Tuesday 21 August 2018

கலித்தொகை 2


கலிப்பாவின் வடிவம் பார்த்தோம், அழகிய முன்னுரைப்போல் தரவு அமைய, தாழிசகள் விளக்கமாக விரிய, அராகம், அம்போதரங்கம் அப்பாடலுக்கு அழகு சேர்க்க, அனைத்தையும் இணைத்து நம்மை முடிவுரைக்குக் கூட்டிச்செல்லும் தனிச்சொல். சுரிதகம் அழகான முடிவுரையாக முடியும்,

வெண்பா படித்திருக்கிறீர்களா. சற்று சொல்லிப்பாருங்கள்

மன்னனும் மாசுஅறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புஉடையன்; மன்னற்குத்
தன்தேசம் அல்லால் சிறப்புஇல்லை; கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு

இது ஒளவையாரின் மூதுரையில் அமைந்த ஒரு வெண்பா. இதைச்சொல்லிப் பார்த்தால் செப்பலோசை நமக்குப் புரிபடும்.

அடுத்து ஆசிரியப்பா

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரற்
கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தே னிழைக்கும் நாடனொடு நட்பே

குறுந்தொகையில் படித்திருப்போம். சத்தமாக சொல்லிப் பாருங்கள்..அகவல் ஓசை பிடிப்படும்.

கலிப்பாவிற்குரிய ஓசை துள்ளலோசை.

செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி
முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய்
எல்லைநீர் வியன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல்
மல்லல்ஒங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே

இது தரவு மட்டும் அமைந்த தரவுகொச்சகக் கலிப்பா. இதை படித்துப் பாருங்கள். முவசைச்சீர்கள் கலித்தளையோடு தொடர்ந்து வந்து இப்பாடலுக்கு துள்ளலோசையைத் தருகின்றன. பாக்களின் ஓசை நடையை விளக்கவுரைகள் முழுதும் எடுத்துரைக்க இயலா. தானாக படித்தறிய வேண்டியவை.

கலித்தொகைக்குள் செல்வோம்.

கலித்தொகையில் உள்ள சில அழகிய சொற்தொடர்களை அறிந்து மகிழ்வோம்.
இது 33வது பாடல் பாலைக்கலி

ஆற்றிக்கு கண் உண்டோ? ஆம். இருக்கிறது. அதுவும் ஆறு தன் கண்ணை விழித்தும் பார்கிறது என்கிறது இப்பாடல்.

வீறு சால் ஞாலத்து வியல் அணி காணிய
யாறு கண் விழித்த போல், கயம் நந்திக் கவின் பெற,
மணி புரை வயங்கலுள் துப்பு எறிந்தவை போலப்,
பிணி விடு முருக்கு இதழ் அணி கயத்து உதிர்ந்து உகத்,
துணி கய நிழல் நோக்கித் துதைபு உடன் வண்டு ஆர்ப்ப,
மணி போல அரும்பு ஊழ்த்து, மரம் எல்லாம் மலர் வேயக்
காதலர்ப் புணர்ந்தவர் கவவு கை நெகிழாது,
தாது அவிழ் வேனிலோ வந்தன்று; வாரார், நம்
போது எழில் உண் கண் புலம்ப நீத்தவர்;

இப்பாடலில் பெருமைமிகுந்த இந்த உலகததின் பரந்த அழகைக் காண்பதற்காக ஆறு கண்விழித்து நோக்குவதாகக் கூறப்பட்டுள்ளது.

ஒரு அழகான காட்சி
ஆறு நிறைவாய் ஓடுகிறது. அதனால் பக்கங்களிலுள்ள குளங்கலெல்லாம் நிறைந்து இருக்கின்றன. பளிங்கு மணியைப்போன்ற கண்ணாடிக்குள், துப்பு என்றால் பவளம், பவளம் வீசப்பட்டுக்கிடப்பது போல் கட்டவிழ்ந்த முருகம்பூக்கள் அழகிய குளங்களிலே உதிர்ந்து இருக்கின்றன. அருகே வரும் வண்டுகள் தெளிந்த நீரில் தன் உருவத்தைப் பார்த்து ஆரவாரம் செய்கின்றன. ஆறுகளில் வெண்ணிறப் பூவிதழ்கள் உதிர்ந்திருக்க கரிய வண்டுகள் பறப்பது ஆறு தன் கருவிழியை அசைத்து பார்பதை போலுள்ளதாக சொல்லும் அழகிய கற்பனையை நாம் இங்கு காண்கிறோம்.

இது ஒரு வேனிற்கால காட்சி, ஆற்றின் கரையிலிருக்கும் மரங்களெல்லாம் மலர்ச்சூடிக் கொண்டிருக்கின்றன. காதலையுடைய தன் கணவரை கலந்தவருடைய தழுவிய கைகள் நழுவாது இருக்கும் படியாக, மகரந்த பொடிகளை அவிழ்க்கும் இளவேனிற் காலம் வந்துவிட்டது. ஆனால் பூப் போன்ற அழகிய, மையிட்ட நம் கண்கள் வருந்த நம்மைவிட்டகன்றவர் இன்னும் வாராராயினர் எனத்தலைவியின் கூற்றாய் அமைகின்றது இப்பாடல்.
இன்னொரு பாடலில்
………………………………………….ஈங்கை வாடு உதிர்பு உகப்,
பிரிந்தவர் நுதல் போலப் பீர் வீயக், காதலர்ப்
புணர்ந்தவர் முகம் போலப் பொய்கை பூப் புதிது ஈன,…..

