Sunday, 21 April 2019

பத்துப் பாட்டு - முல்லைப்பாட்டு


நாம் அடுத்து காண இருப்பது...
பத்துப்பாட்டு தொகை நூல்களில் 103 அடிகள் கொண்டு, அளவினால் சிறியதான முல்லைப்பாட்டு. இது ஆசிரியப்பாவில் அமைந்த நூல்.
முல்லைப்பாட்டு வரிகளால் சிறியது ஆனாலும் அதில் மிகச் சிறப்பான வகையில் காட்சி சித்திரங்கள், தமிழரின் பண்பாட்டுச் சித்தரிப்புகள், போன்றவை நயம் மிக்க வகையில் எடுத்துக் கூறப்பட்டுள்ளமை அறிந்து மகிழத்தக்கது.

இதனை இயற்றியவர் நப்பூதனார். இவர் சோழ நாட்டின் தலைநகரமாக விளங்கிய காவிரிப்பூம்பட்டினத்தின் பொன் வணிகரின் மகன் என்று அறிகிறோம். இதன் மூலம் அக்காலத்தில் பொன்னை தரம் பிறித்தறிந்து வாணிகம் செய்த பொன் வணிகர் இருந்தமை நாமறிய முடிதல் சிறப்பு.

இதன் பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று அறியப்பட்டாலும் இப்பாடல் அகப்பொருள் பற்றியது என்பதால் தலைவனது பெயர் கூறப்படவில்லை.

இவ்வரசன் சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையனையும், சோழன் கிள்ளிவளவனையும் ஐந்து வேளிர் குறுநில மன்னர்களையும் (திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன்) சோழ நாட்டில் உள்ள தலையாலங்கானத்தில் தோற்கடித்தான் என்பது வரலாறு.

இப்பாட்டில் முல்லை நிலத்தின் முதற்பொருள், கருப்பொருள் மற்றும் உரிப்பொருள் சிறப்பாக அமைய கவிநயத்துடன் பாடியிருப்பது போற்றத்தக்கது.

முல்லை நிலத்துக்குரிய உரிப்பொருளான பிரிவை ஆற்றியிருத்தலாகிய ஒழுக்கத்தை கூறுவதால் இது முல்லைப்பாட்டு எனப்பட்டது.

முல்லை நிலத்தின் சிறப்பே கற்புதான். எனவேதான் ‘முல்லை சான்ற கற்பின்’ என்று சிறப்பிக்கப்பட்டது.

‘கற்பெனப்படுவது சொற்திறம்பாமை’ என்பது ஔவையாரின் மொழி.

கற்பு என்பது சொல் தவறாமல் நடத்தல். அது இருபாலருக்கும் பொதுவானது என்பதை முல்லைப்பாட்டு மிகச் சிறப்பாகக் காட்டுகிறது.
தலைவன் போர் காரணமாக பிறிந்து இருக்கிறான். அவன் வருவதாகச் சொல்லிச் சென்ற கார்காலம் துவங்குகிறது. தலைவன் இன்னும் வரவில்லையென்றாலும் அவன் வரும்வரை ‘வருந்தேன்’ என்று சொன்ன சொல் தவறாத வண்ணம்

நெஞ்சாற்றுப்படுத்த நிறைதபு புலம்பொடு நீடு நினைந்த தேற்றியும்

என்று தலைவி தன் நெஞ்சைத் தேற்றுவதாக காட்டியிருப்பதும்,

கார்காலம் துவங்கியதால்

துனை பரி துரக்கும் செலவினர்’   

என்று விரைவாகச் செல்லும் குதிரையை இன்னும் விரைந்துச் செலுத்துபவனாக தலைவனைக் காட்டியிருப்பதும் கற்பின் இலக்கணத்தை தலைவன் தலைவி வாயிலாக காட்டப்பட்டுள்ளதையும் கற்பு இருபாலருக்கும் பொதுவானது என்பதையும் குறிப்பதாக உள்ளது.

இனிய இல்லறத்திற்கு அடிப்படையாக தலைவனும் தலைவியும் மனமொத்து நடக்கும் மிக அழகிய உள்ளப்பாங்கே கற்பாகும். ஆயின் இது இன்று உடல் சார்ந்த ஒழுக்கமாகவும், பெண்ணுக்கே விதிக்கப்பட்டதாகவும் அறியப்படுதல் சிந்திக்கத்தக்கது.

முல்லை நிலம் என்பது காடும் காடு சேர்ந்த இடமும். முல்லை நிலத்திற்கான காலம் கார் காலம். சிறுபொழுது மாலை. முல்லை நிலத்துக்குரிய கடவுள் திருமால்.

முல்லை நிலத்தில் கார் காலம் துவங்குகிறது இதுவே இப்பாடலின் துவக்கமாக அமைந்துள்ளது.

நனந்தலை உலகம் வளைஇ, நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக்கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல,
பாடு இமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி, 
பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை (1-6)

இங்கு முல்லை நில கடவுள் திருமாலின் தோற்றத்தையும் கார்கால மழைப் பொழிவையும் அழகாக காட்டியிருக்கிறார் ஆசிரியர்.

இந்த உலகம் முழுவதும் நிறைந்து, வலப்புறமாக சுழி கொண்ட வலம்புரிச் சங்கையும் சக்கரத்தையும் கையில் கொண்டு மகாபலி சக்கரவர்த்தி இட்ட நீரைப் பெற்றதும் விஸ்வரூபமெடுத்து நின்ற திருமாலைப் போல் முகிலானது ஒலி முழங்குகின்ற குளிர்ந்த கடலிலிருந்து நீரைப்பெற்று வலப்புறமாகச் சுழன்று மலைகளை இடமாகக் கொண்டு எழுந்து மிகுந்த மழையைப் பொழிந்த சிறிய புல்லிய மாலை நேரம், பிரிவுத் துயரத்தைத் தரும் மாலை நேரம்...

