Sunday, 19 January 2020

பட்டினப்பாலை


பத்துப்பாட்டு தொகுப்பில் நாம் அடுத்து ஒன்பதாவதாக பார்க்க இருப்பது பட்டினப்பாலை.
பட்டினம் என்பது கடற்கரை நகரைக்குறிக்கும். அன்று சிறப்பாக காவிரிபூம்பட்டினத்தையே குறித்து நின்றது. 
இந்நகரின் சிறப்பும், பாலை நிலத்தின் ஒழுக்கமாகிய பிரிதலும் பிரிதல் நிமித்தமும் பற்றி பாடுவதால் இந்நூல் பட்டினப் பாலை எனப்பட்டது.
பாடலை எழுதியவர் பெரும் பாணாற்றுப்படை பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனார்.
பாட்டுடைத்தலைவன் திருமாவளவன் (கரிகால் பெருவளத்தான்). 
பட்டினப்பாலை, பொருநராற்றுப்படை, கலிங்கத்துப் பரணி, பழமொழி நானூறு முதலான நூல்களில் இவரைப் பற்றிய குறிப்புகள்  கிடைக்கின்றன.
இப்பாடலின் மொத்த அடிகள்: 301
பாவகை: வஞ்சிப்பா. வஞ்சிநெடும்பாட்டு என்றும் இதனை அழைப்பர்: தமிழில் உள்ள வஞ்சிப்பா வகையில் மிகப் பெரியது இது.

பா வகைகளில் அரிதாக அமையக் கூடிய வஞ்சிப்பா என்பதை சற்றுத் தெரிந்துக் கொள்வோம்.

வஞ்சிப்பா, தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி என்று கனிச்சீர் கொண்டு வரும். இது வஞ்சிப்பாவுக்கே உரிய சீர் ஆதலால் வஞ்சியுரிச்சீர் ஆகும். இவற்றோடு பிறசீர்களும் விரவி வரும். இப்பாடலுக்கு உரிய தளை வஞ்சித்தளை. இது இருவகைப்படும்.
அ) ஒன்றிய வஞ்சித்தளை - அதாவது கனிமுன் நிரையசை வருவது.
ஆ) ஒன்றாத வஞ்சித்தளை - அதாவது கனிமுன் நேரசை வருவது.
பிற பாடல்களுக்குரிய தளைகளும் பெற்று வரும். வஞ்சிப்பா தூங்கலோசை பெற்று அமையும். அடி வரையறை மூன்றடியாகும். இரண்டடியாகவும் வரலாம். இதற்கு மேல் எத்தனை வேண்டுமானாலும் வரும். ஓரடியில் இரண்டு சீர்கள் கொண்டு வருவது குறளடி வஞ்சிப்பா, மூன்று சீர்கள் கொண்டு வருவது சிந்தடி வஞ்சிப்பா. தனிச்சொல் சுரிதகம் பெற்றுவரும்.

இந்த இலக்கணம் தெரிந்துக் கொள்வதற்காக…

இனிப் பாடலுக்குள் வருவோம்.

இந்நூல் காவிரி ஆற்றின் சிறப்பை சொல்லித் துவங்குகிறது, சோழ நாட்டின் சிறப்பு, தலைநகர் காவிரிபூம்பட்டினத்தின் வளம், அம்மக்களின் வாழ்வு, வாணிபம் பற்றி சொல்லி, இப்படிப்பட்ட சிறப்புடைய பட்டினத்தைத் தந்தாலும் தலைவியை தான் பிரியேன் என்று தன்நெஞ்சுக்கு சொல்கிறான் தலைவன். மேலும் இப்பாடலில் திருமாவளவனின் வீரம், போர் திறம், அவன் நாட்டையாண்ட திறம் சொல்லி, அவனது பகைவர் நாடு அழிந்ததும் அவனது நாட்டில் வளம் பெருகியதும் சொல்லி, அப்படிப்பட்ட கரிகாலனின் வேல் பகைவருக்கு தரும் வெம்மையைவிட அதிக துன்பம் தரக்கூடியது தலைவியைப் பிரிந்து நான்  செல்லும் கானகவழி. அத்திருமாவளவனின் வெண்கொற்றக் கொடியைப் போல தண்மையானது எனது தலைவியின் தோள். எனவே அவளைப் பிரியேன் என்று செலவழுங்குதல் துறையாக அமைந்துள்ளது இப்பாடல்.

காவிரியின் பெருமை

வசையில் புகழ் வயங்கு வெண்மீன்,
திசை திரிந்து தெற்கு ஏகினும்,
தற்பாடிய தளி உணவின்
புள் தேம்பப் புயல் மாறிங
வான் பொய்ப்பினும், தான் பொய்யா 
மலைத் தலைய கடல் காவிரி,
புனல் பரந்து பொன் கொழிக்கும். (1-7)
சூரியன் திசை மாறி தெற்கே சென்றாலும், மழைத்துளியை உணவாக கொள்ளும் வானம் பாடி எனும் பறவை வருந்துமாறு மழை பொய்த்தாலும்,

மலைத் தலைய கடல் காவிரி,
புனல் பரந்து பொன் கொழிக்கும்.

மலையில் பிறந்த கடல் போன்ற காவிரியானது, தான் பொய்க்காமல், நீர் மிகுந்து, நிலத்தில் பொன் கொழிக்கச் செய்யும் என்று மிக அருமையாக காவிரியின் வளம் இங்கு காட்டப்படுகிறது.

சிலப்பதிகாரத்தில் காவிரியின் சிறப்பை அழகாகக் கூறும் புகார் காண்டத்து கானல் வரி பாடலும்  இங்கே நினைவு கூறத்தக்கது.

உழவர் ஓதை, மதகு ஓதை,
உடை நீர் ஓதை, தண்பதம் கொள்
விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப,
நடந்தாய்; வாழி, காவேரி!

புதுப்புனல் கண்டு உழவர் மகிழ்ந்து எடுக்கும் விழாக்களின் ஓசை, மதகுகளில் மோதும் நீரின் ஓசை, வரப்புக்களை உடைத்து ஓடும் நீரின் ஓசை, மகிழ்ந்து மக்கள் எழுப்பும் ஓசை ஆகியன இருபுறமும் ஆர்ப்பரிக்க நடந்தாய் வாழி காவேரி…
என்று மிகச் சிறப்பாக சிலப்பதிகாரமும் நமக்கு காவிரி ஆற்றை காட்டி மகிழ்கிறது.

