பதிற்றுப்பத்து
'ஒத்தபதிற்றுப்பத்து' எனச் சிறப்பிக்கப்படும் எட்டுத்தொகை நூல் பண்டைத்தமிழரின் பண்பாட்டையும் வரலாற்றையும் புலப்படுத்தும் தலைச்சிறந்த இலக்கியமாகும். இந்நூல் சங்ககால சேர மன்னர்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட புறப்பொருள் இலக்கியமெனாறாலும் தமிழ்நிலத்திற்கே பொதுவான இயற்கைக் கூறுகளையும் தமிழ் மக்களின் அகப்புற வாழ்க்கையையும் உள்ளடக்கியதாகும். பல்வேறு கண்ணோட்டங்களில் ஆராயப்படுவதற்குரிய அரியபல செய்திகள் இந்நூலில் காணக்கிடைக்கின்றன. தமிழர்களின் அரியபொக்கிஷம் இது என்றால் மிகையாகாது.
பதிற்றுப்பத்தின் பாடல்களுக்குள் செல்லும் முன் சில முக்கிய குறிப்புகளை நாம் அறிந்துக் கொள்வோம்,
Ø
இது பத்து சேர அரசர்கள் பற்றி பத்துப் புலவர்களால் பாடியதாக அறியப்படுகிறது.
Ø
இதைத் தொகுத்தவர் பெயரோ தொகுப்பித்தவர் பெயரோ அறிய முடியவில்லை.
Ø
எட்டுத்தொகை நூல்களுள் புறநானூறும் பதிற்றுப்பத்தும் புறப்பொருள் பற்றியவை. இரண்டு சேரர் பரம்பரையைச் சேர்ந்த 10 சேர அரசர்களைப் பற்றி பத்துப்பாடல்களைக் கொண்ட பத்துத் தொகுதிகளைக் கொண்டது.
Ø
முதல் பத்தும் கடைசி பத்தும் கிடைக்கவில்லை.
Ø
இப்பாடல்கள் ஆசிரியப்பாவால் பாடப்பட்டவை. ஆசிரியப்பா சிற்றெல்லை மூன்றாகவும் பேரெல்லை அடிவரம்பின்றி, பல அடிகள் பயின்று வரும் படியும் பாடப்படுவது.
Ø
ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் பதிகம் என்னும் பெயரில் ஒருபாடல் சேர்க்கப்பட்டுள்ளது.
இது பதிற்றுப்பத்து நூலைத் தொகுத்தவர் சேர்த்தபாடல். ஒரு அரசன் மீது பாடப்பட்ட 10 பாடல்களில் உள்ள செய்திகளைத் தொகுத்து அந்தப் பத்தின் இறுதியில் உள்ள இந்தப் பதிகத்தில் கூறியுள்ளார். அத்துடன் அந்தச் செய்திகளோடு தொடர்படையனவாகத் தாம் அறிந்த செய்திகளையும் அப்பதிகப்பாடலில் இணைத்துள்ளார்.
Ø
இது பாடாண் திணையாலானது. பாடாண்திணை என்பது பாடப்படும் ஆண்மகனது வீரம், கொடை, ஈகை போன்றவற்றைச் சிறப்பித்து பாடுவது.
Ø
ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் துறை, வண்ணம், தூக்கு (இசை), பெயர் ஆகியன குறிக்கப்பட்டுள்ளன.
Ø
துறை – பாவினங்களில் ஒன்று. பாவினங்களுக்கு சீர், அடி எண்ணிக்கையும் வாய்பாட்டு அமைப்பும் மட்டுமே கருத்தில் கொள்ளப் பெறுகின்றன. இவற்றில் துறை என்பது குறள் வெண்செந்துறை, ஆசிரியத்துறை, கலித்துறை, வஞ்சித்துறை என நான்கு வகைப்படும்.
Ø
வண்ணம் – வண்ணம் என்னும் சொல் பாடலில் வரும் நடை நலத்தைக் குறிக்கும். இந்த நடை நலத்தைத் தொல்காப்பியம் 20 வகையாகப் பகுத்துக் காட்டுகிறது. இந்தப்பா நடைப் பாங்கால் செய்யுளின் இசைப்பாங்கு வேறுபடும்.
