Monday, 24 December 2018

சிறுபாணாற்றுப்படை


சிறுபாணாற்றுப்படை பத்துப்பாட்டுள் மூன்றாவது நூலாக இடம் பெற்றுள்ளது. இஃது ஆசிரியப்பாவால் ஆனது. 269 அடிகளைக் கொண்டது. குழல், யாழ் முதலான இனிமையான இசை தரும் கருவிகளை இசைப்பதில் (வாசிப்பதில்) திறம் பெற்றவர்களைப் பாணர் என்பர்.

மிடற்று வழியாக (குரல் வழியாக-வாய் வழியே) இன்னிசையை இசைப்பவர் (பாடுபவர்) இசைப்பாணர் ஆவர்.

யாழ் என்னும் இசைக்கருவியை இசைப்பதில் திறம் பெற்றவர்களை யாழ்ப்பாணர் என்பர்.

யாழ்ப்பாணர்களுள் பெரிய யாழை இசைப்பவர் பெரும்பாணர், சிறிய யாழை இசைப்பவர் சிறுபாணர்.

சிறுபாணாற்றுப்படையைப் பாடியவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார். பாட்டுடைத் தலைவன் நல்லியக் கோடன்.

நல்லியக்கோடன் என்பவன் ஒரு சிற்றரசன். இவனைப் புகழ்ந்து பாடிய சிறுபாணன் ஒருவன் பரிசு பெற்று வருகிறான். இவன், தன் எதிரில் வந்த வேறு ஒரு சிறுபாணனை இம்மன்னனிடம் சென்று பரிசுபெறும் வகையில் நெறிப்படுத்துவதாக இந்நூல் அமைந்துள்ளது.

ஒரு சிறுபாணன் வேறு ஒரு சிறுபாணனை ஆற்றுப்படுத்தியதால் இந்நூல் சிறுபாணாற்றுப்படை என்னும் பெயர் பெற்றது.
பாணர்கள் வறுமைத் துன்பத்தில் தவிக்கின்றனர். அவர்களது துன்பத்தை மேலும் அதிகப்படுத்துவதாகப் பாலை நிலத்தின் இயல்புகள் உள்ளன. பாணர்களின் நெஞ்சத்தில் ஏற்பட்டுள்ள துன்பத்தை மிகுதிப்படுத்திக் காட்டும் வகையில் பாலைநிலப் பின்னணியைப் புலவர் நத்தத்தனார் அமைத்துள்ளார்.

மணிமலைப் பணைத்தோள் மாநில மடந்தை
அணிமுலைத் துயல்வரூஉம் ஆரம் போல
செல்புனல் உழந்த சேய்வரல் கான்யாற்று

நிலத்தைப் பெண்ணாகப் புலவர் உருவகம் செய்கிறார். அவள் மூங்கில் ஆகிய தோள்களை உடையவள். மலையில் இருந்து வீழும் அருவியே அவள் மார்பகத்தின் மேல் கிடக்கும் முத்துமாலை. அருவி, மலையைவிட்டு இறங்கி அருகில் உள்ள காட்டிற்குள் நுழைகிறது. பிறகு காட்டாறாக மாறுகின்றது.  இது கார்காலக் காட்சி.

ஆனால் இப்பொழுது கார் காலம் முடிந்து விட்டது. வேனில் காலம் தொடங்கி விட்டது. இக்காலத்தில் குறிஞ்சி மற்றும் முல்லை நிலக்காட்சி மாறுகிறது. மலையில் அருவிகள் இல்லை. காட்டாற்றில் நீர் இல்லை. அதனால் குயில்கள் பூம்பொழிலில் நுழைந்து விளையாடுகின்றன. தம் அலகால் பூக்களைக் கொத்துகின்றன. பூக்கள் உதிர்ந்து கரிய நிறத்தில் உள்ள ஆற்று மணற் பரப்பில் கிடக்கின்றன.

இத்தகைய மணல் பரப்பு வெப்பத்தால் சூடாகிக் கிடக்கிறது. அம்மணலில் கிடக்கும் பரல் கற்களும் (பருக்கைக் கற்கள் - சிறிய கற்கள்) வெப்பத்தால் சூடாகிக் கிடக்கின்றன. வெப்பம் மிகுந்த மணலும், பரல் கற்களும் அவ்வழியாக நடந்து செல்லும் பாணர்களின் கால்களுக்கு மிகுந்த துன்பத்தைத் தருகின்றன. இப் பாலை நில கொடுமையை

வெயில் உருப்புற்ற வெம்பரல் கிழிப்ப….

