Monday 25 June 2018

பதிற்றுப்பத்து – நான்காம் பத்து.


நான்காம் பத்து
பாடப்பட்டோன்: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்
பாடியவர்: காப்பியாற்றுக் காப்பியனார்

முதலில் பத்து பாடல்களில் கூறப்படும் நிகழ்வுகளை ஒருங்கே கொண்ட பதிகத்தைப் பார்ப்போம்,

பதிகம்

ஆராத் திருவிற் சேர லாதற்கு
வேளாவிக் கோமான்
பதுமன் தேவி ஈன்ற மகன்முனை
பனிப்பப் பிறந்து பல்புகழ் வளர்த்(து)
ஊழின் ஆகிய உயர்பெரும் சிறப்பின் 5
பூழி நாட்டைப் படைஎடுத்துத் தழீஇ
உருள் பூங் *கடம்பின் பெருவாயில் நன்னனை*
நிலைச்செருவி னால்தலை யறுத்(து)அவன்
பொன்படு வாகை முழுமுதல் தடிந்து
குருதிச் செம்புனல் குஞ்சரம் ஈர்ப்பச் 10
செருப்பல செய்து செங்களம் வேட்டுத்
துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றிக்

களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலைக்
காப்பியாற்றுக் காப்பியனார் பாடினார் பத்துப்பாட்டு.

அவைதாம்: கம்ழகுரற் றுழாய், கழையமல் கழனி, வரம்பில் வெள்ளம், ஒண்பொறிக் கழற்கால், மெய்யாடுபறந்தலை, வான்மயங்கு கடுந்தார், வலம்படு வென்றி, பரிசிலர்வெறுக்கை, ஏவல் வியன்பனை, நாடுகானவிர்சுடர். இவை பாட்டின் பதிகம்.

பாடிப்பெற்ற பரிசில்: நாற்பதுநூறாயிரம் பொன் ஒருங்கு கொடுத்துத் தான் ஆளவ்திற் பாகங்கொடுத்தான் அக்கோ.
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.

கருத்து

இந்தப் பத்தின் பாடல்-தலைவன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்.
இவன் தந்தை சேரலாதன்.
தாய் பதுமன் என்பானின் மகள்.
போர்முனையை நடுங்கச் செய்வதற்கென்றே பிறந்தவன்.
போர்முனையால் புகழை வளர்த்துக்கொண்டவன்.
பெற்றோர் ஊழ்வழியே இவனுக்குச் சிறப்பு வந்தது.
படையுடன் சென்று பூழி நாட்டைத் தாக்கி அந்த நாட்டை நட்பு-நாடாக ஆக்கிக்கொண்டான்.
கடம்பின் பெருவாயில் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த நன்னன் ஆற்றலை அறுத்தெறிந்தான். அவன் காவல்மரம் வாகையை வெட்டி எறிந்தான்.
ஓடும் இரத்தம் யானையையே இழுக்கும்படிப் பல போர் செய்து செங்கள வேள்வி செய்தான்.
வாடிய குடிமக்களின் வளத்தைப் பெருக்கினான். இவன்மீது 10 பாடல்களைப் பாடியவர் காப்பியாற்றுக் காப்பியனார்.
களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் இருபத்தையாண்டு வீற்றிருந்தான். 
பாடிய புலவருக்கு 40 நூறாயிரம் (40,00,000) பொன் பரிசாகத் தந்தான். அத்துடன் தன் ஆட்சி வருவாயில் ஒரு பகுதியைக் கொடுத்தான். 25 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்.

பாடல்களைச் சுருக்கமாக காண்போம்.