Ø
தூக்கு – பாட்டை ஓசையுடன் குரலைத் தூக்கிப் பாடுவதைத் தூக்கு என்பது தொல்காப்பியமரபு. அகவல்ஓசை, செப்பல்ஓசை, துள்ளல்ஓசை, தூங்கல்ஓசை இவை நான்கும் பாட்டுக்குரிய ஓசைகள். ஓசை என்பது குரலில் தோன்றும் ஏற்றத்தாழ்வு. இசை என்பது இனிய ஓசை. இவையே இரண்டிற்கும் உள்ள வேறுபாடு. இந்த ஓசைகளைத் தூக்கு என்பர். ஆசிரியப்பாவாலான இப்பாடல்கள் அகவல் ஓசைக்கொண்ட செந்தூக்காலானவை.
Ø பெயர் –பாடலில் இடம் பெற்றுள்ள தொடரால் பாடல்களுக்குப் பெயரிடபட்டுள்ள ஒரேநூல் பதிற்றுப்பத்து.
Ø
வழக்கின் இல்லாத பழஞ்சொற்களை மிகுதியாகப் பெற்றுள்ளதால் இந்நூல் “இரும்புக்கடலை”எனஅழைகப்படுகிறது.
Ø
பதிற்றுப்பத்தும் பரிபாடலும் இசையோடு பாடப்பட்ட நூல்கள் என்பதை அறிகிறோம்.
Ø நான்காம்பத்து அந்தாதித் தொடையில் அமைந்துள்ளது. ஐங்குறுநூறில் தொண்டிப் பத்திலும், புறநானூற்றில் பாடல் இரண்டிலும், அந்தாதி இலக்கியத்துக்கான அறிகுறி தென்படுகிறது. ஆயினும் தமிழில் முதல் அந்தாதிப்பாடல் பதிற்றுப்பத்தில் நான்காம்பத்தில் தான் இருக்கிறது என்பது அறிஞர் கருத்து. இதைப் பாடியவர் காப்பியாற்றுக் காப்பியனார். பிற்காலத்தில் காரைக்கால் அம்மையார், அபிராமிபட்டர் போன்றோர் இதை நூறு பாடல் வரைமேலும் விரிவாக்கினர்.
Ø
பகைவரது பெண்டீரின் கூந்தலை அறுத்து கயிறாக்கி யானையைக் கட்டி இழுத்தனர், பகை மன்னரின் மணி முடியை உருக்கி தங்கமாலை செய்து அணிந்தனர் போன்ற பல செய்திகளை இதன் மூலம் அறிய முடிகிறது.
இனி பாடல்களுக்குச் செல்வோம்:
முதற்பத்து கிடைக்கப் பெறவில்லை
இரண்டாம் பத்து
பாடினோர் :குமட்டூர்க்கண்ணனார்
பாடப்பட்டோர் :இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
இதில் இடம் பெற்றுள்ள பத்துப் பாடல்கள்
11. வெற்றிச் செல்வச்சிறப்பு
12. வென்றிச் சிறப்பும் ஓலக்கவினோதச் சிறப்பும்
13. வென்றிச் சிறப்பும் தன்நாடு காத்தற் சிறப்பும்
14.மன்னனுடைய பலகுணங்களையும் ஆற்றலையும் ஒருங்குகூறி வாழ்த்துதல்
15. வென்றிச் சிறப்பும் தன்நாடு காத்தற் சிறப்பும்
16. அரசனது வென்றிச் சிறப்பும் குலமகளோடு நிகழ்ந்த இன்பச்சிறப்பும்
17. பொறையுடைமையோடு படுத்து மன்னனின் வென்றிச் சிறப்புக் கூறுதல்
18. கொடைச் சிறப்பு
19. அரசனது வென்றிச் சிறப்பும் குலமகளோடு நிகழ்ந்த இன்பச் சிறப்பும்
20. மன்னனது குணங்களைக் கூறி வாழ்த்துதல்
இதில் முதல் பாடலைக் காண்போம்
11.வெற்றிச் செல்வச் சிறப்பு
வரை
மருள் புணரி
வான் பிசிர்
உடைய,1
வளி
பாய்ந்து அட்ட
துளங்கு இருங்
கமஞ் சூல்
2
புணரி-அலை,
மலை போன்ற அலை.வெண்ணிற நீர்ப் பிசிர்கள் உடையும்படி பாயும் அலை.அலைகடலில் மழைமேகம் பாய்ந்து நீரை அள்ளிச் செல்வது போலச் சேரலாதன் கடற்போரில் வென்று செல்வங்களை அள்ளிக்கொண்டு வந்தான்.
