Tuesday, 21 August 2018

கலித்தொகை 2


கலிப்பாவின் வடிவம் பார்த்தோம், அழகிய முன்னுரைப்போல் தரவு அமைய, தாழிசகள் விளக்கமாக விரிய, அராகம், அம்போதரங்கம் அப்பாடலுக்கு அழகு சேர்க்க, அனைத்தையும் இணைத்து நம்மை முடிவுரைக்குக் கூட்டிச்செல்லும் தனிச்சொல். சுரிதகம் அழகான முடிவுரையாக முடியும்,

வெண்பா படித்திருக்கிறீர்களா. சற்று சொல்லிப்பாருங்கள்

மன்னனும் மாசுஅறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புஉடையன்; மன்னற்குத்
தன்தேசம் அல்லால் சிறப்புஇல்லை; கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு

இது ஒளவையாரின் மூதுரையில் அமைந்த ஒரு வெண்பா. இதைச்சொல்லிப் பார்த்தால் செப்பலோசை நமக்குப் புரிபடும்.

அடுத்து ஆசிரியப்பா

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரற்
கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தே னிழைக்கும் நாடனொடு நட்பே

குறுந்தொகையில் படித்திருப்போம். சத்தமாக சொல்லிப் பாருங்கள்..அகவல் ஓசை பிடிப்படும்.

கலிப்பாவிற்குரிய ஓசை துள்ளலோசை.

செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி
முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய்
எல்லைநீர் வியன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல்
மல்லல்ஒங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே

இது தரவு மட்டும் அமைந்த தரவுகொச்சகக் கலிப்பா. இதை படித்துப் பாருங்கள். முவசைச்சீர்கள் கலித்தளையோடு தொடர்ந்து வந்து இப்பாடலுக்கு துள்ளலோசையைத் தருகின்றன. பாக்களின் ஓசை நடையை விளக்கவுரைகள் முழுதும் எடுத்துரைக்க இயலா. தானாக படித்தறிய வேண்டியவை.

கலித்தொகைக்குள் செல்வோம்.

கலித்தொகையில் உள்ள சில அழகிய சொற்தொடர்களை அறிந்து மகிழ்வோம்.
இது 33வது பாடல் பாலைக்கலி

ஆற்றிக்கு கண் உண்டோ? ஆம். இருக்கிறது. அதுவும் ஆறு தன் கண்ணை விழித்தும் பார்கிறது என்கிறது இப்பாடல்.

வீறு சால் ஞாலத்து வியல் அணி காணிய
யாறு கண் விழித்த போல், கயம் நந்திக் கவின் பெற,
மணி புரை வயங்கலுள் துப்பு எறிந்தவை போலப்,
பிணி விடு முருக்கு இதழ் அணி கயத்து உதிர்ந்து உகத்,
துணி கய நிழல் நோக்கித் துதைபு உடன் வண்டு ஆர்ப்ப,
மணி போல அரும்பு ஊழ்த்து, மரம் எல்லாம் மலர் வேயக்
காதலர்ப் புணர்ந்தவர் கவவு கை நெகிழாது,
தாது அவிழ் வேனிலோ வந்தன்று; வாரார், நம்
போது எழில் உண் கண் புலம்ப நீத்தவர்;

இப்பாடலில் பெருமைமிகுந்த இந்த உலகததின் பரந்த அழகைக் காண்பதற்காக ஆறு கண்விழித்து நோக்குவதாகக் கூறப்பட்டுள்ளது.

