Thursday 16 August 2018

பரிபாடல்


தமிழ் மொழி மிகப் பெரியக் கடல் போன்றது. அதன் கரையில் நின்று அழகை இரசிப்பது ஒரு தனி இன்பம். சற்று அதனருகில் சென்று நீரில் காலை நனைத்து மகிழ்வதும் ஒருவகை இன்பம். புத்தகங்கள் என்கிறத் தோனியிலேறி சிறிது தூரம் சென்று அதன் பரப்பைக் கண்டு மகிழ்வதும் ஆனந்தம். அதனுள் மூழ்கி திளைத்து நீந்தி வருதல் பேரின்பம். இம்மா கடலில் நம் முன்னோர்கள் மூழ்கி மூச்சடைத்து அதன் ஆழம் தொட்டு அள்ளி அள்ளி தந்திருக்கிறார்கள் அற்புதமான சொத்தாக பல இலக்கியங்களை. அதனுள் மிகச் சிறந்த ஒரு முத்து இப்பரிபாடல்.

எட்டுத் தொகை நூல்களுள் ஒன்று இது. பரிபாடல் என்பது பாட்டு வகைகளுள் ஒன்றுபரிபாட்டுஎன்னும் பெயராலும் இது வழங்கப் பட்டிருக்கிறது. பரிந்து வருதல் பரிபாடல் . பரிதல்-ஏற்றல் பரிந்துவருதல்-ஏற்றுக் கொண்டு வருதல்.; அதாவது வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற நால்வகைப் பாடல் உறுப்புக்களையும் ஏற்றுக் கொண்டு வருதல். இவ்வகைப் பாடல்களால் அமைந்த தொகைநூலும் 'பரிபாடல்' என்றே வழங்கி வந்துள்ளது.'.

இது ஒரு பண்ணிசை இலக்கியம். பரிபாடல்கள் அனைத்தும் பண்ணுடன் கூடிய இசைப் பாடல்கள், இயற்றமிழும் இசைத்தமிழும் கலந்த பாடல்கள். பாலையாழ், நோதிறம், காந்தாரம் என்ற பண்கள் பரிபாடல்களிலே காணப்படுகின்றன. என்றாலும் தேவாரப் பண்களைப் பாடுவது போல் அதனைப் பாட இயலவில்லை. பரிபாடலைப் பாடும் முறை இன்று மறைந்து விட்டது. இதுவரை அதனை அறிந்து யாரும் பாடவில்லை. அது போன்றே பரிபாடல் இலக்கியம் செய்ய யாரும் முயன்றதும் இல்லை. பரிபாடல் இசையை அடிப்படையாகக் கொண்டது என்பதும் அவ்விசை மறைந்து போனது என்பதுமே அதன் காரணமாகும்

பரிபாடல் அறம் பொருள் இன்பம் வீடு என்ற உறுதிப் பொருள் நான்கனுள் இன்பத்தையே பொருளாகக்கொண்டு, மலைவிளையாட்டு, புனல்விளையாட்டு முதலியன பற்றி வரும் என்பர்.

தெய்வமும் காமமும் பொருளாகக் கொண்டு வருவது பரிபாடல்என்கிறது யாப்பருங்கலகாரிகை. இதனால் பரிபாடற் பாட்டுக்கள் புறப்பொருட் செய்திகளையும் புகல்கின்றன; அகப்பொருட் செய்திகளையும் அறிவிக்கின்றன என்றும் அறியலாம்
நாலாயிரப்பிரபந்தம், தேவாரம், திருவாசகம், திருப்புகழ், அருட்பா முதலியவை சங்க காலத்திற்குப் பின்னே தோன்றியவை .கடவுளிடம் அன்பு செலுத்தத் தூண்டும் கவிதைகள் இவைகள். சங்க காலத்திலே பரிபாடல்களே தெய்வ பக்தியைத் தூண்டும் தீந்தமிழ்ச் செய்யுட்களாக நிலவி வந்தன.

