக்கத்துடன் நடமாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் வண்டு மொய்க்கும் தேறல் பருகியிருக்கிறார்கள் என்று காட்டுகிறார்.
பெண்களைக் காட்டும் போது,

மெத்தென் சாயல் முத்துறழ் முறுவல்
பூங்குழைக் கமர்ந்த ஏந்தெழில் மழைக்கண்

மென்மையான உடல்,முத்துப் போன்ற புன்னகை, காதுக் குழைகளை காணும் ஆவலோடு காதுவரை நீண்ட மழைக்கண்கள் என்கிறார். புலவரும் குளிரால் தாக்குண்டார் போலும், ஈரமான, எழிலான கண்களை மழைக்கண் என்கிறார்.

இவர்களால் மழைக்காலத்தில் காலையா மாலையா என அறிய முடியவில்லை. எனவே பூக்கூடையில் உள்ள பூக்கள் மலர்வதால் கணித்துத் தெரிந்துகொள்கின்றனர்.
பின்பு இரும்பால் செய்யப்பட்ட விளக்கில் திரியைத் திரித்து விட்டு விளக்கு ஏற்றுகின்றனர். நெல்லும் மலரும் தூவி வழிபடுகின்றனர். மாலைக்காலத்தை வழிபடுகின்றனர்.

அடுத்ததாக செல்வந்தர் வீடு இக்குளிர் காலத்தில் எவ்வாறு இருக்கிறது என நயம் படக் காட்டுகிறார்.

·         பாதுகாப்பாளர் இருக்கக்கூடிய செல்வர் மாளிகை.
·      
       பணியாளர்கள் கொள்ளுப் போன்ற உடலுக்குச் சூட்டைத்தரும் பொருள்களை அரைக்கின்றனர்.
·         வட்டமான சந்தனக் கல்லும் கட்டையும் அரைக்கப்படாமல் தூங்குகின்றன. (சந்தனம் குளுமைக்காகப் பூசப்படுவது ஆகையால் குளிர் காலத்தில் பயனற்றுக் கிடக்கிறது)
·         பெண்கள் அதிக பூச்சூடவில்லை. நெருப்பில் அகில் கட்டைத் துகள்களையும், வெண்ணிற அயிரையும் (சாம்பிராணியையும்) போட்டுப் புகைத்து கூந்தலை உலர்த்திக்கொண்டனர்.
·         கைத்தொழில் கலைஞன் கம்மியன் செய்து தந்த செந்நிற வட்ட விசிறி விரிக்கப்படாமல் சுருக்கித் தொங்கவிடப்பட்டிருந்தது. அதில் சிலந்திப் பூச்சி கூடு கட்டும் அளவுக்குப் பயன்படுத்தப்படாமல் கிடந்தது.
·         மேல்மாடத்தில் தென்றல் வீசும் சன்னல் திறக்கப்படாமல் தாழிட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்தது.
·         வாடைக்காற்றின் நீர்த் துவலை தூவிக்கொண்டே இருந்ததால் யாரும் கூம்பிய கன்னல் சொம்பில் குளிர்ந்த நீரைப் பருகவில்லை.
·         மாறாக அகன்ற வாயை உடைய தடவில் சுடச்சுட வெந்நீரைப் பருகினர்.
                                                                                                                                
சற்று இன்றைய நம் வீடுகளை எண்ணிப்பாருங்கள். குளிர் காலத்தில் நாம் என்னவெல்லாம் செய்வோம்?

·         குளிரூட்டும் கருவியை பயன் படுத்தாது, கொதிகலங்களைப்  பயன் படுத்துவோம்.
·         குளிர்பானங்களைத் தவிர்த்து சூடான காப்பி,டீ அருந்துவோம்.
·         கதவு சன்னல்களை அடைத்து சூடாக்கிக் கொள்வோம்.
·         கடற்கரைக்குச் செல்வதைத் தவிர்த்து மூடிய திரையரங்கு அல்லது பெரிய கடைகள் கொண்ட உள்ளரங்குகளில் பொழுது போக்குவோம்.
·         குளிருக்கு அடக்கமாக உடை உடுத்துவோம்.
·         சூடான நீரைப் பருகுவோம்.
·         மின்விசிறி நம்வீட்டிலும் சுழலாமல் நிற்கும்.
·         உணவிலும் குளிச்சிதரும் பொருட்களைத் தவிர்ப்போம்.
·         உள்ளரங்கு விளையாட்டுகள் விளையாடத் துவங்குவோம்

இப்படி இப்பாடலில் கூறியது போல் இன்றும் குளிர்காலம் நம் பழக்கவழக்கங்களை  மாற்றத்தான் செய்கிறது. ஆனாலும் அதை ஒரு நயமிக்க கவிதையாக புனைவோர் இல்லாமல் போனதுதான் வருத்தம்.

