Thursday, 27 June 2019

பத்துப் பாட்டு - மதுரைக்காஞ்சி


சங்க இலக்கிய தொகுப்பான பத்துப் பாட்டில் அடுத்ததாக நாம் அறிய இருப்பது மதுரைக் காஞ்சி. இந்நூல் 782 அடிகள் கொண்ட மிக நீண்ட நூல். ஆசிரியப்பா மற்றும் வஞ்சிப்பாவினாலானது.

இதனைப் பாடியவர் மாங்குடி மருதனார்
பாடப்பட்டவன் தலையானங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.

இந்நூல் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு உலகியல் உணர்த்தும் விதமாகப் பாடப்பட்டது.

இம்மதுரைக் காஞ்சி நூல் பற்றிய சிறப்பான விளக்கம் http://www.tamilvu.org/slet/l4330/l4330pd1.jsp?bookid=265&pno=113 என்ற இணையதளத்தில் மிக நேர்த்தியான முறையில் தரப்பட்டிருக்கிறது. அதிலிருந்து பாட்டின் அமைப்பு பற்றிய பகுதியினை இங்கு காண்போம்.

பாண்டியன் நெடுஞ்செழியன் தமிழ்நாடு முழுவதையும் தனித்தாண்டவன், இணையற்ற வீரன், போர்செய்வதையே பொழுதுபோக்காகக் கொண்டிருந்து வந்தவன், நால்வகைப் படைகளையும் நல்லமுறையிலே பெருக்கி வைத்திருந்தான், செல்வச்செருக்கால், உலகப் பொருள்களும், உலக இன்பமும் அழிந்துவிடக் கூடியவை என்பதை மறந்திருந்தான்.

இவனுடைய உற்ற நண்பர் மாங்குடி மருதனார்; உலக நிலையாமையை இவனுக்கு உணர்த்த எண்ணினார். அவனைப்பார்த்து முதலில் அவன் முன்னோர்களின் அரசியல் நேர்மையை எடுத்துக்காட்டினார். அதன்பின், முன்னோர் முறையிலே தவறாமல் அவன் புரிந்துவரும் அரசியல் சிறப்பையும் பாராட்டினார். அவனுடைய அஞ்சாமை, வீரம், அருஞ்செயல்கள் ஆகியவற்றைப் போற்றினார். இறுதியில் அவனுடைய சிறந்த குணங்களை அவன் சிந்தை மகிழும்படி எடுத்துச் சொன்னார்.

இவ்வளவையும் எடுத்துக்காட்டியபிறகு, “பாண்டியனே! உன்னைப் போலவே இவ்வுலகிலே எண்ணற்ற மன்னர்கள் வீரர்களாக - செல்வமுடையவர்களாக கொடையாளிகளாகச் சிறந்து வாழ்ந்தனர். அவர்களுடைய எண்ணிக்கை கடல்துறையிலே அலைகள் கொண்டுவந்து குவிக்கும் மணலைக்காட்டினும் பல. அவர்களெல்லாம் புகழுடன் வாழ்ந்தனர்; முடிவிலே மாநிலத்தைவிட்டு மறைந்து போயினர்” என்று நிலையாமையை எடுத்துக்காட்டினார்.

இதன்பின் பாண்டிய நாட்டின் இயற்கை வளத்தைப் பாராட்டினார். அந்நாட்டிலே அமைந்துள்ள மருதம், முல்லை, குறிஞ்சி, பாலை, நெய்தல் ஆகிய ஐந்திணைகளின் ஆக்கங்களையும் அழகாகப் பாடினார்.

அதன்பின் வையையாற்றின் வளத்தைப் புகழ்ந்தார். வையையின் தென்பால் அமைந்துள்ள மதுரை நகரத்தின் மாண்பைப் பாராட்டினார். அந்நகரத்தில் நடைபெறும் பலவகையான நிகழ்ச்சிகள்-வாணிகம், தொழில்கள் எல்லாவற்றையும் எடுத்துக்காட்டிப் புகழ்ந்தார்.

நெடுஞ்செழியனுடைய நேர்மையான ஆட்சிமுறையை விளக்க நினைத்தார்; அதற்கு ஆதரவாக மதுரையில் இருந்த நீதி மன்றத்தின் சிறப்பைக் கூறினார். வணிகர்களின் நடுநிலையைப் பற்றி நாவாரப் புகழ்ந்தார், மதுரை நகரில் வாழும் மக்களுடைய சிறந்த வாழ்க்கையைப் பற்றியும் சொன்னார். இறுதியில் “உன் காதல் மகளிருடன் கலந்து உண்டு மகிழ்ந்து வாழ்க” என்று நெடுஞ்செழியனை வாழ்த்தினார்.