காலை ஞாயிற்றுக் கதிர் கடாவுறுப்ப

என்ற வரிகளில் அழகாகக் காட்டுகிறார். பொதுவாக நண்பகல் சூரியனே மிகவும் சுடும். ஆனால் வேனிற் காலத்தில் காலைக் கதிரவனும் வெப்பம் மிகுதியாக செய்கிறது.

அடுத்த சில வரிகளில் விறலியரின் கூந்தல் (முடி) முதல் பாதம் (அடி) வரை புலவர் நத்தத்தனார் வருணனை செய்துள்ள அழகு நயமாக உள்ளது.

ஐது வீழ் இகு பெயல் அழகு கொண்டு அருளி
நெய் கனிந்து இருளிய கதுப்பின் கதுப்பு என
மணிவயின் கலாபம் பரப்பி பலவுடன்   15
மயில் மயில் குளிக்கும் சாயல் சாஅய்
உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ
வயங்கு இழை உலறிய அடியின் அடி தொடர்ந்து
ஈர்ந்து நிலம் தோயும் இரும் பிடித் தடக் கையின்
சேர்ந்து உடன் செறிந்த குறங்கின் குறங்கு என   20
மால் வரை ஒழுகிய வாழை வாழைப்
பூ எனப் பொலிந்த ஓதி  (13-22)

ஐது வீழ் இகு பெயல்
உலகிற்கு அருள் செய்ய வல்ல, மெல்லியதாய் வீழ்கின்ற மழையைப் போன்ற அழகு உடைய கருமையான கூந்தல்.
மென்மெய்யாக வீழ்கின்ற மழை, அருள் செய்கின்ற மழை போன்று அவள் கூந்தல் இருக்கிறதாம்.

இங்கு ஆண்டாள் அருளிய திருப்பாவையின் 3ம் பாடலில்தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்துஎன்று தீங்கில்லாமல் பெய்யும் மழை கூறப்பட்டுள்ளது நோக்குதற்குரியது.
கெடுக்கும் மழையை நாமறிவோம் அல்லவா?

விறலியரின் கூந்தலை மழை மேகம் என்று மயில்கள் நினைத்தன. அதனால் மகிழ்ச்சியாகத் தம் தோகையை விரித்து ஆடின. அவர் கண்கள் நீலமணி போன்றவை. எயிறு என்றால் பல். நுங்கின் இனிய நீர் போன்று சுவையை உடையதாக எயிற்று நீர் அமைந்துள்ளது. ஓடி இளைத்து வருந்துகின்ற நாயின் நாக்கைப் போன்ற பாதம். சிலம்பு முதலிய அணிகலன்கள் ஏதும் இன்றி அழகற்று இருக்கிறது. இப்படி கேசாதிபாதம் விறலியரின் அழகு வர்ணிக்கப்படுகிறது. வருமையும் காட்டப்படுகிறது.

இத்தகு அழகு வாய்ந்த விறலியரின் மென்மையான இயல்பையும் புலவர் குறிப்பிடத் தவறவில்லை. விறலியர், முல்லை சான்ற கற்பும், மெல்லியல்பும், மான் நோக்கும், வாள் (ஒளி பொருந்திய) நுதலும் உடையவர் என்பதை,

முல்லை சான்ற கற்பின் மெல்லியல்
மடமான் நோக்கின் வாள்நுதல் விறலியர்
என்னும் அடிகள் சுட்டுகின்றன.

இங்கு பாடினியின் அழகுக்கு புலவர் காட்டும், அடுக்கி வரும் உவமை, அடுக்குவமை புதுமையானதும் அறிந்து மகிழத்தக்கதுமாகும்.

