Saturday 28 July 2018

பதிற்றுப் பத்து - ஆறாம் பத்து முதல் மற்ற தொகுப்புகள்


ஆறாம் பத்து

ஆறாம் பத்தின் பாட்டுடைத் தலைவன்  ஆடுகோட்பாட்டுச் சேரலாதன். ஆரியர் திருடிப் போன மலையாடுகளை மீட்டு, தன் நகரான தொண்டிக்குக் கொண்டு வந்தான். இதன் காரணத்தால் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் எனப் பெயர் பெற்றான். வானவரம்பன் என்பது இவனது இயற்பெயர். இவனது வரலாற்றுச் சிறப்புகளை வடுஅடு நுண்அயிர், சிறுசெங்குவளை, குண்டு கண் அகழி, நில்லாத் தானை, துஞ்சும் பந்தர், வேந்து மெய்ம் மறந்த வாழ்ச்சி, சில்வளை விறலி, ஏவிளங்குதடக்கை,  மாகூர் திங்கள், மரம்படு தீங்கனி ஆகிய தலைப்புக்களில் ஆறாம் பத்து எடுத்துரைக்கிறது. இப்பத்தினைக் காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடியுள்ளார். காக்கை கரையின் விருந்து வரும் என்று சிறப்பித்து பாடியதால் இப் பெயர் பெற்றார்.

வடுஅடு நுண்அயிர்

வண்டு இறைகொண்ட, தண் கடல் பரப்பின்
அடும்பு அமல் அடைகரை அலவன் ஆடிய
வடு அடு நுண் அயிர் ஊதை உஞற்றும்,

கடற் பரப்பில் வண்டுகள் நகர்வதால் ஏற்பட்ட வடுக்களை ஊதைக் காற்றானது அழிக்கும். வடு என்பது எளிதில் மறையாதது, எளிதில் மறையக்கூடிய மணற்கோடுகளை வடு என்றும், மறைத்தலை அடுதல் அல்லது கொல்லுதல் என்றும் சிறப்பித்துப் பாடியதால் இப்பெயர் பெற்றது.

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் மகிழ்ந்தாடித் திளைப்பதில் மென்மையானவன். என்றாலும் போரில் கடுமையானவன் என்கிறது இப்பாடல்.

வெள் வேல் அண்ணல் மெல்லியன் போன்ம்!' என,
உள்ளுவர் கொல்லோ, நின் உணராதோரே?
மழை தவழும் பெருங் குன்றத்து,        
செயிருடைய அரவு எறிந்து,
கடுஞ் சினத்த மிடல் தபுக்கும்
பெருஞ் சினப் புயல் ஏறு அனையை;

சேரலாதன் விறலியர் நடனம் கண்டு களித்தவாறு இருப்பதால் இவன் மெல்லியன் என இவனை அறியாதார் நினைப்பர். ஆயின் இவன் மழைமேகம் தவழும் பெரிய குன்றத்தில் சினங்கொண்ட நாகப்பாம்பைக் கொன்று முழங்கும் இடியைப் போல பகைவரைத் தாக்குபவன் என்று சேரனின் வீரச் சிறப்பு சொல்கிறது முதல் பாடல்.

வள்ளியை என்றலின், காண்கு வந்திசினே,
உள்ளியது முடித்தி; வாழ்க நின் கண்ணி

நீ வள்ளல் ஆதலால் உன்னைக் காண வந்துள்ளேன். நீ நினைத்ததை முடிக்கும் ஆற்றல் மிக்கவன் நீ. நான் நினைத்துவந்ததை முடித்துவைக்க வேண்டும். நீயும் உன் குடிப்பூவும் (பனை) நெடிது வாழவேண்டும் என்று மன்னவன் கொடைச் சிறப்பும் தன் குறையும் கூறி, வாழ்த்துவதாய் அமைகிறது ஒரு பாடல்.