இந்த முறையிலேயே இந்நூலை அமைத்துப் பாடியிருக்கிறார் ஆசிரியர் மாங்குடி மருதனார். இந்நூலைப் பொருளறிந்து படிப்போர் இதன் சொற்சுவை, பொருட்சுவைகளை நுகர்ந்து இன்புறுவார்கள். பழந்தமிழ் மதுரையில் சுற்றித் திரிவது போல் உணர்வார்கள்.

இனி மதுரைக் காஞ்சியில் சில பாடல் வரிகளை பார்ப்போம்

மேற்சொன்னவாறே சோழர்கள் காலத்திலும் வளம் பொங்கி, செல்வச் செழிப்புடன் நாடு விளங்கியது. பல கலைகள் வளர்ந்தன. ஆனால் மக்களின் காமமும் வளர்ந்தது. மன்னர்களும் உலக இன்பத்தில் திளைத்திருந்தனர். மன்னனையும் நாட்டையும் நேர்வழிப்படுத்துதல் அறிஞர்கள், ஞானிகள், புலவர்கள் தங்கள் கடமை என்று நினைத்தனர். இச்சூழ்நிலையில் தான் கம்பர் ஒப்பற்ற காவியமான இராமாவதாரத்தைப் பாடினார். நூல் முழுவதும் மிகச்சிறப்பாக அறம், ஒழுக்கம் கூறப்பட்டிருக்கும். இராமாயணத்தை உணர்ந்து படிப்போர் அறவழி நிற்பது திண்ணம். 

கம்ப இராமாயணத்தில் பால காண்டத்தில் ஒரு காட்சி. தசரதன் இராமனுக்கு முடிசூட்ட முடிவெடுத்து தனது குரு, அமைச்சர்கள், சிற்றரசர்காள் எல்லோரிடமும் கருத்தை கேட்டறிந்து பின் இராமனை அவைக்கு அழைத்து வரச் செய்கிறான். இராமனிடம் முடிசூட்டும் தகவலை சொல்கிறான் தசரதன். இப்போது இராமனின் நிலை என்ன? தனக்கு முடிசூட்டப் போகிறார்கள் என்றதும் இராமன் அதை எவ்வாறு எதிர்கொண்டான் என்பதை

தாதை அப் பரிசு உரைசெய, தாமரைக் கண்ணன்
காதல் உற்றிலன்; இகழ்ந்திலன்; 'கடன் இது' என்று உணர்ந்தும்,
'யாது கொற்றவன் ஏவியது அது செயல் அன்றோ,
நீதி எற்கு?' என நினைந்தும், அப் பணி தலைநின்றான்.

தந்தை அவ்வாறு சொன்னதும், தாமரைக்கண்ணனாகிய இராமன்
காதல் உற்றிலன்- மிகுந்த விருப்பத்தோடு அதை ஏற்க வில்லை,
இகழ்ந்திலன் – அப்பரிசை வெறுக்கவும் இல்லை
கடன் இது – தான் என்று தசரதன் மகனாகப் பிறந்தானோ அன்றே இது தனது கடமையானது என் உணர்ந்து இருந்தாலும்
இன்று 'யாது கொற்றவன் ஏவியது அது செயல் அன்றோ,
அரசன் கட்டளையை ஏற்று தான் அதன் படி செய்வது தான் முறை என்பதால் தான் அரசு ஏற்பதாக கூறுகிறான்.

ஒரு தலைமை பொறுப்பை ஏற்போருக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான குணம் இது. அரசியல் தலைமையாக இருந்தாலும் சரி, நிர்வாகத் தலைமையாக இருந்தாலும் சரி எந்த நிலையிலும் விருப்பு வெறுப்பின்றி தன் கடமை என்றுணர்ந்து நடுவு நிலைமையோடு செயல்படுதல் மிக முக்கியம்.

இதே கருத்து
மதுரைக் காஞ்சியிலும்

அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி,
செற்றமும் உவகையும் செய்யாது காத்து, 490

ஞெமன் கோல் அன்ன செம்மைத்து ஆகி,
சிறந்த கொள்கை அறம் கூறு அவையமும்

என்று அச்சம் கொள்ளாது, மற்றவர்க்கு அச்சம் தராது, சினம் கொள்ளாது உவகையும் கொள்ளாது எமனைப்போல செம்மையான அறம் கொண்ட அவை பாண்டியனின் அவை எனக் கூறப்பட்டுள்ளது அறிந்து போற்றத்தக்கத்து.

துவக்கத்தில் பாண்டிய நாட்டின் இயற்கை வளம், அம்மன்னர்காளின் ஆட்சி சிறப்பு ஆகியனக் கூறப்பட்டுள்ளது.