இவ்வரிகளில் வாடி உதிர்ந்த பீர்க்கம் பூக்கள் தலைவனைப் பிரிந்த தலைவியின் நெற்றியைப்போல் வாடி இருந்ததாகவும்  . தலைவனைக் கூடிய தலைவியின் முகம் போல் பொய்கை, புதிய தாமரை மலர்களை ஈந்ததாகவும் கூறியிருப்பது எண்ணி மகிழ தக்கது.

கலித்தொகையின் 57வது பாடல்

கொடி என, மின் என, அணங்கு என, யாது ஒன்றும்
தெரிகல்லா இடையின்கண் கண் கவர்பு ஒருங்கு ஓட

“இவள் இடை என்ன கொடியா, மின்னலா அல்லது துன்பமா? எனது கண்கள் அவளது இடையைத் தவிர வேறெதையும் கவனிக்க மறுக்கின்றன!” 

அணங்கு என்றால் வருத்தம், துன்பம் என்றும் பொருள். பெண்ணின் இடையை எண்ணி, மின்னலோ கொடியோ என்பது மட்டுமல்லமல் துன்பமோ எனவும் ஐயுறுகிறான் தலைவன்.

துன்பம் நேரும் போது நமது மனம் அத்துன்பத்தைத் தவிர வேறெதையும் நினைப்பதில்லை. தலைவனுக்கும் தலைவியின் இடையைப் பார்த்தால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் தான் அவன் அவளது இடையை துன்பமோ என்று ஐயுறுகிறான். மிகுந்த இரசனைக்குரியது இவ்வரிகள்.

மேலும் கலித்தொகையின் 39 ஆம்  பாடலில், தோழி, அறத்தொடு நின்று தலைவனுக்கும் தலைவிக்குமான  உறவை செவிலித் தாய்க்கு எடுத்துரைக்கும் போது 

அருமழை தரல்வேண்டில் தருகிற்கும் பெருமையளே!

என்கிறாள். 

மழை வேண்டுமென்றால் பெய்விக்கும் பெருமைக்கு உரியவளானாள் தலைவி என்று கூறுவதன் மூலம் அவர்கள் இணைந்தனர்  என்பதை தாய்க்கு மிக நுணுக்கமாக உணர்த்துகிறாள்.

திருக்குறள் சொல்லும் பெண் இங்கு நமக்குத்  தெரிகிறாள்..

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

கலித்தொகை தலைவி ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட தன்னைத் தொட்டு காப்பாற்றிய தலைவனைத் தன் கணவனாகக் கொண்டுவிட்டாள். கற்பு நெறியில் வாழ தலைப்பட்டாள். அவள்  வள்ளூவன் காட்டும் நல்ல வாழ்க்கைத் துணையாக விளங்குகிறாள் என்பதைக் காணமுடிகிறது. இதை மிக அழகாக தோழி, தாய்க்கு எடுத்துரைக்கிற நயம் அறிந்து மகிழத்தக்கது.

கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு
நெடு வரை மருங்கின் துஞ்சும் யானை,
நனவில் தான் செய்தது மனத்தது ஆகலின்,
கனவில் கண்டு, கதுமென வெரீஇப்
புதுவது ஆக மலர்ந்த வேங்கையை
'அது' என உணர்ந்து, அதன் அணி நலம் முருக்கிப்
பேணா முன்பின் தன் சினம் தணிந்து, அம் மரம்
காணும் பொழுதின் நோக்கல் செல்லாது,
நாணி இறைஞ்சும் நல் மலை நல் நாட!

யாணை வெட்கப் படுமா? வெட்கப்படுவதாய் சொல்கிறது இப்பாடல்.

யானைக்கும் புலிக்கும் பெரிய சண்டை நடந்தது. யானையின் ஆவேசத் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாத புலி தோற்றுப்போய் ஓடி விட்டது. களைப்படைந்த யானை அந்த உயர்ந்த மலைச்சாரலின் ஒரு ஓரத்திலே படுத்துத் தூங்க ஆரம்பித்தது. தூக்கத்திலும் அதன் ஆவேசம் அடங்கவில்லை, கனவிலும் அந்தப் புலியுடன் சண்டைதான். தூக்கக்கலக்கத்தில் பக்கத்தில் இருந்த வேங்கை மரத்தைப் புலி என நினைத்து, அடித்து நொறுக்க ஆரம்பித்தது. கோபம் குறைந்து பார்த்த போது, தான் தாக்கியது புலியை அல்ல, மரத்தை என்பது புரிந்து அந்த மரத்தைப் பார்க்க முடியாமல் வெட்கப்பட்டது.

இப்படி அழகிய கற்பனைகளும் கருத்துகளும் நிறைந்த இக்கலித்தொகையை படித்தறிந்து மகிழ்வோம்.

அடுத்தப் பதிவோடு விரைவில்

அன்புடன்
உமா..

1 comment:

  1. அழகிய கற்பனைகளும் கருத்துகளும் நிறைந்த இக்கலித்தொகையை படித்தறிந்து மகிழ்வோம்.

    ReplyDelete