முதல் பாடல்  - கமழ்குரல் துழாய் –

நறுமணம் வீசும் பூங்கொத்துக்களையுடைய துளவமாலையை அணிந்த திருமாலினது திருவடிகளைப் புகழ்ந்து உண்ணா நோன்பிருந்து வணங்குவர். தனித்தனிப் பூக்களாக எடுத்துத் தொடுக்கப்படாது கொத்துக் கொத்தாக வைத்துத்  தொடுக்கப்படும்  சிறப்பும்,  மிகச் சிறிதாகியதும் மணங்கமழும் மாண்புமுடைய துழாயை, துளசியை கமழ்குரற் றுழாய் எனச் சிறப்பித்தமையால், இப் பாடல் இப் பெயர் பெற்றது. இப்பாடலில் உண்ணாநோன்பிருந்து திருமாலை வழங்கும் வழக்கம் காட்டப் பட்டிருக்கிறது. மேலும்

மணிநிற மையிரு ளகல நிலாவிரிபு
கோடுகூடு மதிய மியலுற் றாங்குத்
துளங்குகுடி விழுத்துணை திருத்தி முரசுகொண்
டாண்கட னிறுத்தநின் பூண்கிளர் வியன்மார்பு

நீல நிற மணியின் வண்ணம் கொண்ட கரிய இருளானது அகலும் படி கோடு கூடு மதியம் என்பது -  பிறை நிலாவின் இரு கோடுகளும் கூடும் போது முழுநிலவாகும். இம்முழு நிலவு இருளகற்றி   ஒளியைச்   சொரிந்து  செல்வதுப் போல,  இச் சேரமானும்   குடிமக்களுக்கு   உண்டாகியிருந்த   துன்பங்களை எல்லாம்    நீக்கி,அருளைச்     செய்து,     திருமாலை     வழிபடுதல்      முதலிய நல்லொழுக்கம் நிலவும் படிச்செய்தான், எனவும்
இவன் மனைவி வானத்து மகளிருள் செம்மீன் (அருந்ததி) போன்ற கற்புடையவள். அது அறம்சால் கற்பு. தழைத்த கூந்தலை உடையவள். அந்தக் கருங்கூந்தலுக்கு விளக்குப் போல நெற்றியைக் கொண்டவள். வயிற்றுக் கொப்பூழ் வரையில் தொங்கும் பொன்னாலாகிய இழை (தாலி ஆகலாம்) அணிந்தவள் மற்றும் இவன் படை வீரர்கள் புறமுதுகிட்டு ஓடும் பகையோரின் மேல் போர்க்கருவிகளை எய்யாத அறம் கொண்டவர்கள் எனவும் பலவாறு இச்சேரமன்னனின் திறம் போற்றப்படுகிறது இப்பாடலில்.

இரண்டாவதுப்பாடல் - கழையமல் கழனி

மன்னனின் பல குணங்களையும் உடன் எண்ணி, அவற்றுள் பொறையுடைமையை மிகுதிப்படுத்தி இந்தப் பாடல் கூறுகிறது.
முடந்தை   நெல்லின்    கழையமல் கழனி  - வளைந்த    கதிர்களையுடைய    நெல்லின்   மூங்கில்     போலும் தாள்கள்  செறிந்த கழனிகள் பொருந்திய; பிழையா விளைச்சலைக் கொண்ட நாடு, அப்படிப்பட்ட நாடுகளை தன்னகப்படுத்துக்கொண்டவன் என்றாலும் தன்னைப் பழிக்கும் பகைவரையும் சினக்காது பொறையுடையவன் எனபலவாறு சிறப்பிக்கப்படுகிறான் சேரமன்னன்.

வரம்பில் வெள்ளம்

கொடி கட்டிய தேரில் செல்லும் தலைவனே 
உன்னைப் போரில் எதிர்த்து நிற்கும் மன்னர்கள் உன்னை வெறுக்கின்றனர்.