மழை போல் கதுப்பு
கதுப்பு போல் மயில்
மயில் போல் சாயல்
சாயல் போல் நாய்நாக்கு
நாய்நாக்கு போல் (கால்)அடி
அடிதோயும் யானைக்கை போல் குறங்கு (கால்தொடை)
குறங்கு போல் உயரும் வாழை
வாழைப்பூ போல் ஓதி (கொண்டை)
ஓதி போல் பூக்கும் வேங்கை
வேங்கைபு பூ உதிர்ந்து கிடப்பது போல் மேனியில் சுணங்கு
சுணங்கணிந்த கோங்கம் பூ போல் முலை
முலை போல் பெண்ணை (பனங்காய்)
பெண்ணை நுங்கு போல் வெண்ணிற எயிறு (வெண்பல்)
எயிறு போல் குல்லைப்பூ
குல்லை போல் முல்லை
முல்லை சான்ற கற்பு
இப்பாணர்கள் வறுமைக் காரணமாக விரலியருடன் தமக்கு யாரேனும் உதவமாட்டார்காளா என்று எண்ணியவாறு பாலை நிலம் தாண்டி இரவல் பெறும் நோக்கோடு போகிறார்கள்.

இவர்களுக்கு நல்லியக் கோடனிடம் பரிசில் பெற்ற சிறுபாணன் ஒருவன் தான் பெற்ற வளத்தையெல்லாம் சொல்லி அவனிடம் சென்று வேண்டியதைப் பெருக என ஆற்றுப்படுத்துகிறான்,

கொழுமீன் குறைய வொதுங்கி வள்ளிதழ்க்
கழுநீர் மேய்ந்த கயவா யெருமை
………
வடபுல விமயத்து வாங்குவிற் பொறித்த
எழுவுறழ் திணிதோ ளியறேர்க் குட்டுவண்
வருபுனல்வாயில் வஞ்சியும் வறிதே யதாஅன்று    50

என்ற வரிகளில் வஞ்சி நகரின் வளம் காட்டப்படுகிறது. இப்படி வளமான வஞ்சி நகரம் வறியது என்றென்னும் படி வழங்குவான் நல்லியக் கோடன்

அடுத்ததாக மதுரை நகரின் வளம் கூறுகையில்

தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்
மகிழ்நனைமறுகின் மதுரையும் வறிதே யுதாஅன்று..

தமிழ் நிலைபெற்றிருப்பதால் இவனது மதுரை பிறரால் தாங்க முடியாத மரபுப் பெருமையினைக் கொண்டது. மதுரைத் தெருவில் எப்போதும் மகிழ்ச்சித்தேன் பாய்ந்துகொண்டே இருக்கும். இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இவனது மதுரை நகரமே ஏழைநகரம் என்று எண்ணும்படியாக நல்லியக் கோடன் வளத்தை வாரி வழங்குவான்.

……….ஒன்னார்
ஓங்கு எயில் கதவம் உருமுச்சுவல் சொறியும்   80
தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை,
நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன்,
ஓடாப் புட்கை உறந்தையும் வறிதே அதாஅன்று

நற்றேர் செம்பியன் தூங்கெயில் கோட்டையை வென்று அதன் அடையாளமாகத் தன் கையில் காப்புத்தொடி அணிந்துகொண்டான். அந்தத் தூங்கெயில் ஓங்கி உயர்ந்த கதவினைக் கொண்டது. மேகம் அந்தத் தொங்கும் கோட்டையில் தன் முதுகைச் சொரிந்துகொள்ளும் அளவுக்கு அந்தக் வானளாவ உயர்ந்து தொங்கியது. அதனைக் கைப்பற்றிக்கொண்ட செம்பியனின் உறையூர் நகரமே ஒன்றுமில்லாத வறுமைக்கோலம் எய்திவிட்டது போல நல்லியக்கோடன் பரிசுகளை வழங்குவான், என்கிறார் பாணனை ஆற்றுப்படுத்தும் புலவர். இங்கு தூங்கு எயில் எறிந்த என்பதில் சிவன் திரிபுறம் எரித்தது கூறப்பட்டுள்ளது.

அடுத்ததாக கடையேழு வள்ளல்களின் கொடைத்திறன் போற்றப்படுகிறது. இந்த ஏழு பேர் இழுத்துச் சென்ற ஈகை என்னும் தேரை இழுக்கும் நுகத்தை நல்லியக்கோடன் தனி ஒருவனாகவே இழுத்துச் சென்றான் என்று பாடல் வளர்கிறது. அதாவது, அந்த ஏழு வள்ளல்களுக்குப் பின்னர் இருந்த ஒரே ஒரு வள்ளல் இவன் மட்டுமே எனப் போற்றப்படுகிறான்.