ஓங்கு திரை வியன் பரப்பின்
ஒலிமுந்நீர் வரம்பு ஆகத்…

உயர்ந்த அலைகளைக்கொண்ட ஒலிக்கின்ற கடற்பரப்பை எல்லையாகக் கொண்ட நிலத்தில் மிகப் பெரிய தேன் கூடுகள் நிறைந்த உயர்ந்த மலை முகடுகள் உள்ளன. அங்கு வளி மண்டலத்தில் காற்றானது வலப்புறமாகச் சுழன்று வீசுகிறது. (வலப்புறமாக காற்றடித்தால் பலன் என்பது நம்பிக்கை) பகற் பொழுதை உண்டாக்கும் சூரியனும் இரவை உண்டக்கும் நிலவும் மற்ற பெரிய விண்மீன்களும் தவறாது தங்கள் கடமையைச் செய்ய, மழைப் பொழிந்தும் மரங்களெல்லாம் பயனீந்தும் இருப்பதால் பாண்டியனின் நாட்டில் மக்கள்

நோ யிகந்து நோக்கு விளங்க

பசி பிணி இல்லாது அழகு தோன்ற, துன்பமில்லாமல் வாழ்ந்தனர் என்று நயமாகக் காட்டப்பட்டுள்ளது.

இப்பாடலில் பழைய தமிழகத்தின் எல்லை,
தென் குமரி வட பெருங்கல்    70
குண குட கடலா வெல்லைத்…

என்றும்
பண்டை காலத்தில் ஓணம் பண்டிகை நடைப்பெற்றதை

மாயோன் மேய ஓண நல் நாள்,     
என்றும் வரலாற்று செய்திகள் அமைந்துள்ளது சிறப்பு.

இப்பாடலின் மூல நோக்கம் அறம் கூறுவதே.

அக்காலத்தில் இருந்த அரசர், அந்தணர், வணிகர் வேளாளர் என்ற பிரிவுகளைக்கூறி, ஒவ்வொருவருக்குமான அறம் கூறுவதாய் இப்பாடல் அமைந்துள்ளது. தொல்காப்பியர் காலத்திலிருந்தே இப்பிரிவுகள் சொல்லப்பட்டாலும் இப்பாடலில் அரசரை முதலாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது நோக்கத் தக்கது.

சிறந்த வேதம்  விளங்கப் பாடி 
விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து
நிலமமர் வையத்து ஒருதாம் ஆகி
உயர்நிலை உலகம் இவணின்று எய்தும்
அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின்
பெரியோர் மேஎய் இனிதின் உறையும்
குன்றுகுயின் அன்ன அந்தணர் பள்ளி

என்பது அந்தணருக்கான ஒழுக்கமாக சொல்லப்பட்டுள்ளது.

அந்தணர் வேதம் ஓதவேண்டும், அவர்களுக்கான ஒழுக்கத்துடன் இருக்கவேண்டும். அற நெறி பிறழாது அன்புள்ளத்தாராகி மேலுலக வாழ்வை இவ்வையத்தின்றே எய்தும் படி வாழ வேண்டும். அப்படி அந்தணர் மகிழ்வுற வாழ்ந்தப் பகுதி அந்தணர் பள்ளி எனப்பட்டது.

வண்டுபடப் பழுநிய தேனார் தோற்றத்துப்
பூவும் புகையுஞ் சாவகர் பழிச்சச்
சென்ற காலமும் வரூஉ மமயமும்
இன்றிவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து
வானமு நிலனுந் தாமுழு துணருஞ்
சான்ற கொள்கைச் சாயா யாக்க
ஆன்றடங் கறிஞர் செறிந்தனர் நோன்மார்

சாவகர் என்றதனால் இங்கு சமணர்களின் ஒழுக்கம் கூறப்பட்டுள்ளது என அறியலாம். இவர்கள் தேன் நாவில் இனிப்பதைப் போன்று பார்வைக்கே இனியவர்கள். அகன்ற அறிவும், அதனைக் காட்டிக்கொள்ளாத அடக்கமும் கொண்டு வாழும் ஆன்றடங்கு அறிஞர். அவர்கள் அறிவுச் செறிவும் உடையவர்கள். இவர்கள் இன்று வழங்கும் ஒழுக்கத்தை உணர்ந்ததோடு சென்ற காலமும் வருங்காலமும் அறிந்தவர். சான்ற கொள்கையும் சோர்வில்லாத உடலும் கொண்டவர்.

அரசனுக்கான ஒழுக்கம்

மதுரைக்காஞ்சியின் பாட்டுடைத்தலைவன் தலையாலம் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கு நிலையாமை பற்றி இந்நூல் எடுத்துரைக்கின்றது என்று பார்த்தோம். போர் வெற்றி போன்றன நிலையில்லாதவை என எடுத்தரைத்து உலகில் என்றும் நிலைக்கும் அறத்தினைச் செய்ய இம்மன்னனை வற்புறுத்துவதாக இப்பாடல் பாடப் பெற்றுள்ளது. எனவே அரசர்க்குரிய பொது அறங்கள் இப்பாடலில் வகைப்படுத்தப் பெற்றுள்ளன.

