Sunday 15 April 2018

நற்றிணை 3 நெய்தல்

நெய்தல் கடலும் கடல் சார்ந்த இடமும். இப் பாடல் நற்றிணையில் 183 வது பாடல். பொருளீட்ட தலைவன் பிரிந்து செல்கிறான். தோழியானவள் தலைவியின் பிரிவுத் துன்பம் எப்படிப் பட்டதாயிருக்கும் என்பதை பிறிது மொழிதலால் அழகாக இப்படிக்கூறுவாள்:-

தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து
பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி
நெறி நெடு ஒழுகை நிலவு மணல் நீந்தி
அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து
உமணர் போகலும் இன்னாதாகும்
மடவை மன்ற கொண்க வயின்தோறு
இன்னாது அலைக்கும் ஊதையடு ஓரும்
நும் இல் புலம்பின் மாலையும் உடைத்தே
இன மீன் ஆர்ந்த வெண் குருகு மிதித்த
வறு நீர் நெய்தல் போல
வாழாள் ஆதல் சூழாதோயே


இப்பாடலில் அக்கால வணிக முறை அழகாக காட்டப்பட்டுள்ளது.

தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து
பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி

மருத நாட்டு வணிகர் தம் நாட்டில் விளைந்த நெல்லை பண்டிகளில் (வண்டிகள்) ஏற்றி சென்று தந்து, அயல்நாடாகிய நெய்தல் நிலங்களில் உப்பை மாறாக பெற்றுக் கொண்டு அதனை ஊர்கள் தோறும் சென்று விலைபேசி விற்பர்.

நெறி நெடு ஒழுகை நிலவு மணல் நீந்தி
அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து
உமணர் போகலும் இன்னாதாகும்

அப்படி உப்பை பெற்று அவர்கள் தம் வண்டிகளோடு நீண்ட மணல் வழிகளில், தனியே சுற்றத்தோடு செல்லும் பொழுது அவர்களோடு பழகிய ஊராருக்கு பிரிவு உணர்ச்சியைத் தரும். அவர் தங் குழுவோடும் பண்டிகளோடும் சென்றது அவ்வூர்க்கு இன்னாமையைத் தருவதாயிருக்குமன்றோ? அப்படியே நீயும் எம்மைக் கையிகந்து பெயர்வது எமக்கும் இன்னாமையைத் தருவதாகும் என்று பிறிது மொழிதலாகக் கூறுகிறாள். ஒரு நாள் பழகியவரின் பிரிவையே தாங்க முடியாத போது, நெருங்கி பழகிய உன் பிரிவை இவள் எங்கணம் தாங்குவாள்.

..............வயின்தோறு
இன்னாது அலைக்கும் ஊதையடு ஓரும்
நும் இல் புலம்பின் மாலையும் உடைத்தே

செல்லும் வழியெல்லாம் துன்பத்தை தரக்கூடிய ஊதைக்காற்றோடு நீயில்லாத மாலை பொழுதும் உள்ளதே. அதுவும் எமக்கு ஏதுவுடையதாகயிராது.

இன மீன் ஆர்ந்த வெண் குருகு மிதித்த
வறு நீர் நெய்தல் போல
வாழாள் ஆதல் சூழாதோயே
அம்ம மன்ற மடவை

வற்றிய நிலத்திலுள்ள மீங்களையெல்லம் தின்ற வெண்குருகின் காலால் மிதிக்கப்படும் அக்குளத்திங்கண் உள்ள நெய்தல் மலர் போல, இவள் ஒரு பொழுதும் உயிரை வைத்திருக்கமாட்டாள் என்பதை அறியாதவனாய் இருக்கிறாயே!


வற்றிய குளத்தில் சிறிதளவே உள்ள நீரைக்கொண்டு மலர்ந்த மலரை குருகும் மிதித்து துன்பப்படுத்தியதென்பது, பொருளீட்ட பலநாள் பிரிந்து இருந்து வாடிய தலைவி சில நாட்கள் உன் வரவால் சிறிது நன்மையடைந்தாலும் மீண்டும் நின் பிரிவு குருகின் கால் பட்ட மலராய் வாட்டும் என பிறிது மொழிதலால் கூறுவதாய் உள்ளது..

அகப்பொருள் இலக்கியமாம் நற்றிணையில் அக்கால வாழ்வியல் மிக அழகாக கூறப்பட்டுளது அறிந்து சுவைக்க வேண்டியது.

அறிவோம், சுவைபோம். அடுத்து ஒரு முல்லை நிலப் பாடலுடன் விரைவில்...

அன்புடன்
உமா...




No comments:

Post a Comment