Tuesday 12 June 2018

ஐங்குறுநூறு – பாலை 2





பாலை நிலப் பாடல்களில் அடுத்த பத்து

வரவுரைத்த பத்து

பிரிந்து சென்ற தலைமகன் மீண்டு வருதலை மையமாகக் கொண்டு அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி வரவுரைத்த பத்து. கடுமையான காட்டுப் பகுதியை தாண்டி தலைவன் திரும்பி விட்டான் நீ உன் கவலைகளை ஒழிப்பாயாக என்று தோழி, தலைவியிடம் கூறுவதாக அமைந்துள்ளன பாடல்கள்.

குரவ மலர மரவம் பூப்பச்
சுரனணி கொண்ட கானங் காணூஉ
அழுங்குக செய்பொருட் செலவென விரும்பிநின்
அங்கலிழ் மாமை கவின
வந்தனர் தோழிநங் காத லோரே.

குரவம் பூ மலர்ந்து மரவம் பூ பூத்து வழியெல்லாம் அழகுடன் திகழும் காட்டினைக் கண்டு, தாம் கூறிச் சென்ற வேனிற் காலம் வந்து விட்டது என்றென்னி மேலும் பொருள் தேட செல்வதை விட்டு உனது அழகு ஒழுகும் மாமை நிறம் மேலும் பொலிவு பெற அவர் வந்துள்ளார்
எனத் தலைவன் வரவைக்கூறுவதாய் அமைகிறது இப்பாடல்.

முன்னிலைப்பத்து

தலைவன், தலைவி, தோழி ஆகியோர் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் முன்னிலைப்படுத்திக் கூற்று நிகழ்த்துவர். இவ்வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி முன்னிலைப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

கணமா தொலைச்சித் தன்னையர் தந்த
நிணவூன் வல்சிப் படுபுள் ளோப்பும்
நலமா ணெயிற்றி போலப் பலமிகு
நன்னல நயவர வுடையை
என்னோற் றனையோ மாவின் றளிரே.

மான் கூட்டத்தைக் கொண்று தன் உடன்பிறந்தோர் கொண்டு வந்து தரும் இறைச்சியைக் காய வைத்துக் கொண்டு அவ்வுணவைக் கவர வரும் பறவைகளை விரட்டும் தலைவி என்னவள். அவளது விரும்புதற்குரிய நல்ல அழகை நீ பெற்றிருக்கிறாய். அதற்கு என்ன நோன்பு நோற்றனையோ மாந்தளிரே என பிரிந்து சென்றத்தலைவன் மீண்டு வரும்போது வழியில் கண்ட மாந்தளிரிடம் தலைவியின் நினைவோடு கூறுவதாய் அமைந்துள்ளது இப்பாடல். இப்படி வழியில் காணும் பொருட்காளெல்லாம் தலைவியின் நினைவூட்டுவதாக பமைந்த பாடல்கள் சங்க இலக்கியத்தில் பல உள்ளன.

மகட்போக்கிய வழித் தாயிரங்கு பத்து

நாடொறுங் கலிழு மென்னினு மிடைநின்று
காடுபடு தீயிற் கனலியர் மாதோ
நல்வினை நெடுநகர் கல்லெனக் கலங்கப்
பூப்புரை யுண்கண் மடவரற்
போக்கிய புணர்த்த வறனில் பாலே.

தினமும் நான் கலங்குகின்றேன். காட்டுத் தீயின் நடுவில் மாட்டிக்கொண்டவர் கலங்குவதைப் போல் நான் கலங்குகின்றேன். பூப்போன்ற மையிட்ட கண்கொண்டவளாகிய என்மகளை உடன்போக செய்த அறனில்லாத விதிதான் நல்வினைச் செய்தோரைக் கலங்கும் படி செய்கிறது.

இங்கு ஊழ்வினை, விதி என்பதில் மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பதை அறியமுடிகிறது.

மள்ளர் கொட்டின மஞ்ஞை ஆலும்
உயர் நெடும் குன்றம் படுமழை தலைஇச்
சுர நனி இனிய ஆகுக தில்ல,
அற நெறி இதுவெனத் தெளிந்த என்
பிறை நுதல் குறுமகள், போகிய சுரனே.

பாலை நிலத்து மறவர்களின் கொட்டுகள் முழங்கும் ஒலியைக்கேட்டு மயில்கள் நடனம் ஆடும் உயர்ந்த மலைகளில்,  பெரிய மழைக் கொட்டி, காட்டுப் பாதைகள் இனிமையாக ஆகட்டும். எது அறம் என்று தெளிவாக உணர்ந்த, பிறையைப் போன்ற நெற்றியை உடைய என் சிறிய மகள் போகும் பாதைகள் அவை.
இப்பாடலில் தாய்மையுணர்வு மிக அழகாக வெளிக்காட்டப் பட்டுள்ளது. தன்னை விட்டுச் சென்றாலும் மகள் அத்தாய்க்கு சிறியயவளாகவே தெரிகிறாள். அவள் செல்லும் வழி இனிமையாக இருக்கட்டும் என்று வாழ்த்துகிறாள்.

உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து

உடன்போக்கு நிகழ்கையில் தலைவன், தலைவி தங்களுக்குள்ளும் இவர்களிடத்துக் காண்போரும் பிறரும் கூற்றுக்கள் (உரையாடல்) நிகழ்த்துவர். இவ்வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி உடன்போக்கின்கண் இடைச்சுரத்து உரைத்த பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

பைங்காய் நெல்லி பலவுடன் மிசைந்து
செங்கால் மராஅத்த வரிநிழல் இருந்தோர்
யார்கொல் அளியர் தாமே வார்சிறைக்
குறுங்கால் மகன்றில் அன்ன
உடன்புணர் கொள்கைக் காத லோரே?

(பைங்காய் நெல்லி = பசிய நெல்லிக்காய்; மிசைந்து = தின்று; மராஅத்த = மரத்தின்; குறுங்கால் = குறுகிய கால்களை உடைய; மகன்றில் = இணைபிரியாத ஒருவகைப் பறவை) அளியர் = இரக்கத்துக்குரியவர்)

நீண்ட சிறகுகளையும் குறுகிய கால்களையும் உடைய இணை பிரியாத மகன்றில் பறவைகள் போலக் இணைப்பிரியாதவர்காளாய் இருக்கும் நீ யாரோ? பசிய நெல்லிக்காய்களைத்தின்று அரிதான மரநிழலில் அமர்ந்திருக்கும் நீங்கள் உடன் போக்கில் வந்தவர்களோ? இரக்கத்துக்குரியவர்களாய் உள்ளீர். என வழிபோவோர் உடன் போக்கின் போது தலைவனும் தலைவியையும் கண்டு சொல்வதாய் அமைந்துள்ளது இப்பாடல்.

மறுதரவுப் பத்து

உடன்போக்கில் ஈடுபட்ட தலைவனும் தலைவியும் மீண்டு வருதலும் மீண்டு வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தலும் உண்டு. இவ்வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி மறுதரவுப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை
அன்புடை மரபின்நின் கிளையோடு ஆரப்
பச்சூன் பெய்த பைந்நிண வல்சி
பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ
வெஞ்சின விறல்வேல் காளையொடு
அஞ்சில் ஓதியை வரக்கரைந் தீமே!

(மறுவில் தூவி = குற்றமற்ற இறகு; கிளை = சுற்றம்; ஆர = உண்ண; பச்சூன் பெய்த பைந்நிண வல்சி = இறைச்சி கலந்த உணவு)
என்ற பாடலில், உடன்போன தலைவனும் தலைவியும் மீண்டு வர வேண்டும்; அதை அறிவிக்கக் காக்கை கரைய வேண்டும் எனச் செவிலி வேண்டும் செய்தி இடம் பெற்றுள்ளது.

குற்றமற்ற இறகுகளைக் கொண்ட காக்கையே நீ உன் அன்புகொண்ட மரபினை உடைய சுற்றத்தாருடன் பசியாற உண்ண செவ்விய இறச்சி கலந்த உணவை பொற்கலத்திலிட்டுத் தருவேன். நீ வீரமிக்க காளையான தலைவன் அழகிய கூந்தலையுடைய என்மகளை அழைத்துக் கொண்டு வருகிறான் என்று அரைவாயாக!
இப்பாடலில் காககை கரைதல் புதியவர் வருகையை சொல்லும் என்ற நம்பிக்கையும், நான் இம்முறைமைச் செய்கிறேன் நீர் இதைச் செய் என்று வேண்டும் பழக்கமும் இருந்ததை அறியமுடிகிறது.

இவ்வாறு ஐந்நில மரபுகளையும் மிக அழகாக விளக்கும் வகையிலும், அக்கால மக்களின் வாழ்வியல் முறை, பழக்கவழக்கம், அறன் என அவர் வகுத்தது மற்றும் அந்நிலங்களில் இயற்கையோடு அம்மக்களின் வாழ்வு இருந்தமையையும் முதல் உரி மற்றும் கருப்பொருள் கொண்டு கிட்டத்தட்ட ஒவ்வொரு பாடலும் ஒரு நாடக காட்சியை நம் காண்முன்னே கொண்டுவரும்படியாக அமைந்த ஐங்குறுநூற்றுப் பாடல்களை சற்று சுவைத்ததில் மிகுந்த மகிழ்ச்சியுடன்
அடுத்ததாக பதிற்றுப்பத்தின் நயம் வியக்கும் ஆவலுடன் விரைவில்

அன்புடன்
உமா


1 comment: