Sunday 14 April 2019

பெரும்பாணாற்றுப்படை

பத்துப்பாட்டு நூல்களில் நாம் அடுத்து காண இருப்பது பெரும்பாணாற்றுப்படை.  இந்நூல் 500 அடிகளைக் கொண்டு ஆசிரியப்பாவால் அமைந்துள்ளது. இதனை எழுதியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் சங்கப் புலவர். இதன் பாட்டுடைத் தலைவன் தொண்டைமான் இளந்திரையன் என்ற மன்னன். காஞ்சியை தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலத்தை ஆண்ட மன்னர்கள் தொண்டைமான் என்று அழைக்கப்பட்டனர். 

இந்த நூலும் ஒரு ஆற்றுப்படை நூல். ஆற்றுப்படை என்பது வழிப்படுத்துதல் என்கிறவகையில் பெரும் பாணன் ஒருவன் வறுமையில் வாடும் இன்னொரு பாணனைத் தொண்டைமான் இளந்திரையனிடம் செல்லுமாறு ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ள நூல் இது.

அகல் இரு விசும்பின் பாய்இருள் பருகி

பகல் கான்று எழுதரு பல் கதிர்ப் பருதி

காய்சினம் திருகிய கடுந்திறல் வேனில்


என்று வேனிற் காலத்தில் வர்ணனையோடு துவங்குகின்றது இப்பாடல்.  நீர், நிலம், நெருப்பு, காற்று என்ற மற்ற நான்கு பூதங்களும் அகன்று விரிவதற்கு காரணமாய் அமைந்துள்ள ஆகாயத்தில், இருளை அகற்றி பகற் பொழுதை தோற்றுவித்து எழுகின்றது பல கதிர்களை உடைய கனலி அல்லது ஞாயிறு. இவ்வாறு வேனிற்காலம் எவ்வாறு தோன்றுகிறதோ அவ்வாறு பாணனின் வாழ்வும் மலரும் என்ற கருத்தோடு துவங்குகிறது இந்த நூல். 

மற்ற ஆற்றுப்படை நூல்களில் நாம் பார்த்தது போலவே பெரும்பாணாற்றுப்படை நூலிலும் முதலில் யாழின் வர்ணனை அமைந்திருக்கிறது. அடுத்ததாக பாணனது வறுமை காட்டப்படுகிறது. பரிசு பெற்ற பாணன் தனது செல்வ நிலையை எடுத்துக் கூறுகிறான், தான் பெற்ற பரிசின் பெருமையை கூறுகிறான். மேலும் போகும் வழியில் அவர்கள் பார்க்கக்கூடிய மனிதர்கள் உமணர் (உப்பு வணிகர்) எயிற்றியர், மறவர், அந்தணர் ஆகிய பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்விடங்கள், வாழ்க்கை முறை, அவரது தொழில், அங்கு கிடைக்கக்கூடிய பொருட்கள் என மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது. தொண்டைமான் இளந்திரையனை  காணச் செல்லும் வழியில் நீர்ப்பெயற்று என்றும் ஒரு ஊரை கடந்து செல்ல வேண்டும். இந்த நீர்ப்பெயற்று என்பது இன்றைய மகாபலிபுரத்தை குறிக்கும். இந்த மகாபலிபுரத்தின் சிறப்பும் கூறப்பட்டுள்ளது. 

இவ்வாறு பல ஊர்களைக் கடந்து இளந்திரையனிடம் சென்றால் மிகுந்த பரிசுகள் பெறலாம் என்று சொல்லும் பொழுது இளந்திரையனின் போர் வெற்றி, அவனது முரசு சிறப்பு, அவன் ஆட்சி வீற்றிருக்கும் காட்சி, பாணன் அரசனைப் போற்றிய விதம், அரசன் பாணனுக்கு விருப்புடன் உணவு மற்றும் பரிசு அளித்த விதம் ஆகியவற்றை மிகச் சிறப்பாக எடுத்தியம்புகிறது இப்பாடல். இறுதியாக அவனது மலையின் சிறப்பை சொல்லி முடிகிறது இந்நூல்.