வரம்பு இல்லாத வெள்ளம் போன்று, நீர் நிலைகளுக்கு கரையுண்டு ஆனால் இவன் படை வரம்பில்லாது அதிக எண்ணிக்கை கொண்டது இவன்  யானைப் படை. அவற்றின்  கழுத்தில் வார்ப்பு-மணியும் தென்னை போன்று பருத்த கால்களும் கொண்டவை. அவை பகைவரின் காவல் மரங்களை அணைத்திழுத்து அளிக்கின்றன. விரிந்து கிடக்கும் நீர்த்துறைகளைக் கலக்குகின்றன. பகைநாடே மூழ்கும்படி அவை செல்கின்றன.  இப்படி சேரனின் படைச்சிறப்புக் கூறப்படுகிறது.

ஒண்பொறிக் கழற்கால்

ஒள்ளிய  பொறிகள் பொறித்துள்ள வீரகண்டை யணிந்த கால்களை உடைய பகைவர் உன்னைக் கண்டால் அஞ்சி ஒடுங்குவர். போரில்  தான் செய்த  அரிய  செயல்களைத் தம் கழலில் பொறித்துக் கொள்ளுதல் பண்டையோர் மரபு. இப்படி அரியச் செயல் புரிந்தவர்காளை வென்றவன் என இவன் சிறப்புக் கூறப்படுகிறது.

மெய்யாடு பறந்தலை

தலை துண்டிக்கப்பட்டு, வேறாக வெட்டப்பட்ட உடல் ஆடும் போர்க்களம் காண்டவன் இச்சேரன் என இவன் வெற்றிச் சிறப்பும் போரின் கடுமையும் கூறுகிறது இப்பாடல்

வாண்மயங்கு கடுந்தார்

வெட்டப்பட்டுக் கிடக்கும் பனை மரம் போன்று கைத்துண்டிக்கப் பட்ட யானைகள் வீழ்ந்துக் கிடக்கும் களத்தில் வாட்படைகள் தங்களுக்குள் பொருதும், வீழும் பிணங்களைத் தின்ன கழுகும் பருந்தும் வரும் போர்காளம் என்று கூறுயவாறு இவன் வெற்றிச்சிறப்பும் போர்க்காள கடுமையும் கூறுகிறது இப்பாடல்.

வலம்படு வென்றி

வான்  தோய்  நல்லிசை - வான்  புகழ உயர்ந்த நல்ல புகழானது;  
உலகமொடு   உயிர்ப்ப   -  உலக  முள்ளளவும் தான் உளதாகுமாறு  நிலைபெற; துளங்கு குடி திருத்திய வலம்படு வென்றியும் -   வீழ்ந்த   குடியினரை   உயரப்பண்ணிய   வெற்றி  பெறுதற்குக் காரணமான  செய்கையும் உடையவன் என சேரனது பல குணங்களையும், செல்வத்தையும் போற்றிக் கூறுகிறது இப்பாடல்.

பரிசிலர் வெறுக்கை

பரிசிலர் - தன்னிடம் பரிசு பெற்றவரும் பாணரும் சிறப்பாக வாழும் படி செய்பவன் என்றவாறு அவன் கொடைச்சிறப்புக் கூறுகிறது இப்பாடல். பாணர் பாக்கள் பாடி பரிசு பெறும் புலவர்களுக்கு ஒப்பாகமாட்டார் என்பதால் பாணரும் பரிசிலரும் என் தனித்து கூறுகிறார் ஆசிரியர்.

ஏவல் வியன்பணை

இடிப் போல் முழக்கமும் படைவீரரை பகையிடத்தே மேலும் மேலும் முன்னேறிச் செல்லுமாறு எவக் கூடியதுமான முரசினைக் கொண்டவன் என கூறி அவன் வெற்றிச் சிறப்பும் கொடைச் சிறப்பும் கூறுகிறது இப்பாடல்.