என்று மிகச் சிறப்பான கார்காலக் காட்சிப்படுத்தலோடுத் துவங்குகிறது இப்பாடல்.
இதில் திருமால் வலம்புரிச் சங்கும் சக்கரமும் ஏந்தியவனாகவும், மகாபலியிடம் மூன்றடி மண்கேட்ட வாமணாவதார புராணக்கதையும் காட்டப்பட்டுள்ளதால் இப்பாடல் தமிழர்களிடம் சமய கருத்துகள் தோன்றியப் பிறகு எழுதப்பட்டது என்பதை அறியமுடிகிறது.
மழைப்பெய்யும் அறிவியலும் சிறப்பாகக் காட்டப்பட்டிருப்பது அறியத்தக்கது.

மேலும் இப்பாடலில் முல்லைத் திணைக்குரிய கருப்பொருள்களான மக்கள் மிலேச்சர், யவனர், பணிபுரியும் பெண்கள் நாழிகைக் கணக்கர், காவலர் பறவை மயில், விலங்குகள் மான், யானை, பசு ஆகியன, காயா கொன்றை காந்தள் கோடல் முல்லை போன்றப் பூக்கள், வரகு உணவு ஆகியன மிக அருமையாக அமையுமாறு பாடப்பட்டுள்ளது.

முல்லை நிலத்திற்கான புறத்திணை வஞ்சித் திணை வஞ்சித் திணை என்பது மன்னன் போருக்குச் செல்லுதலை கூறுவது. இப்பாடலிலும் வஞ்சித் திணையின் பாசறை நிகழ்வுகள் கூறப்பட்டுள்ளன.

இனிப் இப்பாட்டின் சில வரிகளை பார்ப்போம்..

அருங்கடி மூதூர் மருங்கில் போகி,
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு
நாழி கொண்ட நறு வீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கைதொழுது,
பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்ப, (7-11)
.
அரிய காவலையுடைய பழைய ஊர். அங்கு யாழிசைப்போல் வண்டுகள் ரீங்காரமிடுகின்றன என மிகுந்த இரசனையோடு துவங்கும் இவ்வரிகளில் இரண்டு பழக்கங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.

பெண்கள் நாழியில் நெல்லை கொண்டுச் சென்று நறுமணமிக்க முல்லைமலர்த் தூவி கையால் தொழுதல், மற்றும் விரிச்சி கேட்டல்.

இறைவனை கைக்குவித்து தொழுதல் அன்றும் வழக்கமாக இருந்திருக்கிறது. விரிச்சி என்பது நன்மொழி. முதுமக்கள், நல்லோரின் வாய்மொழி நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையும் காட்டப்பட்டுள்ளது.

சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறு துயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள், “கைய
கொடுங்கோல் கோவலர் பின் நின்று உய்த்தர,   15
இன்னே வருகுவர் தாயர்என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம், அதனால்,
நல்ல நல்லோர் வாய்ப்புள்,

முல்லை நிலத்தின் மக்கள் ஆயர். இவ்வாயர் பெண்கள் மிகுந்த போற்றுதலுக்குரியவராய் காட்டப்படுகிறார்கள். எனவே ஆயர் பெண் கன்றிடம் சொன்ன வார்த்தையையே விரிச்சியாக கொண்டு

நன்னர் நன்மொழி கேட்டனம், அதனால்,
நல்ல நல்லோர் வாய்ப்புள்
தலைவியைத் தேற்றுகின்றனர்.

சின்ன கயிற்றில் கட்டப்பட்ட கன்றானது கத்துகிறது. அதைக்கேட்ட ஆயர் பெண்ணானவள், நடுங்குகின்ற குளிரால் தன் கையால் தோளை அணைத்தவாறு இருப்பவள் அக்கன்றின் தோளைச் சுற்றி கையால் அணைத்து கோவலர் தம் கொடுங்கோலால் தட்டியவாறே அழைத்துவர உன் தாயான பசு உடனே வந்துவிடும் என்று கூறுகிறாள்.
இதைக் கேட்ட தலைவியின் சுற்றம் அதை நல் நிமித்தமாகக் கொண்டு தலைவன் உடனே வருவான் என தேற்றுகின்றனர்.

இங்கு கன்றை கயிற்றால் கட்டி வைக்கும் பழக்கமும், கோவலர் மாடு மேய்க்க கொடுங்கோல் பயன் படுத்தியமையையும் கூட அறியமுடிகிறது. மனிதரிடம் மட்டுமல்லாமல் விலங்குகளிடமும் அவர் அன்பு பூண்டு இருந்ததை இதன்மூலம் நாம் காணும் போது தமிழரின் பண்பாட்டுச் சிறப்பை உணரமுடிகிறது.
இவ்வளவுச் சொல்லியும் தலைவி ஆறுதல் அடையாது

…………………….கலுழ் சிறந்து
பூப்போல் உண்கண் புலம்பு முத்து உறைப்ப

மிகவும் கலங்கி தன் பூப்போன்ற மையிட்ட கண்களிலிருந்து முத்துப் போன்ற கண்ணீரை உகுக்கிறாள்.

இவள் பாண்டிய நாட்டுத் தலைவியல்லவா? அதனால் இவள் கண்ணீரையும் முத்தாக காட்டுகிறார் ஆசிரியர். அவரே பொன் வணிகனாரின் மகனல்லவா! அதனால் கூட கண்ணீரும் முத்தாகத் தெரிந்ததோ! புலவருக்கு. என்னே அழகு!

காட்டில் பிடவ கொடிகளைக் கொண்டு பாசறை அமைக்கிறார்கள். அங்கு அரசனுக்கு படைகளுக்கு மத்தியில் திரைகளால் பிரிக்கப்பட்ட தனிவீடு அமைத்தனர், அங்கு

உரையா நாவின்   65
படம் புகு மிலேச்சர் உழையர் ஆக,

வாய்பேசமுடியா மிலேச்சர் காவலிருந்தனர் என்பதை காண்கிறோம். இரகசியம் காத்தல் பொருட்டு வாய்ப் பேச முடியாதார் மன்னனின் பள்ளியறைக்கு காவலிருந்தனர் என்பதை அறியலாம்.