ஒரு அழகான காட்சி
ஆறு நிறைவாய் ஓடுகிறது. அதனால் பக்கங்களிலுள்ள குளங்கலெல்லாம் நிறைந்து இருக்கின்றன. பளிங்கு மணியைப்போன்ற கண்ணாடிக்குள், துப்பு என்றால் பவளம், பவளம் வீசப்பட்டுக்கிடப்பது போல் கட்டவிழ்ந்த முருகம்பூக்கள் அழகிய குளங்களிலே உதிர்ந்து இருக்கின்றன. அருகே வரும் வண்டுகள் தெளிந்த நீரில் தன் உருவத்தைப் பார்த்து ஆரவாரம் செய்கின்றன. ஆறுகளில் வெண்ணிறப் பூவிதழ்கள் உதிர்ந்திருக்க கரிய வண்டுகள் பறப்பது ஆறு தன் கருவிழியை அசைத்து பார்பதை போலுள்ளதாக சொல்லும் அழகிய கற்பனையை நாம் இங்கு காண்கிறோம்.

இது ஒரு வேனிற்கால காட்சி, ஆற்றின் கரையிலிருக்கும் மரங்களெல்லாம் மலர்ச்சூடிக் கொண்டிருக்கின்றன. காதலையுடைய தன் கணவரை கலந்தவருடைய தழுவிய கைகள் நழுவாது இருக்கும் படியாக, மகரந்த பொடிகளை அவிழ்க்கும் இளவேனிற் காலம் வந்துவிட்டது. ஆனால் பூப் போன்ற அழகிய, மையிட்ட நம் கண்கள் வருந்த நம்மைவிட்டகன்றவர் இன்னும் வாராராயினர் எனத்தலைவியின் கூற்றாய் அமைகின்றது இப்பாடல்.
இன்னொரு பாடலில்
………………………………………….ஈங்கை வாடு உதிர்பு உகப்,
பிரிந்தவர் நுதல் போலப் பீர் வீயக், காதலர்ப்
புணர்ந்தவர் முகம் போலப் பொய்கை பூப் புதிது ஈன,…..

இவ்வரிகளில் வாடி உதிர்ந்த பீர்க்கம் பூக்கள் தலைவனைப் பிரிந்த தலைவியின் நெற்றியைப்போல் வாடி இருந்ததாகவும்  . தலைவனைக் கூடிய தலைவியின் முகம் போல் பொய்கை, புதிய தாமரை மலர்களை ஈந்ததாகவும் கூறியிருப்பது எண்ணி மகிழ தக்கது.

கலித்தொகையின் 57வது பாடல்

கொடி என, மின் என, அணங்கு என, யாது ஒன்றும்
தெரிகல்லா இடையின்கண் கண் கவர்பு ஒருங்கு ஓட

“இவள் இடை என்ன கொடியா, மின்னலா அல்லது துன்பமா? எனது கண்கள் அவளது இடையைத் தவிர வேறெதையும் கவனிக்க மறுக்கின்றன!” 

அணங்கு என்றால் வருத்தம், துன்பம் என்றும் பொருள். பெண்ணின் இடையை எண்ணி, மின்னலோ கொடியோ என்பது மட்டுமல்லமல் துன்பமோ எனவும் ஐயுறுகிறான் தலைவன்.

துன்பம் நேரும் போது நமது மனம் அத்துன்பத்தைத் தவிர வேறெதையும் நினைப்பதில்லை. தலைவனுக்கும் தலைவியின் இடையைப் பார்த்தால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் தான் அவன் அவளது இடையை துன்பமோ என்று ஐயுறுகிறான். மிகுந்த இரசனைக்குரியது இவ்வரிகள்.

மேலும் கலித்தொகையின் 39 ஆம்  பாடலில், தோழி, அறத்தொடு நின்று தலைவனுக்கும் தலைவிக்குமான  உறவை செவிலித் தாய்க்கு எடுத்துரைக்கும் போது 

அருமழை தரல்வேண்டில் தருகிற்கும் பெருமையளே!

என்கிறாள். 

மழை வேண்டுமென்றால் பெய்விக்கும் பெருமைக்கு உரியவளானாள் தலைவி என்று கூறுவதன் மூலம் அவர்கள் இணைந்தனர்  என்பதை தாய்க்கு மிக நுணுக்கமாக உணர்த்துகிறாள்.

திருக்குறள் சொல்லும் பெண் இங்கு நமக்குத்  தெரிகிறாள்..