மக்களின் அன்றாட வாழ்க்கையை மிக நேர்த்தியாக படம் பிடித்தது போல் நம் முன்னே காட்டுகிறார் புலவர். நாமும் அதே வீட்டில் இருப்பது போல் அக்குளிரை உணர்வோம். அதனால் அத்தலைவியின் உணர்வையும் புரிந்து கொள்வோம் அல்லவா?

இதோ, அடுத்ததாக அரண்மனைப் போன்ற அரசியின் இல்லத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார் புலவர். கொஞ்சம் எட்டித்தான் பார்ப்போமே!

…………………………………………மாதிரம்
விரி கதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்,
இரு கோல் குறி நிலை வழுக்காது குடக்கு ஏர்பு
ஒரு திறம் சாரா அரை நாள் அமயத்து, 75
நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு,
தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி,
பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து,

திசை எங்கும் விரிந்த கதிர்களைப் பரப்பியச் சூரியன் மேற்கு நோக்கி உயர்ந்து எழ,  இரு கோலினை நட்டு அதன் நிழல் ஒரு பக்கம் சார்ந்துவிழாத நண்பகல் பொழுதில், கட்டடக்கலை பற்றிய நூல்களைக் கற்றுத் தேர்ந்தோர், நுட்பமாக நூல் பிடித்துப் பார்த்து, திசைகளைத் தெரிந்து, அத்திசைகளுக்குரிய தெய்வங்களையும் கருத்தில் கொண்டு, பெரிய புகழினையுடைய மன்னர் வாழ்வதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்ட அரண்மனை. இங்கு கட்டிடக்கலை அறிவை மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டியிருக்கிறார் புலவர்.

இப்படி மிகச் சிறப்பான முறையில் கட்டப்பட்ட அரணமனையின் தோற்றம், அதன் கோபுர வாயில், முற்றம், முன்வாயில், அங்கு எழும் ஓசைகள் ஆகியாவற்றைக் கூறி அந்தபுரம் பற்றி காட்டுகிறார் புலவர்.

அரசியின் மனை மலைப் போல்  உயர்ந்து தோன்றுகிறது. மலைமேல் வானவில் கிடப்பது போல் துணியாலான பலவண்ணக் கொடிகள் அங்கு பறந்து கொண்டிருந்தன. அது வெள்ளி போல் சுண்ணாம்பு அடிக்கப்பட்ட வெள்ளை மாளிகை. சுவர் செம்பால் செய்யப்பட்டது போல் இருந்தது. அதில் வளைந்து வளைந்து கொடி படர்வது போல் மணிகள் பதிக்கப்பட்டிருந்தன. அந்த மனைக்குக் கருவறை என்று பெயர்.

அதில் தலைவிக்கான வட்டமான கட்டில் உள்ளது, அதன் அமைப்பு, அலங்காரம் ஆகியவற்றை விவரித்துக் கூறுகிறார் புலவர்,

குற்றமற்ற பல்நிறம் ஊட்டப்பட்ட மயிர்க்கற்றைகள் விரவி உருவாக்கிய  கட்டிலின் விரிப்பில் சிங்கம் வேட்டையாடுதல் போன்ற உருவினைப் பொறித்திருந்தனர்.  அதன் மீது அகன்ற காட்டிலே மலரும் முல்லையோடு பல்வேறு மலர்களையும் இடையே சேர்த்துப் பரப்பிய மென்மையான போர்வையை விரித்திருந்தனர்.  இப்படுக்கைச் மேலும் சிறப்புற, காதலோடு துணையைப் புணர்ந்த அன்னங்களின் வெண்மையான சிறகினை இட்டுச் செய்த இரண்டு மெத்தையைக் கட்டிலின் மீது பரப்பினர்.  அதில் தலையணைகளையும் இட்டிருந்தனர்.  மலரின் இதழ்கள் போன்று அமைந்த கஞ்சியிடப்பட்டுத் துவைத்து மடித்த ஆடையினைப் படுக்கையின் மீது விரித்திருந்தனர். வெற்றி பல கண்ட செல்வச் செழிப்பான மன்னனின் தலைவியல்லவா அவள்? அதனால் அவள் இருக்கும் அரணமனையும் அலங்காரமாக இருந்திருக்கிறது. 

என்றாலும் தலைவனைப் பிரிந்திருந்த தலைவி, நீண்டு தொங்கும் நுண்ணிய குழையினைக் களைந்துவிட்டு, குழையின்றி தாழ்ந்து தொங்கும் காதின் சிறு துளைகளில் தாளுருவி என்னும் சிறிய காதணியை அழுத்தியிட்டிருந்தாள்.  பொன்னால் செய்யப்பட்ட வளையல் அணிந்த முன் கைகயில் வலம்புரிச் சங்கால் செய்த வளையலை அணிந்திருந்ததோடு, காப்பு நூலும் கட்டியிருந்தாள்.  வாளை மீனின் பிளந்த வாயை ஒத்து விளங்கிய வளைந்த மோதிரத்தை அணிந்த சிவந்த விரலில், செந்நிறமுடைய சிறிய மோதிரத்தைச் செருகியிருந்தாள். பூ வேலைப்பாடு அமைய உருவாக்கப்பட்ட பட்டாடை உடுத்தியிருந்த உயர்ந்த வளைவினையுடைய அல்குலில் மாசு படிந்த அழகிய நூலால் நெய்யப்பட்ட ஆடையினை உடுத்தியிருந்தாள். 