குறுந்தொடி முன் கை கூந்தல் அம் சிறுபுறத்து,   45
இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள்
விரவு வரிக் கச்சின் பூண்ட மங்கையர்,
நெய் உமிழ் சுரையர், நெடுந்திரிக் கொளீஇ,
கை அமை விளக்கம் நந்துதொறும் மாட்ட

என்ற வரிகளில் பெண்களும் போர்காளத்தில் இருந்தனர் என்பதும் அவர்கள் கச்சில் கூரிய ஒளிவீசும் வாளைக் கட்டியிருந்தனர் என்பதும், இவர்கள் பாவைவிளக்குகளில் நெய்கொண்டத் திரியைக் கொளுத்தி அணையாமல் காத்தனர் என்பதும் பெறப்படுகிறது.
மேலும் பாசறையில்
           
பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள்,
 
பொழுதை அறிந்துச் தவறாது சொல்லும் நழிகைக் கணக்கர்,

வலி புணர் யாக்கை வன்கண் யவனர்

வல்லிமையான உடலைக் கொண்ட கொடூரமான கிரேக்கர் ஆகியோர் இருந்ததையும் அறிகிறோம்.

பாசறையில் மன்னனின் மனநிலை அழகாகக் காட்டப்பட்டுள்ளது.

முதல் நாள் மன்னன் தன் படைக்கு நேர்ந்த சேதத்தைப் எண்ணுகிறான்.
தனது யானைப்படைக்கும் குதிரைக்கும் வீர்ர்களுக்கும் ஏற்பட்ட துன்பத்தை காண்கிறான் என்றாலும்
மண்டு அமர் நசையொடு, கண்படை பெறாஅது
என்று
அரசன் போரை விரும்பியவனாக துயிலாமல் இருந்தான் எனறே காட்டுகிறார். அடுத்து

முரசு முழங்கு பாசறை
இன் துயில் வதியுநன் …. ….

பகயை வென்று வாகைச்சூடியதால் முழங்குகின்ற முரசைனைக் கொண்ட பாசறையில் மன்னன் இனிதாக துயின்றான் என்றும் காட்டுகிறார், வெற்றிக்கு முன்னும் பின்னதுமான மன்னனின் மனநிலை அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
முல்லைப்பாட்டின் வழி
அரசனுக்கு நால்வகை படைகளும் இருந்ததை அறிகிறோம்.

எடுத்துஎறி எஃகம் பாய்தலின், புண்கூர்ந்து,
பிடிக்கணம் மறந்த வேழம்
என்பதால் யானைப் படையும்…

தேம்பாய் கண்ணி நல்வலம் திருத்தி,
சோறுவாய்த்து ஒழிந்தோர் உள்ளியும்;  (71 - 72)
என்பதால் காலாட்படையும்,

தோல்துமிபு, பைந்துனைப் பகழி மூழ்கலின்,
செவி சாய்த்து உண்ணாது உயங்கும் மா
என்று உணர்த்துவதால் குதிரைப் படையும்,

வினை விளங்கு நெடுந்தேர்’ (103)
என்பதால் தேர்ப்படையும் இருந்ததாக முல்லைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆசிரியரின் பாசறைப்பற்றியச் துல்லியமானச் செய்திகள் மற்றும் போர் பற்றியச் செய்திகளிலிருந்து இவர் மன்னர்களுடன் போரில் இருந்தார் என்றும், இவரே ஒரு படைவீர்ர் என்றும் ஆராச்சியாளர்கள் கருதுகின்றனர்..

வீட்டில் தலைவியும், பாசறையில் அரசனும் பிரிவை ஆற்றியிருக்கிறார்கள். தான் நினைத்த வெற்றியை அடந்த மன்னன் அடர்ந்த முல்லை  நிலகாட்டு வழியாகத் திரும்புகிறான். அங்கு நுண் மணலில் நெருங்கின இலையையுடைய காயா மலர்கள் கண்மைப் போல மலர்ந்துள்ளன, தளிரையும் கொத்துக்களையுமுடைய சரக்கொன்றை மரங்கள் நல்ல பொன்னைப் போன்ற மலர்களைக் கொட்டியிருக்கின்றன, வெண்காந்தளின் குவிந்த மொட்டுக்கள் அழகிய கைகளைப் போல் அவிழ்ந்துள்ளன, இதழ்கள் நிறைந்த செங்காந்தள் குருதி போல மலர்ந்துள்ளன. இவ்வாறு காடு செழித்த சிவந்த முல்லை நிலத்தின் பெருவழியில் மழைப்பொழிந்து கார்கால துவக்கத்தை காட்டுகிறது. அங்கு கொம்புகளைக்கொண்ட ஆண்மானுடன் பெண்மானும் துள்ளி ஆடுகிறது. இக்காட்சியெல்லாம் தலைவனுக்குத் தலைவியின் நினைவை ஊட்டுகின்றன. எனவே

முதிர் காய் வள்ளியம் காடு பிறக்கொழிய,
துனை பரி துரக்கும் செலவினர்,
வினை விளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே.
.
முதிர்ந்த காயையுடைய வள்ளியங்காடு பின்னால் மறையும் படியாக, விரைந்து செல்லும் குதிரையைத் தேரோட்டி மேலும் தூண்டிச் செலுத்த,  உயர்ந்த தேரில் பூட்டிய போர்த் தொழிலில் சிறந்த குதிரைகள் வந்தன..

என்று மிகச் சிறந்த முல்லை நிலக் காட்சியோடு முடிகிறது முல்லைப் பாட்டு.

தமிழர்களின் பண்பாட்டை, பழக்க வழக்கங்களை, சிறந்த வாழ்வியல் நெறிகளை அழகான காட்சி படுத்தலோடு சித்தரிக்கும் இம்முல்லைப்பாட்டு நமக்கு கிடைக்க அரும் பாடுபட்டு பதிப்பித்த உ.வே. சாமிநாத அய்யர் அன்று அடைந்த மகிழ்ச்சியை அவரது வாக்கிலேயே கூறவேண்டும்… அவருக்கு முல்லைப்பாட்டின் ஓலைச் சுவடி பெரும் தேடலுக்குப்பின் கிடைக்கிறது…

உ.வே.சா. எழுதுகிறார், “எனக்கிருந்த ஆவலினாலும் வேகத்தினாலும் நிலா வெளிச்சத்திலேயே அதைப் பிரித்துப் பார்த்தேன்.  சட்டென்று முல்லைப் பாட்டுஎன்ற பெயர் என் கண்ணிற்பட்டது அப்போது எனக்கு உண்டான சந்தோசத்திற்கு எல்லையில்லை”.

அவரைப் போலவே இம்முல்லைப் பாட்டைப் படித்ததும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை.