இன்றைய நிலை என்ன? எங்கே பிழைத்தோம்? இன்று ‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற திட்டம் தீட்டி காவிரியை காப்பாற்ற வேண்டிய நிலை. இயற்கையை காப்பாற்றத் தவறி வெகு தொலைவு நாம் நகர்ந்து விட்டோமல்லவா? சிந்திப்போம்…

அடுத்து மருத நில வளம் காட்டும் போது

விளைவு அறா வியன் கழனி
கார்க் கரும்பின் கமழ் ஆலைத்
தீத் தெறுவின் கவின்   10
வாடி, நீர்ச் செறுவின் நீள் நெய்தல்
பூச்சாம்பும் புலத்து ஆங்கண்,
காய்ச் செந்நெல் கதிர் அருந்து
மோட்டு எருமை முழுக் குழவி
கூட்டு நிழல் துயில் வதியும், 

அன்று கரும்பைப் பிழிந்து பாகு எடுக்கும் ஆலை இருந்ததை இப்பாடல் தெரிவிக்கின்றது. அதுமட்டுமல்லாமல் சாதாரணமாக நெற்கதிர் அறுவடைக்குப்பின் இருக்கும் தாள் தான் மாடுகளுக்கு உணவாக தரப்படும். ஆனால் இங்கே மிகுந்த செழிப்பின் காரணமாக நெற்கதிரையே உணவாக உண்ட எருமைகள் அங்கு குவிக்கப்பட்டிருந்த நெற்குவியலின் நிழலிலேயே உறங்குகின்றன எனக் காட்டப்பட்டுள்ளது. காவிரியின் வளத்தால் சோழ நாடு சோறுடைத்து என்று சிறப்பிக்கப்பட்டதல்லவா?

காவிரிபூம்பட்டினத்தின் சிறப்பு

நேர் இழை மகளிர் உணங்கு உணாக் கவரும்
கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை,
பொற்கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்
முக்கால் சிறு தேர் முன் வழி விலக்கும்,   25
விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியா,

காவிரிபூம்பட்டினம் செல்வச் செழிப்பு மிக்கதாக இருந்தது. அங்கே நெற்கதிர்களை உண்ணவரும் கோழிகளை, பெண்கள் தங்கள் காதில் அணிந்த பொன்னாலான குழை என்ற அணிகலனை எறிந்து துரத்துவராம். 
பொன் கழல் அணிந்த சிறுவர் உருட்டி விளையாடும் முக்கால் தேர் தவிர வழி மறைக்கும் பகை எதுவுமில்லாதிருந்ததாம் அந்நகரம்.
அங்கு உப்பை விலைகூறி மாற்றாக நெல் பெற்று வந்த படகுகள் கட்டப்பட்டிருக்கும். அது குதிரையை வரிசையாகக் கட்டி வைத்ததைப் போலிருக்கும் என்கிறது பாடல்.

அரண்மனையின் வெளிச்சுவர் தூசி படிந்து காணப்படுகிறது. அதற்கு புலவர் காட்டும் உவமை அழகு.

சோறு வாக்கிய கொழுங் கஞ்சி,
யாறு போலப் பரந்து ஒழுகி,  45
ஏறு பொரச் சேறு ஆகி,
தேர் ஓடத் துகள் கெழுமி
நீறு ஆடிய களிறு போல,
வேறுபட்ட வினை ஓவத்து

ஓவியம் வரையப்பட்ட அரண்மனையில் தேர் ஓடிக் கிளப்பிய தூசிப் படிந்ததிருந்தது. அது புழுதியில்  விளையாடிய ஆண் யானையைப் போன்று இருந்ததாம். கம்பீரமான உவமை. 

சமையல் அறைகளில் சோற்றிலிருந்து வடித்த கொழுமையான கஞ்சி, ஆற்றினைப் போலப் பரந்து தெருவில் ஓடியது, அங்கு காளைகள் போராடுகின்றன. அதனால்  அங்கு சேறாகிறது.  
இப்படி வளம் நிறைந்ததாக இருந்தது  அப்பட்டினம்.

அங்கு தவப்பள்ளிகள், வேள்விச் சாலைகள் இயங்கிக் கொண்டிருந்தன. மறவர் ஆயுதத்தாலும், உடலாலும் தீண்டி சண்டையிட்டு தம் திறமைகளைக் காட்டினர்.

காவிரிபூம் பட்டினத்தில் அன்று உறைக்கிணறு இருந்ததை இவ்வரிகள் காட்டுகின்றன.

பறழ்ப் பன்றி, பல் கோழி,   75
உறைக் கிணற்றுப் புறச்சேரி,
ஏழகத் தகரொடு சிவல் விளையாட

இப்படிச் சேரி மட்டுமல்ல அங்கு பரதவர் குடியிருப்பு, அவர்களின் விளையாட்டு, வழிப்பாடு ஆகியவையும் வர்ணிக்கப்படுகின்றன.

காவிரி கடலோடு கலப்பது எப்படி இருந்தது என்பது மிக அழகான உவமையோடு இங்கு காட்டப்பட்டுள்ளது..

மா மலை அணைந்த கொண்மூ போலவும்,   95
தாய் முலை தழுவிய குழவி போலவும்,
தேறு நீர்ப் புணரியோடு யாறு தலைமணக்கும்

பெரிய மலையை  அணைந்து நிற்கும் மேகத்தைப்போலவும், தாயின் முலை தழுவிய குழவிப் போலவும் காவிரி ஆறானது தெளிந்த நீர்கொண்ட கடலில்  கலக்கும் என்றது நயமிக்கது. கடலின் குழவி அல்லவா காவிரி என்கிற ஆறு? அருமை..

அங்கு இரவிலும் மக்கள் மிகுந்த இன்பம் துய்த்து கிடந்தனர்.

காய் சினத்த கதிர்ச் செல்வன்
தேர் பூண்ட மாஅபோல,
வைகல் தொறும் அசைவு இன்றி
உல்கு செயக் குறைபடாது

அங்கு சுங்கம் வசூலிப்போர் கதிரவனின் தேரில் பூட்டிய குதிரைகளைப் போல் சோம்பலின்றி குறையாத வரிகளை வசூலித்தார்கள் என்று வணிகச் சிறப்பு காட்டப்பட்டுள்ளது. 

வான் முகந்த நீர் மலைப் பொழியவும்,
மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்

பண்டகச் சாலையில் பலப் பொருட்கள் குவிந்துள்ளன. அது எவ்வாறு இருந்தது எனின் முகில் கடலிலிருந்து முகந்த நீரை மலை மேல் பொழியவும் மலையில் விழுந்த மழை நீரை ஆறுகள் மூலம் கடலில் சேர்க்கவும், மழை பெய்யும் பருவம் போல,கடலிலிருந்த வந்த பொருட்கள் நிலத்தில் இறங்கவும் நிலத்திலிருந்து பொருட்கள் கப்பல்களில் ஏற்றவும் அளவில்லாதப் பொருட்கள் அங்கு குவிந்திருந்தன என்கிறது பாடல்.

அடுத்து விழாகோலம் கொண்ட கடைவீதிகளச் சொல்லும் போது

குழல் அகவ, யாழ் முரல,
முழவு அதிர, முரசு இயம்ப,
விழவு அறா வியல் ஆவணத்து

என்று சிறப்பாக கருவிகளில் இருந்து எழும்பும் ஒலி குறிக்கப்பட்டுள்ளது அழகு. குழல் அகவி ஒலிக்கின்றது, யாழ் முரல இசைக்கின்றது, முழவு அதிர்ந்து ஒலிக்கிறது முரசு முழங்கி ஒலிக்கின்றது.