நளி இரும் பரப்பின் மாக் கடல் முன்னி, 3
அணங்குடை
அவுணர் ஏமம்
புணர்க்கும் 4
சூருடை
முழு முதல்
தடிந்த பேர்
இசை, 5
கடுஞ்
சின விறல்
வேள் களிறு
ஊர்ந்தாங்கு 6
வருத்தும் அவுணர்களுக்குப் பாதுகாவலாக விளங்கிய சூரபன்மா மாபெருங் கடலில் மாமரமாக நின்று தனக்குப் பாதுகாவலைத் தேடிக்கொண்டான். கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று மீண்ட முருகவேள் களிற்றின்மேல் ஊர்ந்து சென்றான். அதுபோல,
கடலிற் சென்று கடிமரத்தை அழித்ததாலும், களிற்றின் மேலேறி வருதலாலும் முருகக் கடவுளை சேர மன்னனுக்கு உவமையாக கூறுகிறார் புலவர் .
செவ்
வாய் எஃகம்
விலங்குநர் அறுப்ப,
7
அரு
நிறம் திறந்த
புண் உமிழ்
குருதியின், 8
மணி
நிற இருங்
கழி நீர்
நிறம் பெயர்ந்து, 9
மனாலக்
கலவை போல,
அரண் கொன்று, 10
முரண்
மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை; 11
இந்த நெடுஞ்சேரலாதன் தன் கையிலிருந்த செந்நிறமான முனையையுடய வேலால் தன்னை விலக்குவாரை – தன்னை தடுக்கும் பகைவரை அறுத்தான். அவர்களின் நெஞ்சப் புண்ணிலிருந்து குருதி கொட்டியது. அதனால் நீலநிறக் கடற்கழியின் நீர் நிறம் மாறி , மனாலம் (குங்குமம்) கலந்தது போல சிவப்பு நிறமாயிற்று. வீரச் சிறப்புக் கருதி இப்பாடல் ‘புண்ணுமிழ் குருதி’ எனப்பட்டது.
பலர்
மொசிந்து ஓம்பிய
திரள் பூங்
கடம்பின் 12
கடியுடை
முழு முதல்
துமிய ஏஎய், 13
வென்று
எறி முழங்கு பணை
செய்த வெல்
போர், 14
நார்
அரி நறவின்,
ஆர மார்பின், 15
போர்
அடு தானைச்
சேரலாத! 16
எதிராளிகள் பலர் ஒன்று திரண்டு காப்பாற்றிய காவல் மரமான கடம்பினை வெட்டிக் கொண்டுவந்து, தனக்கு அரசு-முரசு [பணை] செய்துகொண்ட சேரலாத! போரில் வெற்றி கண்ட சேரலாத, நாரில் அரித்த நறவுக்கள் [கள்] உண்ணும் சேரலாத, ஆரம் தாங்கும் மார்பு கொண்ட சேரலாத!
மார்பு
மலி பைந்
தார் ஓடையொடு விளங்கும் 17
வலன்
உயர் மருப்பின் பழி
தீர் யானைப்
18
பொலன்
அணி எருத்தமேல் கொண்டு
பொலிந்த நின் 19
பலர்
புகழ் செல்வம் இனிது
கண்டிகுமே 20
மார்பு வரையில் பூ-மாலை தொங்கும் யானை. நெற்றியில் ஓடை-பட்டம் அணிந்துள்ள யானை. குத்தி வெற்றி கண்ட தந்தத்தால் பழி தீர்த்துக்கொண்ட .யானையின் பொன்னணிக் கழுத்தின்மேல் இருந்துகொண்டு சேரலாதன் பொலிவுடன் தோன்றினான். பலரும் போற்றும் அவன் செல்வச் சிறப்பைக் கண்டுகொண்டிருக்கிறேன் – என்கிறார் புலவர்.