இவ்விலக்கியத்தை நமக்குத் தந்த உ.வே.சா போன்ற தமிழறிஞர்களையும், சங்க இலக்கியங்களைப் படிக்கும் ஆவலை என்னுள் தோற்றுவித்த எனது அலுவலகமான சென்னைத் துறைமுகத்தின் தலைவர் அவர்களையும் நான் என்றும் மரியாதையோடு வணங்கி மகிழ்கிறேன்…

இக்கட்டுரையினால் ஒருசிலரேனும் இம்மகிழ்வை தாங்களும் அடைந்தால் அதுவே இக்கட்டுரையின் பயன்..
விரைவில் அடுத்தப் பதிவைத் தரும் ஆவலோடும்

அன்புடனும்
சி.உமா…

Thursday, 18 April 2019

'அணியம்' சித்திரை சிறப்பிதழில் வெளிவந்த கட்டுரை


வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!    (பாரதியார்)
சி.உமா, பொது நிர்வாகத் துறை

தமிழ் தொன்மையான மொழி. இதன் சிறப்பை உணரவும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழரின் நாகரீகம், பண்பாடு, வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை உலகம் தெரிந்து கொள்ளவும், சங்க இலக்கியங்கள் பெரிதும் உதவுகின்றன. தமிழில் எண்ணிறந்த இலக்கியங்கள் இருந்திருக்கின்றன என்றாலும் பேச்சு வழக்காகவே இருந்தமையாலும் ஓலைகளில் எழுதப்பட்டமையாலும் முறையாக பாதுகாக்கப்படாததாலும் கால வெள்ளத்தில் பல அழிந்துவிட்டன. இன்று நாம் அறிய கிடைத்துள்ள இலக்கியங்கள் அவற்றின் ஒரு பகுதியே. ஆயினும் இவற்றைக் கண்டறிந்து தொகுத்து அச்சில் ஏற்றி தமிழ் நிரந்தரமாக வாழ, வளர வழிவகுத்தவர் பலர். இப்படி தமிழுக்கு சீரிய தொண்டாற்றியவர்கள் பற்றி நாம் அறிய வேண்டியது மிகவும் அவசியமானது. இதுவே இக்கட்டுரையின் நோக்கம்.
இன்றுஒரு மனிதன் தன் வாழ்நாளில் முயன்று படித்தாலும் முழுவதுமாகப் படித்துவிட முடியாத அளவிற்கு மிக அதிக இலக்கிய வளம் கொண்டது தமிழ்என்று சொல்லும் படி இலக்கியங்கள் மீட்கப் பட்டதில் தமிழ் அச்சுக் கலையின் தோற்றமும் வளர்ச்சியும் மிக முக்கியமான காரணமாக விளங்குகிறது.   அச்சுக்கலை உலகில் அறிமுகமான போது கிருஸ்துவ மத போதகர்களால் தென்னிந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் இருந்துதான் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு அச்சுக் கலைப் பரவியது.
மத போதகர்கள் தம் காரியத்திற்கு உள்ளூர் மக்களின் மொழி அவசியம் என்பதை உணர்ந்து தமிழ் மொழியைத் தாமே பயின்றதோடு அச்சுக்கலையையும் அறிமுகப்படுத்தினர். தம் மதம் பரப்ப வந்தவர்கள் தமிழ் மணம் பரப்பி நின்றதனை வரலாறு நமக்குச் சொல்லும். முதலில் மத கோட்பாடுகளே அச்சிடப்பட்டாலும் பிறகு வீரமாமுனிவர் போன்றவர்களால் மற்ற தமிழ் நூல்களும் அச்சிடப்பட்டன.
வீரமாமுனிவர்
மதம் பரப்பும் நோக்கோடு வந்த இத்தாலியரான (கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி) வீரமாமுனிவர் தமிழ் வரிவடிவத்தில் பல மாற்றங்களைச் செய்தார். குறில் நெடில் வேற்றுமை படுத்தல், மெய் எழுத்தில் புள்ளி சேர்த்தல் என்று பல சீர்திருத்தங்கள் செய்ததோடு அகரமுதலி, கொடுந்தமிழ் இலக்கணம் ஆகியவற்றை வெளியிடவும் செய்தார். தேம்பாவனி இவர் இயற்றிய காவியம். தமிழ் மொழியை தாய் மொழியாக கொள்ளாத ஒருவர் இயற்றிய காவியம் என்பது இதன் சிறப்பு. பல அரிய சுவடிகளைத் தேடி அச்சிட்டதால் இவர் சுவடித் தேடும் சாமியார்என்றும் அழைக்கப் பட்டார். இவர் செய்த சீர்த்திருத்தங்களால் தமிழ் அச்சுக்கலை மிகுந்த வளர்ச்சி அடைந்தது. அதனால் தமிழ் மொழியும் பயனடைந்தது. முதலில் செவிவழிக் கதைகளான பரமார்த்த குருவின் கதை, பஞ்சதந்திர கதைகள், விக்கிரமாதித்தன் கதை ஆகியவை தமிழில் அச்சிடப்பட்டன. அதே நேரத்தில் திருக்குறள், நாலடியார் போன்றவையும் அச்சிடப்பட்டன.