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

கலித்தொகை தலைவி ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட தன்னைத் தொட்டு காப்பாற்றிய தலைவனைத் தன் கணவனாகக் கொண்டுவிட்டாள். கற்பு நெறியில் வாழ தலைப்பட்டாள். அவள்  வள்ளூவன் காட்டும் நல்ல வாழ்க்கைத் துணையாக விளங்குகிறாள் என்பதைக் காணமுடிகிறது. இதை மிக அழகாக தோழி, தாய்க்கு எடுத்துரைக்கிற நயம் அறிந்து மகிழத்தக்கது.

கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு
நெடு வரை மருங்கின் துஞ்சும் யானை,
நனவில் தான் செய்தது மனத்தது ஆகலின்,
கனவில் கண்டு, கதுமென வெரீஇப்
புதுவது ஆக மலர்ந்த வேங்கையை
'அது' என உணர்ந்து, அதன் அணி நலம் முருக்கிப்
பேணா முன்பின் தன் சினம் தணிந்து, அம் மரம்
காணும் பொழுதின் நோக்கல் செல்லாது,
நாணி இறைஞ்சும் நல் மலை நல் நாட!

யாணை வெட்கப் படுமா? வெட்கப்படுவதாய் சொல்கிறது இப்பாடல்.

யானைக்கும் புலிக்கும் பெரிய சண்டை நடந்தது. யானையின் ஆவேசத் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாத புலி தோற்றுப்போய் ஓடி விட்டது. களைப்படைந்த யானை அந்த உயர்ந்த மலைச்சாரலின் ஒரு ஓரத்திலே படுத்துத் தூங்க ஆரம்பித்தது. தூக்கத்திலும் அதன் ஆவேசம் அடங்கவில்லை, கனவிலும் அந்தப் புலியுடன் சண்டைதான். தூக்கக்கலக்கத்தில் பக்கத்தில் இருந்த வேங்கை மரத்தைப் புலி என நினைத்து, அடித்து நொறுக்க ஆரம்பித்தது. கோபம் குறைந்து பார்த்த போது, தான் தாக்கியது புலியை அல்ல, மரத்தை என்பது புரிந்து அந்த மரத்தைப் பார்க்க முடியாமல் வெட்கப்பட்டது.

இப்படி அழகிய கற்பனைகளும் கருத்துகளும் நிறைந்த இக்கலித்தொகையை படித்தறிந்து மகிழ்வோம்.

அடுத்தப் பதிவோடு விரைவில்

அன்புடன்
உமா..

Sunday, 19 August 2018

கலித்தொகை

பாட்டும், தொகையும் என்றழைக்கப்படும் சங்கஇலக்கியத்தின் ஒவ்வொரு பாடல்களுமே சிறந்தவை என்றாலும் அவற்றுள் எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலான கலித்தொகைப் பாடல்கள் தனக்கே உரிய சிறப்பியல்களைக் கொண்டிருக்கின்றன. பிறபாடல்கள் ஆசிரியப்பாவால் அமைய கலித்தொகையோ கலிப்பாவால் அமைந்துள்ளது.

பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன. அகப்பொருள் துறை பாட ஏற்ற யாப்பு வடிவங்களாக கலிப்பாவையும் பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார். துள்ளலோசையால் பாடப்பட்டு பாவகையால் பெயர்பெற்ற நூல் கலித்தொகை ஆகும். பிற அகத்திணை நூல்கள் எடுத்துரைக்காத கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல் ஆகியவை கலித்தொகையில் மட்டுமே இடம்பெறுகின்றன. பாலைக்கலி, குறிஞ்சிக்கலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தற்கலி என ஐந்து திணைகளிம் தொகுக்கப்பட்டுள்ளன.

இப்பாடல்களின் மூலம் பண்டைக் கால ஒழுக்க வழக்கங்கள், நிகழ்ச்சிகள், மரபுகள், காலத்தின் தன்மை, நல்லவர் தீயவர் பண்புகள், விலங்குகள், பறவைகள், மரங்கள், செடி கொடிகளின் இயல்புகள் ஆகியனவற்றை அறிந்து கொள்ளலாம்.