பின்பு பல்வேறுவிதமான கொடிகள் அங்கு காட்டப்படுகிறது. தெய்வக் கொடிகள், வீரர்களை வணங்குமிடத்தில் கொடிகள், பல் துறைச் சான்றோர் வாதிக்கும் இடங்களில் கொடிகள், கப்பல்களில் கட்டப்பட்டக் கொடிகள், கள் விற்கும் இடத்தின் கொடி என பல கொடிகள் கொண்டது அந்நகரம் எனக் காட்டப்பட்டுள்ளது.

இப்பாடலில்  காட்டப்பட்டுள்ள காவிரிபூம் பட்டினத்தின் வளம் அறிந்து மகிழத்தக்கது.

செல்லா நல்லிசை அமரர் காப்பின்,
நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும்,   185
காலின் வந்த கருங்கறி மூடையும்,
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்,
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்,
தென்கடல் முத்தும், குணகடல் துகிரும்,
கங்கை வாரியும், காவிரிப் பயனும்,   190
ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்,
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி,
வளம் தலை மயங்கிய நனந்தலை மறுகின்

அந்நகரம் அமரர்களால் காக்கப்படுகிறது. அதனால் துன்பமில்லை. குதிரைகள்  நீர் வழி வந்தன எனக் கூறிருப்பதிலிருந்து குதிரைகள் வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டது அறியப்படுகிறது. பல இடங்களிலிருந்து வந்த பொருட்கள் நிறைந்து வளமிக்கதாக அமைந்திருந்தன அகன்ற தெருக்கள்.

நெடு நுகத்துப் பகல் போல
நடுவு நின்ற நல் நெஞ்சினோர்,
வடு அஞ்சி வாய்மொழிந்து,
தமவும் பிறவும் ஒப்ப நாடிக்
கொள்வதூஉம் மிகை கொடாது, 
கொடுப்பதூஉங் குறைகொடாது,   210
பல் பண்டம் பகர்ந்து வீசும்,
தொல் கொண்டி துவன்று இருக்கை

வணிகரின் நேர்மை மிக அழகாக காட்டப்பட்டுள்ள வரிகள் இவை…

நடுவுநிலை கொண்ட இவர்கள் பழிக்கு அஞ்சி, தன் பொருட்களையும் பிறர் பொருட்களையும் ஒன்றாக, சமமாகக் கருதி, தான் கொடுப்பது குறையாமலும் கொள்வது மிகாமலும் வாணிபம் செய்து நீண்ட நாட்களாக பொருளீட்டினர். சில காலம் மட்டுமல்ல அவர்கள் நேர்மையாயிருப்பது, தொன்றுதொட்டு அவ்வாறே வாணிபம் செய்தனர்.
அங்கு பல நாட்டவரும் அன்புடன் பழகி வாழ்ந்தனர்.

பெறினும்,
வார் இருங் கூந்தல் வயங்கு இழை ஒழிய
வாரேன், வாழிய நெஞ்சே

இப்பாடலின் அகப்பொருள் உணர்த்தும் வரிகள் இவை..

இவ்வளவு சிறப்பு மிக்க காவிரிபூம்பட்டினத்தை பெறுவதானாலும் என் தலைவியைப் பிரிந்து வாரேன் நெஞ்சே!! என்று தலைவன் தன் நெஞ்சிடம் சொல்வதாக அமைகிறது பாடல்

இதன் பின் திருமாவளவனின் சிறப்பு, அரசுரிமைப் பெறுதல், அவன் போர் திறம், அவன் பல திசை மன்னர்களும் கலங்கும் படி போரிட்டது, அவனது போரால் விழா இழந்த நகரம், சிறப்பிழந்த மருத நிலம், அவனது கருதியது முடிக்கும் திறன்  என்று பலவும் மிக அழகாக காட்டப்படுகிறது.

தொடுதோல் அடியர் என்று சொல்லியிருப்பதால் அன்று மக்கள் காலுக்கு தோலாலான செருப்பு அணிந்தது தெரிகிறது.

மேலும்

காடு கொன்று நாடாக்கிக்
குளம் தொட்டு வளம் பெருக்கிப்

என்று காட்டை நாடாக்கி, குளம் வெட்டி வளம் பெருக்கியவன் கரிகாலன் என்கிறது பாடல். பின்பு அவனது அக வாழ்வும் புறவாழ்வும் அழகாக சித்தரிக்கப்பட்டு

திருமாவளவன் தெவ்வர்க்கு ஓக்கிய 
வேலினும் வெய்ய கானம், அவன்
கோலினும் தண்ணிய, தட மென் தோளே

இப்படி பகைவருக்கு மிகுந்த அச்சத்தைத் தரக்கூடிய திருமாவளவனின் வேலைக்காட்டிலும் மிகுந்த துன்பத்தைத் தரக்கூடியது தலைவியை பிரிந்து நான் செல்லக்கூடிய காட்டு வழி,  அவனது செங்கோல் தன்னைச் சார்ந்தவருக்கு எவ்வாறு தண்மையைச் செய்யுமோ, அதைவிட மிகுந்த குளிர்ச்சியைத் தரக்கூடியது எனது தலைவியின் பெரிய நீண்டத் தோள்கள்…

எனவே அவளை விட்டுப் பிரியேன் என்று உயர்வு நவிற்சியாக தலைவன் சொல்வதாக முடிகிறது பாடல்.

மிகச் சிறப்பாக காவிரிபூம் பட்டினமும் அக்காலத்தில் அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வும் அறமும் வீரமும் வாணிபமும் திறமையும்கூறி நமக்குச் சிறிது நேரம் அக்காலத்தில் அவர்களோடு வாழ்ந்த அனுபவத்தைத் தருவதாக அமைந்துள்ள இப்பாடல் படித்து படித்து இன்புறத்தக்கது..

அடுத்தப் பதிவுடன் விரைவில்
அன்புடன்
உமா…

Sunday, 24 November 2019

குறிஞ்சிப் பாட்டுபத்துப்பாட்டு இலக்கியத்தில் 8வதாக அமைந்திருப்பது குறிஞ்சிப் பாட்டு. மலையும் மலைச் சார்ந்த நிலமுமாகிய குறிஞ்சி நிலத்தின் ஒழுக்கத்தைப் பற்றியப் பாடல்.
தமிழிலக்கியத்தில் அகம் புறம் என்னும் இரு பெரும் பிரிவுகள் நாமறிந்ததே. அகம் என்பது மனிதனின் தனிமனித வாழ்வையும் புறம் என்பது அவனின் சமூகம் சார்ந்த வாழ்வையும் பற்றியதாகும்.
மனிதனின் இல்லற வாழ்வின் கூறுகளை காட்டும் அகம், மேலும் இரு பிரிவுகளாக பிரிக்கப் படுகிறது. ஒன்று களவு நெறி மற்றது கற்பு நெறி.
களவு நெறி என்பது ஒத்த தலைவனும் தலைவியும் தம்முள் மனமுவந்து காதலுற்று வாழும் நெறியாகும். கற்பு என்பது மணமுடித்து வாழும் இல்லற வாழ்க்கையைக் குறிக்கிறது. இக்களவு கற்பில் முடியும் என்பதே தமிழர் பண்பாடு.
குறிஞ்சிப் பாட்டு ஆரிய மன்னன் பிரகதத்தனுக்கு தமிழர் வாழ்வியல் முறையை அறிவித்தற் பொருட்டு எழுதப்பட்டது என்பர்.
இந்த ஆரிய மன்னன் பிரகதத்தன் பற்றிய வேறு குறிப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை. 