நாடுகாண் அவிர்சுடர்

நன்னனை வென்றது, நேரிமலையில் வெற்றிவிழா கொண்டாடியது, விறலியர் நேரிமலை விழாவுக்குச் சென்று பரிசில் பெறலாம் என்றது – ஆகிய செய்திகள் இப்பாடலில் கூறப்பட்டுள்ளன. நாட்டிலுள்ளோரும் காணும் படி காட்டில் பெரிதாக எரியும் தீயினைப் போன்ற சினத்தை கைவிட்டவன், அவனிடம் பயமின்றி நீர் போனால் தங்கம், யானை போன்ற பரிசில்களைப் பெறாலாம் என ஆற்றுப் படுத்தி அவன் கொடைச் சிறப்பு கூறுகிறது இப்பாடல்.

பதிற்றுப்பத்தின் பிற பாடல்களை ஒரு சிறிய இடைவெளிக்குப்பிறகு, விடுப்பு முடிந்ததும் கூடிய விரைவில்

அன்புடன்
உமா 





Friday 22 June 2018

பதிற்றுப் பத்து - மூன்றாம் பத்து.


இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன். இவனது வரலாற்றை

அடுநெய் ஆவுதி, கயிறு குறுமுகவை, 
ததைந்த காஞ்சி, சீர்சால் வெள்ளி,
கான் உணங்கு கடுநெறி, காடுறு கடுநெறி,
 
தொடர்ந்த குவளை, உருத்துவரு மவிர் நிறை,
 
வெண்கை மகளிர், புகன்ற ஆயம்
என்ற தலைப்புக்களில் இந்த மூன்றாம் பத்துச் சிறப்பிக்கிறது. இம்மூன்றாம் பத்தின் ஆசிரியர் பாலைக் கௌதமனார்.

முதற் பாடலில்
குட்டுவன் குட்ட நாட்டிற்கு உரியவன். இவன் உம்ப காட்டில் ஆட்சி செலுத்தினான். தன் அறிவு ஒத்த முதியவரின் வழிகாட்டுதலின்படி ஆட்சி செய்தான். தன் நாட்டில் உள்ள நிலத்தின் எல்லையை அவரவருக்கு உரியவாறு வகுத்து ஒழுங்கு செய்தான். இவனது நாட்டில் வேள்வித் தீயின் புகையையும், தம்மை நாடி வருபவர் அளவில்லாது உண்ணச் சமைக்கும் நெய் மணத்தையும் கடவுளரும் விரும்புவர் என்பது குறிக்கப்பட்டுள்ளது. இதனை,

ஊனத்து அழித்த வால்நிணக் கொழுங்குறை
குய்இடு தோறும் ஆனாது ஆர்ப்ப
கடல்ஒலி கொண்டு செழுநகர் வரைப்பின்
நடுவண் எழுந்த அடுநெய் ஆவுதி
இரண்டுடன் கமழும் நாற்றமொடு வானத்து
நிலைபெறு கடவுளும் விழைதகப் பேணி(பாடல்-1)

என்ற பாடல் அடிகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

இரண்டவது பாடலில்

பல்யானைச் செல்கெழு குட்டுவனின் முன்னோர் ஆட்சிச் சக்கரம் அறநெறி பிழையாது தடையின்றி உருளும் வகையில் ஊழி ஊழியாக நல்லாட்சி வுரிந்துவந்தனர். அவர்களின் ஆட்சியில் தீது புறந்தள்ளப்பட்டது. நல்லனவற்றை மிகுதியாகச் செய்தனர். கடல்வளமும், மலைக்காட்டு வளமும் இவர்களின் நல்லாட்சிக்கு உருதுணையாக உதவி புரிந்தன. யாரும் யாரையும் துன்புறுத்தாவண்ணணம் பார்த்துக்கொண்டனர். மாற்றாரின் பொருளை மக்கள் விரும்பவில்லை. மாசற்ற அறிவினலாய், செம்மை திறம்பாமல் வாழ்ந்துவந்தனர். தம்மை விரும்பியவர்களைப் பிரியாமல் அவர்களுக்கு உறுதுணையாக வாழ்ந்துவந்தனர். உணவுப் பொருள்களைப் பகுத்துத் தந்து உண்டு மகிழ்ந்தனர். இதனால் மூத்த யாக்கையோடு பிணி இல்லாமல் ஊழி ஊழியாக வாழ்ந்தனர் என்பதை அறிகிறோம்.