இதில் பல பாடல்கள், ஓரங்க நாடகங்களைப் போல அமைந்துள்ளன. ஏறுதழுவுதல்  உள்ளிட்ட பல்வேறு செய்திகள் இன்றும் விவாதிக்கப்படுவனவாக விளங்குகின்றன.

களிற்றையும் அடக்கும் ஆற்றல் இசைக்கு உண்டு என்ற உண்மையும், நீராடல் பற்றிய செய்தியும், மக்களின் நல்வாழ்விற்கான நெறிகளும் இவற்றில் விளக்கப்பட்டுள்ளன.

கலித்தொகையில் சேர,சோழ மன்னர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை. பாண்டிய மன்னர், பாண்டிய நாட்டுக் கூடல்மாநகர், வைகையாறு போன்ற பாண்டிய நாட்டுச் செய்திகளே அதிகம் கூறப்பட்டுள்ளன. பாரதக் கதை நிகழ்ச்சியான அரக்கு மாளிகை தீப்பிடித்தல், பீமன் காப்பாற்றல், திரௌபதியின் கூந்தலை துச்சாதனன் பற்றியிழுத்தல், பீமன் வஞ்சினம், துரியன் தொடையை பீமன் முறித்தது ஆகிய புராணச் செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளன. திருமால், முருகன், கண்ணன், பலராமன் முதலிய கடவுளர்கள் பற்றியும் பிற தொகை நூல்களில் இடம்பெறாத 'காமன் வழிபாடு' பற்றியும் கலித்தொகை கூறுகிறது.முருகனின் படைவீடுகள் பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளது.

கடவுள் வாழ்த்தாக அமைந்த முதற் பாடல் சிவபெருமானை விளித்து அவனது கூத்தைப் போற்றிப் பாடுகிறது.


ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து,
தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் தீ மடுத்து,
கூறாமல் குறித்ததன் மேல் செல்லும் கடுங் கூளி
மாறாப் போர், மணி மிடற்று, எண் கையாய்! கேள், இனி:                                

இது தரவு:

செய்யுளியலில், தரவு என்பது, செய்யுள் வகைகளுள் ஒன்றான கலிப்பாவின் முதல் உறுப்பு ஆகும். இது செய்யுளுக்கு முகவுரை போன்றது. எடுத்துக்கொண்ட பொருளை அறிமுகப்படுத்தும் பாங்கில் அமைந்தது. இது குறைந்தது மூன்று அடிகளையும், கூடிய அளவாகப் பன்னிரண்டு அடிகளையும் கொண்டு அமைந்திருக்கும்.

வேதத்திற்குரிய ஆறு அங்கங்களையும் அறிந்த பிராமாணர்க்கு அரிய வேதங்கள் பலவற்றையும் அருளிச்செய்து, தெளிந்த கங்கையை சடையிலே அடக்கி முப்புரங்களில் தீயைச் செலுத்தி வார்தைகளுக்கு அடங்காமல் எண்ணுகின்ற எண்ணத்திற்கும் எட்டாமல் செல்லுகின்ற விரைவினையுடைய பேயின் தோற்றலில்லாத போரினைக்கொண்ட நீல மாணிப்போன்ற கழுத்தினையும் எட்டுக்கைகளையும் உடைய இறைவனே இப்பொழுது கேள்

இங்கு தான் பாடவிருக்கும் இறைவனைப்பற்றியச் செய்திகளை ஒன்றாக கூறியிருப்பதை அறிக.

படு பறை பல இயம்ப, பல் உருவம் பெயர்த்து நீ,
கொடுகொட்டி ஆடுங்கால், கோடு உயர் அகல் அல்குல்,
கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ?

மண்டு அமர் பல கடந்து, மதுகையால் நீறு அணிந்து,
பண்டரங்கம் ஆடுங்கால், பணை எழில் அணை மென் தோள்,
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ?

