சங்க இலக்கிய தொகுப்பான பத்துப் பாட்டில் அடுத்ததாக
நாம் அறிய இருப்பது மதுரைக் காஞ்சி. இந்நூல் 782 அடிகள்
கொண்ட மிக நீண்ட நூல். ஆசிரியப்பா மற்றும் வஞ்சிப்பாவினாலானது.
இதனைப் பாடியவர் மாங்குடி மருதனார்
பாடப்பட்டவன் தலையானங்கானத்துச் செரு வென்ற பாண்டியன்
நெடுஞ்செழியன்.
இந்நூல் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு உலகியல் உணர்த்தும்
விதமாகப் பாடப்பட்டது.
இம்மதுரைக்
காஞ்சி நூல் பற்றிய சிறப்பான விளக்கம் http://www.tamilvu.org/slet/l4330/l4330pd1.jsp?bookid=265&pno=113
என்ற
இணையதளத்தில் மிக நேர்த்தியான முறையில் தரப்பட்டிருக்கிறது. அதிலிருந்து பாட்டின் அமைப்பு
பற்றிய பகுதியினை இங்கு காண்போம்.
பாண்டியன் நெடுஞ்செழியன் தமிழ்நாடு முழுவதையும்
தனித்தாண்டவன்,
இணையற்ற வீரன், போர்செய்வதையே பொழுதுபோக்காகக்
கொண்டிருந்து வந்தவன், நால்வகைப் படைகளையும் நல்லமுறையிலே பெருக்கி
வைத்திருந்தான், செல்வச்செருக்கால், உலகப்
பொருள்களும், உலக இன்பமும் அழிந்துவிடக் கூடியவை என்பதை
மறந்திருந்தான்.
இவனுடைய உற்ற நண்பர் மாங்குடி மருதனார்; உலக
நிலையாமையை இவனுக்கு உணர்த்த எண்ணினார். அவனைப்பார்த்து முதலில் அவன்
முன்னோர்களின் அரசியல் நேர்மையை எடுத்துக்காட்டினார். அதன்பின், முன்னோர் முறையிலே தவறாமல் அவன் புரிந்துவரும் அரசியல் சிறப்பையும்
பாராட்டினார். அவனுடைய அஞ்சாமை, வீரம், அருஞ்செயல்கள் ஆகியவற்றைப் போற்றினார். இறுதியில் அவனுடைய சிறந்த குணங்களை அவன் சிந்தை மகிழும்படி எடுத்துச்
சொன்னார்.
இவ்வளவையும் எடுத்துக்காட்டியபிறகு, “பாண்டியனே!
உன்னைப் போலவே இவ்வுலகிலே எண்ணற்ற மன்னர்கள் வீரர்களாக - செல்வமுடையவர்களாக
கொடையாளிகளாகச் சிறந்து வாழ்ந்தனர். அவர்களுடைய எண்ணிக்கை கடல்துறையிலே அலைகள்
கொண்டுவந்து குவிக்கும் மணலைக்காட்டினும் பல. அவர்களெல்லாம் புகழுடன் வாழ்ந்தனர்;
முடிவிலே மாநிலத்தைவிட்டு மறைந்து போயினர்” என்று
நிலையாமையை எடுத்துக்காட்டினார்.
இதன்பின் பாண்டிய நாட்டின் இயற்கை வளத்தைப்
பாராட்டினார். அந்நாட்டிலே அமைந்துள்ள மருதம், முல்லை,
குறிஞ்சி, பாலை, நெய்தல்
ஆகிய ஐந்திணைகளின் ஆக்கங்களையும் அழகாகப் பாடினார்.
அதன்பின் வையையாற்றின் வளத்தைப் புகழ்ந்தார்.
வையையின் தென்பால் அமைந்துள்ள மதுரை நகரத்தின் மாண்பைப் பாராட்டினார்.