இப்பாடலைப் பாடியவர் கபிலர். குறிஞ்சிக்கொரு கபிலர் எனவும் விளங்கு புகழ்க் கபிலர், நல்லிசைப் புலவர் எனவும் சங்க புலவர்களால் பாராட்டப்படும் அளவிற்கு சிறந்த புலவராக விளங்கியவர். இவர் கடையேழு வள்ளல்கள் பற்றி நிறையப் பாடியுள்ளார். முக்கியமாக பாரியின் உற்றத் தோழராக விளங்கியவர் என்பதை அறிகிறோம். பாரியின் பறம்பு மலை இவரை வெகுவாக கவர்ந்த ஒன்று. இவரது குறிஞ்சி நிலப் பாடல்களில் பறம்பு முக்கிய இடம் பெறுகிறது. சமீபத்தில் தொடராக வெளிவந்து அனைவரின் பாராட்டையும் பெற்ற ‘வேள்பாரி’ என்றநாவல் மிகச் சிறப்பாக குறிஞ்சிப் பாட்டு மற்றும் பல சங்க இலக்கியங்களில் காணப்படும் குறிப்புக்களைக் கொண்டு புணையப் பட்ட சிறந்த நாவல். இந்நாவலில் பாரியையும் கபிலரையும் குறிஞ்சி நிலத்தையும் அக்கால மக்களைப்பற்றியும் பல கருத்துகள் நாமறிய கிடைக்கின்றன.

இனிப் பாடலுக்குள் செல்வோம்…

இப்பாட்டு அகத் திணையில் ‘அறத்தொடு நிற்றல்’ என்றத் துறையைச் சார்ந்தது. அறத்தொடு நிற்றல் என்பது தலைவன் தலைவியின் களவு ஒழுக்கத்தை வெளிப்படுத்தி மணமுடிக்கச் செய்தல். பொதுவாக தனது காதலை தலைவி தோழிக்கு உணர்த்துவாள், தோழி செவிலித் தாய்க்கும் செவிலி நற்றாய்க்கும் நற்றாய் குடும்பத் தலைவனுக்கும் உணர்த்துவர். இதுவே அறத்தொடு நிற்றலின் இலக்கணம். தலைவி தன் தந்தையிடம் நேரிடயாக சொல்வது போன்ற நிகழ்வுகள் அமைவதில்லை. களவிற்கும் கற்பிற்கும் பாலமாக அமைவது இத்துறை.
இப்பாடல் தோழியானவள் செவிலித் தாய்க்கு அறிவிப்பதாக அமைந்துள்ளது..

தலைவியின் உடலிலும் உள்ளத்திலும் காணும் மாறுபாட்டை எண்ணி செவிலித் தாயானவள் எதிர்காலமுறைக்கும் கட்டுவிச்சி, வேலன்  அழைத்து குறிக் கேட்க, தோழி, செவிலிக்கு கூறுவதாக துவங்குகிறது.
தோழி சொல்கிறாள்… தாயே தலைவியின் நோயைக்கண்டு நீ கற்றறிந்தவரிடம் கேட்கிறாய், பலவுருவங்களில் உள்ள கடவுளை வாயால் வாழ்த்தியும் உடலால் வணங்கியும், பல வண்ண மலர்களைத் தூவியும் வாசனை புகையூட்டியும் தொழுகிறாய் ஆனாலும் இந்நோய் தீரவுமில்லை அதற்கான காரணமும் தெரியவில்லை. ஆனால் அவள் நோய்க்காண காரணத்தை நான் அறிவேன். நான் சொல்வதை கோபப்படாமல் விரும்பி கேட்பாயாக என்கிறாள்..

நாம் முதலிலேயே பார்த்தது போல் இப்பாடல் தமிழரின் பண்பாட்டை உணர்த்துவதாற்காக இயற்றப்பட்டது.

இன்று நாம் கடைப்பிடிப்பது போலவே இறைவனை வாயால் வாழ்த்தி, விழுந்து வணங்கி, மலரிட்டு, வாசனை புகையிட்டுத் தொழும் வழக்கம் அன்றும் இருந்துள்ளது என்பது அறியதக்கது..

இங்கு தலைவி இறை நம்பிக்கையும் ஒழுக்க பண்பாடும் நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவளே. அவள் தவறு செய்ய மாட்டாள். 

ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.

என்பது வள்ளுவன் வாக்கு...

அவளது களவு என்பது அறத்தின் பாற்பட்டதே.  அந்த அறத்தின் படியே தோழி உண்மையைக் கூறி மணத்திற்கு வழிவகுக்கிறாள்.

தோழியின் கூற்றாகவே அமையும் இப்பாடலில் இவர்களின் கூட்டம் எவ்வாறு நடந்தது என்று தலைவி தன்னிடம் கூறியதை செவிலித் தாய்க்கு எடுத்துக் கூறுகிறாள்.

தலைவி என்னிடம்
முத்தினும் மணியினும் பொன்னினும் அத்துணை
நேர்வருங் குரைய கலங்கெடின் புணரும்
சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்                        15
மாசறக் கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல்
ஆசறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை
எளிய என்னார் தொல் மருங்கு அறிஞர்
மாதரும் மடனும் ஓராங்குத் தணப்ப
நெடுந்தேர் எந்தை அருங்கடி நீவி                            20
இருவேம் ஆய்ந்த மன்றல் இதுவென
நாம் அறி உறாலின் பழியும் உண்டோ
ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற
ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கென
மான் அமர் நோக்கம் கலங்கிக் கையற்று                   25
ஆனாச் சிறுமையள் இவளும் தேம்பும்

முத்தாலும் மணியாலும் பொன்னாலும் செய்யப்பட்ட அணிகலனில் குற்றம் உண்டானால் அதை மீண்டும் சரி செய்து விடலாம் ஆனால் தமக்குறிய சான்றான்மையும், சிறப்பும் ஒழுக்கமும் சீர் குலைந்தால் அக் கறை நீக்கி மீண்டும் புகழ் எய்தல் குற்றமற்ற அறிவுடையவருக்குக் கூட எளிதான காரியமன்று. எனவே எம் தந்தையின் காவலையும் மீறி யாம் கொண்ட களவொழுக்கத்தினை எம் தாய்க்கு நாம் கூறுவதால் பழி உண்டோ?கூறுவதுதானே அறம். அதனால் உடனே தெரிவிப்போம். ஒருவேளை எம்மோர் அதை ஏற்கவில்லை என்றாலும் நாங்கள் இறக்கும் வரை பொறுத்திருப்போம். மறு பிறவியிலாவது சேர்வோம் என்று மான்களே விரும்பும் கண்களைப் பெற்றவளான தலைவி செயலற்று அழுது கூருகிறாள் என்று தெரிவிக்கிறாள்.

