உ..
மிகுந்த
கால இடைவெளிக்குப் பிறகு பத்துப்பாட்டுத் தொகுப்பில், இறுதியாக, பத்தாவதாக நாம்
காண இருப்பது மலைப்படுகடாம் என்னும் அருமையான ஆற்றுப்படை நூல்.
இடைவெளிக்குக்
காரணம் நோய் தொற்று காலம் என்பதையும் தாண்டி, இதனை படிக்கும் போது மற்ற பல
விஷயங்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் மிகுந்தது என்பதுவும் தான் காரணம்.
மலைப்படுகடாம் - இதனை கூத்தராற்றுப்படை என்றும் கூறுவர். பரிசு பெற்றுத் திரும்பும் ஒரு குழுவினர் எதிர் காணும் வறுமையுற்ற மற்றொரு கூத்தர் குழுவினருக்கு, நாங்கள் இங்குச் சென்று, இவரிடமிருந்து, இப்படிப்பட்ட பரிசுகளை எல்லாம் பெற்று வருகிறோம். அவனை நீங்களும் அடைந்து உங்கள் வறுமையைப் போக்கிக் கொள்ளலாம் என்று ஆற்றுப்படுத்துவதாக அமைவது இந்நூல்.
இந்த
ஆற்றுப்படை நூல் மலைப்படுகடாம் என்று அழைக்கப்படுகிறது. காரணம் இந்நூலில் 292ம்
வரியிலிருந்து 348 வரி முடிய 56 வரிகளில் மலையில் கேட்கப்படும் பலவகையான ஓசைகளை
அழகுபட வரிசைபடுத்திக் கூறி ஒரு அழகான சொல்லோவியமாக குறிஞ்சி நிலத்தை நம்முன்னே காட்சிப்படுத்தியிருப்பார் ஆசிரியர்.
இந்தப் பகுதியில் இந்நூலாசிரியரின்
மொழிவளம், இயற்கை பற்றிய அறிவு ஆகியவற்றை அறிந்து வியக்கமுடியும். மலையில் எழும்
பலவிதமான் ஓசைகளை, இதில் கிட்டத்தட்ட 19 வகையான ஒலிகளை ஆசிரியர் நயம் படக்
காட்டியிருப்பார்.
கலை
தொடு பெரும்பழம் புண் கூர்ந்து ஊறலின்
மலை முழுதும் கமழும் மாதிரம் தோறும்
அருவி நுகரும் வான் அர மகளிர்,
வருவிசை தவிராது வாங்குபு குடைதொறும் 295
தெரி இமிழ் கொண்ட நும் இயம் போல் இன் இசை;
குரங்குகள் பலாப்பழங்களை பிளந்து உண்பதால் மணம் மலைமுழுதும் பரவியிருக்கும். அங்கு விழும் அருவிநீரை கைகளில் வாங்கி அழகியமகளிர் அருவியில் ஆடுவர். அப்பொழுது எழும் ஓசை கூத்தரின் இசைக்கருவிகளிலிருந்து வரும் இசையைப் போல் இனிமையாக இருக்குமாம். இங்கு இமிழ் , இசை என்பன ஓசையைக் குறிக்கும் சொற்கள்
இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல்
விலங்கல் மீமிசைப் பணவைக் கானவர்
புலம் புக்கு உண்ணும் புரிவளைப் பூசல்;
தமது கூட்டத்தைப் பிரிந்து கானவரின் விளைநிலங்களுக்குள் புகுந்து உண்ணும் யானைதலைவனை பிடிக்க ஆரவாரத்துடன் எழும் ஓசை. இங்கு பூசல் என்பது ஓசையைக் குறிக்கும் சொல்
சேய் அளைப் பள்ளி எஃகு உறு முள்ளின் 300
எய் தெற இழுக்கிய கானவர் அழுகை;
குகைகளில் தங்கக்கூடியதாகிய எய்ப்பன்றிகள் (முள்ளம்பன்றிகள்) தங்கள் கூரிய முட்களால் தாக்கிக் கொல்வதால் கானவர் அழும் ஓசை. இங்கு
அழுகை ஓசையைக் குறித்து நின்றது
கொடுவரி பாய்ந்தென கொழுநர் மார்பில்
நெடுவசி விழுப்புண் தணிமார் காப்பு என.