கடவுளர்பெயர்கள், அவர்களுடைய திருவிளையாடல்கள் பற்றியே பிற்காலத்துப் பக்திப் பாடல்களில் காணப்படுகின்றன; இடையிடையே சில அறவுரைகளும் உண்டு. சமயம் உண்டு, மதம் உண்டு, மத வெறுப்புகளும் காணப்படுகின்றன. ஒரு சில ஆசிரியர்களே தங்கள் காலத்திலிருந்த மக்கள் பழக்க வழக்கங்களையும்  நாட்டின் நிலைமையையும் இணைத்துப் பாடியிருக்கின்றனர்.

சங்க காலத்துப் பக்திப் பாடல்களாகிய பரிபாடல்களிலே பழைய நாகரிகங்களைப் பார்க்கலாம். அக்காலத்து மக்களின் பழக்க வழக்கங்களைக் காணலாம். தமிழர்களின் பண்பாடுகளை அறியலாம். இவைகள் பிற்காலப் பக்திப் பாடல்களுக்கும்  முற்காலப் பக்திப்பாடல்களுக்கும் உள்ள வேற்றுமையாக உணரப்படுகிறது/.

சங்கத்தார் தொகுத்த பரிபாடல்கள் 70. இவற்றுள் இப்பொழுது நமக்குப் பிரதிகளில் கிடைப்பன முதலிலிருந்து 22 பாடல்களே. எஞ்சியவை இறந்துபட்டன. 22 பாடல்களில் 6 திருமாலுக்கும், 8 முருகனுக்கும், 8 வையைக்கும் உரியனவாயுள்ளன. மேலும் தனிநிலையில் கிடைத்த 11 பாடல்கள் இந்த நூலினதாக இருக்கலாம் என்னும் கருத்தோடுபரிபாடல் திரட்டுஎன்னும் தலைப்பில் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்நூலைத் தொகுத்தார், தொகுப்பித்தார் பெயர் ஒன்றும் அறியக்கூடவில்லை. தொகுத்த பாடல்களின் அடிவரையறை பற்றிய குறிப்பும் கிடைக்கவில்லை. பரிபாடல் பாடிய புலவர் பதின்மூவர். அவற்றிற்கு இசை அமைத்தவர் பதின்மர்.

பரிபாடலின் சிற்றெல்லை 25 அடி என்றும், பேரெல்லை 400 அடி என்றும், தொல்காப்பியர் வரையறுத்துள்ளனர்.

பரிபாடல் மதுரை நகரையும் மதுரை நகருக்கு வனப்பும் வளமும் தந்த வையை ஆற்றையும் மதுரையைச் சார்ந்த திருப்பறங்குன்றத்துச் செவ்வேளாகிய திருமுருகனையும் மதுரையை அடுத்துள்ள திருமாலிருங்குன்றம் (பழமுதிர்ச்சோலை) நெடுவேளாகிய மாயோனையும் கொற்றவைத் தெய்வத்தையும் பாடுவதாக அமைந்துளது. திருமுருகாற்றுப்படை இம்மலையை முருகனுக்குரியது என்று சொல்லும். ஆயின் பரிபாடல் திருமாலுக்குரியதாகச் சொல்லும்.

முருகனின் பிறப்பு போன்ற பலச் செய்திகளில் பரிபாடலுக்கும் திருமுருகாற்றுப்படை மற்றும் கந்தபுராணத்திற்கும் நிறைய பாட வேறூபாடுகள் உண்டு.

இப்பாடல்கள் மிக நீண்ட பாடல்களாக அமைந்துள்ளன. அதனால்தான் பின்னர் தொகுத்தவர்கள் இடையிடையே சில தலைப்புக்களை இட்டுள்ளனர்.

பரிப்பாடலின் ஆறாவதுப் பாடல் அகப்பொருளுக்கு இடையே வையை ஆற்றின் புதுவெள்ளம் பற்றிக் கூறுவது. அதன் ஒரு பகுதியை இங்கு பார்ப்போம். இப்பகுதி வையையில் வெள்ளம் வருதலையும் அதனை மக்கள் எவ்வாறு வரவேற்றனர் என்றும் கூறுகிறது.

நிறைகடல்முகந்துஉராய், நிறைந்து, நீர்துளும்பும்தம்
பொறைதவிர்புஅசைவிடப்பொழிந்தன்று, வானம்;

நிலம்மறைவதுபோல்மலிர்புனல்தலைத்தலைஇ,
மலையஇனம்கலங்க, மலையமயில்அகவ,
மலைமாசுகழியக்கதழும்அருவிஇழியும்
மலிநீர்அதர்பலகெழுவுதாழ்வரை,

மாசுஇல்பனுவற்புலவர்புகழ்புல
நாவின்புனைந்தநன்கவிதைமாறாமை,
மேவிப்பரந்துவிரைந்து, வினைநந்தத்
தாயிற்றேதண்அம்புனல்.

