Sunday 24 November 2019

குறிஞ்சிப் பாட்டு



பத்துப்பாட்டு இலக்கியத்தில் 8வதாக அமைந்திருப்பது குறிஞ்சிப் பாட்டு. மலையும் மலைச் சார்ந்த நிலமுமாகிய குறிஞ்சி நிலத்தின் ஒழுக்கத்தைப் பற்றியப் பாடல்.
தமிழிலக்கியத்தில் அகம் புறம் என்னும் இரு பெரும் பிரிவுகள் நாமறிந்ததே. அகம் என்பது மனிதனின் தனிமனித வாழ்வையும் புறம் என்பது அவனின் சமூகம் சார்ந்த வாழ்வையும் பற்றியதாகும்.
மனிதனின் இல்லற வாழ்வின் கூறுகளை காட்டும் அகம், மேலும் இரு பிரிவுகளாக பிரிக்கப் படுகிறது. ஒன்று களவு நெறி மற்றது கற்பு நெறி.
களவு நெறி என்பது ஒத்த தலைவனும் தலைவியும் தம்முள் மனமுவந்து காதலுற்று வாழும் நெறியாகும். கற்பு என்பது மணமுடித்து வாழும் இல்லற வாழ்க்கையைக் குறிக்கிறது. இக்களவு கற்பில் முடியும் என்பதே தமிழர் பண்பாடு.
குறிஞ்சிப் பாட்டு ஆரிய மன்னன் பிரகதத்தனுக்கு தமிழர் வாழ்வியல் முறையை அறிவித்தற் பொருட்டு எழுதப்பட்டது என்பர்.
இந்த ஆரிய மன்னன் பிரகதத்தன் பற்றிய வேறு குறிப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை. 

இப்பாடலைப் பாடியவர் கபிலர். குறிஞ்சிக்கொரு கபிலர் எனவும் விளங்கு புகழ்க் கபிலர், நல்லிசைப் புலவர் எனவும் சங்க புலவர்களால் பாராட்டப்படும் அளவிற்கு சிறந்த புலவராக விளங்கியவர். இவர் கடையேழு வள்ளல்கள் பற்றி நிறையப் பாடியுள்ளார். முக்கியமாக பாரியின் உற்றத் தோழராக விளங்கியவர் என்பதை அறிகிறோம். பாரியின் பறம்பு மலை இவரை வெகுவாக கவர்ந்த ஒன்று. இவரது குறிஞ்சி நிலப் பாடல்களில் பறம்பு முக்கிய இடம் பெறுகிறது. சமீபத்தில் தொடராக வெளிவந்து அனைவரின் பாராட்டையும் பெற்ற ‘வேள்பாரி’ என்றநாவல் மிகச் சிறப்பாக குறிஞ்சிப் பாட்டு மற்றும் பல சங்க இலக்கியங்களில் காணப்படும் குறிப்புக்களைக் கொண்டு புணையப் பட்ட சிறந்த நாவல். இந்நாவலில் பாரியையும் கபிலரையும் குறிஞ்சி நிலத்தையும் அக்கால மக்களைப்பற்றியும் பல கருத்துகள் நாமறிய கிடைக்கின்றன.

இனிப் பாடலுக்குள் செல்வோம்…

இப்பாட்டு அகத் திணையில் ‘அறத்தொடு நிற்றல்’ என்றத் துறையைச் சார்ந்தது. அறத்தொடு நிற்றல் என்பது தலைவன் தலைவியின் களவு ஒழுக்கத்தை வெளிப்படுத்தி மணமுடிக்கச் செய்தல். பொதுவாக தனது காதலை தலைவி தோழிக்கு உணர்த்துவாள், தோழி செவிலித் தாய்க்கும் செவிலி நற்றாய்க்கும் நற்றாய் குடும்பத் தலைவனுக்கும் உணர்த்துவர். இதுவே அறத்தொடு நிற்றலின் இலக்கணம். தலைவி தன் தந்தையிடம் நேரிடயாக சொல்வது போன்ற நிகழ்வுகள் அமைவதில்லை. களவிற்கும் கற்பிற்கும் பாலமாக அமைவது இத்துறை.
இப்பாடல் தோழியானவள் செவிலித் தாய்க்கு அறிவிப்பதாக அமைந்துள்ளது..