கெழுசமங் கடந்த வெழுவுறழ் திணிதோ
ளெழுவர் பூண்ட வீகைச் செந்நுகம்
விரிகடல் வேலி வியலகம் விளங்க
வொருதான் றாங்கிய வுரனுடைய நோன்றா   115

நல்லியக்கோடனை விரும்பி அவனிடம் முன்பொரு காலத்தில் நானும் எனது சுற்றத்தாரும் சென்றோம். அவனைப் புகழ்ந்து பாடினோம். அவன் எங்களது தகுதியை எண்ணிப் பார்க்கவில்லை. மாறாகத் தன்னுடைய தகுதியை எண்ணிப் பார்த்தான். தன் தந்தை தனக்கு வைத்துவிட்டுச் சென்ற வானளாவிய மலைபோன்ற செல்வத்தை அளவிட்டுக் கொண்டான். வழங்கினான்.

அன்று எங்கள் கன்னத்தில் கண்ணீர் வழிந்தது. அதை மாற்றுவானாய் நல்லியக்கோடன் கன்னத்தில் கண்ணின் மதம் வழியும் யானையைப் பரிசாகத் தந்தான். அஞ்சாமைக் குணம் பூண்டிருக்கும் யானையைத் தந்தான். யானையோடு தேரும் தந்தான். இப்போது நாங்கள் செம்மாப்போடு யானைமீதும் தேர்மீதும் வந்து கொண்டிருக்கிறோம். நீங்களும் இங்கு வருந்திக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு உங்களது சுற்றத்தாரோடு செம்மாந்த உள்ளம் கொண்டு அவனிடம் செல்லுங்கள்

என்றும், செல்லும் வழியிலுள்ள வேலூர் அழகும் ஆமூர் அழகும் சொல்லி நல்லியக் கோன் அவையில் வீற்றிருக்கும் அழகையும் அவன் குணமும் விவரித்துக்கூறி அவனிடம் நீங்கள் விரும்பிச் சென்றால் உங்களது வாழ்க்கையானது வளம் பெறத்தக்க வகையில் பரிசில் பெறுவீர்கள். போகும்போது நடந்து செல்லும் நீங்கள் வரும்போது தேரில் வருவீர்கள் என்று ஆற்றுப்படுத்துவதாய் அமைகிறது சிறுபாணாற்றுப்படை. இப்பாடலில் சிற்றரசனின் ஈகை குணம் அழகாக காட்டப்பட்டுள்ளது.

அடுத்த பதிவோடு விரைவில்
அன்புடன்
உமா

Sunday, 2 December 2018

பத்துப் பாட்டு - பொருநறாற்றுப்படை


பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற் பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது. இது 248 அடிகளைக் கொண்ட வஞ்சியடிகள் கலந்த ஆசிரியப்பாவாலானது. இது போர்க்களம் பாடும் பொருநரைப் பற்றிக் கூறும் புறத்திணை நூலாகும்.

பொருநன் என்பவன் யாழை மீட்டிக்கொண்டும், பாடும் பாடலின் கருத்து புலப்படுமாறு நடித்துக் கொண்டும், யாழின் பண்ணிசைத் தாளத்திற்கேற்பக் காலடித் தாளம் போட்டுக்கொண்டும் ஆடுபவன், அன்றியும் பறை முழக்கும் கூட்டத்தவனாகவும் காணப்படுகிறான்.

அவனது யாழின் சிறப்பு இப்பாடலில் மிக அழகாக காட்டப்பட்டுள்ளது.



பந்தல், பச்சை, வயிறு, போர்வை, ஆணி, வறுவாய், திவவு, வேய்வை, நரம்பு, தொடையல் முதலான உறுப்புகளுடன் யாழ் எவ்வாறு கவர்ச்சியாக அமைந்திருந்தது என்பது முதலில் கூறப்படுகிறது. பந்தல் பிளவுபட்ட குளம்பு போல் இருந்தது. பச்சை எரியும் விளக்கின் சுடர் போல் இருந்தது. வயிறு நிறைமாதத் தாயின் வயிறு போல் இருந்தது. போர்வை யாழின் வயிற்றில் போர்த்தப்பட்டிருந்தது. அது சூலுற்ற திருமகளின் வயிற்றில் மென்மயிர் ஒழுகியது போன்ற பொன்னிற வெல்வெட்டுத் துணியாலான போர்வை.. ஆணி வலையிலுள்ள நண்டுக்கண் போல் இருந்தது. அது அடிக்கப்பட்ட துளைவாயை மூடி தூர்த்துக் கிடந்தது. வறுவாய் எட்டாம் நாள் தோன்றும் குறைவட்ட நிலாவைப் போல் இருந்தது. திவவு பாம்பில் படுத்திருக்கும் மாயோன் கைவளையல் போல் இருந்தது. வேய்வை இது நரம்பில் உளரும்போது விரலில் அணியும் கவசம். அது தினையரிசி அவியல் போன்றது. நரம்பை நெருடும் நுனியை உடையது. தொடையல் நரம்பானது யாழில் தொடுக்கப்பட்டிருக்கும் பகுதி. இதன் இடத்தைப் பொறுத்துத்தான் யாழின் கேள்வியிசை பிறக்கும். மொத்தத்தில் யாழானது பூப்பு மணம் கமழும் பெண்ணை நீராட்டி அணங்கு (அழகு) செய்து வைத்திருப்பது போல் பொலிவுற்றிருந்தது.