புகை, பூ, அவிஆராதனை, அழல், பலஏந்தி,
நகைஅமர்காதலரைநாளணிக்கூட்டும்
வகைசாலும், வையைவரவு.

அகப்பொருளும் புறப்பொருளும் அலைமோதும் பாடல் இது. வெண்பா யாப்பும் இந்தப் பாடலுக்குள் விரவிவருகிறது. “இது பா என்னும் இயல்பு இல்லாமல் பரிந்துவருவது பரிபாடல்என்று தொல்காப்பியம் கூறுவதைத் தெளிவுபடுத்தும் பாங்கு இந்தப் பாடலில் விளக்கொளியாக உள்ளது.

கடலில் நீரை முகந்து சென்ற மேகம் உரசும் போது தன்னிடமுள்ள நீர் தளும்பித் தாங்கமாட்டாமல் மழையாகப் பொழிந்தது. வையை ஆற்றில் வெள்ளம் வந்தது. அந்த வெள்ளமானது எப்படி பாய்ந்தது என்றால்

நிலம் மறைவது போல புனல் ஓடியது. மலையில் வாழ்வன கலங்கும் படியும், மயில் அகவிக் கூவும் படியும் ஒடியது. மலையின் மாசுகளைக் கழுவிக் கொண்டு அருவியாக இறங்கியது. மலையில் ஆங்காங்கே இப்படி நீர் வடிந்தது.

குற்றமற்ற நூல்களைப் படித்து தேர்ந்த புலவர்களின் புலமை பெற்ற நாவில் கவிதை பிறக்குமாறு புனல் பரந்து பாய்ந்தது.

அப்படிப் பாய்ந்து

வினைநந்தத்
தாயிற்றேதண்அம்புனல்.

உலகில் பல்வேறு தொழில்களும் பெருகுமாறு புனல் பாய்ந்தது.வெள்ளம் வந்தால் உழவுத் தொழில் சிறக்கும். உழவே தொழில்கள் எல்லாவற்றிற்கும் ஆதாரம் என்பதால் பலத் தொழில்களும் பெருகுமாறு வெள்ளம் பாய்ந்தது என்கிறது பாடல். இப்படி வந்த வெள்ளத்தை மக்கள் எவ்வாறு வரவேற்றனர் என்றால்
புகை, பூ, அவிஆராதனை, அழல், பலஏந்தி,
நகைஅமர்காதலரைநாளணிக்கூட்டும்
வகைசாலும், வையைவரவு.

நறும்புகை, பூ, படையல், விளக்கொளி என்றெல்லாம் பலவற்றை ஏந்திக் கொண்டு வந்து மணமக்களை விழாக் கொண்டாடிக் கூட்டுவிப்பது போல வையைப் புனலை மக்கள் மகிழ்வோடு வரவேற்றனர்.

இவ்வாறு பொங்கி வந்த வையை ஆற்றில் மக்கள் புனலாடினர்அப்போது பெண்கள் எவ்வாறெல்லம் தங்களை அலங்கரித்துக் கொண்டனர், ஆண்கள் எவ்வாறு ஆடைகள் அணிந்தனர்அவர்கள் ஏறிச் சென்ற பலவகையான ஊர்திகள், அங்கே பூத்திருந்தப் பூக்களின் பலப் பெயர்கள் ஆகியன இப்பாடல்களில் காட்டப்பட்டிருக்கும். இன்று இருப்பது போல் அன்றும் நீந்துவதற்காக பிரத்யேகமாக ஆடைகள் இருந்ததாக அறிகிறோம்.

புனைபுணைஏறத்தாழ்த்ததை; தளிர்இவை
நீரின்துவண்ட; சேஎய்குன்றம்; காமர்
பெருக்குஅன்றோ, வையைவரவு?'