மாற்றொருப் பாடலில்

இன் இசைப் புணரி இரங்கும் பௌவத்து,
நன் கல வெறுக்கை துஞ்சும் பந்தர்,
கமழும் தாழைக் கானல்அம் பெருந் துறை,  5
தண் கடல் படப்பை நல் நாட்டுப் பொருந!

பந்தர் துறைமுகம் கடலலை மோதும் ஊர். நல்ல கப்பல் வணிகத்தால் பெற்ற செல்வம் பயன்படுத்த முடியாமல் தூங்கும் ஊர் பந்தர். தாழம்பூ கமழும் கானல் பகுதியில் அமைந்திருக்கும் துறைமுக ஊர் இது. இந்தப் பந்தர் நகரைத் தலைநகராகக் கொண்ட நாட்டைப் போரிட்டு வென்று தனதாக்கிக்கொண்டவனே!
என் பந்தர் என்ற துறைமுக நகரைப்பற்றிய செய்தி பதியப்பட்டிருக்கிறது.

அடுத்து
அரம்போழ் கல்லா மரம்படு தீங்கனி
அஞ்சே றமைந்த முண்டை விளைபழம்
ஆறுசென் மாக்கட் கோய்தகை தடுக்கும்

மொய்க்கும் இனிய சுவையுள்ள சதைப்பற்றுச் சேறு உடையதாய், வாளால் அறுக்கமுடியாத அடுமரம் கொண்டதாய், விளங்கும் பழம் முண்டைப்பழம் (முண்டம்-பழம், நேந்திரம்பழம், நேந்திரவாழைப் பழம்). வழிநடை மேற்கொள்பவர்களுக்கு உணவாகி அவர்களின் களைப்பைப் போக்கும்

என அக்கால மக்களின் அறச்செயல் காட்டப்பட்டிருக்கிறது.

வழிச்சாலைகளில்        இனிய      பழமரங்களை     அறத்தின் பொருட்டுவைத்து     வளர்ப்பது    பண்டையோர்    இயல்பு.   வழிச்செல்வோர், அப்பழங்களையுண்டு,  வழி வருத்தம் போக்கிக் கொள்வது பயன். இக்காலத்தில் இப்படிப்பட்ட அறங்கள் தொலைந்துப் போயின.

இன்னும் ஆறாம் பத்தில் ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் தண்டாரணித்தில் பிடிபட்ட வருடை ஆடுகளைக் கொண்டுவந்து தன் தொண்டி நகர மக்களுக்கு வழங்கினான். பார்ப்பார்க்குக் குட்ட நாட்டிலிருந்த ஓர் ஊரை அதிலிருந்த கபிலைப் பசுக்களோடு வழங்கினான். வானவரம்பன் என்னும் பெயர் தனக்கு விளங்கும்படி செய்தான். மழவர் பகையை எண்ணிக்கையில் சுருங்கும்படி செய்தான். கைக்குழந்தையைப் போல் தன் நாட்டைப் பேணிவந்தான் என்றச் செய்திகள் பல காணக்கிடைக்கின்றன.

ஏழாம் பத்து

பாடினோர்     : கபிலர்
பாடப்பட்டோர்: செல்வக் கடுங்கோ வாழியாதன்

பலாஅம் பழுத்த பசும்புண் ணரியல்
வாடை துரக்கு நாடுகெழு பெருவிறல்
ஓவத் தன்ன வினைபுனை நல்லிற்
பாவை யன்ன நல்லோள் கணவன்
என்ற பாடலில்

நன்கு முற்றி பழுத்த பலா பழத்தின் வெடிப்பிலிருந்து வெளிவரும் தேனை வாடைக்காற்றானது தெரிக்கும் என நாட்டின் வளமும்
ஓவியம் வரைந்தார் போன்று அழகிய மனையில் ஓவியப் பாவையைப் போன்று விளங்கும் நல்லாளின் கணவன் என்பதில் ஓவியக் கலை அறிவு அன்று இருந்தது என்பதைத் தெரிந்துக் கொள்ள முடிகிறது.