தலைவியின் உடலிலும் உள்ளத்திலும் காணும் மாறுபாட்டை எண்ணி செவிலித் தாயானவள் எதிர்காலமுறைக்கும் கட்டுவிச்சி, வேலன்  அழைத்து குறிக் கேட்க, தோழி, செவிலிக்கு கூறுவதாக துவங்குகிறது.
தோழி சொல்கிறாள்… தாயே தலைவியின் நோயைக்கண்டு நீ கற்றறிந்தவரிடம் கேட்கிறாய், பலவுருவங்களில் உள்ள கடவுளை வாயால் வாழ்த்தியும் உடலால் வணங்கியும், பல வண்ண மலர்களைத் தூவியும் வாசனை புகையூட்டியும் தொழுகிறாய் ஆனாலும் இந்நோய் தீரவுமில்லை அதற்கான காரணமும் தெரியவில்லை. ஆனால் அவள் நோய்க்காண காரணத்தை நான் அறிவேன். நான் சொல்வதை கோபப்படாமல் விரும்பி கேட்பாயாக என்கிறாள்..

நாம் முதலிலேயே பார்த்தது போல் இப்பாடல் தமிழரின் பண்பாட்டை உணர்த்துவதாற்காக இயற்றப்பட்டது.

இன்று நாம் கடைப்பிடிப்பது போலவே இறைவனை வாயால் வாழ்த்தி, விழுந்து வணங்கி, மலரிட்டு, வாசனை புகையிட்டுத் தொழும் வழக்கம் அன்றும் இருந்துள்ளது என்பது அறியதக்கது..

இங்கு தலைவி இறை நம்பிக்கையும் ஒழுக்க பண்பாடும் நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவளே. அவள் தவறு செய்ய மாட்டாள். 

ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.

என்பது வள்ளுவன் வாக்கு...

அவளது களவு என்பது அறத்தின் பாற்பட்டதே.  அந்த அறத்தின் படியே தோழி உண்மையைக் கூறி மணத்திற்கு வழிவகுக்கிறாள்.

தோழியின் கூற்றாகவே அமையும் இப்பாடலில் இவர்களின் கூட்டம் எவ்வாறு நடந்தது என்று தலைவி தன்னிடம் கூறியதை செவிலித் தாய்க்கு எடுத்துக் கூறுகிறாள்.

தலைவி என்னிடம்
முத்தினும் மணியினும் பொன்னினும் அத்துணை
நேர்வருங் குரைய கலங்கெடின் புணரும்
சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்                        15
மாசறக் கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல்
ஆசறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை
எளிய என்னார் தொல் மருங்கு அறிஞர்
மாதரும் மடனும் ஓராங்குத் தணப்ப
நெடுந்தேர் எந்தை அருங்கடி நீவி                            20
இருவேம் ஆய்ந்த மன்றல் இதுவென
நாம் அறி உறாலின் பழியும் உண்டோ
ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற
ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கென
மான் அமர் நோக்கம் கலங்கிக் கையற்று                   25
ஆனாச் சிறுமையள் இவளும் தேம்பும்

முத்தாலும் மணியாலும் பொன்னாலும் செய்யப்பட்ட அணிகலனில் குற்றம் உண்டானால் அதை மீண்டும் சரி செய்து விடலாம் ஆனால் தமக்குறிய சான்றான்மையும், சிறப்பும் ஒழுக்கமும் சீர் குலைந்தால் அக் கறை நீக்கி மீண்டும் புகழ் எய்தல் குற்றமற்ற அறிவுடையவருக்குக் கூட எளிதான காரியமன்று. எனவே எம் தந்தையின் காவலையும் மீறி யாம் கொண்ட களவொழுக்கத்தினை எம் தாய்க்கு நாம் கூறுவதால் பழி உண்டோ?கூறுவதுதானே அறம். அதனால் உடனே தெரிவிப்போம். ஒருவேளை எம்மோர் அதை ஏற்கவில்லை என்றாலும் நாங்கள் இறக்கும் வரை பொறுத்திருப்போம். மறு பிறவியிலாவது சேர்வோம் என்று மான்களே விரும்பும் கண்களைப் பெற்றவளான தலைவி செயலற்று அழுது கூருகிறாள் என்று தெரிவிக்கிறாள்.

அறிவிற் சிறந்தவர்களானாலும், தம் ஒழுக்க நிலையிலிருந்து சிறிதளவே விலகினாலும் அந்த பழியை போக்கி மீண்டும் புகழை நிலைநிறுத்துதல் இயலாதக் காரியம் என்று தலைவி கூறுவது ஒழுக்கத்தில் சிறந்த தமிழ் மக்களின் பண்பாட்டை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

அடுத்ததாக இவர்களின் களவொழுக்கத்தை எடுத்துச் சொல்லும் தோழி தன் நிலையை அழகான உவமையோடு சொல்கிறாள்…

இகல் மீக் கடவும் இரு பெரு வேந்தர்
வினை இடை நின்ற சான்றோர் போல,
இரு பேர் அச்சமோடு யானும் ஆற்றலேன். (27-29)