ஆறுமுக நாவலர்
மதபோதகர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அச்சுச் துறையில் ஆறுமுக நாவலர் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தார். சைவ சித்தாந்தியான இந்த இலங்கைத் தமிழர் பழந்தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தொகுத்து பதிப்பித்தார். தமிழ் நூல்களை முதன் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர் இவர். திருக்குறள் பரிமேலழகருரை, சூடாமணி நிகண்டு, நன்னூற் காண்டிகை, போன்ற இலக்கிய, இலக்கண நூல்களையும் திருவாசகம், திருக்கோவையார் திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் போன்ற நூல்களையும் பிழையின்றிப் பதித்தவர்.
பிற்காலத்தில் சென்னையில் பல அச்சுக்கூடங்கள் நிருவப்பட்டு, அச்சுத்துறை வணிக ரீதியாக வளர்ந்தது. இக்காலக்கட்டத்தில்
சி.வை.தாமோதரம் பிள்ளை
சி. வை. தாமோதரம்பிள்ளை பண்டைய சங்கத் தமிழ் நூல்கள் செல்லரித்து அழிந்து போகாது, தமது அரிய தேடல்கள் மூலம் அவற்றை மீட்டெடுத்து, காத்து, ஒப்பிட்டு பரிசோதித்து, அச்சிட்டு பெரும் பணிசெய்தார்.  தமிழின் நூல்கள் தொடர்ந்து தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும். தமிழின் பெருமையை, அருமையை தமிழர் உணர்ந்து உயர வேண்டும் என்ற அரிய நோக்கங்களோடு தொண்டாற்றியவர் இவர். இதனால் தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி என அறியப்பட்டவர்.
உ.வே.சாமிநாத அய்யர்
உ. வே. சாமிநாதையர் சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநாநூறு பத்துப்பாட்டு, சீவகசிந்தாமணி போன்ற சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், எனப் பலவகைப்பட்ட 90க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளுக்கு நூல்வடிவம் தந்து அவற்றை அழிவில் இருந்து காத்தது மட்டுமின்றி அடுத்த தலைமுறையினர் அறியத் தந்தார். சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும், புதியதும் பழையதும், நல்லுரைக் கோவை போன்ற பல உரைநடை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவற்றை அச்சிட இவர் பல சிரமங்களைச் சந்தித்தார். பலர் பணம் பெற்றுக்கொண்டும் சுவடுகள் தறாமல் ஏமாற்றினர். சில தனியாரிடமிருந்த சுவடுகள், அச்சுப்பிரதிகள் அக்கரையின்மையாலும் அவற்றின் பெருமை உணரப்படாததாலும் பழையப் பொருட்களோடு போடப்பட்டு பாதியழிந்த நிலையிலிருந்தன. என்றாலும் மிகுந்த வறுமைக்கு இடையிலும் இச்சுவடுகள், பழைய அச்சுப் பிரதிகள் ஆகியவற்றை சேகரித்து பதிப்பித்தார். பதிப்பிக்கும் பொழுதும் மிகுந்த அக்கரையோடு பல அருஞ்சொற்களுக்கு விளக்கத்தையும் உரைகளில் காணப்பட்ட பாட பேதங்களையும் மிகத் தெளிவாக தனியாக எடுத்துக் காட்டி பதிப்பித்தார். இதனால் இலக்கியத்தின் மூலப் பொருள் மயக்கமில்லாமல் அச்சிடப்பட்டது. தமது வாழ்நாளில் தமிழ் இலக்கியங்களைப் புதிப்பித்து பதிப்பதை பற்றி மட்டுமே சிந்தித்தவர் தமிழ் தாத்தாஎன்று அழைக்கப்படும் உ.வே.சாமிநாதய்யர்.
ச. வையாபுரிப்பிள்ளை
ச. வையாபுரிப்பிள்ளை  தமிழ் நூற்பதிப்புத் துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர். தமிழில் சிறந்த புலமை பெற்றவர். ஆய்வுக கட்டுரையாளர், திறனாய்வாளர், கால மொழி ஆராய்ச்சியாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், கதை,கவிதைகள் புனையும் திறம் படைத்தவர் எனப் பல்முகப் பரிமாணங்களைக் கொண்டவர். நாற்பதுக்கும் அதிகமான நூல்களையும் நூற்றுக்கணக்கான ஆய்வுகளையும் கட்டுரைகளையும் எழுதிக் குவித்தவர் அவர். மனோன்மணியம் உரையுடன் தொடங்கி 1955 இல் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை உரையுடன் பதிப்பித்தது வரை தமிழுக்குப் பெரும் தொண்டு ஆற்றியவர். அவரது வீட்டில் இருந்த நூலகத்தில் மட்டும் 2,943 புத்தகங்கள் இருந்தன. அதுமட்டுமல்லாமல் ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு, ஜெர்மன், மலையாளம் போன்ற மொழிகளிலான குறிப்புகளும், ஓலைச்சுவடிகளும் நூற்றுக்கணக்கில் இருந்தன. அவை அனைத்தையும் கொல்கத்தாவில் இருந்த தேசிய நூலகத்துக்கு நன்கொடையாக அளித்துவிட்டார் வையாபுரிப் பிள்ளை.
தந்தை பெரியார்
அடுத்ததாக தந்தை பெரியாரின் தமிழ் எழுத்து சீர்திருத்தம் தமிழ் தட்டச்சிலும் இன்றைய கணிணியிலும் தமிழ் எளிதாக பயில அடிப்படையாக அமைந்ததை நாமறிவோம்.
இவர்களின் தன்னலம் மறந்த பணியாலேயே தமிழின் இன்றைய இலக்கிய வளம் உலகுக்கு தெரிய வந்தது. இன்றும் தமிழ் உயிர்ப்போடு வாழ்ந்து கொண்டிருக்கிறது. இவர்களின் பணிக்கு நாம் என்றும் கடமைப்பட்டவர்கள்.
இன்றும் தமிழில் மிகச் சிறந்த முறையில் கதை, கவிதை, உரைநடை, கட்டுரைகள், ஆய்வுநூல்கள் என பலத்துறைகளிலும் படைப்புகள் வெளியாகின்றன. பலச் செயலிகள் தமிழ் மொழியில் உருவாக்கப்பட்டுள்ளன. கணிணியுகத்திற்கு தமிழர் தம்மை தயார் செய்தே வருகின்றனர்.
என்றாலும், இன்று ஒருதலைமுறையினர் ஆங்கில வழியில் கற்று இரண்டாம் பாடமாகவும் அந்நிய மொழியே பயின்று வளர்கின்றனர். தமிழ் அவர்கள் பேச்சில் கூட அழிந்து வரும் நிலையே காணப்படுகிறது. மொழிக்கலப்பு பலக்காலகட்டத்திலும் நிலவி வந்தாலும் இக்காலத்தில் தமிழ் மொழி சிதைக்கப்பட்டு அந்நிய மொழி விதைக்கப்படுவது வருத்தத்திற்குறியது.
இவ்வளவு அரும்பாடுபட்டு மீட்கப்பட்ட, நமது பண்பாட்டை, வாழ்வியல் விழுமங்களைப் பறைச்சாற்றும் இலக்கியங்கள் இன்று ஒரு காட்சிப் பொருளாகவே, பழம் பெருமை பேசவே பயன் படுத்தப்படுகின்றன. வாழ்க்கைக் கல்வியாகப் பயிலப்படுவதில்லை என்பது கவலைக்குறியது.