அந்நகரத்தில் நடைபெறும் பலவகையான நிகழ்ச்சிகள்-வாணிகம், தொழில்கள்
எல்லாவற்றையும் எடுத்துக்காட்டிப் புகழ்ந்தார்.
நெடுஞ்செழியனுடைய நேர்மையான ஆட்சிமுறையை விளக்க
நினைத்தார்;
அதற்கு ஆதரவாக மதுரையில் இருந்த நீதி மன்றத்தின் சிறப்பைக்
கூறினார். வணிகர்களின் நடுநிலையைப் பற்றி நாவாரப் புகழ்ந்தார், மதுரை நகரில் வாழும் மக்களுடைய சிறந்த வாழ்க்கையைப் பற்றியும் சொன்னார்.
இறுதியில் “உன் காதல் மகளிருடன் கலந்து உண்டு மகிழ்ந்து
வாழ்க” என்று நெடுஞ்செழியனை வாழ்த்தினார்.
இந்த முறையிலேயே இந்நூலை அமைத்துப்
பாடியிருக்கிறார் ஆசிரியர் மாங்குடி மருதனார். இந்நூலைப் பொருளறிந்து படிப்போர்
இதன் சொற்சுவை,
பொருட்சுவைகளை நுகர்ந்து இன்புறுவார்கள். பழந்தமிழ் மதுரையில் சுற்றித்
திரிவது போல் உணர்வார்கள்.
இனி மதுரைக் காஞ்சியில் சில பாடல் வரிகளை பார்ப்போம்
மேற்சொன்னவாறே சோழர்கள் காலத்திலும் வளம் பொங்கி, செல்வச் செழிப்புடன் நாடு விளங்கியது. பல கலைகள் வளர்ந்தன.
ஆனால் மக்களின் காமமும் வளர்ந்தது. மன்னர்களும்
உலக இன்பத்தில் திளைத்திருந்தனர். மன்னனையும் நாட்டையும் நேர்வழிப்படுத்துதல்
அறிஞர்கள், ஞானிகள், புலவர்கள் தங்கள்
கடமை என்று நினைத்தனர். இச்சூழ்நிலையில் தான் கம்பர் ஒப்பற்ற காவியமான
இராமாவதாரத்தைப் பாடினார். நூல் முழுவதும் மிகச்சிறப்பாக அறம்,
ஒழுக்கம் கூறப்பட்டிருக்கும். இராமாயணத்தை உணர்ந்து
படிப்போர் அறவழி நிற்பது திண்ணம்.
கம்ப
இராமாயணத்தில் பால காண்டத்தில் ஒரு காட்சி. தசரதன் இராமனுக்கு முடிசூட்ட முடிவெடுத்து
தனது குரு, அமைச்சர்கள், சிற்றரசர்காள் எல்லோரிடமும் கருத்தை கேட்டறிந்து பின் இராமனை
அவைக்கு அழைத்து வரச் செய்கிறான். இராமனிடம் முடிசூட்டும் தகவலை சொல்கிறான் தசரதன்.
இப்போது இராமனின் நிலை என்ன? தனக்கு முடிசூட்டப் போகிறார்கள் என்றதும் இராமன் அதை எவ்வாறு
எதிர்கொண்டான் என்பதை
தாதை அப்
பரிசு உரைசெய,
தாமரைக் கண்ணன்
காதல்
உற்றிலன்;
இகழ்ந்திலன்; 'கடன் இது' என்று உணர்ந்தும்,
'யாது
கொற்றவன் ஏவியது அது செயல் அன்றோ,
நீதி எற்கு?' என
நினைந்தும், அப் பணி தலைநின்றான்.
தந்தை
அவ்வாறு சொன்னதும், தாமரைக்கண்ணனாகிய இராமன்
காதல்
உற்றிலன்- மிகுந்த விருப்பத்தோடு அதை ஏற்க வில்லை,
இகழ்ந்திலன்
– அப்பரிசை வெறுக்கவும் இல்லை
கடன்
இது – தான் என்று தசரதன் மகனாகப் பிறந்தானோ அன்றே இது தனது கடமையானது என் உணர்ந்து
இருந்தாலும்
இன்று
'யாது கொற்றவன் ஏவியது அது செயல் அன்றோ,
அரசன்
கட்டளையை ஏற்று தான் அதன் படி செய்வது தான் முறை என்பதால் தான் அரசு ஏற்பதாக கூறுகிறான்.