கொலை உழுவைத் தோல் அசைஇ, கொன்றைத் தார் சுவல் புரள,
தலை அங்கை கொண்டு, நீ காபாலம் ஆடுங்கால்,
முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ?                               


இவை மூன்றும் தாழிசை

பாவகைகளில் தாழிசை என்பது கலிப்பாவில் வரும் இரண்டாவது உறுப்பைக் குறிக்கும். தாழ்ந்து ஒலிப்பதனால் தாழிசை என்னும் பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கலிப்பாவில் பொதுவாக இது முதல் உறுப்பான தரவைத் தொடர்ந்து வரும். கலிப்பாவில் பொதுவாக மூன்று அல்லது ஆறு தாழிசைகள் இருப்பது வழக்கம். பன்னிரண்டு தாழிசைகள் கொண்ட கலிப்பாக்களும் உள்ளன.
தாழிசை இரண்டு தொடக்கம் நான்கு அடிகளைக் கொண்டிருக்கலாம். எனினும் இவ்வெண்ணிக்கை தரவிலுள்ள அடிகளின் எண்ணிக்கையிலும் குறைவாக இருக்க வேண்டும் என்பது என்பது விதி.

இப்பாடலில் தரவு நாங்கடியில் அமைய பெற்றதால் தாழிசை மூன்று அடிகளில் அமைந்துள்ளதை அறிக.

பொருள்

படுதல் என்றால் ஒலித்தல். ஒலிக்கின்ற பறை பல ஓசைகளை உண்டாக்க, பல வடிவங்களையும் சிதைத்து நீகொடுகொட்டிஎன்னும் கூத்தை ஆடுங்கால் பக்கம் உயர்ந்த அகன்ற அல்குலினையும் கொடியையொத்த இடுப்பினையும் உடைய உமாதேவியோ தாளம் முடிந்துவிடும் காலத்தினைக்கொண்ட சீரைத் தருவாள்!


நெருங்கி செய்யும் போர் பல வென்று அந்த வலிமையால் பகைவரின் சாம்பலை அணிந்துக் கொண்டு நீபாண்டுரங்கம்என்னும் கூத்தை ஆடுகின்ற காலத்தில் மூங்கிலின் அழகை கொண்ட மெல்லிய தோள்களையுடைய வாண்டுகாள் ஒலிக்கும் கூந்தலையுடைய உமாதேவியோ தாளத்து இடை நிகழும் காலத்தினையுடைய தூக்கைத் தருவாள்!

கொலைத்தொழிலை உடைய புலியின் தோலை உடுத்தி, கொன்றை மலர் மாலை தோள்மேல் புரள, பிரமனது தலையை அழகிய கையிலே கொண்டு, நீகபாலம்என்னும் கூத்தை ஆடும் போது முல்லை அரும்புகளைப் போன்ற பற்களையுடைய உமாதேவியோ ஒருதாளத்தின் முதலெடுக்கும் காலத்தினையுடைய பாணியைத்தருவாள்!

சீர்,, தூக்கு, பாணி என்பன தாளத்தின் பகுதிகள்
பாணி முதலும் தூக்கு அடுத்தும் சீர் இறுதியிலும் அமைவது.

என ஆங்கு        -  என்று சொல்லும் படியாக,                                                                                                                             

இது தனிச்சொல்


தனிச்சொல் என்பது பாவகைகளில் ஒன்றான கலிப்பாவின் ஒரு உறுப்பாகும். இது அப்பாவகையில் தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம் என்னும் உறுப்புக்களைத் தொடர்ந்து ஐந்தாவது உறுப்பாக வரும்.
கலிப்பாவின் இறுதி உறுப்பாகிய சுரிதகத்தை ஏனைய நான்கு உறுப்புகளோடு இணைப்பதற்காகச் அதன் முன் வருவது தனிச்சொல். இது தனிச்சீர் எனவும் அழைக்கப்படும்.