அறல் வாழ் கூந்தற் கொடிச்சியர் பாடல்;
தனது தலைவனின் மார்பில் கொடிய புலி தாக்கியதால் உண்டான பிளந்த புண் ஆறும் என்று அடர்ந்த அக்காடுகளில் வாழும் கொடிச்சியர் பாடும் பாட்டொலி. மியூசிக் தெரெப்பி போன்றதோ!!! இங்கு பாட்டொலி ஓசையைக் குறித்து நின்றது
தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை 305
மலைமார் இடூஉம் ஏமப் பூசல்;
வேங்கை மரத்தை புலி என வர்ணிப்பது இலக்கிய மரபு. மரம், பொன் போன்ற மஞ்சள் நிற பூக்களுடன் பூத்துக் குலுங்குவது புலியைப் போன்றிருத்தல் அறியத்தக்கது. அப்படிப்பூத்து நிற்கும் மரத்தில் பூக்களை பறிக்கும் பெண்கள் புலி புலி என்று கூறி பின் பூப்பறிப்பது வழக்கம். புலி என்றதும் மரம் தழைந்து பூப்பறிக்க இடந்தருமாம். அப்படி மலைப்பெண்கள் களிப்பால் இடும் ஓசை. பூசல் என்பது ஓசையைக் குறித்தது.
கன்று அரைப்பட்ட கயந்தலை மடப்பிடி
வலிக்கு வரம்பு ஆகிய கணவன் ஓம்பலின்,
ஒண்கேழ் வயப்புலி பாய்ந்தென கிளையொடு,
நெடு வரை இயம்பும் இடி உமிழ் தழங்கு குரல், 310
கருக்கொண்ட பெண் யானைக்கு ஆண் யானை உணவு கொணரும் பொழுது, புலி, அப்பெண் யானையைத் தாக்க வரும், அப்பொழுது தன் கூட்டத்தினருடன் மலை முழுதும் கேட்கும் படியாக அந்த யானை பிளிரும் சப்தம். இங்கு இடி, குரல் என்பன ஓசையை குறிக்கும். அதுமட்டுமல்ல கருவுற்றிருக்கும் போது விலங்குகள் தன் இணையைக் காக்கும் தன்மை காட்டப்படுகிறது.
கைக்கோள் மறந்த கருவிரல் மந்தி
அருவிடர் வீழ்ந்த தன் கல்லாப் பார்ப்பிற்கு
முறி மேய் யாக்கைக் கிளையொடு துவன்றிச்
சிறுமை உற்ற களையாப் பூசல்;
இங்கு ஒரு வழக்கம் சொல்லப்பட்டிருப்பதை நாம் காண வேண்டும். விலங்குகளில் புலி ,சிறுத்தை போன்றவை தம் குட்டிகளை வாயால் கவ்விச் செல்லும். ஆனால் குரங்குகள் அப்படியல்ல. தாய் குரங்கு குட்டியை பிடித்துக் கொள்ளாது. குட்டிதான் தன் தாயை இருக்கமாக பிடித்துக் கொள்ளும். உயர்ந்த மரங்களில் தாவும் போதும் பாதுகாப்பிற்காக குட்டி அப்படி இறுக பற்றிக் கொள்ளும். மனிதரிலும் தன் காரியத்திற்காக பிறரை அப்படி இறுக பற்றுபவர் உண்டு. . ‘குரங்கு பிடி’என்று சொல்கிறோமல்லவா! ஆனால் இங்கு அப்படி பற்றிக்கொள்ள இன்னும் பழகாத குட்டி, எடுக்க முடியாத பாறை இடுக்கில் தவறி விழுந்து விட தாய் குரங்கு தன்னினத்துடன் சேர்ந்து கவலையுடன் கத்தும் தொடர்ந்த ஓசை. சிறுமை உற்ற களையாப் பூசல்; கவலையுடனான தொடர்ந்த ஓசையைக் குறித்தது. அடடா இங்கு ஆழ்துளைக் கிணறுகளுக்கான குழியில் விழுந்து சிக்கிக் கொண்ட சிறுவர் பற்றியச் செய்தி நமக்கு நினைவிற்கு வருகிறதல்லவா!!
