Sunday 3 June 2018

ஐங்குறுநூறு - முல்லை 2


முல்லை நிலத்தில் அடுத்த பத்து
பருவங்கண்டு கிழத்தி உரைத்த பத்து.

இது முல்லையுள் பாலைத் தோன்ற அமைந்த பாடல்களின் தொகுப்பு. தலைவன் பிரிவை ஆற்றியிருத்தல் முல்லை. ஆயின் குறித்த பருவம் வந்தும் தலைவன் வராமையால் தலைவி பிரிவுத்துயரால் வாடி கூறுவது இப்பாடல்காளில் காட்டப்பட்டுள்ளது.

வறந்த ஞாலம் தெளிர்ப்ப வீசிக்
கறங்கு குரல் எழிலி கார் செய்தன்றே;
பகை வெங் காதலர் திறை தரு முயற்சி
மென் தோள் ஆய்கவின் மறைய,
பொன் புனை பீரத்து அலர் செய்தன்றே.

நீர் வற்றிய பூமி துளிக்கும் படியாக சுழன்று பெருங்குரலோடு வீசி மேகமானது கார்கால மழையை பெய்தது. பகையை வென்று திறை பெறும் எங்காதலரின் முயற்சி, மென்மையான என் தோளின் மென்மை அழகு மறைந்து பொன் போன்ற பீர்க்கம்பூ போல் பசலை மேவ பிறர் அறியும் படி செய்கின்றதே!
கார்காலம் வந்தாலும் வினைமுடியா நிலையில் தலைவன் வராமையால் தன் பிரிவுத்துயரை தலைவி இப்படிக்கூறுவதாய் அமைந்துள்ளது இப்பாடல்.

அவல்தொறும் தேரை தெவிட்ட, மிசைதொறும்
வெங் குரல் புள்ளினம் ஒலிப்ப, உதுக்காண்,
கார் தொடங்கின்றால் காலை; அதனால்,
நீர் தொடங்கினவால் நெடுங் கண்; அவர்
தேர் தொடங்கு இன்றால் நம்வயினானே.

அவல் என்றால் குளம் அல்லது பள்ளம். கார்காலம் துவங்கி மழையும் பெய்து நீர்நிலைகளெல்லம் நிறைந்து விட்டன. அந்நீர் நிலைகளில் தவளைகள் சத்தம் செய்கின்றன. மிசை என்றால் வானம் அல்லது மேட்டுப்பகுதி, மேலே பறவைகளும் இனிய ஒலி எழுப்புகின்றன. அதோபார் கார்காலம் துவங்கிவிட்டதைப்பார். என் கணவரின் தேர்மட்டும் இன்னும் எம்மை நோக்கித் திரும்பவில்லை, அதனால் நெடிய என் கண்களும் நீர் வடிக்கின்றன.

இப்படி குறித்த பருவம் வரக்காண்டும் தலைவன் வராமையால், பிரிவாற்றா தலைவியின் கூற்றாய் அமைந்துள்ளது இப்பத்து.

கார்காலம் துவங்கி விட்டாலும் குறித்த காலத்தில் தலைவன் வரவில்லையே என தலைவி ஆற்றாதாளாய் வருந்த, காலம் வந்ததால் விரைவில் வந்துவிடுவார் என தோழி ஆற்றுவிக்கும் விதமாய் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுப்பு

தோழி வற்புறுத்த பத்து.

ஏதில பெய்ம் மழை கார் என மயங்கிய
பேதைஅம் கொன்றைக் கோதை நிலை நோக்கி,
எவன் இனி, மடந்தை! நின் கலிழ்வே? நின்வயின்
தகை எழில் வாட்டுநர் அல்லர்,
முகை அவிழ் புறவின் நாடு இறந்தோரே.

ஏதில பெய்ம் மழை – காரணமின்றி மழைப் பெய்வதைக் கண்டு மயங்கி அறியாமை கொண்ட கொன்றை மரமும் மாலை போன்று கொத்து கொத்தாக மலர்கிறது. அதைக்கண்டு, பெண்ணே! நீயும் கார் என நினைத்து கலங்கி நீர் வடிக்கின்றாய்.. மொட்டுக்கள் மலர்ந்து பூத்துக் கிடக்கும் முல்லை காட்டுப் வழியில் சென்றுள்ளத் தலைவன், உன் மேன்மை கொண்ட அழகை வாட்டுபவரல்லர், விரைவில் வந்துவிடுவார் என ஆற்றுவிக்கிறாள்.  

பாணன் பத்து

பருவம் வந்தும் தலைவன் வர இயலாமையால் பாணன் தூதாக செல்கிறான். இப்பத்துப் பாடல்காளும் தூதாக வந்த பாணனிடம் கூறும் கூற்றாக அமைந்திருக்கின்றன.