ஒரு
தலைமை பொறுப்பை ஏற்போருக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான குணம் இது. அரசியல் தலைமையாக
இருந்தாலும் சரி, நிர்வாகத் தலைமையாக இருந்தாலும் சரி எந்த நிலையிலும் விருப்பு வெறுப்பின்றி
தன் கடமை என்றுணர்ந்து நடுவு நிலைமையோடு செயல்படுதல் மிக முக்கியம்.
இதே
கருத்து
மதுரைக்
காஞ்சியிலும்
அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி,
செற்றமும் உவகையும் செய்யாது காத்து, 490
ஞெமன் கோல் அன்ன செம்மைத்து ஆகி,
சிறந்த கொள்கை அறம் கூறு அவையமும்
என்று
அச்சம் கொள்ளாது, மற்றவர்க்கு அச்சம் தராது, சினம் கொள்ளாது உவகையும் கொள்ளாது எமனைப்போல
செம்மையான அறம் கொண்ட அவை பாண்டியனின் அவை எனக் கூறப்பட்டுள்ளது அறிந்து போற்றத்தக்கத்து.
துவக்கத்தில் பாண்டிய நாட்டின் இயற்கை வளம், அம்மன்னர்காளின்
ஆட்சி சிறப்பு ஆகியனக் கூறப்பட்டுள்ளது.
ஓங்கு திரை வியன் பரப்பின்
ஒலிமுந்நீர் வரம்பு ஆகத்…
உயர்ந்த அலைகளைக்கொண்ட ஒலிக்கின்ற கடற்பரப்பை எல்லையாகக்
கொண்ட நிலத்தில் மிகப் பெரிய தேன் கூடுகள் நிறைந்த உயர்ந்த மலை முகடுகள் உள்ளன. அங்கு
வளி மண்டலத்தில் காற்றானது வலப்புறமாகச் சுழன்று வீசுகிறது. (வலப்புறமாக காற்றடித்தால் பலன் என்பது நம்பிக்கை) பகற்
பொழுதை உண்டாக்கும் சூரியனும் இரவை உண்டக்கும் நிலவும் மற்ற பெரிய விண்மீன்களும் தவறாது
தங்கள் கடமையைச் செய்ய, மழைப் பொழிந்தும் மரங்களெல்லாம் பயனீந்தும்
இருப்பதால் பாண்டியனின் நாட்டில் மக்கள்
நோ யிகந்து நோக்கு விளங்க
பசி பிணி இல்லாது அழகு தோன்ற, துன்பமில்லாமல்
வாழ்ந்தனர் என்று நயமாகக் காட்டப்பட்டுள்ளது.
இப்பாடலில் பழைய தமிழகத்தின் எல்லை,
தென் குமரி வட பெருங்கல் 70
குண குட கடலா வெல்லைத்…
என்றும்
பண்டை காலத்தில் ஓணம் பண்டிகை நடைப்பெற்றதை
மாயோன் மேய ஓண நல் நாள்,
என்றும் வரலாற்று செய்திகள் அமைந்துள்ளது சிறப்பு.
இப்பாடலின் மூல நோக்கம் அறம் கூறுவதே.
அக்காலத்தில் இருந்த அரசர், அந்தணர்,
வணிகர் வேளாளர் என்ற பிரிவுகளைக்கூறி, ஒவ்வொருவருக்குமான
அறம் கூறுவதாய் இப்பாடல் அமைந்துள்ளது. தொல்காப்பியர் காலத்திலிருந்தே
இப்பிரிவுகள் சொல்லப்பட்டாலும் இப்பாடலில் அரசரை முதலாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது
நோக்கத் தக்கது.