வழியில் செல்லும்போது பொருநன் இத்தகைய யாழை மீட்டிப் பாடிக்கொண்டு செல்வான். அப்போது பாலைப்பண் பாடுவது வழக்கம்.

பாடினி பொருநனின் மனைவி. அவளும் அவனோடு சேர்ந்து ஆடுவாள். இங்குள்ள பாடலடிகள் வழிநடை மேற்கொண்டிருந்த பாடினியின் பொலிவைப் புலப்படுத்துகின்றன.

அறல்போற் கூந்தல் பிறைபோல் திருநுதற்    25
கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை மழைக்கண்
இலவிதழ் புரையும் இன்மொழித் துவர்வாய்ப்
பலஉறு முத்திற் பழிதீர் வெண்பல்
மயிர்குறை கருவி மாண்கடை யன்ன
பூங்குழை ஊசற் பொறைசால் காதின்    30
நாண்அடச் சாய்ந்த நலங்கிள ரெருத்தின்
ஆடமைப் பணைத்தோ ளரிமயிர் முன்கை
நெடுவரை மிசைஇய காந்தள் மெல்விரற்
கிளிவா யொப்பி னொளிவிடு வள்ளுகிர்
அணங்கென உருத்த சுணங்கணி யாகத்  35
தீர்க்கிடை போகா ஏரிள வனமுலை
நீர்ப்பெயற் சுழியி னிறைந்த கொப்பூழ்
உண்டென வுணரா உயவும் நடுவின்
வண்டிருப் பன்ன பல்காழ் அல்குல்
இரும்பிடித் தடக்கையிற் செறிந்துதிரள் குறங்கின்    40
பொருந்துமயி ரொழுகிய திருந்துதாட் கொப்ப
வருந்துநாய் நாவிற் பெருந்தகு சீறடி
அரக்குருக் கன்ன செந்நில னொதுங்கலிற்
பரற்பகை யுழந்த நோயொடு சிவணி
மரற்பழுத் தன்ன மறுகுநீர் மொக்குள்    45
நன்பக லந்தி நடையிடை விலங்கலிற்
பெடைமயி லுருவிற் பெருந்தகு பாடினி