அரசனுக்கு போர்வெற்றி  மட்டும் போதாது, அரசன் அறம் தலை நிற்க வேண்டும் என்பதே இந்நூலின் முக்கிய நோக்கமாக விளங்குகின்றது.
       
    "பணைகெழு பெருந்திறல் பல்வேல் மன்னர்
     கரைபொருது இரங்கும் சுனைஇரு முந்நீர்
     திரையிடு மணலினும் பலரே  உரைசெல
     மலர்தலை உலகம் ஆண்டு கழிந்தோரே!''

இவ்வடிகளில்  போர்வெற்றி பெற்ற மன்னர் பலர் பிறந்து மண்ணாயினர், போரில் வெற்றி பெற்று புகழ்பெற்ற மன்னர்கள் கடற்கரை மணலினும் பலர். அவர்கள் எல்லோரும் இவ்வுலகை ஆண்டு மறைந்துவிட்டனர். அது உண்மையான புகழ் இல்லை என்று எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. மேலும்

"பரந்து தோன்றா வியன்நகரால்
பல்யாகசாலை முதுகுடுமியின்
நல்வேள்வித் துறைபோகிய

அரியதந்து குடிஅகற்றி
பெரியகற்று இசைவிளக்கி
முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்
பன்மீன் நடுவண் திங்கள் போலவும்
பூத்த சுற்றமொடு பொலிந்து இனிது விளங்கிப்
பொய்யா நல்லிசை நிறுத்த''

என்று பாண்டியனைப் புலவர் வாழ்த்துரைக்கும் போது அவன் தமிழ் வளர நல்வேள்வி செய்தவன் நிலந்தரு திருவின் நெடியோன். தமிழ் வளர்க்கும் நல்வேள்விக்கு இவன் நிலக்கொடை வழங்கினான். இந்த நிலக்கொடையால் இவன் ‘நிலந்தரு திருவின் நெடியோன்’ என்று சிறப்பிக்கப்பட்டான். இந்தத் தமிழ்க்கொடை வியக்கத் தக்க பெருமை கொண்டது. சான்றாண்மை மிக்கது. செம்மையானது. பலர் வாயாலும் புகழப்படுவது. புகர் என்னும் குற்றம் கரும்புள்ளிக் குற்றம் இல்லாத்து. நிலந்தரு திருவின் நெடியோன் போல நீ (நெடுஞ்செழியன்) நல்வேள்வி செய்து சிறப்புடன் திகழ வேண்டும் என்றும்
தருபவை அரிய பொருள்களாக இருக்க வேண்டும் குடிமக்களின் வளத்தை விரிவு படுத்துவதாக இருக்க வேண்டும் அரிய பெரிய செய்திகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் புகழ் ஒளி உன்மீது வீச வேண்டும் கடலில் தோன்றும் ஞாயிறு போல் இளவெயில் வீசவேண்டும் பல மீன்களிடையே விளங்கும் திங்கள் போல் தண்ணொளி தரவேண்டும் நீ திங்கள் போலவும் உன் சுற்றம் விண்மீன்கள் போலவும் திகழ வேண்டும் என்றும் கூறும் அடிகள் அரசருக்கான அறங்களை எடுத்துரைப்பனவாக உள்ளன.

இவ்வாறே வாணிகர், பெரும் செல்வர், பெண்கள் மற்றும் பல மக்களுக்குமான அறங்கள் இப்பாடலில் விரவி இருக்கின்றன. மதுரையில் ஒருநாள் முழுதும் நடைபெரும் நிகழ்வுகளை படிக்கும் போது மதுரையில் சில காலம் வாழ்ந்த அனுபவம் கிடைக்கும்.
அறத்தைக் குலைப்பவர்களாக கள்வர், அணங்கு, பேய் போன்றன விளங்கப்பட்டுள்ளன. இவர்களின் இயல்பையும், இவற்றிலிருந்து மக்களைக் காக்கும் ஒற்றர், காவலர் பற்றியும் மதுரைக்காஞ்சி குறிப்பிடுகின்றது.

இவ்வகையில் தமிழகத்தின் சங்க கால அறச் சூழலை எடுத்துரைக்கும் மிகச் சிறந்த நூலாக மதுரைக்காஞ்சி விளங்குகிறது என்பதைக் காணமுடிகிறது.

அறிந்து சுவைப்போம். இலக்கியங்கள் பழம் பெருமை பேச மட்டுமில்லை. அவைக்கூறும் அறங்கள் நமது அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கவேண்டியவையும் ஆகும் என்பதை உணர்வோம்.

அடுத்த பதிவுடன் விரைவில்

அன்புடன்
உமா

Sunday, 21 April 2019

பத்துப் பாட்டு - முல்லைப்பாட்டு


நாம் அடுத்து காண இருப்பது...
பத்துப்பாட்டு தொகை நூல்களில் 103 அடிகள் கொண்டு, அளவினால் சிறியதான முல்லைப்பாட்டு. இது ஆசிரியப்பாவில் அமைந்த நூல்.
முல்லைப்பாட்டு வரிகளால் சிறியது ஆனாலும் அதில் மிகச் சிறப்பான வகையில் காட்சி சித்திரங்கள், தமிழரின் பண்பாட்டுச் சித்தரிப்புகள், போன்றவை நயம் மிக்க வகையில் எடுத்துக் கூறப்பட்டுள்ளமை அறிந்து மகிழத்தக்கது.

இதனை இயற்றியவர் நப்பூதனார். இவர் சோழ நாட்டின் தலைநகரமாக விளங்கிய காவிரிப்பூம்பட்டினத்தின் பொன் வணிகரின் மகன் என்று அறிகிறோம். இதன் மூலம் அக்காலத்தில் பொன்னை தரம் பிறித்தறிந்து வாணிகம் செய்த பொன் வணிகர் இருந்தமை நாமறிய முடிதல் சிறப்பு.

இதன் பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று அறியப்பட்டாலும் இப்பாடல் அகப்பொருள் பற்றியது என்பதால் தலைவனது பெயர் கூறப்படவில்லை.

இவ்வரசன் சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையனையும், சோழன் கிள்ளிவளவனையும் ஐந்து வேளிர் குறுநில மன்னர்களையும் (திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன்) சோழ நாட்டில் உள்ள தலையாலங்கானத்தில் தோற்கடித்தான் என்பது வரலாறு.

இப்பாட்டில் முல்லை நிலத்தின் முதற்பொருள், கருப்பொருள் மற்றும் உரிப்பொருள் சிறப்பாக அமைய கவிநயத்துடன் பாடியிருப்பது போற்றத்தக்கது.

முல்லை நிலத்துக்குரிய உரிப்பொருளான பிரிவை ஆற்றியிருத்தலாகிய ஒழுக்கத்தை கூறுவதால் இது முல்லைப்பாட்டு எனப்பட்டது.

முல்லை நிலத்தின் சிறப்பே கற்புதான். எனவேதான் ‘முல்லை சான்ற கற்பின்’ என்று சிறப்பிக்கப்பட்டது.

‘கற்பெனப்படுவது சொற்திறம்பாமை’ என்பது ஔவையாரின் மொழி.

கற்பு என்பது சொல் தவறாமல் நடத்தல். அது இருபாலருக்கும் பொதுவானது என்பதை முல்லைப்பாட்டு மிகச் சிறப்பாகக் காட்டுகிறது.
தலைவன் போர் காரணமாக பிறிந்து இருக்கிறான். அவன் வருவதாகச் சொல்லிச் சென்ற கார்காலம் துவங்குகிறது. தலைவன் இன்னும் வரவில்லையென்றாலும் அவன் வரும்வரை ‘வருந்தேன்’ என்று சொன்ன சொல் தவறாத வண்ணம்

‘நெஞ்சாற்றுப்படுத்த நிறைதபு புலம்பொடு நீடு நினைந்த தேற்றியும்

என்று தலைவி தன் நெஞ்சைத் தேற்றுவதாக காட்டியிருப்பதும்,

கார்காலம் துவங்கியதால்

‘துனை பரி துரக்கும் செலவினர்’   

என்று விரைவாகச் செல்லும் குதிரையை இன்னும் விரைந்துச் செலுத்துபவனாக தலைவனைக் காட்டியிருப்பதும் கற்பின் இலக்கணத்தை தலைவன் தலைவி வாயிலாக காட்டப்பட்டுள்ளதையும் கற்பு இருபாலருக்கும் பொதுவானது என்பதையும் குறிப்பதாக உள்ளது.

இனிய இல்லறத்திற்கு அடிப்படையாக தலைவனும் தலைவியும் மனமொத்து நடக்கும் மிக அழகிய உள்ளப்பாங்கே கற்பாகும். ஆயின் இது இன்று உடல் சார்ந்த ஒழுக்கமாகவும், பெண்ணுக்கே விதிக்கப்பட்டதாகவும் அறியப்படுதல் சிந்திக்கத்தக்கது.

முல்லை நிலம் என்பது காடும் காடு சேர்ந்த இடமும். முல்லை நிலத்திற்கான காலம் கார் காலம். சிறுபொழுது மாலை. முல்லை நிலத்துக்குரிய கடவுள் திருமால்.

முல்லை நிலத்தில் கார் காலம் துவங்குகிறது இதுவே இப்பாடலின் துவக்கமாக அமைந்துள்ளது.

நனந்தலை உலகம் வளைஇ, நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக்கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல,
பாடு இமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி, 
பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை (1-6)

இங்கு முல்லை நில கடவுள் திருமாலின் தோற்றத்தையும் கார்கால மழைப் பொழிவையும் அழகாக காட்டியிருக்கிறார் ஆசிரியர்.