கவிர்
ததை சிலம்பில் துஞ்சும் கவரி 21
பரந்து
இலங்கு அருவியொடு நரந்தம் கனவும், 22
ஆரியர்
துவன்றிய, பேர்
இசை இமயம்
23
தென்அம்
குமரியொடு ஆயிடை
24
மன்
மீக் கூறுநர் மறம்
தபக் கடந்தே. 25
கவிரம்பூ, [கவிர் என்பது முள்ளு முருங்கை] பூத்திருக்கும் காட்டில் உறங்கிக்கொண்டிருக்கும் கவரிமான் பரந்து தோன்றும் அருவி நீரைப் பருகவும், அங்குள்ள நரந்தம் புல்லை மேயவும் கனவு கண்டுகொண்டிருக்கும், ஆரியர் வாழும் புகழ் கொண்ட இமயமலை,தெற்கில் கன்னியாகுமரி இரண்டுக்கும் இடையில் தன்னைப் புகழ்ந்துகொண்டிருக்கும் அரசர்களின் வீரத்தை அழித்து வெற்றி கண்டவன் சேரலாதன்.
துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணம்
தூக்கு:செந்தூக்கு
பெயர்:புண் உமிழ் குருதி
இப்பெயர் இப்பாடலின் 8வது அடியிலுள்ளத் தொடரால் இடப்பட்டது.
இப்பாடலில் சேரலாதன் கடல்கடந்து சென்று போரிட்டு வென்று மிகுந்த செல்வங்களை அள்ளி வந்தான், ஆரியரை வணங்கச் செய்து இமயம் முதல் குமரி வரை வெற்றிக்கொண்டான். பகைவரின் காவல் மரத்தினை அறுத்து தனக்கு முரசு செய்துக் கொண்டான் என்ற அவனது வீரச்சிறப்புகளை அறியமுடிகிறது
அடுத்ததாக இப்பத்துப் பாடல்களின் இறுதியில் காணப்படும் பதிகத்தை பார்ப்போம். பதிகம் முதல் பகுதி கவிதையாக ஆசிரியாப்பாவால் ஆனதாக அமைகிறது. இரண்டாம் பகுதி உரைநடையாக உள்ளது.
பதிகம் :
மன்னிய பெரும்புகழ், மறுஇல் வாய்மொழி,
இன்இசை முரசின், உதியஞ்சேரற்கு
வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்றமகன்
அமைவரல் அருவி இமையம் வில்பொறித்து,
இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத்
5
தன்கோல் நிறீஇ, தகைசால் சிறப்பொடு
பேர்இசை மரபின்ஆரியர் வணக்கி,
நயன்இல் வன்சொல் யவனர்ப் பிணித்து,
நெய்தலைப் பெய்து, கைபிற் கொளீஇ,
அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு, 10
பெருவிறல்மூதூர்த் தந்து, பிறர்க்கு உதவி,
அமையார்த் தேய்த்த அணங்குடை நோன்தாள்
இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனைக்
குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப்பாட்டு.
அவைதாம்: புண்உமிழ்குருதி, மறம்வீங்குபல்புகழ், பூத்தநெய்தல், சான்றோர் மெய்ம்மறை, நிரைய வெள்ளம், துயில்இன்பாயல், வலம்படு வியன் பணை, கூந்தல்விறலியர்,
வளன் அறுபைதிரம், அட்டுமலர்மார்பன்.
பாடிப் பெற்ற பரிசில்: உம்பற்காட்டு ஐந்நூறு ஊர் பிரமதாயம் கொடுத்து, முப்பத்துஎட்டு யாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகம் கொடுத்தான் அக்கோ.