இதுவரை பல துன்ப ஓசைகளைச் சொல்லிய ஆசிரியர் இனி சில நல்லோசைகளைக் காட்டுகிறார்.
கலை கையற்ற காண்பு இன் நெடு வரை 315
நிலை பெய்து இட்ட மால்பு நெறி ஆகப்
பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை
அருங் குறும்பு எறிந்த கானவர் உவகை;
பெரிய மூங்கில் மரங்களில் அதன் கண்களையே பற்றாக வைத்து ஏறுவர். அப்படி ஏறி மரத்தினுச்சியில் இருந்த மிகுந்த தேனை எடுத்துக் கொண்ட கானவர் உவகையால் செய்யும் ஓசை . உவகை ஓசையைக் குறித்தது.
திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என,
நறவு நாட் செய்த குறவர் தம் பெண்டிரொடு, 320
மான்தோற் சிறு பறை கறங்கக் கல்லென,
வான் தோய் மீமிசை அயரும் குரவை;
நன்னனுக்கு கொடுப்பதற்கு நல்ல பொருள் கிடைத்ததே என்று கள்ளருந்திய குறவர் தம் பெண்களுடன் மான் தோலால் செய்த பறை யொலிக்க வானுயர்ந்த மலைகளின் உச்சியில் ஆடும் குரவை ஆட்டம். பறை , குரவை ஆட்டத்தினால் வரும் ஓசை. குரவை யாட்டம் பற்றி சிலப்பதிகாரம் போன்ற பல இலக்கியங்களில், காட்டப்பட்டுள்ளது நாமறிந்ததே.
நல் எழில் நெடுந்தேர் இயவு வந்தன்ன
கல் யாறு ஒலிக்கும் விடர் முழங்கு இரங்கு இசை;
இங்கு ஒரு அழகிய உவமை சொல்லப்பட்டிருக்கிறது. பெரிய தேர் ஒன்று பாதையில் வரும் பொழுது ஏற்படும் ஓசையைப் போல் ஒலி எழுப்பி வந்ததாம் ஆறு. ஆற்றின் வெள்ளம் பாறைகளில் மோதியவாறு செல்லும் போது ஒலி எழுப்புவது தேர் ஓசையை ஒத்ததாக இருந்ததாம். இங்கு ஒலித்தல், முழங்குதல், இரங்கு இசை என்பன ஓசையைக் குறித்தன,
நெடுஞ்சுழிப் பட்ட கடுங்கண் வேழத்து, 325
உரவுச் சினம் தணித்துப் பெரு வெளிற் பிணிமார்
விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை;
காட்டிலிருந்து பிடிக்கப்பட்ட சினம் கொண்ட யானையை பழக்கும் பாகர்களின் ஓசை. விரவு மொழி என்பது வேற்று மொழி. சப்தங்களாலும் பிற மொழி, முக்கியமாக வடமொழிச் சொற்களாலும் யானையை பழக்குவர் என்பர். ஓதை என்பது ஓசை என்பதைக்குறிக்கும். இதிலிருந்து பாகர் காட்டு யானையை பழக்கும் வழக்கம் அறியப்படுகிறது.