புலர்ந்த சாந்திற் புலரா வீகை
.
ஈத்த திரங்கா னீத்தொறு மகிழான்

என்ற மிக அழகிய வரிகளில் சேரன் தன் மார்பில் அணிந்த சாந்தின் ஈரம் வேண்டுமானால் காய்ந்துப் போகும் ஆனால் அவன் என்றும் இரப்பார்க்கு ஈயும் ஈரநெஞ்சினைக் கொண்டவன் என்றும்
அது மட்டுமின்றி ஈதலால் தன் செல்வம் குறைவதைப் பற்றி இரங்காதவன்,வருத்தம் கொள்ளாதவன். மேலும் ஈவது மேலோர் கடமை என்றுணர்ந்தவனாதலால் ஈவதால் மகிழ்வும் கொள்ளான் என மிகச்சிறந்த அறம் இங்கே காட்டப்பட்டுள்ளது அறிந்து உணரத்தக்கது.
இப்படி
செல்வக்கடுங்கோ வாழியாதன் காடுகளை அழித்து நாடாக்கி ஊராக்கினான். பெரும் படையிடன் பகைவர்களை ஓட்டிப் பல போர்களில் வெற்றி கண்டான். நாட்டை விரிவு படுத்திய வேள்வி செய்தான். வேள்வி செய்த புரோகிதன் மாயவண்ணன். அவன் காட்டிய அறவழியில் அரசன் சென்றான். அத்துடன் அவனைப் பெரிதும் மதித்து அவன் ஒதும் பணிக்காக, நெல்வளம் மிக்க ஒகந்தூர் என்னும் ஊரை அவனுக்குத் தானமாக வழங்கினான். அத்துடன் அவனைத் தன் அமைச்சனாகவும் அமர்த்திக்கொண்டான். வளமான உள்ளத்தோடு குற்றமற்றவனாக இளங்கியவன் இந்தச் செல்வக்கடுங்கோ வாழியாதன்
என ஏழாம் பத்தும் அதன் பதிகமும் செல்வக்கடுங்கோ வாழியாதன் பற்றி குறிக்கின்றன.

எட்டாம் பத்து

எட்டாம் பத்தைப் பாடிய புலவர் அரிசில் கிழார். இவர் குற்றமற்ற உண்மையைப் பேசுபவர் எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளார். பாடப்பட்டோன் சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை. அதியமானை வென்றான் என்று பதிகம் குறிப்பிடுவதிலிருந்து தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்றும் இவனைக் குறிப்பிடுவர். இந்தச் சேரனின் தந்தை செல்வக் கடுங்கோ. ஏழாம் பத்தின் தலைவன்.

அறாஅ யாண ரகன்கட் செறுவின்
அருவி யாம்ப னெய்தலொ டரிந்து
செறுவினை மகளிர் மலிந்த வெக்கைப்
பரூஉப்பக டுதிர்த்த மென்செந் நெல்லின்

இங்கு மிகப் பெரியதான அகண்ட வயலில் நெல்லை ஆறுக்கும் போது அதனோடு அங்குப் பூத்திருக்கும் ஆம்பலையும், நெய்தலையும் அறுத்து கட்டி வைப்பர் என கூறப்பட்டுள்ளது. ஆம்பலும் நெய்தலும் நீர்நிலைகளில் மலர்க்கூடிய மலர்கள். இங்கும் வயல்களில் நீர் நிறைந்த வளம் பற்றியச் சங்க கால குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. மேலும் கழுவுள் ஆண்ட தோட்டிமலை (தொட்டபெட்டா) கோட்டையைக் கைப்பற்றினான் என்பதும் இப் பாடலில் குறிக்கப்பட்டுள்ளது.

இப்பத்தில் பெருஞ்சேரல் இரும்பொறை ஆளுகைக்கைக்கு அடங்காத நாட்டின் பண்டைய வளமும், போருக்குப் பின்னர் அடையும் பாழ்நிலையும், தன் பகையரசன் ஏறி வரும் யானையின் தந்தத்தை வெட்டித் தன் அரியணைக்குக் கால் செய்துகொள்வான் என்று அவன் வீரம் ,கொடை முதலியன பற்றி கூறப்பட்டிருக்கின்றன.