பாங்குடன் படித்த லின்றி
பணத்தினைச் சேர்ப்போம் என்றே
ஏங்கிடு நெஞ்சத் தோடு
இங்கவர் தமிழை விட்டே
ஆங்கில வழியில் கற்று
அடுத்தவர் போலே வாழ
பூங்குயில் குரலை விட்டு
போலியைத் தேடி நின்றார்.


பேச்சிலே தமிழை விட்டார்
பெயரிலும் தமிழைக் காணோம்
கூச்சமே யின்றி நாளும்
குறைசொலித் திரிவார் வெட்கம்
வீச்சதும் அதிகம் அம்மா
வேற்றுவர் மொழியின் மோகம்
ஏச்சிலும் இவர்கள் பேச்சில்
எம்தமிழ்ச் சொல்லைக் காணோம்.



என்பதே இன்றைய நிலை. இந்த நிலை மாற வேண்டும். தமிழ் இலக்கியங்களை நமது அடுத்த தலைமுறையினரும் உணர்ந்து அறிந்துவாழ்வில் கடைப்பிடிக்கும் படிச் செய்வது நமது கடமையாகும். இதற்காக தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிப்போம். இயன்றவரை இயல்பாக தமிழில் பேசுவோம்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழினம்!

Sunday, 14 April 2019

பெரும்பாணாற்றுப்படை

பத்துப்பாட்டு நூல்களில் நாம் அடுத்து காண இருப்பது பெரும்பாணாற்றுப்படை.  இந்நூல் 500 அடிகளைக் கொண்டு ஆசிரியப்பாவால் அமைந்துள்ளது. இதனை எழுதியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் சங்கப் புலவர். இதன் பாட்டுடைத் தலைவன் தொண்டைமான் இளந்திரையன் என்ற மன்னன். காஞ்சியை தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலத்தை ஆண்ட மன்னர்கள் தொண்டைமான் என்று அழைக்கப்பட்டனர். 

இந்த நூலும் ஒரு ஆற்றுப்படை நூல். ஆற்றுப்படை என்பது வழிப்படுத்துதல் என்கிறவகையில் பெரும் பாணன் ஒருவன் வறுமையில் வாடும் இன்னொரு பாணனைத் தொண்டைமான் இளந்திரையனிடம் செல்லுமாறு ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ள நூல் இது.

அகல் இரு விசும்பின் பாய்இருள் பருகி

பகல் கான்று எழுதரு பல் கதிர்ப் பருதி

காய்சினம் திருகிய கடுந்திறல் வேனில்


என்று வேனிற் காலத்தில் வர்ணனையோடு துவங்குகின்றது இப்பாடல்.  நீர், நிலம், நெருப்பு, காற்று என்ற மற்ற நான்கு பூதங்களும் அகன்று விரிவதற்கு காரணமாய் அமைந்துள்ள ஆகாயத்தில், இருளை அகற்றி பகற் பொழுதை தோற்றுவித்து எழுகின்றது பல கதிர்களை உடைய கனலி அல்லது ஞாயிறு. இவ்வாறு வேனிற்காலம் எவ்வாறு தோன்றுகிறதோ அவ்வாறு பாணனின் வாழ்வும் மலரும் என்ற கருத்தோடு துவங்குகிறது இந்த நூல். 

மற்ற ஆற்றுப்படை நூல்களில் நாம் பார்த்தது போலவே பெரும்பாணாற்றுப்படை நூலிலும் முதலில் யாழின் வர்ணனை அமைந்திருக்கிறது. அடுத்ததாக பாணனது வறுமை காட்டப்படுகிறது. பரிசு பெற்ற பாணன் தனது செல்வ நிலையை எடுத்துக் கூறுகிறான், தான் பெற்ற பரிசின் பெருமையை கூறுகிறான். மேலும் போகும் வழியில் அவர்கள் பார்க்கக்கூடிய மனிதர்கள் உமணர் (உப்பு வணிகர்) எயிற்றியர், மறவர், அந்தணர் ஆகிய பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்விடங்கள், வாழ்க்கை முறை, அவரது தொழில், அங்கு கிடைக்கக்கூடிய பொருட்கள் என மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது. தொண்டைமான் இளந்திரையனை  காணச் செல்லும் வழியில் நீர்ப்பெயற்று என்றும் ஒரு ஊரை கடந்து செல்ல வேண்டும். இந்த நீர்ப்பெயற்று என்பது இன்றைய மகாபலிபுரத்தை குறிக்கும். இந்த மகாபலிபுரத்தின் சிறப்பும் கூறப்பட்டுள்ளது. 

இவ்வாறு பல ஊர்களைக் கடந்து இளந்திரையனிடம் சென்றால் மிகுந்த பரிசுகள் பெறலாம் என்று சொல்லும் பொழுது இளந்திரையனின் போர் வெற்றி, அவனது முரசு சிறப்பு, அவன் ஆட்சி வீற்றிருக்கும் காட்சி, பாணன் அரசனைப் போற்றிய விதம், அரசன் பாணனுக்கு விருப்புடன் உணவு மற்றும் பரிசு அளித்த விதம் ஆகியவற்றை மிகச் சிறப்பாக எடுத்தியம்புகிறது இப்பாடல். இறுதியாக அவனது மலையின் சிறப்பை சொல்லி முடிகிறது இந்நூல்.


இந்த பாடலின் சில அடிகளை பகிர்வதன் மூலம் இப்பாடலை படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே நோக்கம்


பேரியாழ் வாசிக்கும் பெரும்பாணன் தன் யாழை இடப்பக்க தோளில் மாட்டிக் கொண்டு செல்கிறான். யாழின் பல உறுப்புக்களான வயிறு, நரம்பு, அடிப்பகுதி, போர்வை, வருவாய் ஆகியவை மிக அழகாக உவமையுடன் விளக்கப்பட்டிருக்கின்றன


அடுத்ததாக பாணனின் வறுமை காட்டப்பட்டுள்ளது


'புல்லென் யாக்கைப் புலவு வாய்ப்பாண...'