அறிவிற் சிறந்தவர்களானாலும், தம் ஒழுக்க நிலையிலிருந்து சிறிதளவே விலகினாலும் அந்த பழியை போக்கி மீண்டும் புகழை நிலைநிறுத்துதல் இயலாதக் காரியம் என்று தலைவி கூறுவது ஒழுக்கத்தில் சிறந்த தமிழ் மக்களின் பண்பாட்டை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

அடுத்ததாக இவர்களின் களவொழுக்கத்தை எடுத்துச் சொல்லும் தோழி தன் நிலையை அழகான உவமையோடு சொல்கிறாள்…

இகல் மீக் கடவும் இரு பெரு வேந்தர்
வினை இடை நின்ற சான்றோர் போல,
இரு பேர் அச்சமோடு யானும் ஆற்றலேன். (27-29)

இரண்டு பெரும் அரசர்கள் பகையினால் போரிடும் போது அவர்களுக்கிடையே சமாதானம் பேசும் சான்றோர்களைப் போல் உங்கள் இருவருக்கும் இடையில் நான் அச்சத்தோடு உள்ளேன் என்கிறாள்…

கபிலரின் வரலாற்றை அறிந்த நாம் இவ்வுவமையை நன்றாக இரசிக்க முடியும்… பாரிவள்ளலின் மிகச் சிறந்த நண்பர் அவர்.
புறநானூற்றில் 108 ம் பாடலில்

பாரியும், பரிசிலர் இரப்பின்,  
'வாரேன்' என்னான்,

பாரி, பரிசிலாக தன்னைக் கேட்டாலும் வாரேன் என்று சொல்லாமல் உடன் வந்துவிடுவான் என்று பாடியிருப்பார்.

கபிலர் மூவேந்தர்களையும் கூட அறிந்தவர். இம்மூவேந்தர்களும் தனித்தனியே பாரியை வெல்லமுடியாததால் ஒன்றாக வந்து பறம்பு மலையில் முற்றுகையிட்டுள்ளார்கள். அவர்களைக்காணச் செல்கிறார் கபிலர். தமிழர் பண்பாட்டிலே இது ஒரு சிறப்பு புலமை மிக்கச் சான்றோர்கள் மன்னனுக்கு அறிவுரைக்கூறும் இடத்தில் இருந்தனர். மன்னரும் அவர்களை வெகுளாது இருந்தனர். மூவேந்தர்களையும் நோக்கி கபிலர்,

“மூவேந்தர்களே எங்கள் பாரியின் பறம்பு மலையை நீங்கள் கைப்பற்ற நினைத்தால்,அதற்கு ஒரு வழி சொல்வேன், நீங்கள் பாணரைப் போல் பாடல்கள் பாடிக் கொண்டும் உங்கள் மகளீரை பாடினிகளாக பாடியும் அவ்விசைக்கேற்ப ஆடிக்கொண்டும் அழைத்துச் செல்வீர். பரிசிலராக வேண்டினால் மட்டுமே அவனது பறம்பு மலையை நீங்கள் பெற முடியும்” என்று பாடுவார்.

பின்பு மூவேந்தர்களும் சூழ்ச்சியால் பாரியைக் கொன்றது வரலாறு. எனினும் பாரிக்கும் மூவேந்தர்களுக்கும் இடையே நின்று போரை நிறுத்த முயன்றவர் என்பதால் அந்த மன நிலையை சரியான இடத்தில் உவமையாக்கினார் என்பது அறிந்து மகிழத் தக்கது.

தோழி தொடர்ந்து சொல்கிறாள். தலைவியை பெண் கொடுக்குமிடத்து, தலைவனின் நிலைத்த செல்வம், அவன் குடி, தன் குடியோடு பொறுந்தும் தன்மை, அவன் குணம் தலைவியின் குணம் இப்படி பலவற்றையும் எண்ணிப் பாராமல் தம்முள்ளே மனம் ஒத்து காதல் கொண்டு களவுமணம் புரிந்தனர் தலைவனும் தலைவியும். அது எவ்வாறு நிகழ்ந்தது என்பதைக் கூறுகிறேன் சினக்காமல் கேட்பாயாக என்கிறாள்.

தாயே சினைப்புலம் காப்பதற்காக எங்களை நீ அனுப்பினாய், நாங்களும் திணைப்புலம் காத்து இருந்தோம்.

இங்கு சில அழகிய உவமைகளை காட்டுகிறார் கபிலர். முதிர்ந்து கதிர் வெளிவந்த நிலையிலிருக்கும் சிறு தினை ”விதையை உடைய மூங்கிலை தின்பதற்காக மேல் நோக்கி நின்ற யானை, தன்னுடைய முத்துக்கள் நிறைந்த தந்தத்தில் இறக்கி வைத்த தும்பிக்கையைப் போல இருந்ததாம்.

நீர் நிறைந்த பெரிய கடல் குறையுமாறு, முகில் கூட்டங்கள் நீரை அள்ளிக் கொண்டு, அகன்ற வானத்தில் வீசுகின்ற காற்றுடன் கலப்பதால், முரசு அதிர்ந்தாற்போன்ற இனிய குரலை உடைய இடியுடன் கூடி, வரிசையாக மேலே சென்று கலங்கி, இனிய இசையை உடைய முரசினையும் ஒளியுடைய அணிகலன்களையும் உடைய முருகன், பகைவர்களைக் கொல்லும்பொருட்டு, கையில் கொண்ட, இலை போன்ற வேல் ஆயுதத்தைப் போல் உள்ள மின்னலுடனும் மழையாக மலை மீது பொழிந்தன. தலைவனின் மலையில் விழும் அருவி மெல்லியத் துணிப்போல் இருந்தது. அதில் நீங்காத விருப்பத்துடன் நாங்கள் ஆடினோம். அங்கு பல வகைப்பூக்கள் பூத்து குலுங்கின. அவற்றையெல்லம் கொண்டு நாங்கள் தழையாடை உடுத்தினோம் என்று விவரிக்கிறாள்…

இவ்வாறு நடந்ததைக் கூறும் போதே தலைவனும் மலையில் வாழ்பவன் என்று குடி ஒத்தமையும், மிகுந்த வளம் கொண்ட மலை அவனுடையது என்பதால் நிறைந்த நிலைத்த செல்வத்தையும் செவிலிக்கு சொல்லிவிடுகிறாள் தோழி.

