Saturday 24 November 2018

பத்துப் பாட்டு - திருமுருகாற்றுப்படை



இதுவரை சங்க இலக்கியத்தில் எட்டுத் தொகை நூல்களைப் பற்றி அறிந்துக் கொண்டோம். இப்போது மற்றொரு தொகை நூலான பத்துப்பாட்டைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். 

இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது. இவை அகவற்பாவால் இயன்றவை.

பத்துப்பாட்டில் உள்ள  செய்யுட்களும் எட்டுத்தொகையில் உள்ள நூல்களைப் போலவே அகம், புறம் என்ற இரு பிரிவுகளில் அடங்கும்.
முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப் பாலை, நெடுநல்வாடை என்ற நான்கும் அகப்பொருள் நூல்களாகும்.
திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை, பொருநராற்றுப் படை, மலைபடுகடாம் என்னும் கூத்தராற்றுப்படை, மதுரைக் காஞ்சி ஆகிய ஆறும் புறப்பொருள் பற்றியன. இவற்றுள் முதல் ஐந்தும் ஆற்றுப்படை என்ற பிரிவில் அடங்கும். இறுதியானது நிலையாமை பற்றிக் கூறும் காஞ்சித்திணையைச் சேர்ந்ததாகும்..

இனி இந்த பத்து தனித்தனி நூல்கள் பற்றிக் காண்போம்.

திருமுருகாற்றுப்படை.

பத்துப்பாட்டுக்குக் கடவுள் வாழ்த்துப் போல அமைந்தது திருமுருகாற்றுப்படை. இது 317 அடிகள் கொண்ட அகவல். முருகன் அருள் பெற்ற ஒருவன், அதைப் பெற விரும்பும் இன்னொருவனை முருகப் பெருமானிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்த இதனை இயற்றியவர் நக்கீரர். ஆற்றுப்படுத்துதல் என்றால் வழிப்படுத்துதல். ஆற்றுப்படுத்தப் படுவோன் பெயர் நூலுக்கு அமைவது ஏனைய ஆற்றுப்படைகளின் பண்பு. இது, அதற்கு மாறாக, பாட்டுடைத் தலைவன் பெயரால் அழைக்கப்படுகிறது. இதற்குப் புலவராற்றுப் படை என்றும் ஒரு பெயர் உண்டு.

1.   முதற்பகுதி  -  திருப்பறங்குன்றம்.

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு

இங்கு உலகம் என்பது அதில் தங்கியுள்ள உயிர்களைக் குறித்து இடவாகு பெயராய் அமைந்தது. உலகத்தில் உள்ள உயிர்களெல்லாம் மகிழும் படியாக எழுந்து, மேருமலையை வலமாக சுற்றி வரக்கூடிய



பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு, 

உலகின் அனைத்து மதங்களாலும், சமயங்களாலும் போற்றப்படுவது ஞாயிறு என்பது இங்கே குறிக்கப் படுகிறது. ஞாயிற்றை கடலில் காண்டது போல. ஞாயிறு கடலில் தோன்றுவது மிக அழகான தோற்றம், தோற்றம் மற்றும் வினையாலும் இவ்வுவமை அழகு பெறுகிறது.

தன்னை மனத்தால், உள்ளம் உருக நினைப்போருக்கு கடலைப்போல் தண்ணியனாகவும், அவர்களின் அறியாமை இருளை போக்கும் ஞாயிறாகவும் விளங்குபவன் முருகன். கடலின் பசுமையாகவும், ஞாயிற்றின் வெம்மையாகவும் ஒருசேர விளங்குபவன். இது தொழில் உவமையாயிற்று.

கடலினின்றும் ஞாயிறு தோன்றுவது ஞாயிற்றினை போல் ஒளிப் பொருந்திய முருகன் நீல மயில் வாகனத்தில் அமர்ந்து காட்சியருள்வது போல் இருப்பதாக காட்டியது தோற்றவுவமையாகிறது. நீலக் கடல் மயிலைப் போலவும் அதன் மேலமரும் முருகன் ஒளிப்பொறுந்திய ஞாயிறாகவும் காட்டப்படுகிறான்.

இப்படி அருமையான காட்சிப்படுத்துதலோடு துவங்கும் இப்பாடலில் முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள ஆறுபடை வீடுகள் பற்றியும், ஆங்காங்கு நடக்கும் வழிபாடுகள் பற்றியும் கூறப்பட்டுள்ளன.