பொலிவிழந்த உடலை உடையவனாகப் பாணன் காட்டப்படுகிறான்.


பாணன் தான் பரிசு பெற்ற விதத்தை கூறும்போது


பெரு வறம் கூர்ந்த கானம் கல்லெனக்

கருவி வானம் துளி சொரிந்தாங்கு


நிலம் வறண்டு கிடக்கும் காலத்தில் கருமேக தொகுதி இடியுடன் கூடிய பெருமழையால் பொழிந்தது போல அவன் எங்களுக்கு பல செல்வ வளங்களை நல்கியுள்ளான். அவற்றை குதிரைகள் மீதும் யானைகள் மீது ஏற்றிக் கொண்டு வருகிறேன். எனது சுற்றத்தாரின் பெரும் கூட்டமும் யானை மீது குதிரை மீதும் வந்து கொண்டிருப்பதை பார் என்று கூறுகிறான்.


இளந்திரையனின் மாண்பை பற்றிக் கூறும் பொழுது


முரசு முழங்கு தானை மூவர் உள்ளும்

இலங்கு நீர்ப் பரப்பின் வளை மீக்கூறும்

வலம்புரியன்ன…..


கடலிலே தோன்றுகின்ற சங்குகளில் வலம்புரிச் சங்கானது எவ்வளவு சிறப்புமிக்கதோ அவ்வாறு முரசு முழங்கும் நாற்படைகளைக் கொண்ட சேர சோழ பாண்டியர்களில்  இளந்திரையன்  வலம்புரிச் சங்கை ஒத்தவன்.


அவன் அல்லது கடிந்த அறம் அதாவது அல்வழியில் இல்லாமல் அறத்தை விரும்பிய செங்கோலை உடையவன். அவனிடம் சென்றால் நீங்கள் மிகுந்த பரிசுகள் பெறலாம் என்று கூறுகிறது.


அடுத்ததாக அவனது ஆட்சி சிறப்பைக் கூறும் பொழுது


அவனது காவல் நிலத்தில் வழிப்பறி செய்யும் கள்வர் பயம் இல்லை .பாம்பு பயமும் இல்லை. காட்டு விலங்குகளால் துன்பம் இல்லை. எங்கும் தங்கலாம். எங்கும் பாதுகாப்பு. களைப்புத் தோன்றும் போதெல்லாம் விரும்பிய இடங்களில் தங்கலாம். பின்னர் தொடரலாம்.


அவனைக் காணச் செல்லும் வழியில் எதிர்ப்படக்கூடிய உமணர்களின் வாழ்க்கை அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது . அவர்களது உப்பு வண்டியின் அமைப்பு உவமைகளோடு மிக அழகாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது . இந்த வண்டியின் மேல் கோழிக் குடும்பம் அமர்ந்திருக்கிறது. பல வண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கின்றன. எல்லா வண்டிகளையும் இரண்டு எருதுகள் இழுத்துச் செல்கின்றன. உமணப்பெண்கள் வண்டியின் மேல் உட்கார்ந்து வண்டியை ஓட்டினர். உமணர்கள் யானைகளை ஓட்டி வந்தனர். இப்படிப்பட்ட உமணர் குடும்பத்தோடு நீங்களும் செல்லலாம் என்று கூறுவதாக அமைந்துள்ளது பாடல்.


வழியில் மீளி, சாத்து உல்குவரி  வாங்குபவன் ஆகியோர் உதவுவர். மீளி என்பவன் அரசனின் ஆணைப்படி வழிப்போக்கர்களுக்கு உதவும் காவல்காரன். சாத்து என்பது நிலவழி வாணிகம் செய்பவர்களின் கூட்டம். வழிகள் கூடும் இடங்களில் வணிகர்களிடம் சுங்க வரி வாங்கப்பட்டது. இவர்களின் உதவியை பெற்றுக் கொண்டே முன்னேறிச் செல்லலாம் என்கிறது பாடல்.


அடுத்ததாக எயினர் எயிற்றியர் வாழ்க்கைக் காட்டப்படுகிறது.  எயிற்றியர் குரம்பை எனப்படும் கூரைக் குடிசை வீடுகளில் வாழ்ந்தனர் . உணவு சமைத்தல், கரம்பை நிலத்தில் முளைத்த ஒருவகைப் புல்லை வாயில் அடக்கி வைத்தல் போன்ற பழக்கங்கள் காட்டப்பட்டுள்ளன. கானவன் மதிய பொழுது வரை காட்டுப்பன்றியை வேட்டையாடுவான்.  இந்த கானவர்களின் வீடு, விருந்து, முயல் வேட்டையாடுதல் போன்றவை அழகாக காட்டப்பட்டுள்ளது


அடுத்து மறவர் விளையாடுவதை பார்த்துக் கொண்டே செல்லலாம். மறவர்கள் தம் தாய் வயிற்றில் இருக்கும் போதே அஞ்சா நெஞ்சம் படைத்தவர்கள். யார் வந்தாலும், பாம்பு தன் மீது ஏறி  சென்றாலும், மேகமூட்டம் இல்லாத வானில் இடிமுழக்கம் கேட்டாலும் நிறைமாத தாய்மார் கூட கலங்குவதில்லை.


யானை தாக்கினும், அரவு மேல் செலினும்,   

நீல் நிற விசும்பின் வல் ஏறு சிலைப்பினும்,  

சூல் மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை,


என மிக அழகாக குறிஞ்சி மக்களின் வாழ்க்கை காட்டப்பட்டுள்ளது. இம் மறவர்கள் காளையை தூண்டிவிட்டு தம் தோள் வலிமையைக் காட்டி அதனை அடக்கி விளையாடுவர்.  இவற்றையெல்லாம் வழியில் கண்ட வாறே செல்லலாம்.


அடுத்ததாக ஆயர்களின் வாழ்க்கை கட்டப்பட்டுள்ளது. பால் அருந்தி எஞ்சியதை காய்ச்சி வெண்ணெய் எடுத்து விற்று வரும் பணத்தை பொன்னாக வாங்காமல் கன்றுகளை வாங்கப் பயன்படுத்திக் கொள்வார். காலையில் தயிர் கடையும்போது புலி உறுமுவது போல் ஒலி கேட்கும் என்றெல்லாம் ஆயர்களின் அழகான வாழ்க்கை எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது. இவர்களது குடும்பத்தில் தங்கினால் நண்டுகள் போன்ற தினையரிசி சோற்றில் பால் ஊற்றி தருவார்கள். விருந்துண்டு மேலும் செல்லலாம்.