இந்த உலகம் முழுவதும் நிறைந்து, வலப்புறமாக சுழி கொண்ட வலம்புரிச் சங்கையும் சக்கரத்தையும் கையில் கொண்டு மகாபலி சக்கரவர்த்தி இட்ட நீரைப் பெற்றதும் விஸ்வரூபமெடுத்து நின்ற திருமாலைப் போல் முகிலானது ஒலி முழங்குகின்ற குளிர்ந்த கடலிலிருந்து நீரைப்பெற்று வலப்புறமாகச் சுழன்று மலைகளை இடமாகக் கொண்டு எழுந்து மிகுந்த மழையைப் பொழிந்த சிறிய புல்லிய மாலை நேரம், பிரிவுத் துயரத்தைத் தரும் மாலை நேரம்...

என்று மிகச் சிறப்பான கார்காலக் காட்சிப்படுத்தலோடுத் துவங்குகிறது இப்பாடல்.
இதில் திருமால் வலம்புரிச் சங்கும் சக்கரமும் ஏந்தியவனாகவும், மகாபலியிடம் மூன்றடி மண்கேட்ட வாமணாவதார புராணக்கதையும் காட்டப்பட்டுள்ளதால் இப்பாடல் தமிழர்களிடம் சமய கருத்துகள் தோன்றியப் பிறகு எழுதப்பட்டது என்பதை அறியமுடிகிறது.
மழைப்பெய்யும் அறிவியலும் சிறப்பாகக் காட்டப்பட்டிருப்பது அறியத்தக்கது.

மேலும் இப்பாடலில் முல்லைத் திணைக்குரிய கருப்பொருள்களான மக்கள் மிலேச்சர், யவனர், பணிபுரியும் பெண்கள் நாழிகைக் கணக்கர், காவலர் பறவை மயில், விலங்குகள் மான், யானை, பசு ஆகியன, காயா கொன்றை காந்தள் கோடல் முல்லை போன்றப் பூக்கள், வரகு உணவு ஆகியன மிக அருமையாக அமையுமாறு பாடப்பட்டுள்ளது.

முல்லை நிலத்திற்கான புறத்திணை வஞ்சித் திணை வஞ்சித் திணை என்பது மன்னன் போருக்குச் செல்லுதலை கூறுவது. இப்பாடலிலும் வஞ்சித் திணையின் பாசறை நிகழ்வுகள் கூறப்பட்டுள்ளன.

இனிப் இப்பாட்டின் சில வரிகளை பார்ப்போம்..

அருங்கடி மூதூர் மருங்கில் போகி,
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு
நாழி கொண்ட நறு வீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கைதொழுது,
பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்ப, (7-11)
.
அரிய காவலையுடைய பழைய ஊர். அங்கு யாழிசைப்போல் வண்டுகள் ரீங்காரமிடுகின்றன என மிகுந்த இரசனையோடு துவங்கும் இவ்வரிகளில் இரண்டு பழக்கங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.

பெண்கள் நாழியில் நெல்லை கொண்டுச் சென்று நறுமணமிக்க முல்லைமலர்த் தூவி கையால் தொழுதல், மற்றும் விரிச்சி கேட்டல்.

இறைவனை கைக்குவித்து தொழுதல் அன்றும் வழக்கமாக இருந்திருக்கிறது. விரிச்சி என்பது நன்மொழி. முதுமக்கள், நல்லோரின் வாய்மொழி நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையும் காட்டப்பட்டுள்ளது.

சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறு துயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள், “கைய
கொடுங்கோல் கோவலர் பின் நின்று உய்த்தர,   15
இன்னே வருகுவர் தாயர்” என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம், அதனால்,
நல்ல நல்லோர் வாய்ப்புள்,

முல்லை நிலத்தின் மக்கள் ஆயர். இவ்வாயர் பெண்கள் மிகுந்த போற்றுதலுக்குரியவராய் காட்டப்படுகிறார்கள். எனவே ஆயர் பெண் கன்றிடம் சொன்ன வார்த்தையையே விரிச்சியாக கொண்டு

நன்னர் நன்மொழி கேட்டனம், அதனால்,
நல்ல நல்லோர் வாய்ப்புள்
தலைவியைத் தேற்றுகின்றனர்.

சின்ன கயிற்றில் கட்டப்பட்ட கன்றானது கத்துகிறது. அதைக்கேட்ட ஆயர் பெண்ணானவள், நடுங்குகின்ற குளிரால் தன் கையால் தோளை அணைத்தவாறு இருப்பவள் அக்கன்றின் தோளைச் சுற்றி கையால் அணைத்து கோவலர் தம் கொடுங்கோலால் தட்டியவாறே அழைத்துவர உன் தாயான பசு உடனே வந்துவிடும் என்று கூறுகிறாள்.
இதைக் கேட்ட தலைவியின் சுற்றம் அதை நல் நிமித்தமாகக் கொண்டு தலைவன் உடனே வருவான் என தேற்றுகின்றனர்.