அகப்பா என்பது பகைவரின் கோட்டை. அக்கோட்டை மிகுந்த காவலை உடையது. அது உம்பற் காட்டுப் பகுதியில் இருந்தது. குட்டுவன் அதனைத் தன் படை வலிமையால் பகைவர்களை அழித்து வெற்றி பெற்றான். இந்த வெற்றிச் சிறப்பினை

அண்ணலம் பெருங் கோட்டகப்பா எறிந்த
பொன்புனை உழிஞை வெல்போர்க் குட்டுவ (பாடல் -2)

என்ற பாடல் அடிகள் தெரிவிக்கின்றன. மேலும்

பொன்செய் கணிச்சித் திண்பிணி யுடைத்துச்
சிரறுசில வூறிய நீர்வாய்ப் பத்தற்
கயிறுகுறு முகவை மூயின மொய்க்கும்
ஆகெழு கொங்கர் நாடகப் படுத்த

கயிறு   குறு முகவை - நீண்ட கயிறு கட்டிச் சேந்தப்படும் குறுகிய முகவைகளை: மூயின  மொய்க்கும்  -  நெருங்கச் சூழ்ந்து மொய்த்து நிற்கும்;
ஆகெழு கொங்கர் நாடு அகப்படுத்த – ஆனிரைகளையுடைய கொங்கரது  நாட்டைவென்று  தன்னாட்டோடு அகப்படுத்திக் கொண்ட;
வேல்கெழு  தானை  வெருவரு தோன்றல் - வேலேந்திய தானையால் பகைவர்க்கு அச்சத்தை விளைவிக்கும் தோன்றலே!
பொன்     என்றது  இரும்பினை. இரும்பைக் கரும்பொன் என்றும்   வழங்குவர். இவ்வாறு குட்டுவன்  கொங்குநாட்டை வென்ற சிறப்பு கூறப்பட்டுள்ளது.

நாடு வறட்சியால் வாடிய போதும், தன்னை நாடி வரும் பாணர், கூத்தர் முதலான பரிசிலருக்கு அவர்கள் உள்ளம் மகிழப் பசியை நீக்கி, பொன்னாலான அணிகலன்களை வழங்கினான் என்று பல்யானைச் செல்கெழு குட்டுவனின் கொடைத் திறத்தை இப்பத்து விவரிக்கிறது.

நிலம், நீர், காற்று, தீ, வான் என்ற ஐந்தையும் அளந்து முடிவு கண்டாலும் குட்டுவனின் அறிவாற்றலை அறிய முடியாது எனக் கீழ்வரும் பாடல் அடிகள் விளக்குகின்றன.

நீர்நிலம் தீவளி விசும்போ டைந்தும்
அளந்துகடை யறியினும் அளப்பருங் குரையைநின்
வளம் வீங்கு பெருக்கம் இனிதுகண் டிகுமே (பாடல்-4)

குட்டுவனின் குதிரைப் படை சென்று  பொருத  வயல்கள் கலப்பைகளால் உழ முடியாதனவாய் அழிந்தன. மதம் சொரியும்  தலையும் கடுத்த பார்வையுமுடைய யானைப் படை பரந்து நின்று  பொருத வயல்கள் வளம் இல்லாதழிந்தன. காலாட்படைகள்  நின்று பொருத ஊர்மன்றங்கள்  கழுதை ஏர்  பூட்டிப்  பாழ் செய்யப்பட்டன என்று அவனது பகை நாடு அழிந்ததை காட்டுகிறது அடுத்தப்பாடல்.