பாணியும், தூக்கும், சீரும், என்று இவை
மாண் இழை அரிவை காப்ப,
ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை, ஆடி          
                                     


இது சுரிதகம்

சுரிதகம் என்பது பாவகைகளில் ஒன்றான கலிப்பாவின் ஒரு உறுப்பாகும். இது அப்பாவகையில் தரவு, தாழிசை, அராகம் அம்போதரங்கம், தனிச்சொல் என்னும் உறுப்புக்களைத் தொடர்ந்து ஆறாவதாக மற்றும் இறுதியாக உறுப்பாக வரும். கலிப்பா தவிர்த்து வெண்பா மற்றும் ஆசிரியப்பாவின் உறுப்பாகவும் வரும். அப்படி வரும் போது முறையே வெள்ளைச் சுரிதகம் மற்றும் ஆசிரியச் சுரிதகம் எனப்படும்.

சுரிதகம் என்றால்சுருங்கி முடிவதுஎன்று பொருள். ஈற்றில் (இறுதியில்) வைக்கப்படுவது எனும் பொருளில் வைப்பு எனவும் இறுதி வரம்பாக வருவது என்பதனால் வாரம் என்றும் இதற்கு பிற பெயர்கள் பெறும்.

பொருள்

பாணியும், தூக்கும், சீரும் என்றிவற்றை மாட்சிமைப் பட்ட அணிகளை அணிந்த உமாதேவி காக்கும் படி ஆடி, அன்பில்லாத பொருள்காளாகிய எமக்காக ஒரு வடிவு கொண்டு இவ்வுலகத்தில் தங்கினாய். என்னே நின் திருவருள்.
மூன்று முறை ஐயத்தோடு வினவி முடிவில்அரிவை காப்ப ஆடி அமர்ந்தனைஎன்றது அறிந்து மகிழதக்கது.

அடுத்ததாக பாலைக்கலியில் 9 வது பாடலைக் காண்போம்.

பாடலை இயற்றியவர்- நல்லந்துவனார்
செவிலியின் வினவலும் அந்தணரின் வழிப்படுத்தும் பேச்சும்


எறித்தரு கதிர்தாங்கி ஏந்திய குடை நீழல்,
உறித்தாழ்ந்த கரகமும், உரைசான்ற முக்கோலும்,
நெறிப்படச் சுவல் அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக்
குறிப்பு ஏவல் செயல் மாலைச் கொளைநடை அந்தணீர்! –
வெவ்இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்; இவ்இடை,               5
என்மகள் ஒருத்தியும், பிறள்மகன் ஒருவனும்,
தம்முளே புணர்ந்த தாம் அறிபுணர்ச்சியர்;
அன்னார் இருவரைக் காணீரோ? - பெரும!’

காணேம் அல்லேம்; கண்டனம், கடத்திடை;
ஆண் எழில் அண்ணலோடு அருஞ்சுரம் முன்னிய                  10
மாண் இழை மடவரல் தாயிர் நீர்போறிர்

பலஉறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என் செய்யும்?
நினையுங்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே.

சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை,                   15
நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதாம் என் செய்யும்?
தேருங்கால், நும்மகள் நுமக்கு ஆங்கு அனையளே.

ஏழ்புணர் இன்இசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழுளே பிறப்பினும், யாழ்க்கு அவைதாம் என் செய்யும்?
சூழுங்கால், நும் மகள் நுமக்கு ஆங்கு அனையளே      
           20
என ஆங்கு
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்;
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்;
அறம் தலைப்பிரியா ஆறும் மற்று அதுவே.’

