Tuesday 12 October 2021

மலைப்படுகடாம் - பகுதி 2


            மிகவும் சுவாரஸ்யமான மலைப்படுகடாத்தின் பெயர் சிறப்பு பார்த்தோம். மற்ற பல சிறப்புகளை இப்பகுதியில் காண்போம்.   இப்பாடலின் முதற் பகுதியில் பல இசைக்கருவிகள் பற்றி மிக அருமையான உவமைகளோடு புலவர் காட்டியிருப்பார்.

    இங்கு முழவு, ஆகுளி, பாண்டில், கோட்டு, தும்பு, குழல், அரி, தட்டை, எல்லரி, பதலை என்று பல இசைக் கருவிகளைப் பற்றி பேசுகிறார்.

திரு மழை தலைஇய இருள் நிற விசும்பின்

விண் அதிர் இமிழ் இசை கடுப்ப, பண் அமைத்து

திண் வார் விசித்த முழவொடு

முழவின் ஒலி எப்படி இருக்கும் என்பதை இங்கு காட்டுகிறார். மழைபெய்யும் போது இருண்டு, வானமே அதிரும் படியாக மேகங்களிலிருந்து வரும் இடியோசைப்போல் முழங்குவது முழவு.  முழவின் ஓசையை நாம் கற்பனை செய்ய முடிகிறதல்லவா!!

இதில் இன்னுமொரு அழகும் உண்டு திருமழை என்று மழைக்கு ஒரு அடைமொழி தந்துள்ளார். செல்வத்தை கொடுக்கும் மழை.  கொடுப்பதுவும், கெடுப்பதுவும் எல்லாம் மழை என்று வள்ளுவரும் சொல்லவில்லையா! ஆண்டாள் கூட தீங்கின்றி நாடெல்லாம் மும்மாரி பெய்யத்தானே வேண்டுகிறாள். கொடுக்கும் மழை இனிமைதானே பயக்கும். அப்படியே இம்முழவோசை இனிமை பயக்குமே அன்றி தீமை செய்யாது.

நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில்

பாண்டில் என்ற கருவி உலோகத்தை உருக்கி செய்யப்பட்டது என்கிறார்.

கண் இடை விடுத்த களிற்று உயிர்த் தூம் பின்,

இளிப் பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு,

கண் இடை விடுத்த என்பது இரு கண்களுக்கு நடுவில் அமைந்த ஆண் யானையின் துதிக்கையைப் போன்றமைந்த, இனிய இசை தரும், ‘தூம்பு’ எனவும், கண் என்பது துளையையும் குறிப்பதாகக் கொண்டு, இடைவெளிவிட்டு துளையிடப்படிருக்கும் தூம்பு என்பதையும் குறிக்கும் விதமாக கொள்ளலாம்.

விளிப்பது கவரும் தீம் குழல்

இதுவும் ஒரு அழகான தொடர். கவரும் என்பது கையில் பிடித்திருத்தல் என்பதைக் குறிக்கும். குழல் கையில் பிடித்து ஊதக்கூடியது. மற்றது, ‘விளிப்பது கவரும்’ என்பது அழைப்பதை ஈர்க்கும், இனிய இசையால் மயக்கி கேட்பவரைக் கவர்ந்து அருகே அழைத்துவருவது, எனவும் கொள்ளலாம். கண்ணன் குழலோசை ஆநிரைகளை மயக்கச் செய்யவில்லையா!

துதைஇ,

நடுவு நின்று இசைக்கும் அரிக் குரல் தட்டை,

நடிவினின்று ஒலிக்கக்கூடியது தட்டை, இது கரடிகை என்னும் கருவியைக் குறிக்கும். கரடி கத்தினாற்போன்ற ஓசையுடைய பறை வகை  என்பார் அறிஞர். மூங்கிலால் செய்யப்பட்ட கருவி என்பாரும் உளர். இப்படி பல கருவிகளை உவமையுடன் சொல்லியிருப்பது, அக்கால கருவிகள் பற்றி நாமறிய உதவுகிறது. 

பல கருவிகளைப் பற்றி சொன்னவர், இவற்றை அக்கூட்டத்தவர் இப்படி எடுத்துச் செல்கின்றனர் என்று காட்டியிருப்பதும் அறியக் கூடியது.  

கார் கோள் பலவின் காய்த் துணர் கடுப்ப,

நேர் சீர் சுருக்கிக் காய கலப் பையிர்

இக்கருவிகளை துணியில் மூட்டைப் போல் கட்டி, அதை ஒரு கம்பின் இரு நுனியிலும் கட்டி காவடிப் போல் சுமந்து செல்வராம். பயணம் என்று வந்து விட்டால், பயணத்திற்கான பொருட்களை எடுத்துச் செல்லுதல் மிக முக்கியமானது. எடுத்துச் செல்வது சுமையானால் பயணம் கெடும். இவர்கள் செல்வதோ தமது திறமைகளைக் காட்டி பரிசு பெற. கருவிகள் மிக முக்கியமானவை.  பழுது படாமல் எடுத்துச் செல்லவேண்டும். சுலபமாகவும் இருக்க வேண்டும்.  இப்படி காவடி போல் எடுத்துச் செல்லும் அவர்கள் வழக்கம் இங்கு காட்டப்பட்டுள்ளது. இப்படி மூட்டையாக கட்டியிருப்பது பலாப்பழத்தை போல் இருந்ததாக காட்டுவதும் அழகு. கண்முன்னே அவர்களின் பயணம் தெரிகிறதல்லவா!!!