சிறந்த வேதம்
விளங்கப் பாடி
விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து
நிலமமர் வையத்து ஒருதாம் ஆகி
உயர்நிலை உலகம் இவணின்று எய்தும்
அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின்
பெரியோர் மேஎய் இனிதின் உறையும்
குன்றுகுயின் அன்ன அந்தணர் பள்ளி
என்பது அந்தணருக்கான ஒழுக்கமாக சொல்லப்பட்டுள்ளது.
அந்தணர் வேதம் ஓதவேண்டும், அவர்களுக்கான
ஒழுக்கத்துடன் இருக்கவேண்டும். அற நெறி பிறழாது அன்புள்ளத்தாராகி
மேலுலக வாழ்வை இவ்வையத்தின்றே எய்தும் படி வாழ வேண்டும். அப்படி
அந்தணர் மகிழ்வுற வாழ்ந்தப் பகுதி அந்தணர் பள்ளி எனப்பட்டது.
வண்டுபடப் பழுநிய தேனார் தோற்றத்துப்
பூவும் புகையுஞ் சாவகர் பழிச்சச்
சென்ற காலமும் வரூஉ மமயமும்
இன்றிவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து
வானமு நிலனுந் தாமுழு துணருஞ்
சான்ற கொள்கைச் சாயா யாக்க
ஆன்றடங் கறிஞர் செறிந்தனர் நோன்மார்
சாவகர் என்றதனால் இங்கு சமணர்களின் ஒழுக்கம் கூறப்பட்டுள்ளது
என அறியலாம்.
இவர்கள் தேன் நாவில் இனிப்பதைப் போன்று பார்வைக்கே இனியவர்கள். அகன்ற அறிவும், அதனைக் காட்டிக்கொள்ளாத
அடக்கமும் கொண்டு வாழும் ஆன்றடங்கு அறிஞர். அவர்கள் அறிவுச் செறிவும் உடையவர்கள். இவர்கள்
இன்று வழங்கும் ஒழுக்கத்தை உணர்ந்ததோடு சென்ற காலமும் வருங்காலமும் அறிந்தவர்.
சான்ற கொள்கையும் சோர்வில்லாத உடலும் கொண்டவர்.
அரசனுக்கான ஒழுக்கம்
மதுரைக்காஞ்சியின் பாட்டுடைத்தலைவன் தலையாலம்
கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கு நிலையாமை பற்றி இந்நூல்
எடுத்துரைக்கின்றது என்று பார்த்தோம். போர் வெற்றி போன்றன
நிலையில்லாதவை என எடுத்தரைத்து உலகில் என்றும் நிலைக்கும் அறத்தினைச்
செய்ய இம்மன்னனை வற்புறுத்துவதாக இப்பாடல் பாடப் பெற்றுள்ளது. எனவே அரசர்க்குரிய
பொது அறங்கள் இப்பாடலில் வகைப்படுத்தப் பெற்றுள்ளன.
அரசனுக்கு போர்வெற்றி மட்டும் போதாது, அரசன்
அறம் தலை நிற்க வேண்டும் என்பதே இந்நூலின் முக்கிய நோக்கமாக விளங்குகின்றது.
"பணைகெழு பெருந்திறல்
பல்வேல் மன்னர்
கரைபொருது இரங்கும் சுனைஇரு முந்நீர்
திரையிடு மணலினும் பலரே உரைசெல
மலர்தலை உலகம் ஆண்டு கழிந்தோரே!''