ஒன்பதாம் பத்து

இந்தத் தொகுப்பில் உள்ள பத்துப் பாடல்களைப் பாடியவர்பெருங்குன்றூர் கிழார். இந்தப் பத்தில் பாடப்பட்டவன்இளஞ்சேரல் இரும்பொறை. இளஞ்சேரல் இரும்பொறை ஐந்தெயில் என்னும் கோட்டையை வென்று துகளாக்கினான். அந்தக் கோட்டை அரிய காடுகளுடன் மலைப்பகுதியில் இருந்தது. அந்தப் போரில் கோட்டைக்கு உரிய அரசன் விச்சி என்பானும் அவனுக்குத் துணைநின்ற இரு பெரு வேந்தர்களும் (சோழன், பாண்டியன்) தோற்றனர் என்று பதிகம் கூறுகிறது.

ஈரம் உடைமையின் நீரோர் அனையை
அளப்பரு மையின் இருவிசும்(பு) அனையை     15
கொளக்குறை படாமையின் முந்நீர் அனையை
பல்மீன் நாப்பண் திங்கள் போலப்
பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை

என்ற பாடலில் சேரன்

மன்ன! உன் நெஞ்சில் ஈரம் இருப்பதால் நீ நீர் போன்றவன். அளக்க முடியாதவனாக விளங்குவதால் விசும்பு போன்றவன். கொள்ளக் கொள்ளக் குறையாத செல்வம் படைத்தவனாக விளங்குவதால் பெருகிய நீருள்ள கடல் போன்றவன். பல மீன்களுக்கு இடையே தோன்றும் நிலாவைப் போல நீ உன் சுற்றத்தார்களுக்கு இடையே தோன்றுகிறாய் என்று அவன் ஈரம், கொடை பற்றி மிக அழகாக நீர், நிலம், ஆகாயம் ஆகியவாற்றோடு பொருத்தி கூறியுள்ளமை அறியதக்கது. மேலும் இப்பாடலில்

நின்நாள், திங்கள் அனைய ஆக திங்கள்
யாண்(டு)ஓர் அனைய வாக யாண்டே
ஊழி அனைய ஆக ஊழி
வெள்ள வரம்பின ()என உள்ளிக்
காண்கு வந்திசின் யானே செருமிக்(கு)          55
உரும்என முழங்கும் முரசின்
பெருநல் யானை இறைகிழ வோயே.

நீ வாழும் நாள் ஒவ்வொன்றும் மாதம் போல பெருகட்டும். மாதம் ஒவ்வொன்றும் ஆண்டு போல் பெருகட்டும். அண்டு ஒவ்வொன்றும் ஊழி போல் பெருகட்டும். ஊழி ஒவ்வொன்றும் வெள்ள-ஊழி போல் பெருகட்டும். இப்படிப் பெருகவேண்டும் என்று வாழ்த்திக்கொண்டு உன்னைக் காண வந்துள்ளேன். இடி போல் முரசு முழங்க, பெரிய நல்ல யானைமீது போர்களத்தில் இருக்கும் உன்னைக் காண வந்துள்ளேன் என்று மிக அழகாக வாழ்த்து கூறுகிறார் புலவர்.

பதிற்றுப் பத்தின் இத்தொகுப்புகளில் சேரமன்னர்களின் வீரம், கொடை, அகவாழ்வு ஆகியவற்றோடு நாட்டின் வளமும், மக்களின் ஒழுக்க வழக்கம், அறம் ஆகியவையும் அறியமுடிகிறது.

தமிழின் தொன்மையையும் தமிழரின் மிகச் சிறந்த வாழ்க்கையையும் காட்டும் சங்க இலக்கியங்கள் அனைவரும் படித்து அறிந்து மகிழவேண்டியவை..

அறிவோம், சுவைப்போம்.

மீண்டும் அடுத்த பதிவோடு விரைவில்
அன்புடன்
உமா

No comments:

Post a Comment