அவள் கூந்தல் ஆற்றுமணல் படிவுபோல் நெளிநெளியாக இருந்தது நெற்றி பிறைபோல் இருந்தது. புருவம் கொல்லும் வில்லைப்போல் வளைந்திருந்தது எனினும் கடைக்கண்ணில் மழைபோல் உதவும் கொழுமை இருந்தது. வாய் இலவம் பூவின் இதழ்போல் சிவந்திருந்தது. அதிலிருந்து இனிய சொற்கள் மலர்ந்தன. வெண்பற்கள் முத்துக் கோத்தாற்போல் இருந்தன. பல்வரிசை பழிக்க முடியாதவாறு ஒழுங்காக இருந்தது. காதுக்குப் பாரமாகக் குழை ஊசலாடிக் கொண்டிருந்தது. குழை மயிர் வெட்டும் கத்தரிக்கோல் போலக் காதில் தொங்கியது. அவளது நாணம் காண்போரை அழித்துக் கொண்டிருந்தது. அதற்காகவோ, அதனாலோ அவளது கழுத்து ( எருத்து ) குனிந்திருந்தது. பருத்த தோள் வளைந்தாடும் மூங்கிலைப் போல் இருந்தது. முன்கையில் பொசுங்கு மயிர்கள் முடங்கிக் கிடந்தன. மென்மையான விரல்கள் மலையில் மலர்ந்த காந்தள் மலர் போன்றவை. விரலில் ஒளிரும் நகம் கிளியின் வாயைப் போல் குழிவளைவு கொண்டது. கிளியின் வாயைப் போல் சிவந்தும் இருந்தது. நெஞ்சிலே பொன்னிறப் பொலிவு இருந்தது. ஈர்க்கும் இடை நுழைய முடியாதபடி மார்பகங்கள் இணைந்திருந்தன. அவை எடுப்பான மார்பகங்கள். வயிற்றிலிருந்து கொப்பூழ் தண்ணீர் சுழலும் சுழிபோல் இருந்தது. அசைந்தாடும் இடை உண்டோ என்று எண்ணும்படி இருந்தது. அல்குல் துணியின் மேல் வைரமணிக் கோவை (காழ்) இருந்தது. யானைக்கு இரண்டு துதிக்கை இருப்பதுபோல் கால் தொடைகள் காலில் பொருந்தி ஒழுகும் மயிர். இளைப்பு வாங்கும் நாயின் நாக்கைப்போல் மென்மையான காலடிகள். அரக்கை உருக்கி வைத்திருப்பது போன்று பொடிசுடும் செந்நிலத்தில் அவள் ஒதுங்கி ஒதுங்கி நடந்து செல்கிறாள். அப்போது பருக்கைக் கற்கள் தன்னை மிதிக்கிறாளே என்று அவளுக்குப் பகையாகிக் காலில் உருத்துகின்றன. அந்தத் துன்பத்தோடு சேர்ந்து அவளது காலடியில் நீர்க்கொப்புளங்கள் போட்டுவிடுகின்றன. அவை கானல் நீரின் பழங்கள் போல் உள்ளன. அதனால் அவளுக்காக அவர்களின் குழு நண்பகல், அந்தி வேளைகளில் நடந்து செல்வதில்லை. காலை வேளைகளில் பெண்மயில் போல் ஆடாமலும், அலுங்காமலும் பதனமாக நடந்து சென்றனர்.

யாழின் சிறப்பை எடுத்துரைக்கும் போதும் பாதாதி கேசம் பாடினியின் அழகை கூறும் பொழுதும் அழகான உவமைகள் கற்பித்து கூறியிருப்பது அறிந்து மகிழ தக்கது.

ஆற்றுப்படுத்துதல்

கோடியல் தலைவ, உன் சுற்றத்தார் அடித்துத் தின்னும் பசியால் வருந்துகின்றனர். அந்த நீண்ட நாள் பசியைப் போக்க விரும்பினால் காலம் தாழ்த்தாமல் நான் சொல்லும் இடத்திற்குச் செல்ல எழுக ! வாழ்க! என்று ஆற்று படுத்தும் போது

கரிகாற் பெருவளத்தானின் விருந்தோம்பலை இவ்வாறு கூறுகிறார்…

கரிகாற் பெருவளத்தானின் அரணமனை வாயிலுக்குள் பரிசிலர் நுழைந்து வேண்டுவன சொல்ல முற்படும் போதே அவர்களை பேணத் தொடங்கி விடுகிறான் என்கிறார். அன்றியும்,

கேளிர் போலக் கேள்கொளல் வேண்டி
வேளாண் வாயில் வேட்பக் கூறிக்       75
கண்ணிற் காண நண்ணுவழி இரீஇப்
பருகு அன்ன அருகா நோக்கமொடு
உருகு பவைபோ லென்பு குளிர்கொளீஇ
ஈரும் பேனும் இருந்திறை கூடி
வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த     80
துன்னற் சிதாஅர் துவர நீக்கி