இடையன் தானே குழல் செய்துகொண்டு இசைப்பான். அந்த புல்லாங்குழலில் அவன் பாலை பண்ணை இனிமையாகப் பாடுவான்  சலிப்புற்றால் யாழிசை மீட்பான். யாழும் அவனே செய்து கொண்டதுதான். அதில் விரல்களால் விரித்து குறிஞ்சிப்பண் பாடுவான். இந்தப் புல் வெளியைக் கடந்து சென்றால்  சிற்றூர் வரும்.


அந்த சிற்றூரில் அவரைக்காயை சேர்த்து செய்த வான் புழுக்கு அட்டி விருந்தாக கிடைக்கும்


இவ்வாறே மருத நில கழனிகளும், மருத நிலத்திலே பெறக்கூடிய உணவுகள், உழவர்களின் வாழ்க்கை முறை, குழந்தைகள் மூன்று சக்கர வண்டி ஓட்டுதல் ஆகியாவையும், ஆலைகளில் கருப்பஞ்சாறு அருந்துதல் வலைஞர் குடியிருப்பு, அங்கே பெரும் உணவுகள், அந்தணர்களின் உறைவிடங்கள், அங்கே பெறக்கூடியவை ஆகியன சிறப்பாக கூறப்பட்டிருக்கும். 


நீர்ப்பெயற்று என்னும் மகாபலிபுரத்திற்கு வந்தால் பட்டணத்து மக்களின் உபசரிப்பு, வாழ்க்கை, ஓடும் கலன்களை அழைக்கும் கடற்கரை துறை, விண்ணை தொடுவது போல் உயர்ந்து ஓங்கிய கடலில் செல்லும் கப்பல்களை அடையாளம் காட்டி அழைக்கக்கூடிய கலங்கரை விளக்கம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.  இவற்றையெல்லாம் தாண்டி செனறு பொதும்பர் காடுகளில் உள்ளே செல்ல வேண்டும். அங்கு சென்றால் காஞ்சியை அடையலாம். 
அங்கு


காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்கு

பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன்  அங்கண்

வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர்


காந்தள் பூத்திருக்கும் சிலம்பில் களிறு படுத்திருப்பது போல் பாம்பணையில் திருமால் பள்ளி கொண்டிருப்பான். அவனைத் தொழுது கொண்டே மேலும் செல்லலாம்.. 

காஞ்சியில்  இந்திர விழா நடைபெறும். இந்த விழாவைக் கொண்டாடுபவர்களோடு சேர்ந்து நீங்களும் கொண்டாடிக்கொண்டு அங்குச் சிலநாள் தங்குங்கள். அக்காலத்தில் கடவுளை இந்திரனை வாழ்த்திப் பாடுங்கள். உங்களிடம் உள்ள கருங்கோட்டு இனிய யாழை மீட்டிக் கொண்டே பாடுங்கள். இனிய இசைக் கருவிகளையம் சேர்த்து இசைத்துக்கொண்டே பாடுங்கள். பின் உங்களின் குறியிடம் நோக்கி வழிமேற் செல்லுங்கள் என்று சொல்வதாக அமந்துள்ளது பாடல். மேலும் அந்நகர் வாழ் மக்கள், வட்டம் என்னும் இனிப்பு பலகாரம், அவர்கள் யானையை குழியில் விழச்செய்து பழக்குதல், பரபரப்பான கடைவீதி ஆகியன கூறப்பட்டிருக்கும்.


காஞ்சி நகரம் எப்படி இருக்கும் என்றால்



நீனிற வுருவி னெடியோன் கொப்பூழ்

நான்முக வொருவற் பயந்த பல்லிதழ்த்

தாமரைப் பொகுட்டிற் காண்வரத் தோன்றிச்


காஞ்சிமா நகரமானது நீலநிற உருவம் கொண்ட திருமால் படுத்திருப்பது போலவும், திரையனின் அரண்மனையானது திருமாலின் கொப்பூழில் தோன்றிய நான்முகன் அமர்ந்திருப்பது போலவும், காஞ்சி தாமரைப் போலென்றால் அரண்மனை தாமரையின் பொகுட்டு, மலரின் உள்பகுதி போலவும் அமைந்திருக்கும் என்று நயம் பட காட்டுகிறது இப்பாடல்.


திரையனை விரும்பி அவனிடம் செல்பவர்களுக்கு அவன் பாதுகாவலாக விளங்குவான். நண்பர்கள் விரும்பியதை அவன் மழைபோல் அள்ளித் தருவான். பகைவர்களை அவன் தீயைப்போல் சுட்டெரிப்பான். அவனை எதிர்த்துப் போரிட்டவர்களின் நிலம் பாழாகும். அவனை நயந்து வாழ்வோரின் நிலம் பொன் கொழித்துப் பூக்கும். மலையிலிருந்து இறங்கும் அருவி கடலை நோக்கிச் செல்வது போல், அரசர்களும் மக்களும் அவனது நட்பைப் பெறுவதற்காக அவனைச் சூழ்ந்து வந்து கொண்டேயிருப்பர்


இப்படி காஞ்சியின் நலம் கூறி, இளந்திரையின் ஆட்சி நலம், வீரம், அறம், ஈகை மற்றும் அவன் மலை வளம் கூறி அவனிடம் சென்று பரிசுகள் பெறுவீர் என்று ஆற்றுப்படுத்தி அமைகிறது பெரும்பாணாற்றுப்படை.


இப்பாடலில் தமிழரில் பல்வேறு வகைப்பட்ட மக்களின் வாழ்கை மிக அழகாக கூறப்பட்டிருக்கிறது. சுவைமிக்க இவ்விலக்கியத்தினை படித்து அறிந்து பெருமைக் கொள்வோம். அறத்தோடு வாழ்ந்த நம் முன்னோரின் சிறப்பை வியந்து அதனை சீர்குலைக்காமல் காக்க நம்மாலானதைச் செய்வோம்..


அடுத்த பதிவுடன் விரைவில்..


அன்புடன்

உமா