இவ்வாறு, ஒப்பனை செய்யாத ஓவியத்தைப் போன்ற தலைவி, ஒப்பனைமிக்கக் கட்டிலில் தான் ஒப்பனை ஏதுமின்றி இருந்தாள்.

தோழிகளும் செவிலியும் அவளைத் தேற்றுகிறார்கள். ஆனாலும் தேறாதாளாய் மிகவும் கலங்குகிறாள்.
கட்டிலின் மேல் விதானத்தில் திங்களோடு என்றும் பிரியாது நிலைபெற்று விளங்கும் உரோகிணி எனும் நாள்மீனின் சித்திரம்  வரையப்பட்டிருந்தது.  அதனைக் கண்ட  தலைவி, தானும் உரோகிணி போன்று கணவரைப் பிரியாமல் வாழும் பேற்றினைப் பெறவில்லையே என்று பெருமூச்சுவிட்டாள். அவளின் குவளை மலர் போலும் இமைகளில் தங்கிய கண்ணீர் மிகுந்து விழ, அதனைத் தன் சிவந்த விரலால் கடைக்கண்ணில் ஒன்று கூட்டி, சில துளி கண்ணீரை விரலால் தெறித்துத் தனிமைத் துயரில் வருந்தினாள்.

செவிலியரும் தோழிகளும்

நலங்கிளர் அரிவைக்கு
இன்னா அரும்படர் தீர, விறல் தந்து
இன்னே முடிக தில் அம்ம      (166 - 168)

அன்பு மிகுந்த கலைவிக்குத் துன்பம் தருகின்ற ஆற்றமுடியாத வருத்தம் தீரும் வகையில், தலைவனுக்குப் போரில் வெற்றியைத் இப்பொழுதே தருக என்று வெற்றியைத் தரும் கொற்றவையை வேண்டினர் என்பதாக அரண்மனைக்காட்சி சொல்லப்பட்டிருக்கிறது.

இனி அரசனின் நிலை

………………………மின் அவிர்
ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை
 நீள் திரள் தடக்கை நில மிசைப் புரள,                                                          
களிறு களம் படுத்த பெருஞ்செய் ஆடவர்,
ஒளிறு வாள் விழுப்புண் காணிய, புறம் போந்து,

ஒளி வீசும் முகபடாம் விளங்கும் போர்த் தொழில் பழகிய யானையின் நீண்ட திரண்ட கை, நிலத்தில் புரளுமாறு வெட்டி வீழ்த்திய பெரும் மறச்செயலைச் செய்தவர் மறவர்.  அவ்வீரர்கள், போரிலே வாளினால் பட்ட விழுப்புண்களைக் காண்பதற்றகாகப் பாசறையிலிருந்து வெளியே சென்றான் தலைவன்.

தலைவன் தன் இடப்பக்கத்து வீழ்ந்த அழகிய ஆடையினை எடுத்துத் தழுவி அணைத்துக் கொண்டான்.  தனது வலது கையினை வாளைத் தோளிலே கோர்த்துள்ள வலிமையான வீரனின் தோளின்  மேலே வைத்துக் கொண்டு, போரில் விழுப்புண்பட்ட வீரர்களின் மனம் விரும்பும் வகையில் முகம் மலர நோக்கினான்.  இவ்வாறு வீரர்களைப் பார்த்த வரும் மன்னன் மேல் மழைத்துளி படாதவாறு, நூலால் கோர்க்கப்பட்ட முத்துமாலைகள் தொங்கும் வெண் கொற்றக் குடை மறைத்து நின்றது.  நள்ளென்ற இரவுப் பொழுதிலும் துயில் கொள்ளாது பாசறையில் இருக்கிறான் என்பதாக இரண்டாம் காட்சி முடிகிறது.

நலங்கிளர் அரிவைக்கு மட்டுமல்ல மன்னனுக்கும்

…………………………விறல் தந்து
இன்னே முடிக தில் அம்ம      (166 - 168)

வெற்றியைத் தந்து இப்பொழுதே இவர் துயர் முடிப்பாயாக! என்று முன்னதில் இருந்து முடிவினை பெற வைக்கிறார் புலவர்.

மன்னனுக்கு வெற்றியும் கிட்டிவிட்டது,  தலைவியோ காத்திருக்கிறாள். இவர்கள் இன்னல் தீர, மன்னன் இல்லம் ஏகுவான் என்ற நம்பிக்கையோடு நாமும் சற்று குளிர்காய்வோம்….

இந்நூலிலிருந்து மனத்தை அகற்ற முடியாமல்…

அடுத்த பதிவை விரைவில் தரும் ஆவலோடு

அன்புடன்
உமா…