இவ்வடிகளில்
போர்வெற்றி பெற்ற மன்னர் பலர் பிறந்து மண்ணாயினர், போரில்
வெற்றி பெற்று புகழ்பெற்ற மன்னர்கள் கடற்கரை மணலினும் பலர். அவர்கள் எல்லோரும்
இவ்வுலகை ஆண்டு மறைந்துவிட்டனர். அது உண்மையான புகழ் இல்லை என்று
எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. மேலும்
"பரந்து
தோன்றா வியன்நகரால்
பல்யாகசாலை
முதுகுடுமியின்
நல்வேள்வித்
துறைபோகிய
அரியதந்து
குடிஅகற்றி
பெரியகற்று
இசைவிளக்கி
முந்நீர்
நாப்பண் ஞாயிறு போலவும்
பன்மீன்
நடுவண் திங்கள் போலவும்
பூத்த
சுற்றமொடு பொலிந்து இனிது விளங்கிப்
பொய்யா
நல்லிசை நிறுத்த''
என்று
பாண்டியனைப் புலவர் வாழ்த்துரைக்கும் போது அவன் தமிழ் வளர நல்வேள்வி
செய்தவன் நிலந்தரு திருவின் நெடியோன். தமிழ் வளர்க்கும் நல்வேள்விக்கு இவன்
நிலக்கொடை வழங்கினான். இந்த நிலக்கொடையால் இவன் ‘நிலந்தரு
திருவின் நெடியோன்’ என்று சிறப்பிக்கப்பட்டான். இந்தத்
தமிழ்க்கொடை வியக்கத் தக்க பெருமை கொண்டது. சான்றாண்மை மிக்கது. செம்மையானது. பலர்
வாயாலும் புகழப்படுவது. புகர் என்னும் குற்றம் கரும்புள்ளிக் குற்றம் இல்லாத்து.
நிலந்தரு திருவின் நெடியோன் போல நீ (நெடுஞ்செழியன்) நல்வேள்வி செய்து சிறப்புடன்
திகழ வேண்டும் என்றும்
தருபவை அரிய பொருள்களாக இருக்க வேண்டும்
குடிமக்களின் வளத்தை விரிவு படுத்துவதாக இருக்க வேண்டும் அரிய பெரிய செய்திகளைக்
கற்றுக்கொள்ள வேண்டும் புகழ் ஒளி உன்மீது வீச வேண்டும் கடலில் தோன்றும் ஞாயிறு
போல் இளவெயில் வீசவேண்டும் பல மீன்களிடையே விளங்கும் திங்கள் போல் தண்ணொளி
தரவேண்டும் நீ திங்கள் போலவும் உன் சுற்றம் விண்மீன்கள் போலவும் திகழ வேண்டும் என்றும் கூறும் அடிகள் அரசருக்கான அறங்களை எடுத்துரைப்பனவாக உள்ளன.
இவ்வாறே
வாணிகர், பெரும் செல்வர், பெண்கள் மற்றும் பல மக்களுக்குமான அறங்கள் இப்பாடலில் விரவி
இருக்கின்றன. மதுரையில் ஒருநாள் முழுதும் நடைபெரும் நிகழ்வுகளை படிக்கும் போது மதுரையில்
சில காலம் வாழ்ந்த அனுபவம் கிடைக்கும்.
அறத்தைக் குலைப்பவர்களாக கள்வர், அணங்கு,
பேய் போன்றன விளங்கப்பட்டுள்ளன. இவர்களின்
இயல்பையும், இவற்றிலிருந்து மக்களைக் காக்கும் ஒற்றர்,
காவலர் பற்றியும் மதுரைக்காஞ்சி குறிப்பிடுகின்றது.
இவ்வகையில் தமிழகத்தின் சங்க கால அறச் சூழலை
எடுத்துரைக்கும் மிகச்
சிறந்த நூலாக மதுரைக்காஞ்சி விளங்குகிறது என்பதைக் காணமுடிகிறது.
அறிந்து
சுவைப்போம். இலக்கியங்கள் பழம் பெருமை பேச மட்டுமில்லை. அவைக்கூறும் அறங்கள் நமது அன்றாட
வாழ்வில் கடைப்பிடிக்கவேண்டியவையும் ஆகும் என்பதை உணர்வோம்.
அடுத்த
பதிவுடன் விரைவில்
அன்புடன்
உமா