முருகப் பெருமானின் திருஉருவச் சிறப்பும், அவர் மார்பில் அசையும் மாலையழகும்,

கார்கோள் முகந்த கமஞ் சூல் மா மழை,         
வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி,

கார்கோள் என்பது கடல் நீரை சுட்டுகிறது. கார் – மேகம் கடலிலிருந்து முகந்து பெய்வதால், மேகத்தால் முகர்ந்துக் கொள்ளப்படுதலால் கார்கோள் என்பது கடல் நீருக்கு ஆகுபெயரானது.
வாள் – ஒளி, போழ் – பிளக்கும்.
ஒளியால் வானிருளைப் பிளக்கும், போக்கும் ஞாயிற்றினுக்கும், திங்களுக்கும் வாள் ஆகுபெயரானது.

"கடல்நீரை முகந்த காரணத்தால் நிறைவான கருவுற்ற 'கார்' எனப்படும் கரிய நிறமான மேகமானது, ஞாயிறும் திங்களும் இருளைப் போக்குவதால் ஏற்படும் ஒளி பொருந்திய ஆகாயத்திலிருந்து மாபெரும் மழைத்துளிகளைப் பொழியவும், 'கார்காலத்’ தொடக்கத்தில் குளிர்ச்சியும் நறுமணமும் பொருந்திய காடுகளில் பெய்யும் அந்த' முதல் மழை'யின் பயனாக இருள் போன்று அடர்த்தியாகத் தழைத்த, பருமனான அடிப்பாகத்தையுடைய செங்கடம்பு மரங்களில் மலர்ந்த, தேர்ச் சக்கரத்தைப் போன்ற வட்ட வடிவுடைய குளிர்ச்சி பொருந்திய [சிவப்பு நிற கடம்ப மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை புரளுகின்ற திருமார்பினன் திருமுருகப்பெருமான்."

என மிக அருமையாக காட்டப்பட்டுள்ளது படித்தின்புறதக்கது.

சூரரமகளிர் இயல்பை குறிக்குமிடத்தில்
சூர் என்றால் அச்சம், அச்சம் தரக்கூடிய மலை வாழ் சூரர் மகளீரை மிக அழகானவர்களாக சங்க இலக்கியங்கள் இயம்பும்.
இங்கும்

கை புனைந்து இயற்றா கவின் பெறு வனப்பின்…

கைகளால் புனைந்து செய்யப்பட்ட செயற்கை அழகாக அல்லாமல் இயற்கையாக இறைவனால் அருளப்பட்ட அழகு நிறைந்தவர்கள் என காட்டப்படுகின்றனர்.
ஓவியமாகவோ, சிற்பமாகவோ அல்லது எழுத்திலோ கற்பனைக் கொண்டு கையால் இயற்ற முடியாத பேரழகு கொண்டவர்கள் சூரர மகளீர்.

பெருமான் சூரபன்மனை அழித்த செயலைக்குறிக்கையில்

பார் முதிர் பனிக் கடல் கலங்க உள் புக்கு,    45
சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல்

நிலம் முடிந்து துவங்கக் கூடிய கடலின் மேல் சென்று, சுடர்வீசும் இலைபோன்ற தன்வேலை வீசிச் சூரபனமனின் குல முதலையே கொன்றழித்த கொற்றவன் என்றும் குறிப்பிடபட்டுள்ளது

இன்னும்
மதுரையின் பெருமையும், திருப்பரங்குன்றத்தின் இயற்கை அழகும் காட்டப்படும் போது

போரை விரும்பி ஆடவர் உயர்த்திய கொடிகள் மதுரையில் எப்போதும் பறந்துகொண்டேயிருக்கும். மகளிர் பந்தும் பாவையும் விளையாடிக் கொண்டிருப்பர். போரிட்டோரைத் தேய்த்துத் தேய்த்து,  போரிடுவர் இல்லாமல் போனதால் செல்வத் திருமகள் அரியணை ஏறி ஆண்டுகொண்டிருப்பாள். இப்படிப்பட்ட கடைத்தெருக்களும் மாடமறுகுகளும் கூடியிருப்பதுதான் கூடல் எனப்படும் மதுரை

அந் நகரின் மேற்குத் திசையில் அமைந்திருக்கும் அகன்ற நெல் வயல்களில் முட்கள் பொருந்திய தண்டுகளை உடைய தாமரை மலர்கள் மீது வண்டுகள் இரவில் உறங்கிய பின்னர் வைகறையில் தேன் மணம் கமழும் நெய்தல் மலர் மீது மொய்த்து ஊதி, கதிரவன் தோன்றிய பின்னர் மலையின் சுனைகளில் கண்களைப் போல் பூத்துள்ள விருப்பம் தரும் மலர்களின் அருகே சென்று ரீங்காரமிடும் அழகிய இடமாகிய திருப்பரங்குன்றத்தின் மீது திருமுருகப்பெருமான் மனம் விரும்பி அமர்ந்திருபார் என மிக அருமையாக காட்டியிருப்பது அறிந்து மகிழத்தக்கது.