இப்பாடலில் மலைவளம் படிக்கையில்

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
   மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பார்
   கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்
தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்
   செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனலிளம் பிறைமுடித்த வேணிஅலங் காரர்
   குற்றாலத்திரிகூட மலைஎங்கள் மலையே

என்ற திருகூடராசப்பரின் குற்றாலக் குறவஞ்சிப் பாடல், நாம் பள்ளிக் காலத்தில் படித்தது நினைவுக்கு வந்தால், நாம் தமிழை இரசித்துப் படிக்கிறோம் என்று நம்மை நாமே மெச்சிக் கொள்ளலாம்…

அடுத்து, அவன் நாய்களுடன் வந்தான் நாங்கள் அச்சம் கொண்டோம். அஞ்ச வேண்டாம் என்று சொல்லி எங்களுடன் பேசினான். அந்நேரம் காடவர் விரட்டிய யானை ஒன்று வந்தது. நாங்கள் பயந்து அவன் பக்கம் நெருங்கினோம். அவன் அம்பெய்து யானையை விரட்டினான். யானைப் போனாலும் நடுக்கம் போகாதிருந்த தலைவியை அணுகி அணைத்தான் எங்கிறாள் தோழி.
அச்சம் வேண்டாம். யாம் உம்மை எம் இல்லக்கிழத்தியாக ஏற்றுக் கொள்வேன் என்று அருவி நீரை அள்ளி சத்தியம் செய்தான். அவன் உயர் குடி பிறந்தவன், சத்தியம் தவறாதவன். தலைவியை மணமுடிக்கும் எண்ணம் உள்ளவன். என்று அவன் பண்பையும் கூறுகிறாள் மேலும் , அன்றிலிருந்து அவன் காவலை மீறி இரவில் தலைவியைக் காண வருகிறான். அதனால் தலைவியும் வரும் வழியில் ஏற்படும் இன்னல்களை எண்ணி கலங்குகிறாள் என்று கூறி தலைவியின் களவொழுக்கத்தை தாயார் ஏற்றுக்கொள்ளுமாறு சொல்லி அறத்தொடு நிற்கிறாள் தோழி…

இதுவே தமிழர் பண்பாடு என்று சிறப்பாகக் காட்டுகிறது குறிஞ்சிப் பாட்டு…

இப்பாடலில் கூறப்பட்டிருக்கும் 99 வகையான பூக்கள் அறிந்து இன்புறதக்கது. இதில்

வளமையான இதழ்களையுடைய அழகிய செங்காந்தள் மலர்,
குளிர்ச்சியான குளத்திலே பூத்த குவளை மலர்,
இனிய கனிகளைத் தரும் மாம்பூ , செம்மணிப்பூ,
தனக்கே உரிய மணமும் விரிந்து கொத்தாகவுள்ளதுமாகிய பெரிய மூங்கிற்பூ,
தீயின் நிறத்தை ஒத்த எறுழம்பூ,
வெண்ணிறமுடைய வெட்பாலைப்பூ,
நீலமணி போன்றிருக்கும் கருவிளம்பூ,
பல கொத்துக்களையுடைய குரவ மலர்,
நள்ளிரவிலே  மணம் வீசும் இருவாட்சி மலர்

என்று பலப்பூக்களின் பெயர்கள் அவற்றின் இயல்போடு தரப்பட்டிருப்பது அறிந்து மகிழத்தக்கது.

இவற்றில் பலப்பூக்கள் இன்று இருக்கிறதா என்றே தெரியவில்லை.

இன்று மல்லிகைப் பூக்கூட மணம் வீசாத கலப்புப் பூவாக சந்தையில் விறகப்படுவது, இயற்கையை மறந்து பணத்தின் பின் செல்லும் மனிதனின் நேர்மையற்ற நிலையைத்தான் காட்டுகிறது…

மணம் வீசும் தமிழர் பண்பாட்டை அறிவோம்… காப்போம்

அடுத்த பதிவுடன் விரைவில்
அன்புடன்
உமா


Friday, 30 August 2019

கல்லிலே கலைவண்ணம்

பழந்தமிழகத்தின் வரலாற்றை அறிய, இலக்கியங்கள், கல்வெட்டுகள், அகழ்வாராச்சிகள் போன்றவை மிகுந்த உதவியாயிருக்கின்றன. அவ்வாறே பழந்தமிழ் மன்னர்கள் கட்டிய கோயில்கள், அம்மன்னர் காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வு அன்று சிறப்புற்றிருந்த கலைகள், அவர்களின் பல்துறைச் சார்ந்த அறிவு ஆகியவற்றை நாமறிய உதவுகின்றன.
தமிழகத்தில் சோழர்களின் காலம் மிகச் செழிப்பானகாலம். அன்று பல இலக்கியங்கள் படைக்கப்பட்டன, நாட்டியம், நாடகம், இசை, சிற்பம், ஓவியம் போன்ற பல கலைகள் சிறப்புற்றிருந்தன. இதற்கு சாட்சியாக அமைவது சோழ மன்னர்கள் கட்டிய பல கற்கோயில்கள்.
சோழர்கள் தம் கோவில்களை வழிப்பாட்டுத் தலமாக மட்டுமல்லாமல் கருவூலமாகவும் கோட்டையாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள்
கோவில்களின் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலுக்கும் கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோவிலுக்கும் செல்லும் வாய்ப்புச் சமீபத்தில் எனக்குக் கிடைத்தது.
மிக அற்புதமான இவ்விரண்டு கோவில்களைப் பற்றிய சிறு அறிமுகம் செய்வதன் மூலம், இக்கோவில்களை நேரில் காணும் ஆவலை ஏற்படுத்துவதும், அவ்வாறு காணும் போது அவற்றை உணர்ந்து இரசிக்க வைப்பதுமே இக்கட்டுரையின் நோக்கம்.

கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோவில்

மிகவும் பிரசித்திப் பெற்ற தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய இராஜராஜ சோழனின் மகனான இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோவில்.
இம் மன்னன் கங்கைவரைச் சென்று வெற்றி பெற்ற தன் நினைவாக அங்கிருந்து கொண்டு வரப்பட்ட கிரானைட் கற்களால் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. போக்கு வரத்து வசதிகள் இன்றிருப்பது போல் அன்றில்லாத நிலையில் அப்பெரிய கோவிலைக் கட்ட அவ்வளவு கற்கள் எவ்வாறு கொணரப்பட்டன என்பது இன்றும் ஆச்சரியம்.
வரலாற்றில் தனது தந்தையின் புகழ்மங்கி விடக் கூடாது என்றே இக்கோவிலைச் சற்று சிறியதாக இராஜேந்திரசோழன் கட்டினான் என்பர். என்றாலும் இங்குள்ளச் சிற்பங்களின் மேன்மை அனைத்தையும் விஞ்சி நிற்கிறது.
இக்கோவிலைக் கட்டிய சிற்பி குணவன், தஞ்சைக் கோவிலைக் கட்டிய இராஜராஜ பெருந்தச்சனின் மாணவன் என்பதும் அவனது திறமையைக் கண்டு  ‘நித்த வினோத பெருந்தச்சன்’ என்ற பட்டத்தைச் சூட்டினான் இராஜராஜ சோழன் என்பதும் நமக்குத் தெரியவரும் வரலாற்றுச் செய்திகள். இவற்றை இங்கே குறிப்பிடுவது மிகவும் அவசியம். ஏனெனில் இக்கோவில்கள் சிற்பக் கலைக்கு சிறந்த உதாரணமாக விளங்குகின்றன..
இனி வரலாற்றைக் கடந்து, கண் முன்னே நாம் கண்ட இக்கோவில் சிற்பங்களின் அழகைப் பகிர்ந்து கொள்வோம்.