இரண்டு பெரும் அரசர்கள் பகையினால் போரிடும் போது அவர்களுக்கிடையே சமாதானம் பேசும் சான்றோர்களைப் போல் உங்கள் இருவருக்கும் இடையில் நான் அச்சத்தோடு உள்ளேன் என்கிறாள்…

கபிலரின் வரலாற்றை அறிந்த நாம் இவ்வுவமையை நன்றாக இரசிக்க முடியும்… பாரிவள்ளலின் மிகச் சிறந்த நண்பர் அவர்.
புறநானூற்றில் 108 ம் பாடலில்

பாரியும், பரிசிலர் இரப்பின்,  
'வாரேன்' என்னான்,

பாரி, பரிசிலாக தன்னைக் கேட்டாலும் வாரேன் என்று சொல்லாமல் உடன் வந்துவிடுவான் என்று பாடியிருப்பார்.

கபிலர் மூவேந்தர்களையும் கூட அறிந்தவர். இம்மூவேந்தர்களும் தனித்தனியே பாரியை வெல்லமுடியாததால் ஒன்றாக வந்து பறம்பு மலையில் முற்றுகையிட்டுள்ளார்கள். அவர்களைக்காணச் செல்கிறார் கபிலர். தமிழர் பண்பாட்டிலே இது ஒரு சிறப்பு புலமை மிக்கச் சான்றோர்கள் மன்னனுக்கு அறிவுரைக்கூறும் இடத்தில் இருந்தனர். மன்னரும் அவர்களை வெகுளாது இருந்தனர். மூவேந்தர்களையும் நோக்கி கபிலர்,

“மூவேந்தர்களே எங்கள் பாரியின் பறம்பு மலையை நீங்கள் கைப்பற்ற நினைத்தால்,அதற்கு ஒரு வழி சொல்வேன், நீங்கள் பாணரைப் போல் பாடல்கள் பாடிக் கொண்டும் உங்கள் மகளீரை பாடினிகளாக பாடியும் அவ்விசைக்கேற்ப ஆடிக்கொண்டும் அழைத்துச் செல்வீர். பரிசிலராக வேண்டினால் மட்டுமே அவனது பறம்பு மலையை நீங்கள் பெற முடியும்” என்று பாடுவார்.

பின்பு மூவேந்தர்களும் சூழ்ச்சியால் பாரியைக் கொன்றது வரலாறு. எனினும் பாரிக்கும் மூவேந்தர்களுக்கும் இடையே நின்று போரை நிறுத்த முயன்றவர் என்பதால் அந்த மன நிலையை சரியான இடத்தில் உவமையாக்கினார் என்பது அறிந்து மகிழத் தக்கது.

தோழி தொடர்ந்து சொல்கிறாள். தலைவியை பெண் கொடுக்குமிடத்து, தலைவனின் நிலைத்த செல்வம், அவன் குடி, தன் குடியோடு பொறுந்தும் தன்மை, அவன் குணம் தலைவியின் குணம் இப்படி பலவற்றையும் எண்ணிப் பாராமல் தம்முள்ளே மனம் ஒத்து காதல் கொண்டு களவுமணம் புரிந்தனர் தலைவனும் தலைவியும். அது எவ்வாறு நிகழ்ந்தது என்பதைக் கூறுகிறேன் சினக்காமல் கேட்பாயாக என்கிறாள்.

தாயே சினைப்புலம் காப்பதற்காக எங்களை நீ அனுப்பினாய், நாங்களும் திணைப்புலம் காத்து இருந்தோம்.

இங்கு சில அழகிய உவமைகளை காட்டுகிறார் கபிலர். முதிர்ந்து கதிர் வெளிவந்த நிலையிலிருக்கும் சிறு தினை ”விதையை உடைய மூங்கிலை தின்பதற்காக மேல் நோக்கி நின்ற யானை, தன்னுடைய முத்துக்கள் நிறைந்த தந்தத்தில் இறக்கி வைத்த தும்பிக்கையைப் போல இருந்ததாம்.

நீர் நிறைந்த பெரிய கடல் குறையுமாறு, முகில் கூட்டங்கள் நீரை அள்ளிக் கொண்டு, அகன்ற வானத்தில் வீசுகின்ற காற்றுடன் கலப்பதால், முரசு அதிர்ந்தாற்போன்ற இனிய குரலை உடைய இடியுடன் கூடி, வரிசையாக மேலே சென்று கலங்கி, இனிய இசையை உடைய முரசினையும் ஒளியுடைய அணிகலன்களையும் உடைய முருகன், பகைவர்களைக் கொல்லும்பொருட்டு, கையில் கொண்ட, இலை போன்ற வேல் ஆயுதத்தைப் போல் உள்ள மின்னலுடனும் மழையாக மலை மீது பொழிந்தன. தலைவனின் மலையில் விழும் அருவி மெல்லியத் துணிப்போல் இருந்தது. அதில் நீங்காத விருப்பத்துடன் நாங்கள் ஆடினோம். அங்கு பல வகைப்பூக்கள் பூத்து குலுங்கின. அவற்றையெல்லம் கொண்டு நாங்கள் தழையாடை உடுத்தினோம் என்று விவரிக்கிறாள்…