இந்த பாடலின் சில அடிகளை பகிர்வதன் மூலம் இப்பாடலை படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே நோக்கம்


பேரியாழ் வாசிக்கும் பெரும்பாணன் தன் யாழை இடப்பக்க தோளில் மாட்டிக் கொண்டு செல்கிறான். யாழின் பல உறுப்புக்களான வயிறு, நரம்பு, அடிப்பகுதி, போர்வை, வருவாய் ஆகியவை மிக அழகாக உவமையுடன் விளக்கப்பட்டிருக்கின்றன


அடுத்ததாக பாணனின் வறுமை காட்டப்பட்டுள்ளது


'புல்லென் யாக்கைப் புலவு வாய்ப்பாண...'


பொலிவிழந்த உடலை உடையவனாகப் பாணன் காட்டப்படுகிறான்.


பாணன் தான் பரிசு பெற்ற விதத்தை கூறும்போது


பெரு வறம் கூர்ந்த கானம் கல்லெனக்

கருவி வானம் துளி சொரிந்தாங்கு


நிலம் வறண்டு கிடக்கும் காலத்தில் கருமேக தொகுதி இடியுடன் கூடிய பெருமழையால் பொழிந்தது போல அவன் எங்களுக்கு பல செல்வ வளங்களை நல்கியுள்ளான். அவற்றை குதிரைகள் மீதும் யானைகள் மீது ஏற்றிக் கொண்டு வருகிறேன். எனது சுற்றத்தாரின் பெரும் கூட்டமும் யானை மீது குதிரை மீதும் வந்து கொண்டிருப்பதை பார் என்று கூறுகிறான்.


இளந்திரையனின் மாண்பை பற்றிக் கூறும் பொழுது


முரசு முழங்கு தானை மூவர் உள்ளும்

இலங்கு நீர்ப் பரப்பின் வளை மீக்கூறும்

வலம்புரியன்ன…..


கடலிலே தோன்றுகின்ற சங்குகளில் வலம்புரிச் சங்கானது எவ்வளவு சிறப்புமிக்கதோ அவ்வாறு முரசு முழங்கும் நாற்படைகளைக் கொண்ட சேர சோழ பாண்டியர்களில்  இளந்திரையன்  வலம்புரிச் சங்கை ஒத்தவன்.


அவன் அல்லது கடிந்த அறம் அதாவது அல்வழியில் இல்லாமல் அறத்தை விரும்பிய செங்கோலை உடையவன். அவனிடம் சென்றால் நீங்கள் மிகுந்த பரிசுகள் பெறலாம் என்று கூறுகிறது.


அடுத்ததாக அவனது ஆட்சி சிறப்பைக் கூறும் பொழுது


அவனது காவல் நிலத்தில் வழிப்பறி செய்யும் கள்வர் பயம் இல்லை .பாம்பு பயமும் இல்லை. காட்டு விலங்குகளால் துன்பம் இல்லை. எங்கும் தங்கலாம். எங்கும் பாதுகாப்பு. களைப்புத் தோன்றும் போதெல்லாம் விரும்பிய இடங்களில் தங்கலாம். பின்னர் தொடரலாம்.


அவனைக் காணச் செல்லும் வழியில் எதிர்ப்படக்கூடிய உமணர்களின் வாழ்க்கை அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது . அவர்களது உப்பு வண்டியின் அமைப்பு உவமைகளோடு மிக அழகாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது . இந்த வண்டியின் மேல் கோழிக் குடும்பம் அமர்ந்திருக்கிறது. பல வண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கின்றன. எல்லா வண்டிகளையும் இரண்டு எருதுகள் இழுத்துச் செல்கின்றன. உமணப்பெண்கள் வண்டியின் மேல் உட்கார்ந்து வண்டியை ஓட்டினர். உமணர்கள் யானைகளை ஓட்டி வந்தனர். இப்படிப்பட்ட உமணர் குடும்பத்தோடு நீங்களும் செல்லலாம் என்று கூறுவதாக அமைந்துள்ளது பாடல்.


வழியில் மீளி, சாத்து உல்குவரி  வாங்குபவன் ஆகியோர் உதவுவர். மீளி என்பவன் அரசனின் ஆணைப்படி வழிப்போக்கர்களுக்கு உதவும் காவல்காரன். சாத்து என்பது நிலவழி வாணிகம் செய்பவர்களின் கூட்டம். வழிகள் கூடும் இடங்களில் வணிகர்களிடம் சுங்க வரி வாங்கப்பட்டது. இவர்களின் உதவியை பெற்றுக் கொண்டே முன்னேறிச் செல்லலாம் என்கிறது பாடல்.