கோவில் நுழைவாயில்
நீண்ட பாதையில் நடந்துச் செல்லும் போது உயர்ந்து நிற்கும் கோபுர நுழைவாயில் இடிந்த நிலையிலிருந்தாலும் அன்றைய முழு கோபுர வாயிலின் பிரம்மாண்டத்தை நாம் கற்பனைச் செய்யத் தூண்டுகிறது.
கருவறை வெளிச்சுவர்
அதைத் தாண்டி உள்நுழைந்தால் துவஜஸ்தம்பத்திற்கு அருகில் மிக அற்புதமான, சுண்ணாம்புக் கல்லால் செய்யப்பட்ட மிகப் பெரியநந்தி சிலை கம்பீரமாய் நம்மை வியக்கவைக்கிறது. இதில் ஒரு அதிசயம் சூரிய ஒளியானது நந்தி சிலையின் மேல் பட்டு கருவறையிலுள்ள பிரகதீஸ்வர் மேல் மிக நேர்த்தியாக விழுகிறது.
அகண்ட படிகள் ஏறிச் சென்றால் கருவறையில் பெருவுடையார், பிரகதீசுவர் என்றழைக்கப்படும் சோழீசுவரர் பிரம்மாண்டமான லிங்க வடிவில் காட்சித் தருகிறார். தஞ்சை பெரிய கோவிலுக்கும் இக்கோவிலுக்கும் மிகுந்த ஒற்றுமைகள் காணப்படுகின்றன. 
கருவறை கோபுரத்தின் வெளிப்புறத்தில் பல சிற்பங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்வதாய் அமைந்துள்ளது. முக்கியமாக அங்கு அமைந்துள்ள நடராசர் சிலை
நடராசர் சிலை
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற்பால் வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே

என்று நம்மை நெக்குருகச் செய்யும். அர்த்தநாரீஸ்வரர்
அர்த்தநாரீஸ்வர் சிலை மற்றும் ஞான நிலையிலிருக்கும்  சரஸ்வதி மற்றும் லஷ்மி சிலைகள் சிற்பக்கலை மிக உயர்ந்த நிலையில் இருந்ததைக் காட்டும் வகையில் மிக நேர்த்தியாக அமைந்திருக்கின்றன.


இங்குள்ள நர்த்தன விநாயகர் சிலையின் ஏழு உறுப்புக்களிலிருந்து ஏழுசப்தங்கள் எழுவதாக அங்கிருப்போர் நமக்குத் தெரிவிக்கின்றனர்.
 
நர்த்தனவிநாயகர்
இங்குள்ள சிம்மக் கிணறு வருவோரைக் கவரும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. சிம்ம வடிவில் அமைந்த குகைப் போன்ற படிகள் அமைக்கப்பட்டு அது பக்கத்திலுள்ள பெரிய கிணறுக்குச் செல்லும்படி அமைக்கப்பட்டுள்ளது. இக்கிணறு இராஜ வம்சத்தவரால் உபயோகிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. மன்னர்களின் குடும்பத்தார் போர்காலங்களில் மறைந்திருக்க பாதாள வழிகள் இங்குள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

சிம்மக் கிணறு
கோவிலில் தாயார் பெரிய நாயகி அம்மைக்கு தனியாக சன்னதி அமைந்துள்ளது. பெயருக்கேற்றார் போல் 9 அடி பெரிய வடிவில் தாயார் அருள் பாலிக்கிறார்.
இடிந்த சன்னதி
கல்வெட்டுகள்
இக்கோவிலில் இடிந்த நிலையில் சில சிலைகள், கட்டமைப்புகள் காணப்படுகின்றன. இவை பல காலகட்டத்தில் போர் போன்ற காரணங்களால் இடிபாட்டிற்கு உள்ளானதாய் அறியப்படுகின்றன. இக்கோவிலில் இன்றும் பல கல்வெட்டுகளை நாம் காணமுடிகிறது. தமிழக தொல்லியல் துறை இக்கல்வெட்டுகளைப் படியெடுத்து ஆராய்ந்து பல தகவல்களுடன் நூல்களை வெளியிட்டிருக்கின்றது.


பல ஆண்டுகள் முன்பாக, இக்கோவில் கட்டப்பட்ட காலத்தில் மக்கள் நடமாட்டம் எப்படி இருந்திருக்கும், சோழமன்னர்களின் தலைநகரமாக விளங்கிய இவ்விடம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்கும் என்பதை நினைக்கையில், இக்கோவில் பற்றிய பல வரலாற்று புதினங்களில் வருவதை போன்ற நிகழ்வுகள் நம் கற்பனையில் தெரிகின்றன.
இக்கோவிலை விட்டு வெளிவரும் போது

ஐயபொட் டிட்ட அழகுவாள் நுதலும்
அழகிய விழியும்வெண்ணீறும்
சைவம்விட் டிட்ட சடைகளும் சடைமேல்
தரங்கமும் சதங்கையும் சிலம்பும்
மொய்கொள்எண் திக்கும் கண்டநின் தொண்டர்
முகமலர்ந்து இருகணீர் அரும்பக்
கைகள்மொட் டிக்கும் என்கொலோ கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே !

என்ற கருவூர் தேவரின் பாடல் சொல்வதைப்போல் பக்தியால் நம் கைகள் குவிகின்றன கூடவே வியப்பால் நம் கண்கள் விரியவும் செய்கின்றன.முழுதும் காணமுடியா நிலையில் கோவிலை விட்டு நகர்ந்து, சற்றே மனக்குறையுடன் தாராசுரம் நோக்கி பயணப்பட்டோம்...

தாராசுரம் ஐராவதேசுவரர் கோவில் நம்மை வியப்பின் எல்லைக்கே இட்டுச் செல்கிறது...

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில்

‘பொன்னியின்செல்வன்’ கதையில் நமக்கு அதிகமாக பரிச்சயமான பழையாறை நகரின் ஒரு பகுதிதான் தாராசுரம் என்பது. இன்றும் சோழமன்னர் காலத்தில் வணங்கப்பட்ட பிரம்மாணடமான சோமநாசுவாமி கோவில் இடிந்த நிலையில் இங்குக் காணப்படுகின்றது. இதன் அமைப்பை ஒட்டி அமைந்தது தான் தாராசுரம் கோவில். யுனஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரியச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இத்தாராசுரம் கோவில் இன்று முறையாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இரண்டாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோவில் ஆச்சரியத்தின் உச்சம். பக்தி உணர்வோடு மட்டுமல்லாமல், மிகுந்த கலையுணர்வோடும் இக்கோவிலைச் சுற்றி வர வேண்டும். இக்கோவிலின் அழகிய சிற்பங்களைக் கண்டு இரசிக்க ஒருநாள் போதுமானதாக இருக்காது. கண்டிப்பாக பலமுறை இக்கோவிலுக்கு விஜயம் செய்ய வேண்டும். இச்சிற்பங்கள் அக்கால மக்களின் கலை, பண்பாடு, வாழ்க்கையை தெரிவிக்கும் கண்ணெதிர் தெரியும் ஆதாரங்களாக உள்ளன. ஒரு துளி இடம் கூட வீணாகாமல் ஒவ்வொரு சென்டிமீட்டரிலும் சிற்பங்கள் அலங்கரிப்பதை நம்மால் வியக்காமலிருக்க முடியவில்லை. வாருங்கள் இரண்டாம் இராஜராஜன் பெருமையோடு வருகைத்தந்த அந்த பழைய கோபுர நுழைவயிலைப் பார்ப்போம்.
பழைய நுழைவாயில்
இன்று சிதிலமடைந்த நிலையில் பயன்படாமலிருக்கும் இக்கோபுர நுழைவாயில் கோவிலின் பிரம்மாண்டத்தையும், இரண்டாம் இராஜராஜனின் கம்பீரததையும் நமக்குப் பறைச் சாற்றுவதாய் உள்ளது. இன்று பக்கவாட்டு வழியாகவே மக்கள் அனுமதிக்கப் படுகின்றனர். இதன் முழுவடிவையும் அதன் வழியே யானையில் இரண்டாம் இராஜராஜன் படைச்சூழ வரும் காட்சியை சற்று கற்பனைச் செய்து பாருங்கள். ஆம் இவர்களோடு தான் நாம் இக்கோவிலைச் சுற்றிப் பார்க்கப் போகிறோம்.