அவன் எனக்கு உறவினன் அல்லன். என்றாலும் என்னை உறவு கொள்வதற்காக விரும்பி வந்தான். வேளாண் வாயிலுக்கு வந்து எங்களை வரவேற்றுப் பலர் முன்னிலையில் பலரும் விரும்புமாறு எங்களைத் தன் நண்பர்கள் என்று கூறிக்கொண்டான். பலரும் காணுமாறு தான் விரும்பிய இடத்தில் எங்களை இருக்கச் செய்தான். சற்றும் குறையாத ஆசையோடு எங்களை விழுங்கிவிடுவது போல் பார்த்தான். எங்களது துணிமணிகளில் ஈரும் பேனும் கூடு கட்டிக் கொண்டு வாழ்ந்தன. வியர்வையால் நனைந்ததைத் துவைத்து உடுத்தாமையால் விளைந்த பலன் இது. கிழிந்துபோயிருந்த அதனையும் வேறு நூல்கொண்டு தைத்து உடுத்தியிருந்தோம். புத்தாடை நல்கிப் பழைய ஆடைகளை முற்றிலுமாகக் களையச்செய்தான் என்கிறார்.
மேலும்
……
றீற்றா விருப்பிற் போற்றுபு நோக்கிநும்
கையது கேளா அளவை ஒய்யெனப்
பாசி வேரின் மாசொடு குறைந்த
துன்னற் சிதாஅர் நீக்கித் தூய
……
பொருந! கரிகாலன் காலடி நிழற்பகுதிக்குச் செல்வீராயின்பசு அப்போது போட்ட கன்றை நாவால் நக்கித் தெம்பு ஊட்டுவது போல, அவன் உங்களை விரும்பிப் போற்ற முனைவான்.

கூனிக் குயத்தின் வாய்நெல் லரிந்து
சூடுகோ டாகப் பிறக்கி நாடொறும்
குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை
கடுந்தெற்று மூடையின் இடங்கெடக் கிடக்கும் 245
சாலி நெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையுட் டாகக்
காவிரி புரக்கு நாடுகிழ வோனே

கரிகாலன் வெற்றிவேல் வேந்தனாகப் பகைமன்னர் நடுங்க ஆட்சி புரிந்துவந்தான். பகல் தரும் சூரியன் போல் அறத்தையும் தோழமையையும் பரப்பிக்கொண்டு ஆண்டுவந்தான்.

இப்படி கரிகாற் பெருவளத்தானின் கொடை மற்றும் வீரம் பற்றி பேசுகிறது பாடல்.

மேலும்

முல்லை நிலத்தில் முல்லைப் பூக்கள் கரிந்து போகவும், மலைகள் தீப்பற்றி எரியவும், மலையருவிகள் வறண்டுபோகவும், மேகத் தொகுதி கடல்நீர் மொண்டுசெல்வதை மறந்துபோகவும் பெரியதோர் வறட்சி எய்திய காலத்திலும் காவிரியில் வெள்ளம் வரும். நறை, நரந்தம், அகில், ஆரம் முதலான மரங்களைக் கருவாகக் கொண்டு சுமந்துவந்து காவிரித்தாய் துறைகண்ட இடங்களிலெல்லாம் கருவுயிர்த்துச் செல்வாள். நுரை பொங்க ஓசையுடன் காவிரி பாயும்போது மகளிரின் புனலாட்டு நிகழும். உழவர் கூனியிருக்கும் அரிவாளால் வயலில் நெல் அறுக்கவும் கட்டுக் கட்டிக் களத்தில் மலைபோல் குவிக்கவும், குறைவில்லாத நெற்குப்பையை மூட்டைகளாகக் கட்டி ஆங்காங்குள்ள பாதுகாக்கும் இடமெல்லாம் கிடத்தி வைக்கவும், சாலி என்னும் நெல் சிறை வைக்கப்பட்டுக் கிடக்கும் பாதுகாப்பு மிக்க வேலிதான் காவிரி புரக்கும் நாடு. ஒருவேலி நிலத்தில் ஆயிரம் மூட்டை நெல் விளைச்சல் காணும் வளமுள்ளதாகக் காவிரியாறு அந்தாட்டைப் புரந்துவந்தது. அந்த நாட்டை ஆளும் உரிமை பூண்டவன்தான் சோழன் கரிகாற் பெருவளத்தான்.

என்று காவிரி ஆற்றின் வளம் சொல்லி முடிகிறது பெருநறாற்றுப்படை.

மனத்தில் பெரும் ஏக்கத்தை விதைத்து…

எங்கே அந்த காவிரியாறு, எங்கே அந்த வளம். இன்று மழையில்லாமல் நீரில்லாமல் வறண்டு, விவசாயிகளின் மரணம் நிகழ்கையில் எவ்வளவு துயரங்கள்…..

இயற்கையினின்று வெகுதூரம் தகர்ந்து வந்துவிட்ட நம் வாழ்க்கை முறையை மீண்டும் புதுப்பிப்போம். இனிவரும் தலைமுறைகள் நலம் வாழ……பிரார்த்தித்தப்படி

அடுத்த பதிவுடன், விரைவில்..

அன்புடன்
உமா