இங்கு கன்றை கயிற்றால் கட்டி வைக்கும் பழக்கமும், கோவலர் மாடு மேய்க்க கொடுங்கோல் பயன் படுத்தியமையையும் கூட அறியமுடிகிறது. மனிதரிடம் மட்டுமல்லாமல் விலங்குகளிடமும் அவர் அன்பு பூண்டு இருந்ததை இதன்மூலம் நாம் காணும் போது தமிழரின் பண்பாட்டுச் சிறப்பை உணரமுடிகிறது.
இவ்வளவுச் சொல்லியும் தலைவி ஆறுதல் அடையாது

…………………….கலுழ் சிறந்து
பூப்போல் உண்கண் புலம்பு முத்து உறைப்ப

மிகவும் கலங்கி தன் பூப்போன்ற மையிட்ட கண்களிலிருந்து முத்துப் போன்ற கண்ணீரை உகுக்கிறாள்.

இவள் பாண்டிய நாட்டுத் தலைவியல்லவா? அதனால் இவள் கண்ணீரையும் முத்தாக காட்டுகிறார் ஆசிரியர். அவரே பொன் வணிகனாரின் மகனல்லவா! அதனால் கூட கண்ணீரும் முத்தாகத் தெரிந்ததோ! புலவருக்கு. என்னே அழகு!

காட்டில் பிடவ கொடிகளைக் கொண்டு பாசறை அமைக்கிறார்கள். அங்கு அரசனுக்கு படைகளுக்கு மத்தியில் திரைகளால் பிரிக்கப்பட்ட தனிவீடு அமைத்தனர், அங்கு

உரையா நாவின்   65
படம் புகு மிலேச்சர் உழையர் ஆக,

வாய்பேசமுடியா மிலேச்சர் காவலிருந்தனர் என்பதை காண்கிறோம். இரகசியம் காத்தல் பொருட்டு வாய்ப் பேச முடியாதார் மன்னனின் பள்ளியறைக்கு காவலிருந்தனர் என்பதை அறியலாம்.

குறுந்தொடி முன் கை கூந்தல் அம் சிறுபுறத்து,   45
இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள்
விரவு வரிக் கச்சின் பூண்ட மங்கையர்,
நெய் உமிழ் சுரையர், நெடுந்திரிக் கொளீஇ,
கை அமை விளக்கம் நந்துதொறும் மாட்ட

என்ற வரிகளில் பெண்களும் போர்காளத்தில் இருந்தனர் என்பதும் அவர்கள் கச்சில் கூரிய ஒளிவீசும் வாளைக் கட்டியிருந்தனர் என்பதும், இவர்கள் பாவைவிளக்குகளில் நெய்கொண்டத் திரியைக் கொளுத்தி அணையாமல் காத்தனர் என்பதும் பெறப்படுகிறது.
மேலும் பாசறையில்
           
பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள்,
 
பொழுதை அறிந்துச் தவறாது சொல்லும் நழிகைக் கணக்கர்,

வலி புணர் யாக்கை வன்கண் யவனர்

வல்லிமையான உடலைக் கொண்ட கொடூரமான கிரேக்கர் ஆகியோர் இருந்ததையும் அறிகிறோம்.

பாசறையில் மன்னனின் மனநிலை அழகாகக் காட்டப்பட்டுள்ளது.

முதல் நாள் மன்னன் தன் படைக்கு நேர்ந்த சேதத்தைப் எண்ணுகிறான்.
தனது யானைப்படைக்கும் குதிரைக்கும் வீர்ர்களுக்கும் ஏற்பட்ட துன்பத்தை காண்கிறான் என்றாலும்
மண்டு அமர் நசையொடு, கண்படை பெறாஅது
என்று
அரசன் போரை விரும்பியவனாக துயிலாமல் இருந்தான் எனறே காட்டுகிறார். அடுத்து

முரசு முழங்கு பாசறை
இன் துயில் வதியுநன் …. ….

பகயை வென்று வாகைச்சூடியதால் முழங்குகின்ற முரசைனைக் கொண்ட பாசறையில் மன்னன் இனிதாக துயின்றான் என்றும் காட்டுகிறார், வெற்றிக்கு முன்னும் பின்னதுமான மன்னனின் மனநிலை அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
முல்லைப்பாட்டின் வழி
அரசனுக்கு நால்வகை படைகளும் இருந்ததை அறிகிறோம்.