இவ்வாறு நடந்ததைக் கூறும் போதே தலைவனும் மலையில் வாழ்பவன் என்று குடி ஒத்தமையும், மிகுந்த வளம் கொண்ட மலை அவனுடையது என்பதால் நிறைந்த நிலைத்த செல்வத்தையும் செவிலிக்கு சொல்லிவிடுகிறாள் தோழி.

இப்பாடலில் மலைவளம் படிக்கையில்

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
   மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பார்
   கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்
தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்
   செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனலிளம் பிறைமுடித்த வேணிஅலங் காரர்
   குற்றாலத்திரிகூட மலைஎங்கள் மலையே

என்ற திருகூடராசப்பரின் குற்றாலக் குறவஞ்சிப் பாடல், நாம் பள்ளிக் காலத்தில் படித்தது நினைவுக்கு வந்தால், நாம் தமிழை இரசித்துப் படிக்கிறோம் என்று நம்மை நாமே மெச்சிக் கொள்ளலாம்…

அடுத்து, அவன் நாய்களுடன் வந்தான் நாங்கள் அச்சம் கொண்டோம். அஞ்ச வேண்டாம் என்று சொல்லி எங்களுடன் பேசினான். அந்நேரம் காடவர் விரட்டிய யானை ஒன்று வந்தது. நாங்கள் பயந்து அவன் பக்கம் நெருங்கினோம். அவன் அம்பெய்து யானையை விரட்டினான். யானைப் போனாலும் நடுக்கம் போகாதிருந்த தலைவியை அணுகி அணைத்தான் எங்கிறாள் தோழி.
அச்சம் வேண்டாம். யாம் உம்மை எம் இல்லக்கிழத்தியாக ஏற்றுக் கொள்வேன் என்று அருவி நீரை அள்ளி சத்தியம் செய்தான். அவன் உயர் குடி பிறந்தவன், சத்தியம் தவறாதவன். தலைவியை மணமுடிக்கும் எண்ணம் உள்ளவன். என்று அவன் பண்பையும் கூறுகிறாள் மேலும் , அன்றிலிருந்து அவன் காவலை மீறி இரவில் தலைவியைக் காண வருகிறான். அதனால் தலைவியும் வரும் வழியில் ஏற்படும் இன்னல்களை எண்ணி கலங்குகிறாள் என்று கூறி தலைவியின் களவொழுக்கத்தை தாயார் ஏற்றுக்கொள்ளுமாறு சொல்லி அறத்தொடு நிற்கிறாள் தோழி…

இதுவே தமிழர் பண்பாடு என்று சிறப்பாகக் காட்டுகிறது குறிஞ்சிப் பாட்டு…

இப்பாடலில் கூறப்பட்டிருக்கும் 99 வகையான பூக்கள் அறிந்து இன்புறதக்கது. இதில்

வளமையான இதழ்களையுடைய அழகிய செங்காந்தள் மலர்,
குளிர்ச்சியான குளத்திலே பூத்த குவளை மலர்,
இனிய கனிகளைத் தரும் மாம்பூ , செம்மணிப்பூ,
தனக்கே உரிய மணமும் விரிந்து கொத்தாகவுள்ளதுமாகிய பெரிய மூங்கிற்பூ,
தீயின் நிறத்தை ஒத்த எறுழம்பூ,
வெண்ணிறமுடைய வெட்பாலைப்பூ,
நீலமணி போன்றிருக்கும் கருவிளம்பூ,
பல கொத்துக்களையுடைய குரவ மலர்,
நள்ளிரவிலே  மணம் வீசும் இருவாட்சி மலர்

என்று பலப்பூக்களின் பெயர்கள் அவற்றின் இயல்போடு தரப்பட்டிருப்பது அறிந்து மகிழத்தக்கது.

இவற்றில் பலப்பூக்கள் இன்று இருக்கிறதா என்றே தெரியவில்லை.

இன்று மல்லிகைப் பூக்கூட மணம் வீசாத கலப்புப் பூவாக சந்தையில் விறகப்படுவது, இயற்கையை மறந்து பணத்தின் பின் செல்லும் மனிதனின் நேர்மையற்ற நிலையைத்தான் காட்டுகிறது…

மணம் வீசும் தமிழர் பண்பாட்டை அறிவோம்… காப்போம்

அடுத்த பதிவுடன் விரைவில்
அன்புடன்
உமா


No comments:

Post a Comment