அடுத்ததாக எயினர் எயிற்றியர் வாழ்க்கைக் காட்டப்படுகிறது.  எயிற்றியர் குரம்பை எனப்படும் கூரைக் குடிசை வீடுகளில் வாழ்ந்தனர் . உணவு சமைத்தல், கரம்பை நிலத்தில் முளைத்த ஒருவகைப் புல்லை வாயில் அடக்கி வைத்தல் போன்ற பழக்கங்கள் காட்டப்பட்டுள்ளன. கானவன் மதிய பொழுது வரை காட்டுப்பன்றியை வேட்டையாடுவான்.  இந்த கானவர்களின் வீடு, விருந்து, முயல் வேட்டையாடுதல் போன்றவை அழகாக காட்டப்பட்டுள்ளது


அடுத்து மறவர் விளையாடுவதை பார்த்துக் கொண்டே செல்லலாம். மறவர்கள் தம் தாய் வயிற்றில் இருக்கும் போதே அஞ்சா நெஞ்சம் படைத்தவர்கள். யார் வந்தாலும், பாம்பு தன் மீது ஏறி  சென்றாலும், மேகமூட்டம் இல்லாத வானில் இடிமுழக்கம் கேட்டாலும் நிறைமாத தாய்மார் கூட கலங்குவதில்லை.


யானை தாக்கினும், அரவு மேல் செலினும்,   

நீல் நிற விசும்பின் வல் ஏறு சிலைப்பினும்,  

சூல் மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை,


என மிக அழகாக குறிஞ்சி மக்களின் வாழ்க்கை காட்டப்பட்டுள்ளது. இம் மறவர்கள் காளையை தூண்டிவிட்டு தம் தோள் வலிமையைக் காட்டி அதனை அடக்கி விளையாடுவர்.  இவற்றையெல்லாம் வழியில் கண்ட வாறே செல்லலாம்.


அடுத்ததாக ஆயர்களின் வாழ்க்கை கட்டப்பட்டுள்ளது. பால் அருந்தி எஞ்சியதை காய்ச்சி வெண்ணெய் எடுத்து விற்று வரும் பணத்தை பொன்னாக வாங்காமல் கன்றுகளை வாங்கப் பயன்படுத்திக் கொள்வார். காலையில் தயிர் கடையும்போது புலி உறுமுவது போல் ஒலி கேட்கும் என்றெல்லாம் ஆயர்களின் அழகான வாழ்க்கை எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது. இவர்களது குடும்பத்தில் தங்கினால் நண்டுகள் போன்ற தினையரிசி சோற்றில் பால் ஊற்றி தருவார்கள். விருந்துண்டு மேலும் செல்லலாம்.

இடையன் தானே குழல் செய்துகொண்டு இசைப்பான். அந்த புல்லாங்குழலில் அவன் பாலை பண்ணை இனிமையாகப் பாடுவான்  சலிப்புற்றால் யாழிசை மீட்பான். யாழும் அவனே செய்து கொண்டதுதான். அதில் விரல்களால் விரித்து குறிஞ்சிப்பண் பாடுவான். இந்தப் புல் வெளியைக் கடந்து சென்றால்  சிற்றூர் வரும்.


அந்த சிற்றூரில் அவரைக்காயை சேர்த்து செய்த வான் புழுக்கு அட்டி விருந்தாக கிடைக்கும்


இவ்வாறே மருத நில கழனிகளும், மருத நிலத்திலே பெறக்கூடிய உணவுகள், உழவர்களின் வாழ்க்கை முறை, குழந்தைகள் மூன்று சக்கர வண்டி ஓட்டுதல் ஆகியாவையும், ஆலைகளில் கருப்பஞ்சாறு அருந்துதல் வலைஞர் குடியிருப்பு, அங்கே பெரும் உணவுகள், அந்தணர்களின் உறைவிடங்கள், அங்கே பெறக்கூடியவை ஆகியன சிறப்பாக கூறப்பட்டிருக்கும். 