ஒலி கழைத் தட்டை புடையுநர் புனந்தொறும்
கிளி கடி மகளிர் விளிபடு பூசல்;
தினைப்புலத்தில் கிளியை விரட்ட தட்டை என்ற மூங்கிலால் செய்த கருவியயைக்கொண்டு பெண்கள் செய்யும் ஒலி. விளிபடு பூசல் ஓசையைக்குறித்தது
இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு 330
மலைத் தலைவந்த மரையான் கதழ் விடை,
மாறா மைந்தின் ஊறுபடத் தாக்கி,
கோவலர் குறவரோடு ஒருங்கு இயைந்து ஆர்ப்ப,
தனது கூட்டத்திலிருந்து பிறிந்த ஏறு மலையிலிருந்து வந்த மானுடன் மோத, கோவலர் எழுப்பும் வெற்றி ஒலி. இங்கு ஆர்ப்ப என்றது ஓசையைக்குறித்தது.
வள் இதழ்க் குளவியும் குறிஞ்சியும் குழைய,
நல் ஏறு பொரூஉம் கல்லென் கம்பலை; 335
அவ்வாறு குறிஞ்சி மலரும் மிகுந்த வாசனை கொண்ட குளவியும் நசுங்குமாறு ஏறு பொறுதும் ஓசை. இங்கு கம்பலை என்பது ஓசையைக் குறிக்கும்
காந்தட் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி,
வண் கோட் பலவின் சுளை விளை தீம் பழம்
உண்டுபடு மிச்சில் காழ் பயன் கொண்மார்,
கன்று கடாஅவுறுக்கும்
மகாஅர் ஓதை
உண்பவரெல்லாம் உண்டு மிஞ்சிய பலாவின் சுளைகளை விதை பெறுவதற்காக கன்றுகளை கொண்டு மிதிக்கச் செய்யும் சிறுவர்களின் ஓசை. யானைக் கட்டி போரடிப்பதுப் போல் அங்கு கன்றுகளைக் கொண்டு மிதிக்கச் செய்து விதையெடுப்பர் எங்கிறது பாடல். இது பொருள் வளத்தின் மிகுதியைச் சொல்கிறது . சிறுவர்களின் ஓசை இங்கு சொல்லப்படுகிறது.
மழை கண்டன்ன ஆலைதொறும் ஞெரேரெனக் 340
கழை கண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும்,
மழைப்போல் ஓசையுடன் கரும்பாலையில் பெருகும் கருப்பஞ்சாறின் ஓசை. மழைப் பெய்யும் பொழுது வரும் ஓசையைப் போல் கருப்பஞ்சாறு பிழியும் போது ஒலி வந்தது என்பது அதன் மிகுதியைக் காட்டுகிறது. ஞெரேரென என்பது ‘சோ’ வெனக் கொட்டியது என்பது போன்ற பயன் பாடு. ஏத்தம் என்பது ஓசையைக் குறிக்கும் சொல்.
தினைகுறு மகளிர் இசைபடு வள்ளையும்,
நெல்லைக் குத்தி அரிசி பிரிப்பாற் போல், தினைபயிரை குத்தி தினை பெறும் போது மகளீர் பாடும் வள்ளைப்பாட்டொலி.
சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர்
பன்றிப் பறையும், குன்றகச் சிலம்பும்,
சோம்பு மஞ்சள் போன்றவற்றை பயிரிட்ட மக்கள் அவற்றை பன்றிகள் அண்டாவண்ணம் எழுப்பும் பாறை யொலி, குன்றகச் சிலம்பு என்றால் மலையின் ஒலி.
என்று இவ் அனைத்தும் இயைந்து ஒருங்கு ஈண்டி, 345
அவலவும் மிசையவும் துவன்றிப் பல உடன்
அலகைத் தவிர்த்த எண் அருந் திறத்த
மலைபடு கடாஅம் மாதிரத்து இயம்பக்,
(292 – 348)
இப்படி
மலையின் கீழும் உச்சியிலிம் கேட்கும் பல ஓசைகள் ஒன்றாக சேர்ந்து இன்னது என்று
அறியாதவண்ணம் ஒன்றாக ஒலிக்கும் ஓசையானது, மலையாகிய யானையின் பிளிறல் போல்
ஒலிக்கும்….