இரண்டாம் பத்தின் பதிகத்திலிருந்து நாம் அறியக்கிடைப்பவை
v
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்துஎட்டு யாண்டு வீற்றிருந்தான்.
v
இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமையத்தில் வில்பொறித்தான்
v
ஆரியரை வணக்கினான்
v
யவனரை அரண்மனைத் தொழிலாளியாக்கிக் கட்டுப்படுத்தினான்
vபகைநாட்டுச் செல்வங்களைக் கொண்டு வந்து தன் நாட்டு மக்களுக்கு வழங்கினான் என்ற பலச் செய்திகளாகும்,
பிறப்பாடல்களின் கருத்தை சுருக்கமாகக் காண்போம்..
12.போரில் பெற்ற பெருஞ்செல்வங்களைப் படைகளுக்கும், குடிமக்களுக்கும் அளித்துள்ளான். தனது உறவினரின் நீண்ட நாள் பசியைப் போக்க மாமிசம் கலந்த வெண்சோற்றினை அளித்துள்ளான். இவன் பரிசிலர்க்குத் தெளிந்த கள்ளினையும், புதிய ஆடைகளையும் அணிகலன்களையும் வழங்கிச் சிறப்பித்ததை,
தொல்
பசி உழந்த
பழங்கண் வீழ,
15
எஃகு
போழ்ந்து அறுத்த
வால் நிணக்
கொழுங் குறை,
மை ஊன் பெய்த
வெண்னெல் வெண்
சோறு,
நனை
அமை கள்ளின் தேறலொடு மாந்தி;
என்ற பன்னிரண்டாம் பாடலிலிருந்து அறியலாம்.
13.இமயவரம்பன் நெடுச்சேரலாதன் தாக்குதலுக்கு முன்பு அவன் பகைவர் நாடு எப்படி இருந்தது? தாக்கி வென்றதற்குப் பின்னர் எப்படி இருக்கிறது, நெடுஞ்சேரலாதன் ஆளும் சொந்த நாடு எப்படிச் செழிப்புற்றிருக்கிறது என்னும் செய்திகள் பதின்மூன்றாம் பாடலில் கூறப்பட்டுள்ளன.
14.பதினாங்காவதுப்பாடலில்
நிலம்,
நீர், வளி,
விசும்பு, என்ற
நான்கின்
அளப்பு
அரியையே;
நாள்,
கோள், திங்கள், ஞாயிறு,
கனை அழல்,
ஐந்து
ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையை;
போர்
தலைமிகுத்த ஈர்
ஐம்பதின்மரொடு 5
துப்புத்
துறைபோகிய, துணிவுடை ஆண்மை,
அக்குரன்
அனைய கைவண்மையையே;
நீர்,நிலம்,காற்று ஆகாயம் என்ற நாங்கு கோள்களினும் அளப்பரியை நீ எனவும், விண்மீன், கோள்கள், மதியம், சூரியன், வால்மீன் ஆகிய ஐந்தும் ஒன்றுகூடி ஒளி தருவது போல் புகழ்-ஒளி தருபவன் நீ எனவும் கூறியிருப்பது கோள்கள் விண்மீங்கள் பாற்றிய அவர்தம் கருத்தை அறியச் செய்கிறது. இப்பாடலில் வரும் அக்குரன் என்பது
கர்ணனாக இருக்கலாம் என்பது அறிஞர் கருத்து. நூற்றுவரோடு (துரியோதனன் ஆதியர்) சேர்ந்து
போரிட்டுத் தன் வலிமையை நிலைநாட்டிய அக்குரன் போன்று கொடை வழங்குபவன் நீ.
எழுமுடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து
நோன் புரித் தடக் கைச் சான்றோர் மெய்ம்மறை!
என்பதிலிருந்து ஏழு மன்னர்களை வென்று அவர்தம் முடியைக்கோர்த்து ஆரமாக அணிந்தான் என் அறிகிறோம். சான்றோர்களை காத்தமையும் புலனாகிறது. இவனை வென்றாலன்றி அவன் நாட்டின் சான்றோர்களுக்கு தீங்கிழைக்க இயலாது என்பது கருத்து.