என்ற வரிகளில் வையை ஆறானது திருப்பறங்குன்றத்தின் வழியாக பாய்ந்தது எனப் பதியப் பட்டிருக்கிறது. இப்போது விலகி ஓடுகிறது.
இங்கே அகப்பொருள் கையாளப்படுகிறது. தானாக புனைந்த புணையில் (தெப்பம்) ஏறுகிறாள் ஒருத்தி. ஆனால் அது தாழ்ந்து விடுகிறது. மிகுந்த வெள்ளாத்தால் தாழ்கிறது. இதைக்கண்ட ஒருத்தி வையையானது திருப்பரங்குன்றத்தை தழுவி வருகிறது. அதனால் அதில் நீராடுவோரின் காமம் பெருகுவதைப் போன்று வெள்ளமும் பெருகுகிறது, அதனால் தெப்பம் தாழ்ந்தது என்று கூறுகிறாள் புலவர்.

இப்பாடலின்

ஆசிரியர் : நல்லந்துவனார்
பாட்டு : மருத்துவன்நல்லச்சுதனார்
இசை : பண்ணுப்பாலையாழ்

என்று குறிக்கப்பட்டுள்ளது.

இவற்றிலிருந்து பாடலைப் பாடியவர் ஒருவராகவும் அவற்றுக்கு இசை வகுத்தவர் வேறு ஒருவராகவும் இருந்துள்ளமை அறிய முடிகிறது. மேலும் அக்காலம் இசையில் உன்னதமான நிலையை அடைந்திருந்ததென்பதையும் நிரூபிக்கின்றது.

பரிபாடலில் பாண்டியனைத் தவிர வேறு மன்னர்கள் பற்றிய குறிப்புக்கள் இல்லை. போருக்குரிய ஆயத்தங்களுடன் படை நடத்தும் நிகழ்வுகளையும் போருக்குக் காத்து நிற்கும் பாண்டியனின் படையைப் போலவும் போர்க்கள நிகழ்ச்சிகளையும் போருக்குப் பின்னர் அமைதியை விரும்பும் நிலையினையும் வையையில் அகத்திணைச் செய்திகளுக்கு ஊடாக புலவர்கள் ஒப்பிட்டுக் காட்டியுள்ளனர்.

ஒரு பாடலில் மழை பொழிவதை மிக அழகாக காட்டியிருக்கிறார் புலவர். பாண்டியனின் போர்களத்தில் யானைகள் திரண்டு நிற்பதைப் போல் மேகம் திரண்டிருக்கிறது, போர் முரசின் ஒலிபோல் வானம் இடிக்கிறது, பாண்டியன் வில் எய்தும் அம்புகள் போல் மழைத்துளிகள் விழுந்தன. அவன் வேல் போல் மின்னலடிக்கிறது. பாண்டியனின் கொடைப் போன்று மழை மிகுதியாக பெய்கிறது என காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

இன்னொருப் பாடலில்

நிலவின் ஒளி வளர்பிறை காலத்தில் நாளும் நாளும் பெருகுவது போன்று வையை வெள்ளம் நாளும் நாளும் நிலப்பரப்பில் பெருகியது. அதனால் உலகம் பயனைத் துய்த்தது. தேவர்களுக்குப் படையல் உண்டி வழங்கப்பபட்டது. வெள்ளம் வராத காலத்திலும் வையையாறு ஊற்று நீருடன் எட்டுநாள் நிறைந்த நிலாப் போலக் காணப்பட்டதே அன்றி, அம்மாவாசை நிலா போல நீரில்லா வையையை யாரும் கண்டதில்லை எனப் காட்டப்பட்டிருக்கிறது.

ஒவ்வொருப் பாடலினூடும் அன்றைய வாழ்வின் பழக்கங்களையும் பாண்டியனின் அரசாட்சி சிறப்பையும் மக்களின் நம்பிக்கைகளையும் ஒழுக்க நிலைகளையும் நாம் காணமுடிகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக பரிபாடல் என்ற இலக்கியம் தமிழ்நாட்டின் தொன்மையான வாழ்க்கையினையும் வரலாற்றையும் பதிவு செய்கிறது.

பாடல்களை படித்தறிந்து மகிழ்க.
அடுத்து கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகை பற்றிய பதிவோடு, விரைவில்.

அன்புடன்
உமா


1 comment:

  1. நல்லதொரு முயற்சி... வாழ்த்துக்கள்

    ReplyDelete