சிதைந்தது மன்றநீ சிவந்தனை நோக்கலிற் 
என்று அவன் வெற்றிச்சிறப்பும்

பொய்கை வாயிற் புனர்பொரு புதவின்

என்பதிலிருந்து பொய்கையில் நீர் மேலாண்மைக்காக வாயில்கள் அமைத்திருந்தனர். அதில் கதவுகள் இருந்தன. வயல்களில் மிகுந்த நீர் இருந்தது. அதனால் குவளையும் நெய்தல்லும் பூத்துக்குலுங்கின என்பதையுமறிகிறோம்.

அன்று பகைவர் நாடு யாவரும் விரும்பும் தன்மை உடையதாக இருந்தது. பகைவர் வெற்றி பல கண்டவர். உன் யானைப்படையின் அணிவகுப்பு (புணர்நிரை) அவர்களைத் துண்டுதுண்டுகளாகச் சிதைத்தது. பகைவர் தம் நெஞ்சுரத்தைக் கைவிட்டனர். அவர்களின் குதிரைவீரர்கள், வீரக்கழல் பூட்டிக் கறை படிந்த தம் கால்களை உடையவர்கள், உன்னோடு போரிட்டுத் தோற்ற பின்னர் அம்பு எய்வதையே மறந்துவிட்டனர். வயல்கள் எல்லாம் விளைச்சல் இல்லாத கரம்பைநிலமாக மாறிவிட்டது. உன் நாடோ, கோடையிலும் வறட்சி இல்லாத பேரியாற்று நீர் பாய்ந்து, மக்கள் பூசல் கேளாத நாடாக விளங்குகிறது.    என்று படை நாட்டின் அழிவும் குட்டுவன் நாட்டின் வளனும் உரைத்து போற்றூகிறது இப்பாடல்.

அடுத்தப்பாடலில்
வயலோர வீடு. வாழை மரத்துக்குப் பக்கத்தில் உரல். புது நெல்லைப் போட்டு மகளிர் வளையல் குலுங்க அவல் இடித்துக்கொண்டிருப்பர். வளைந்த கதிர் விட்டு நெல் விளைந்திருக்கும். அந்த வயல்நீரில் மேயும் கொழுத்த அயிரை மீன்களை மேய்வதற்காக நாரைப் பறவைகள் வரும். அங்குள்ள மரங்களில் அமர்ந்து மீனைக் கொத்தவும், நெல்லங்கதிர்களைக் கவரவும் காத்திருக்கும். மகளிர் தம் உலக்கையை வாழைமரத்தில் சேர்த்துச் சாய்த்து வைத்துவிட்டு தம் வறுங்கைகளை (வெண்கை, ஒன்றுமில்லாத வெள்ளைக்கை) வீசி வெண்ணிறக் குருகிகளை ஓட்டுவர்.
ஊர் அழியா விழாக் கோலத்துடன் திகழும். வயிரியர் முதலில் மன்றத்தில் இசைப்பர். பின் தெருவெங்கிலும் பாடிக்கொண்டு செல்வர். இப்படிப்பட்ட அகன்ற நிலப்பரப்பினைக் கொண்டது அந்த நாடு.
இப்படிப்பட்ட நாடு குட்டுவன் படையெடுப்புக்குப்பின் சிதைந்தது எங்கிறது. இங்கும் வயலில் நீ நிறைந்து மீன்கள் வாழ்வதும் காட்டப்பட்டுள்ளது. போர்கள் இவ்வாளவு அழகிய இயற்கை செல்வங்களை அழித்தன என்பதறியும் போது கலக்கமே முன்னிற்கிறது.

ஐந்திணை நிலத்து வேந்தர்களும் (பெருநில மன்னர்), வேளிர்களும் (குறுநில மன்னர்) நடுங்கிப் பாதுகாவலைத் தேடும்படி, குட்டுவன் முரசு முழங்க, தன் படைவீரர்களுக்குப் பெருஞ்சோறு வழங்கினான் என்று படைகளுக்கு பெருஞ்சோறளித்தல் கூறப்பட்டுள்ளது இப்பததாக் பாடலில். இதில் ஐந்து நில வளனும் மக்கள் வாழ்வும் மிக அழகாக குறிப்பிடப்பட்டுள்ளன.