நீர்ப்பெயற்று என்னும் மகாபலிபுரத்திற்கு வந்தால் பட்டணத்து மக்களின் உபசரிப்பு, வாழ்க்கை, ஓடும் கலன்களை அழைக்கும் கடற்கரை துறை, விண்ணை தொடுவது போல் உயர்ந்து ஓங்கிய கடலில் செல்லும் கப்பல்களை அடையாளம் காட்டி அழைக்கக்கூடிய கலங்கரை விளக்கம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.  இவற்றையெல்லாம் தாண்டி செனறு பொதும்பர் காடுகளில் உள்ளே செல்ல வேண்டும். அங்கு சென்றால் காஞ்சியை அடையலாம். 
அங்கு


காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்கு

பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன்  அங்கண்

வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர்


காந்தள் பூத்திருக்கும் சிலம்பில் களிறு படுத்திருப்பது போல் பாம்பணையில் திருமால் பள்ளி கொண்டிருப்பான். அவனைத் தொழுது கொண்டே மேலும் செல்லலாம்.. 

காஞ்சியில்  இந்திர விழா நடைபெறும். இந்த விழாவைக் கொண்டாடுபவர்களோடு சேர்ந்து நீங்களும் கொண்டாடிக்கொண்டு அங்குச் சிலநாள் தங்குங்கள். அக்காலத்தில் கடவுளை இந்திரனை வாழ்த்திப் பாடுங்கள். உங்களிடம் உள்ள கருங்கோட்டு இனிய யாழை மீட்டிக் கொண்டே பாடுங்கள். இனிய இசைக் கருவிகளையம் சேர்த்து இசைத்துக்கொண்டே பாடுங்கள். பின் உங்களின் குறியிடம் நோக்கி வழிமேற் செல்லுங்கள் என்று சொல்வதாக அமந்துள்ளது பாடல். மேலும் அந்நகர் வாழ் மக்கள், வட்டம் என்னும் இனிப்பு பலகாரம், அவர்கள் யானையை குழியில் விழச்செய்து பழக்குதல், பரபரப்பான கடைவீதி ஆகியன கூறப்பட்டிருக்கும்.


காஞ்சி நகரம் எப்படி இருக்கும் என்றால்



நீனிற வுருவி னெடியோன் கொப்பூழ்

நான்முக வொருவற் பயந்த பல்லிதழ்த்

தாமரைப் பொகுட்டிற் காண்வரத் தோன்றிச்


காஞ்சிமா நகரமானது நீலநிற உருவம் கொண்ட திருமால் படுத்திருப்பது போலவும், திரையனின் அரண்மனையானது திருமாலின் கொப்பூழில் தோன்றிய நான்முகன் அமர்ந்திருப்பது போலவும், காஞ்சி தாமரைப் போலென்றால் அரண்மனை தாமரையின் பொகுட்டு, மலரின் உள்பகுதி போலவும் அமைந்திருக்கும் என்று நயம் பட காட்டுகிறது இப்பாடல்.


திரையனை விரும்பி அவனிடம் செல்பவர்களுக்கு அவன் பாதுகாவலாக விளங்குவான். நண்பர்கள் விரும்பியதை அவன் மழைபோல் அள்ளித் தருவான். பகைவர்களை அவன் தீயைப்போல் சுட்டெரிப்பான். அவனை எதிர்த்துப் போரிட்டவர்களின் நிலம் பாழாகும். அவனை நயந்து வாழ்வோரின் நிலம் பொன் கொழித்துப் பூக்கும். மலையிலிருந்து இறங்கும் அருவி கடலை நோக்கிச் செல்வது போல், அரசர்களும் மக்களும் அவனது நட்பைப் பெறுவதற்காக அவனைச் சூழ்ந்து வந்து கொண்டேயிருப்பர்


இப்படி காஞ்சியின் நலம் கூறி, இளந்திரையின் ஆட்சி நலம், வீரம், அறம், ஈகை மற்றும் அவன் மலை வளம் கூறி அவனிடம் சென்று பரிசுகள் பெறுவீர் என்று ஆற்றுப்படுத்தி அமைகிறது பெரும்பாணாற்றுப்படை.


இப்பாடலில் தமிழரில் பல்வேறு வகைப்பட்ட மக்களின் வாழ்கை மிக அழகாக கூறப்பட்டிருக்கிறது. சுவைமிக்க இவ்விலக்கியத்தினை படித்து அறிந்து பெருமைக் கொள்வோம். அறத்தோடு வாழ்ந்த நம் முன்னோரின் சிறப்பை வியந்து அதனை சீர்குலைக்காமல் காக்க நம்மாலானதைச் செய்வோம்..


அடுத்த பதிவுடன் விரைவில்..


அன்புடன்

உமா



No comments:

Post a Comment