எடுத்துஎறி எஃகம் பாய்தலின், புண்கூர்ந்து,
பிடிக்கணம் மறந்த வேழம்
என்பதால் யானைப் படையும்…

தேம்பாய் கண்ணி நல்வலம் திருத்தி,
சோறுவாய்த்து ஒழிந்தோர் உள்ளியும்;  (71 - 72)
என்பதால் காலாட்படையும்,

தோல்துமிபு, பைந்துனைப் பகழி மூழ்கலின்,
செவி சாய்த்து உண்ணாது உயங்கும் மா’
என்று உணர்த்துவதால் குதிரைப் படையும்,

‘வினை விளங்கு நெடுந்தேர்’ (103)
என்பதால் தேர்ப்படையும் இருந்ததாக முல்லைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆசிரியரின் பாசறைப்பற்றியச் துல்லியமானச் செய்திகள் மற்றும் போர் பற்றியச் செய்திகளிலிருந்து இவர் மன்னர்களுடன் போரில் இருந்தார் என்றும், இவரே ஒரு படைவீர்ர் என்றும் ஆராச்சியாளர்கள் கருதுகின்றனர்..

வீட்டில் தலைவியும், பாசறையில் அரசனும் பிரிவை ஆற்றியிருக்கிறார்கள். தான் நினைத்த வெற்றியை அடந்த மன்னன் அடர்ந்த முல்லை  நிலகாட்டு வழியாகத் திரும்புகிறான். அங்கு நுண் மணலில் நெருங்கின இலையையுடைய காயா மலர்கள் கண்மைப் போல மலர்ந்துள்ளன, தளிரையும் கொத்துக்களையுமுடைய சரக்கொன்றை மரங்கள் நல்ல பொன்னைப் போன்ற மலர்களைக் கொட்டியிருக்கின்றன, வெண்காந்தளின் குவிந்த மொட்டுக்கள் அழகிய கைகளைப் போல் அவிழ்ந்துள்ளன, இதழ்கள் நிறைந்த செங்காந்தள் குருதி போல மலர்ந்துள்ளன. இவ்வாறு காடு செழித்த சிவந்த முல்லை நிலத்தின் பெருவழியில் மழைப்பொழிந்து கார்கால துவக்கத்தை காட்டுகிறது. அங்கு கொம்புகளைக்கொண்ட ஆண்மானுடன் பெண்மானும் துள்ளி ஆடுகிறது. இக்காட்சியெல்லாம் தலைவனுக்குத் தலைவியின் நினைவை ஊட்டுகின்றன. எனவே

முதிர் காய் வள்ளியம் காடு பிறக்கொழிய,
துனை பரி துரக்கும் செலவினர்,
வினை விளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே.
.
முதிர்ந்த காயையுடைய வள்ளியங்காடு பின்னால் மறையும் படியாக, விரைந்து செல்லும் குதிரையைத் தேரோட்டி மேலும் தூண்டிச் செலுத்த,  உயர்ந்த தேரில் பூட்டிய போர்த் தொழிலில் சிறந்த குதிரைகள் வந்தன..

என்று மிகச் சிறந்த முல்லை நிலக் காட்சியோடு முடிகிறது முல்லைப் பாட்டு.

தமிழர்களின் பண்பாட்டை, பழக்க வழக்கங்களை, சிறந்த வாழ்வியல் நெறிகளை அழகான காட்சி படுத்தலோடு சித்தரிக்கும் இம்முல்லைப்பாட்டு நமக்கு கிடைக்க அரும் பாடுபட்டு பதிப்பித்த உ.வே. சாமிநாத அய்யர் அன்று அடைந்த மகிழ்ச்சியை அவரது வாக்கிலேயே கூறவேண்டும்… அவருக்கு முல்லைப்பாட்டின் ஓலைச் சுவடி பெரும் தேடலுக்குப்பின் கிடைக்கிறது…

உ.வே.சா. எழுதுகிறார், “எனக்கிருந்த ஆவலினாலும் வேகத்தினாலும் நிலா வெளிச்சத்திலேயே அதைப் பிரித்துப் பார்த்தேன்.  சட்டென்று ‘முல்லைப் பாட்டு’ என்ற பெயர் என் கண்ணிற்பட்டது அப்போது எனக்கு உண்டான சந்தோசத்திற்கு எல்லையில்லை”.

அவரைப் போலவே இம்முல்லைப் பாட்டைப் படித்ததும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை.

இவ்விலக்கியத்தை நமக்குத் தந்த உ.வே.சா போன்ற தமிழறிஞர்களையும், சங்க இலக்கியங்களைப் படிக்கும் ஆவலை என்னுள் தோற்றுவித்த எனது அலுவலகமான சென்னைத் துறைமுகத்தின் தலைவர் அவர்களையும் நான் என்றும் மரியாதையோடு வணங்கி மகிழ்கிறேன்…

இக்கட்டுரையினால் ஒருசிலரேனும் இம்மகிழ்வை தாங்களும் அடைந்தால் அதுவே இக்கட்டுரையின் பயன்..
விரைவில் அடுத்தப் பதிவைத் தரும் ஆவலோடும்

அன்புடனும்
சி.உமா…