மிகச்
சிறப்பாக பலவித ஒலிகளை தனித்தனியாக காட்டிய புலவர் மலையை யானையாகவும்
அதன் கண் வரும் இவ்வோசைகளை அதன் பிளிறலாகவும் உவமித்துக் கூறுவது மிக நயமானது.
இதன் காரணமாகவே இப்பாடல் மலைப்படு கடாம் என்று பெயர் பெற்றது.
இப்பகுதியில்
குறிஞ்சி நிலத்தின் இயற்கை கூறுகள் அனைத்தையும் மிகச் சிறப்பாக
எடுத்துக்காட்டியிருப்பார். குறிஞ்சி நிலத்தின் மக்கள் , அவர்கள் உணவு, பறவைகள்,
பூ,, விலங்குகள், மக்களின் செய்கைகள், ஆண்களின் செய்கைகள் பெண்களின் செய்கைகள்,
விலங்குகளின் செய்கைகள் என்று பலவற்றியும் அழகுபட தொடுத்திருப்பது புலவரின்
மிகுந்த இயற்கை பற்றிய அறிவையும், ஞானத்தையும் காட்டுகிறது. இதில்
ஓசையைக்குறிக்கும் சொற்களாக ஓதை, ஓசை, இசை, அழுகை, கம்பலை, பூசல், குரல்,
சிலம்பம்,பாட்டு, ஏத்தம் என்று பல சொற்களை பயன் படுத்தியிருப்பது அவரது மொழிவளத்தைக் காட்டுவதாய் உள்ளது. இப்பாடல்
முழுதுமே குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நிலங்கள் பற்றியச் செய்திகளை நயம் பட கூறியிருப்பார்.
சங்க காலத்திற்குப் பிறகு , தமிழின் பக்தி இலக்கிய காலமான இடைகாலத்திலும் இப்படிப்பட்ட ஒரு அழகான சொற்சித்திரத்தை ஆண்டாளின் திருப்பாவையில் காண முடியும். ஆண்டாள் தனது திருப்பாவையில் ஆயர்ப்பாடியில் ஒரு நாள் புலர்வதை ஓசைகளைக் கொண்டே சொல்லோவியமாக நம்முன்னே படைத்துக் காட்டியிருப்பாள்.
ஆயர்ப்பாடியில் இருள் பிரியாத அதிகாலை நேரம், பறவை ஒலிஎழுப்புவது கேட்கிறது. ஆனால் அது எந்தப் பறவை என்று அடையாளம் தெரியவில்லை. 'புள்ளும் சிலம்பின' எங்கிறாள். அந்த இருள் நிறைந்த காலையில் கோயில் திறக்கப்பட்டதற்கான சங்கோசை 'வெள்ளை விளிச்சங்கின் பேரரவமாகக் கேட்கிறது. கோவிலில் முனிவரும் யோகியரும் ஹரி என்று சொல்லும் ஓசைக்கூட கேட்கிறது.
இப்பொழுது இருள் சற்று பழகி ஆனைச்சாத்தான் தான் கூவுகிறது என்பது தெரிகிறது. ஆய்ச்சியர் மத்தால் தயிர்கடையும் ஓசை, அவர்கள் கைவளை ஓசை,தயிர் உடையும் ஓசை என்று பிற ஓசைகள் கேட்கின்றன. ஆய்ச்சியர் கூந்தல் மணம் வீசுகிறது. பனி படர்ந்த காலை பொழுதில் எருமைகள் நுனிப்புல் மேய கிளம்புகின்றன. இப்படி ஆயர்பாடியில் ஒருநாள் புலர்வதை மிக அழகாக ஆண்டாள் காட்டியிருப்பது ஒப்பு நோக்கத்தக்கது.