15. நெடுஞ்சேரலாதனின் போர்த்திறன் இந்தப் பாடலில் போற்றப்படுகிறது. இவனது பகைவர்-நாடு சீர்கெட்டுக் கிடப்பதும், இவனது நாட்டில் மகிழ்ச்சி ததும்புவதும் இதில் குறிப்பிடப்படுகின்றன.
16. சேரலாதனின் எழுமுடி கெழீஇய மார்பு, அங்கே அவன் மனைவி பிரிவால் வாடவும், இங்கே போரில் வல்லவர்களின் கண்கள் பார்த்துத் துயிலவும், வேறுபட்டுப் பாசறையில் இருப்பதாக, விறலி ஒருத்தி சொல்வது போல இந்தப் பாடல் உமைந்துள்ளது.
17. பாதுகாப்புத் தேடி நாலாத் திசைகளிலும் அலைபவர்களே! இவன் குடைநிழலுக்குள் வாருங்கள். இந்த நிழல் தீது நீங்கிய சிறப்பினை உடையது. இவன் குடைநிழலில் இருக்க ஞாயிறே விரும்பும். அமிழ்த மழை இந்த நிழலில் பொழியும். புயல்காற்று வளைந்து கொடுத்துச் சுழலும். இவன் பசும்பூண் அணிந்த மார்பினை உடையவன். பாடினி மகளிரைப் போற்றுபவன். உங்களுக்கும் பரிசில் தருவான். வருக! என அவன் பண்பும் சிறப்பும் சொல்வதாக அமைகிறது இப்பாடல்.
18 சேரலாதன் கொடைச்சிறப்பினைப் போற்றும் பாடல் இது.
அழகிய கூந்தலை உடைய விறலியரே! களித்திருக்க வேண்டிக் கள்ளை உண்ணுங்கள். சோறு ஆக்குங்கள். நீங்கள் பெற்றதையெல்லாம் மற்றவர்களுக்கு உதவுங்கள். தப்பே இல்லை.
சேரலாதன் மீண்டும் வழங்குவான். உயிரினங்கள் அழியும்படி பல ஆண்டுகள் மழை இல்லாமல் காய்ந்து ஈர மேகம் பொழியாதா என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் காலத்தில் மழை பொய்த்தாலும் சேரலாதன் நீங்கள் விரும்பியதை வழங்குவதில் பொய்க்கமாட்டான். எனவே, விறலியரே! வழங்கிக் கொண்டே இருங்கள் என்று அமைகிறது இப்பாடல்.
19. நெடுஞ்சேரலாதன் தொடர்ந்து போர்க்களத்திலேயே கிடந்தான். புலவர், அவனது மனைவியை நினைவூட்டியும், பகைவர் நாடு அழிந்து கிடப்பதைக் கூறியும் போரை நிறுத்த அறிவுரை கூறுகிறார்.
20. பகைவரை அழித்து மலர்கின்ற அட்டுமலர் மார்பன். எனக்கும், பிறருக்கும் பரிசில் வழங்கும்போது, பரிசில் வேண்டி வருவோர் வல்லமை இல்லாதவராக இருந்தாலும், கொடை தன் கடமை என்று எண்ணி வழங்கும் நேர்மையான நெஞ்சம் கொண்டவன். உயிரினம் அழியும்படி பல ஆண்டுகள் மழை பொழியாவிட்டாலும் மக்கள் பசித்திருக்க விடாமல் பேணுபவன். இவனைப் பெற்ற தாயின் வயிறு மாசற்று மலர்வதாகுக என வாழ்த்துவதாக அமைகிறது இப்பாடல்.
இப்பாடல்கள் ஒவ்வொன்றையும் படித்து இன்புற வேண்டும். தமிழ் கடலில் நாம் கற்றது எவ்வளவு சிறுத் துளி என்பது நமக்கே புலனாகும். இப்படிப்பட்ட சிறந்த இலக்கியத்தை அறிய முனைந்தோமே என்கின்ற இன்பப் பெருக்கில் அடுத்த பத்தினை அறியும் ஆவலோடு விரைவில்
அன்புடன்
உமா…
மிக்க நன்று
ReplyDelete