இப்பத்துப் பாடல்களை தொகுத்துக்கூறும் பதிகத்தைப் பார்ப்போம்.

பதிகம்

இமையவரம்பன் தம்பி அமைவர
உம்பற்காட்டைத் தன் கோல் நிறீஇ,
அகப்பா எறிந்து, பகல் தீ வேட்டு,
மதி உறழ் மரபின் முதியரைத் தழீஇ,
கண் அகன் வைப்பின் மண் வகுத்து ஈத்து,
கருங் களிற்று யானைப் புணர் நிரை நீட்டி,
இரு கடல் நீரும் ஒரு பகல் ஆடி,
அயிரை பரைஇ, ஆற்றல் சால் முன்போடு
ஒடுங்கா நல்இசை, உயர்ந்த கேள்வி,
நெடும்பாரதாயனார் முந்துற, காடு போந்த    10
பல் யானைச் செல்கெழு குட்டுவனைப்
பாலைக் கௌதமனார் பாடினார் பத்துப் பாட்டு.       

அவைதாம்: அடு நெய் ஆவுதி, கயிறு குறு முகவை, ததைந்த காஞ்சி, சீர் சால் வெள்ளி, கான் உணங்கு கடு நெறி, காடு உறு கடு நெறி, தொடர்ந்த குவளை, உருத்து வரு மலிர் நிறை, வெண்கை மகளிர், புகன்ற ஆயம்       

பாடிப் பெற்ற பரிசில்:'நீர் வேண்டியது கொண்மின்' என, 'யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டும்' என, பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு, ஒன்பது பெரு வேள்வி வேட்பிக்க, பத்தாம் பெரு வேள்வியில் பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணாராயினார்.  

இமயவரம்பன் தம்பி பல் யானைச் செல் கெழு குட்டுவன் இருபத்தைந்தாண்டு வீற்றிருந்தான்.

இதில் வெற்றிக்கு உதவியாக இருந்த முதியர் குடிமக்களை உறவாக்கித் தழுவிக்கொண்டான். வென்ற நிலப்பரப்பை முதியர்களுக்குப் பிரித்துக் கொடுத்தான் என்றச் செய்தியும் பெறப்படுகிறது.

இங்ஙனம் தன் குலத்து முதியோருக்கு நாட்டைப் பகுத்துக் கொடுத்து ஆளச் செய்யும் வழக்கம் பிற்காலத்துச் சோழ மன்னர் சிலரிடத்தும் இருந்ததென்பது அவர்கள் கல்வெட்டுகளின் மெய்க் கீர்த்திகளால் அறியப்படுகின்றது.

இமயவரம்பன் தம்பி பல் யானைச் செல் கெழு குட்டுவனின் வீரம், கொடை, நாட்டு நலன், மக்கள் வாழ்வு, அக்கால வழக்கங்கள் எனப் பலவற்றை அறிய வழிச்செய்கிறது இப்பத்து,

அடுத்ததாக

களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் பற்றி காப்பியாற்றுக் காப்பியனார் பாடிய நாங்காம் பத்து. இதன் தனிச் சிறப்பு இப்பத்துப் பாடல்களும் அந்தாதி இலக்கியத்தில் அமைந்தவை. முதற் பாட்டின் கடைசி வரியோ, சொல்லோ, சொற்களோ அடுத்தப் பாடலின் முதல் வரியாகவோ, சொல்லாகவோ அமைவது அந்தாதி. தமிழின் முதல் அந்தாதி அமைந்தது பதிற்றுப் பத்தில் தான் என்பது ஆய்வாளர் கருத்து. அற்புதமான இப்பத்தினை அறிவோம் விரைவில்…

அன்புடன்
உமா