பொருள்

எறித்தலை தருகின்ற ஞாயிற்றின் வெம்மையைத் தாங்குவதற்காக ஏந்திய குடையின் நிழலில் உறியிலே வைத்த கமண்டலமும், புகழுக்குச் சான்றாக விளங்கும் முக்கோலையும் முறையாக தோளிலே வைத்துக் கொண்டு வேறு ஒன்றும் அறியாத நெஞ்சினராய், நீர் குறித்தவாறு ஏவல் செய்யும் ஐம்பொறிகளையும், உமக்கென்று கொள்கையினையும் ஒழுக்கத்தினையும் உடைய அந்தணீர்! நீவீர் வெம்மையான காட்டிடத்தே செல்லுகின்றவர் என்பதால் உம்மைக் கேட்கின்றேன். இக்காட்டுவழியிலே என் மகள் ஒருத்தியும் வேறொருத்தி மகன் ஒருவனும் தமக்குள்ளே பிறரறியாதவாறு கூடினர். இப்பொழுது அவர்கள் கூடியதைப் பிறரும் அறிந்துவிட்டனர். அவர்கள் இருவரையும் நீவீர் கண்டீரோ?பெரும! என்றவுடன் அவரும்,

காணாமல் இருந்தேன் அல்லேன். கண்டேன். காட்டிடையே ஆண்மகனுக்குரிய அழகினையுடைய தலைவனோடு அரிய சுரத்தைக் கடந்து போகக் கருதிய மாட்சிமைப்பட்ட அணிகலன்களை அணிந்த மடப்பத்தையுடைய பெண்ணின் தாயா் போல்வீர்!

நறுமணப்பொருட்கள் விரவிய சந்தனம், உடம்பில் பூசிக் கொள்பவருக்குப் பயன் கொடுக்கிறதே தவிர, மலையிடத்து பிறந்திருந்தாலும் அச்சந்தனம் மலைக்கு என்ன செய்யும்? நினைத்துப் பார்த்தால் உம் மகளும் நுமக்கு அதைப் போன்றவளே!

சிறப்பான வெண்முத்தம் அணிவார்க்குப் பயன்படுகிறதே ஒழிய, கடல்நீரிலே பிறந்ததாயினும் நீருக்கு அவை என்ன செய்கின்றன? ஆராயுங்கால், நும் மகளும் உமக்கு அத்தன்மையானவளே!

ஏழுநரம்புகளால் கூட்டப்பட்ட இனிய இசை பாடுவோருக்கே பயனினைத் தருகின்றது. அது யாழுலே பிறந்திருந்தாலும் யாழுக்கு அது எதைச் செய்கின்றது? சிந்தித்துப் பார்க்கின் நும் மகளும் உமக்கு அதைப் போன்றவளே! என்பதால்,
மிக உயர்ந்த கற்பினையுடைய அப்பெண்ணுக்குத் துன்பத்தைத் தராதீர்! அவளோ, சிறந்தவன் பின்னே சென்றனள். அறத்திலிருந்து மாறுபடாது செல்லும் சிறந்த வழியும் அதுவேயாகும்.” என்றார்.

இங்கு பெண்ணாணவள் சந்தனத்தைப்போன்று, முத்தைப் போன்று, யாழிசைப் போன்று தாய் வீட்டிற்கன்றி தலவனுக்கே உரியவள் என்று சொல்கிறது இப்பாடல்.

அந்தணர் என்பார் ஐம்பொறிகளை அடக்கி தன் வசப்படுத்தியோர் என்பதும் உடன் போக்கு அறவழிப்பட்டது என்பதும் பெறப்படுகிறது.


அருமையாக 'கற்றறிந்தார் ஏத்தும் கலி', 'கல்வி வலவர் கண்ட கலி' என்று சிறப்பித்துக் கூறப்படும் கலித்தொகையில் பழமொழிகள் போன்று ஒரே வரியில் அறக்கருத்துகள் கூறப்பட்டுள்ளன.
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தார்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
அன்பு எனப்படுவது தன்கிளை செறாமை
அறிவு எனப்படுவது பேதையர் சொல் நோண்றல்
செறிவு எனப்படுவது மறை பிறர் அறியாமை
முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்
பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்

இன்றும் இக்கருத்துக்கள் எடுத்தாளப்படுகின்றன..

தமிழின் இனிமையை உணர, சுவைக்க இக்கலித்தொகையை அறிந்து படித்து மகிழ்க..

அடுத்த பதிவோடு விரைவில்

அன்புடன்
உமா

கலிப்பா இலக்கணம் அறிய