இசைப் படிகள்
தரைப் பகுதியிலிருந்து சற்றுத் தாழ்வாக 7 அல்லது 8 படிகள் இறங்கி வரும்படியாக அமைந்துள்ள நந்தி மண்டபமும் பலிபீடமும் தான் நாம் முதலில் காணக்கூடியவை.  இந்த பலிபீடத்தின் படிகளில் சப்தஸ்வரங்கள் எழுவதாக சொல்கிறார்கள். இன்று, பாதுகாப்புக் கருதி இரும்புக் கம்பிகளிடப்பட்டிருக்கிறது.
நந்தியையும் விநாயகரையும் வணங்கி உள் நுழைந்தால் நாம் காண்பது இராஜகம்பீர திருமண்டபம். ஒவ்வொரு அணுவையும் பார்த்து வியக்கக் கூடிய வகையில் அமைந்தது இம்மண்டபம்.
இராஜ கம்பீர மண்டபம்
தூண்களில் நடன சிற்பம்


ஒருபுறம் குதிரையும் மறுபுறம் யானையும் இழுத்துச் செல்லும் ஒரு தேர்போல் அமைக்கப்பட்டுள்ளது.  இராஜராஜனின் யானை போரில் ஆவேசத்துடன் போரிடும் காட்சியை நம் கண்முன்னே காட்டுகிறது இந்த யானை. குதிரையின் வேகத்தில் மண்டபம் நகர்ந்து விடுமோ என எண்ணத் தோன்றுகிறது. சூரிய சக்கரம் போல் அமைந்த தேர்ச் சக்கரங்கள் சிற்பக் கலையின் வியப்பு. மண்டபத்தில் 120 தூண்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இத்தூண்களில் பல புராணக்கதைகள் மிக நுணுக்கமாக சில சென்டிமீட்டர் அளவேயுள்ள சிற்பங்களாக செதுக்கியுள்ளனர். இத்தூண்களில் நாட்டிய கலையின் அனைத்து நிலைகளையும், முக்கியமாக முத்திரைகள் மிக நேர்த்தியாக, சில சென்டிமீட்டர் அளவில் சிறியதாக கற்சிற்பமாக வடித்திருப்பது ஆச்சரியமானது. 
மண்டபத்தை அடுத்து கருவறையில் ஐராவதேஸ்வரர் அருள்பாலிக்கின்றார். இந்திரனின் யானையாகிய ஐராவதம் சாப விமோசனம் பெற்றதால் மூலவர் ஐராவதேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். தாயார் தெய்வநாயகி அம்மைக்கு தனியாக வலப்புறம் கோவில் அமைந்திருப்பது சிறப்பு.
கருவறையைச் சுற்றி வெளிப்புறச் சுவற்றில் 63 நாயன்மார்களின் கதை கற்சித்திரமாக செதுக்கியிருப்பது இக்கோவிலின் மிகச் சிறப்பான அம்சம்.  சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் அமைந்த வரிசைப் படியே கருவறையின் வலப்புறம் துவங்கி, தில்லை வாழ் அந்தணர் முதலாக 63 நாயன்மார்களின் கதையும் மிகச் சிறிய சிற்பங்களாக செதுக்கியிருப்பது வியக்க வைக்கிறது.
மேலும் இங்கு மனித சக்கரம் என்று சொல்லும் படி இருவர் பிணைந்து சக்கரம் போல் இருக்கும் காட்சி,  பெண் ஒருத்திக்கு இருவர் பிரசவம் பார்க்கும் காட்சி,  ஜிம்னாஸ்டிக் என்பது போல் உடலை வளைத்து செய்யும் சாகசங்கள் போன்ற சிற்பங்கள் நம்மை வியக்க வைக்கின்றன.
அக்காலத்தில் பெண்களும் போரிட்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டும் போரிடும் பெண்கள் சிற்பம்,  மேலும் இசைக் கருவிகளோடு கலைஞர்களும் பெண்களும் நடமாடும் வழக்கத்தைக் காட்டும் இசைக் குழுவினர் சிற்பம்,  என அற்புதமான சிற்பங்கள் மிகச் சிறிய அளவில் வடிவமைக்கப் பட்டுள்ளன. இவை இம்மக்களின் பல் கலை திறனை நமக்கு எடுத்துக் காட்டுவதாக உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற  அன்னப்பூரணி சிலை ஒன்றும் இருக்கிறது.  இங்குதான் ஒட்டக்கூத்தர் தனது ‘தக்கயாக பரணி’யை அரங்கேற்றம் செய்ததாகக் கூறுகின்றனர். தக்கயாக பரணி எங்கிற இலக்கியம், தக்கனின் யாகத்தை சிவபெருமான் தடுத்து வென்றதையும் சோழமன்னன் ஈழத்தை வென்றதையும் குறிக்கும் விதமாக சிலேடையாக பாடப்பட்டது என்பர். இங்கு இன்னும் பலசிற்பங்களும் நாகராஜன், 8 கைகளுடன் கூடிய அர்த்தநாரீஸ்வரர் என எங்கும் காணப்பெறாத கடவுள் சிலைகளும் இருக்கின்றன. ஆனால் இவ்வளவு வரலாற்று சிறப்புகளை பார்வையாளர்கள் தெரிந்துக் கொள்ளுமாறு குறிப்புகள் அங்கில்லாதிருப்பது சற்று வருத்தத்திற்குரியதே. வலைத்தளங்களில் பார்த்து தெரிந்துக் கொண்டு வருபவர்களுக்குக்கூட நேரில் அவற்றைத் தேடி கண்டுபிடிப்பது சிரமான காரியமே.
இக்கோவில்களின் சிற்ப அழகைக் காண கண்ணாயிரம் வேண்டும். இக்கோவிலைச் சுற்றி வருகையில், இவற்றின் பின்னனியில் இருக்கும் புராண கதைகள், வரலாற்று நிகழ்வுகள்,  சமயக் கருத்துக்கள் இவற்றையெல்லம் தெரிந்துக் கொள்ளும் பேரார்வம் நம்மை வந்தடைகிறது. அது மட்டுமல்லாது பன்னிருத் திருமறையையும் அதில் பாடப்பட்டுள்ள அத்தனைத் தலங்களையும் அறிந்து சுற்றி வர பேராசைக் கொள்கிறது மனது.
வாழ்க தமிழ்! வாழ்க தமிழ்நாடு!
வளர்க தமிழர்தம் புகழ்!