இப்படி திருப்பறங்குன்றத்தினைப் பற்றியச் செய்திகள் முதற்பகுதியில் இடம்பெறுகின்றன.

2.       இரண்டாம் பகுதி -  திருச்செந்தூர்


பெருமான் ஏறும் பிணிமுகம் என்னும் யானையின் இயல்பு,
கூற்றத் தன்ன மாற்றஅரு மொய்ம்பின்
கால் கிளர்ந்தன்ன வேழம் மேல்கொண்டு

யமனைப் போன்று தடுப்பதற்கு அரிதான வலிமையினையும் உடைய, கடுமையாக வீசும் காற்றைப் போன்று விரைவாகச் செல்லும் ஆண் யானை எனவும்

மேலும்
அவருடைய ஓறாறு திருமுகங்கள், ஈறாறு திருக்கைகளின் செயல்கள், அவர் திருச்சீரலைவாயில் (திருச்செந்தூரில்) எழுந்தருளியிருக்கும் மேன்மை ஆகியன இரண்டாம் பகுதியில் இடம்பெறுகின்றன.

3.       மூன்றாம் பகுதி – பழனி என அறியப்படும் திருவாவினன்குடி
    
    


மூன்றாம் பகுதியில் திருவாவினன்குடியில் (பழனியில்) முனிவர்கள் பெருமானை வழிபடும் முறையும், சிவபெருமானும், திருமாலும், பிறதேவர்களும் பெருமானைக் காண வருதலும் விளக்கப்படுகின்றன.

4.       நாங்காவது பகுதி - சுவாமிமலை
நான்காவது பகுதியில், பெருமான் ஏரகத்தே (சுவாமிமலை) எழுந்தருளியிருத்தலும், அந்தணர் ஆறெழுத்து மந்திரத்தை உச்சரித்து வழிபடலும் கூறப்பட்டுள்ளன. அம்மந்திரம்நமோ குமராயஎன்பார் நச்சினார்க்கினியர்.

5.   ஐந்து - குன்றுதோராடல்
ஐந்தாவது பகுதியில் பெருமான் ஒவ்வொரு குன்றிலும் ஆடும் பண்பு விளக்கப்படுகிறது.

6.   ஆறு – பழமுதிர்சோலை, முருகனின் இருப்பிடங்கள்


ஆறாம் பகுதியில் முருகப் பெருமான் ஊர் தோறும் கொண்டாடப்படும் விழாவிலும், வெறியாடும் களத்திலும், காட்டிலும், சோலையிலும், ஆற்றிடைக் குறைகளிலும் (திட்டு), ஆறுகளிலும், குளங்களிலும் சதுக்கங்களிலும் மன்றங்களிலும் பிறவிடங்களிலும் உறையும் நிலை விளக்கப்பட்டுள்ளது.

குறவர்கள் தமக்கே உரிய முறையில் உயிர்க் கொலையுடன் முருகனை வழிபடும் பண்பு இப்பாட்டில் விளக்கப்படுவது சிறப்பு.

ஆடு களம் சிலம்பப் பாடி, பலவுடன்
கோடு வாய்வைத்து, கொடு மணி இயக்கி,   
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி,             
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட,          
ஆண்டு ஆண்டு உறைதலும் அறிந்தவாறே.               

என்று முருகனை வழிப்படுதலையும்

நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின்,               
நின் அடி உள்ளி வந்தனென்; நின்னொடு         
புரையுநர் இல்லாப் புலமையோய்!' எனக்      
குறித்தது மொழியா அளவையின்       
என்றும்

அஞ்சல் ஓம்புமதி, அறிவல் நின் வரவு' என,               
அன்புடை நல் மொழி அளைஇ, விளிவு இன்று,       
இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து            
ஒரு நீ ஆகித் தோன்ற, விழுமிய            
பெறல் அரும் பரிசில் நல்குமதி

என்று அவன் அருள் புரிதலையும்

மேலும் முருகப் பெருமானை வழிபடும் முனிவர்களின் உருவத் தோற்றத்தையும், பழமுதிர்சோலையின் இயற்கை அழகையும் விளக்கும் பகுதிகள் நக்கீரர் புலமைக்குச் சான்று.

இந்நூலின் அருமை கருதி, பிற்காலத்தில் சைவத் திருமுறைகளுள் பதினோராம் திருமுறையில் ஒரு பகுதியாக இதனைச் சேர்த்துள்ளனர். இது, சைவர்களின் வழிபாட்டு நூலாக விளங்குகிறது.

மீண்டும் மற்ற ஆற்றுப்படை நூல்களைப்பற்றியக் கண்ணோட்டத்தோடு

விரைவில்

அன்புடன்
உமா…

No comments:

Post a Comment