எல் வளை நெகிழ, மேனி வாட,
பல் இதழ் உண்கண் பனி அலைக் கலங்க,
துறந்தோன் மன்ற, மறம் கெழு குருசில்;
அது மற்று உணர்ந்தனை போலாய்
இன்னும் வருதி; என் அவர் தகவே?

ஒளிமிக்க வளையல்கள் கழன்று விழ, மேனி வாடும் படியாக, பல இதழ்கள் கொண்ட குவளை மலர் போன்ற மையிட்ட கண்கள் நீர் வடித்து கலங்கும் படியாக விட்டுச் சென்றவரல்லவா வலிமை மிக்க தலைவன்.. அதை உணராமல் அவர் பெருமை பேசி இன்னும் வருகின்றாயே அது சரியோ!

அடுத்ததாக

தேர் வியங்கொண்ட பத்து.

வினைமுடிந்து இல்லம் திரும்பும் தலைவன் தேரை விரைந்து செலுத்துமாறு தந்தேர்பாகனுக்குச் சொல்லியது

இது மன் பிரிந்தோர் உள்ளும் பொழுதே;
செறிதொடி உள்ளம் உவப்ப
மதிஉடை வலவ! ஏமதி தேரே.

இதுவே பிரிந்தவர் நினைக்கும் பொழுது. நெருங்கிய வளையல்கள் கொண்ட தலைவி மகிழும் படியாக, அறிவுக்கூர்மையுடய பாகனே தேரை விரைந்து செலுத்துவாயாக!

கருவி வானம் பெயல் தொடங்கின்றே;
பெரு விறல் காதலி கருதும் பொழுதே;
விரி உளை நன் மாப் பூட்டி,
பருவரல் தீர, கடவுமதி தேரே!

மேகம் திரண்டு வானம் மழைப்பொழிய தொடங்கியது, பெருமையுடைய காதலி தலைவனை நினைக்கும் பொழுது இது, விரிந்த பிடறி மயிர்கொண்டதும், விரைந்து செல்வதுமான நல்ல குதிரையைப்பூட்டி, நம் துன்பம் தீருமாறு தேரைச் செலுத்துவாயாக!

தலைவியின் கொஞ்சும் மொழி நினைவிற்கு வருகிறது. ஆதலால் அழகிய மணிப்பொருந்திய தேரை ஓட்டுவாயாக என பலவாறு தலைவன் கூறுவதாய் அமைந்துள்ள பத்துப்பாடல்களின் தொகுப்பு இது.

வரவுச் சிறப்புரைத்த பத்து

குறித்த கார்காலம் வருமுன்னே வினைமுடித்து மீளும் தலைவன் தலைவியிடம் கூறும் கூற்றாக அமைந்த பத்துப் பாடல்களின் தொகுப்பு இது.

நின்னே போலும் மஞ்ஞை ஆல, நின்
நல் நுதல் நாறும் முல்லை மலர,
நின்னே போல மா மருண்டு நோக்க,
நின்னே உள்ளி வந்தனென்
நல் நுதல் அரிவை! காரினும் விரைந்தே.

நல்ல நெற்றியைக் கொண்ட அரிவை பருவத்தவளே! அங்கே உன்னைப் போலவே மயிலானது ஆட, உன் நெற்றியைப் போல் மணங்கொண்ட முல்லை மலர, உன்னைப்போலவே மானும் மருண்டு நோக்க, அதைக்கண்டு உன் நினைவோடு நான் கார் காலத்தைக் காட்டிலும் விரைவாக வந்தேன், என தான் கார்காலத்திற்கு முன்னே வந்ததை கூறும் விதமாக இப்பத்துப்பாடல்கள் அமைந்துள்ளன.

தலைவன் பிரிவை ஆற்றியிருக்கும் தலைவி, கார் கால நிகழ்வுகள், தலைவியின் நினைவால் விரைந்து வரும் தலைவன் அவர்கள் இல்லற வாழ்வின் மாண்புகள் என அழகிய முல்லை நில நிகழ்வுகள் பயின்று வரும் இந்த நூறு பாடல்களும் மேலும் மேலும் படித்து இன்புறத்தக்கன.

அடுத்தாக பாலை நிலப்பாடல்கள். தலைவி தலைவனுடன் உடன் போக்கித் தமரைப் பிரிதல் அல்லது தலைவன் தலைவியைப் பிரிதல் என பிரிவின் நிலைக்காட்டும் பாலை நிலப்பாடல்களுடன் விரைவில்

அன்புடன்
உமா

No comments:

Post a Comment