இடைக்காலத்தை அடுத்து தற்காலத்திலும், சங்க இலக்கிய மற்றும் பக்தி இலக்கிய காலத்திற்கு சற்றும் குறையாத ஒரு கவிஞன் கண்ணதாசன். அவர் தன் 'தைப்பாவை' என்ற இலக்கியத்தில் ஓசைகளை வரிசைப்படுத்தியிருப்பார். பாடலைத் தருகிறேன். சற்று இரசியுங்களேன்....
காளை மணியோசை களத்துமணி நெல்லோசை
வாழை யிலையோசை வஞ்சியர்கை வளையோசை
தாழை மடலோசை தாயர்தயிர் மத்தோசை
கோழிக் குரலோசை குழவியர்வாய்த் தேனோசை
ஆழி யலையோசை அத்தனையும் மங்களமாய்
வாழிய பண்பாடும் மாயமொழி கேட்டிலையோ!
தோழியர் கைதாங்கத் தூக்கியபொன் னடிநோக
மேழியர்தம் இல்லத்து மேலெழுவாய் தைப்பாவாய்!!
ஆஹா, இவர்கள் நமக்குத் தந்து சென்ற தமிழின் வளத்தை,அழகை என்னெவென்று சொல்லி மகிழ்வது.
அதுமட்டுமல்லாமல் இந்நூலாசிரியர், இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங் கெளசிகனார் என்பார். இரண்ய முட்டம் என்பது நீலகிரி என்று ஆராய்ச்சியாளர்கள் காட்டுகிறார்கள். முட்டம் என்றால் மலை உச்சி, பனி படர்ந்த இருள் நிற மலைமுகடு, இதுவே நீலகிரி என்றாகிறது
பாட்டுடைத்தலைவன்-
பல்குன்றக் கோட்டத்துச்
‘செங்கண்மா‘த்துவேள் நன்னன் சேய் நன்னன். செண்கண் மா என்பது சிவந்த கண்களைக்
கொண்ட விலங்கு. இவ்விலங்குகள் வாழ்ந்த பகுதி என்பதால் இவ்விடத்திற்கு செங்கண்மா என்பது காரணப் பெயராக அமைந்தது. இதுவே திரிந்து செங்கம் என்று இப்போது அழைக்கப்படுகிறது.
திருவாண்ணாமலைக்கு அருகில் உள்ள ஒரு ஊர்.
இவ்வளவு
அழகாக குறிஞ்சி நிலத்தை விவரித்த புலவர் தனது நிலமான இன்றைய நீலகிரியிலிருந்து
இன்றைய செங்கம் செல்லும் பாதையை மிக நேர்த்தியான ஒரு பயணக்கட்டுரைப் போல்
கூறியிருப்பார். பல்குன்ற கோட்டம் என்ற பெயரே, பலகுன்றுகளைக் கொண்ட பகுதி என்பதைச்
சொல்கிறதல்லவா!! இது இன்றைய திருப்பதியும் அதனைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளையும்
கொண்ட தொண்டை மாண்டலத்தைக் குறிப்பதாக ஆராய்சியாளர்கள் சொல்கிறார்கள். இப்பாடலில்
குறிஞ்சி, முல்லை , மருத நில மக்கள் அவர்கள் பண்பாடு, பழக்கவழக்கம் என பலவற்றியும்
மிகச் சிறப்பாக காட்டியிருப்பார் நூலாசிரியர், பாட்டில் சொல்லியுள்ள இந்த அழகான
சுவாரஸ்யமான பயணத்தையும், இந்த பாடலின் படி இப்பகுதியைக் கண்டறிந்து பயணம்
மேற்கொண்டு வரலாற்றில் அதை பதியச் செய்தவர்கள் பற்றியும் அடுத்தப் பதிவில்
பார்க்கலாம்.
அன்புடன்
உமா