இப்படி பைகளில் கருவிகளை எடுத்துச் செல்லும் அக்கூட்டம் வந்த பாதை எப்படி இருந்தது என்றால்

படுத்து வைத்தன்ன பாறை மருங்கின், 15

எடுத்து நிறுத்தன்ன இட்டு அருஞ் சிறு நெறி

மரங்கள் அடர்ந்த அம்மலைப்பாதையில் படுக்க வைத்தது போல் பாறைகள் மிகப்பெரிதாக இருக்குமாம். அம்மலைப் பாதையோ எடுத்து நிறுத்தி வைத்ததுபோல் இருக்குமாம். செங்குத்தான சிறிய ஏறுவதற்கரிய மலைப்பாதையின் கடினத்தை மிக அழகாக காட்டுகிறார்.

தூ மலர் துவன்றிய கரை பொரு நிவப்பின்

மீமிசை நல்யாறு கடற் படர்ந்தாஅங்கு,

யாம் அவண் நின்றும் வருதும்;

ஒரு நல்ல ஆறானது மலையிலிருந்து வரும் பொழுது எப்படி அதன் செல்வங்களை எல்லாம் எடுத்து வருமோ அவ்வாறு தாமும் நன்னனிடமிருந்து மிகுந்த செல்வங்களை பெற்று வருகிறோம் என்று ஒரு அழகான உவமையுடன் சொல்லி ஆற்று படுத்துகிறார்.

      இசை நுவல் வித்தின் நசை எர் உழவர்க்குப்

நன்னனை அடைந்தால் நலம் பெறாலாம் என்று சொல்லும் போது ‘நசை ஏர் உழவர்’ என்ற உருவகத்தை பயன் படுத்துகிறார் புலவர்.

உழவர், ஏர் கொண்டு உழுது பயிரை பரிசாக பெறுவர். அதே போல் செல்லேர் உழவர், வில்லேர் உழவரை நாம் அறிந்திருப்போம்

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க

சொல்லேர் உழவர் பகை

என்ற குறள் மிக அழகாகக் காட்டுகிறது.

வில்லை ஏராகக் கொண்டு வெற்றியை பரிசாகச் கொள்பவர் வில்லேர் உழவர், சொற்களை ஏராகக் கொண்டு படைப்புக்களை, புகழை  பரிசாக பெறும் புலவர் சொல்லேர் உழவர். உழவர் என்பது பெருமையைக் குறிப்பதாக அமைகிறது. இங்கு நசையேர் உழவர் என்பவர், புகழ்ச்சியை ஏராகக் கொண்டு தாம் விரும்பும் வளத்தை பரிசாகப் பெற விழையும் பாணர். இது மிக அழகான சொல்லாடல். பிற்காலத்தவருக்கு இதுவே ஒரு மாதிரியாக இருந்திருக்கக்கூடும்.

    இப்படி பரிசு பெற்று வந்த ஒரு கூத்தர் மற்ற கூட்டத்தைச் சேர்ந்த கூத்தருக்கு நன்னனின் கொடைத்திறம், அவன் அரசாட்சியின் சிறப்பு எல்லாம் சொல்லி, நன்னன் மகன் நன்னனை சென்று சேர்ந்தீர்களானால் நீவீரும் வளம் பெற்றுத் திரும்பலாம் என்று கூறி ஆற்று படுத்துவதாய் அமையும் இப்பாடலில், ஒரு அழகிய பயணக்கட்டுரையை நாம் காண முடியும்.

முதலில் மலைப்பகுதியும் அதனைச் சுற்றியுள்ள காடு மலைநாடு, சிற்றூர் அங்கு வாழும் மக்கள் அவர்களின் விருந்தோம்பல் ஆகிய வற்றைச் சொல்லி துவங்கி சேயாற்றங்கரையில் இருக்கும் நன்னனின் கோட்டையை அடையும் வரை வழியில் அவர்கள் எதையெல்லாம் சந்திப்பார்கள், எப்படியெல்லாம் பயணம் செய்ய வேண்டும், அவர்களுக்கு எதிர் படும் இன்னல்கள், அவற்றை எவ்வாறு சமாளிப்பது என்று ஒரு நேர்த்தியான பயணக்கட்டுரைப்போல் இப்பாடல் அமைந்திருக்கும்.

ஒரு கட்டுரையிலே முதலில் அறிமுகம் இருக்குமல்லவா! அது போல் தான் சொல்லப் போகிற கருத்துக்களைத் தொகுத்து முதலில் கூறுகிறார். வழியின் தன்மை , அங்கு தங்கக்கூடிய நல்ல இடங்கள்,கிடைக்ககூடிய உணவு, வழியில் உள்ள மலைகள் , புதர்கள் காடுகள் அங்கிருக்கும் விலங்குகள், இதையெல்லம் கடந்தால் நன்னன் சபையை அடையலாம். நன்னன் தன்னை எதிர்ப்பவரை அழிப்பவன் ஆயினும் தன்னைப் புகழுபவருக்கு தன் அரசைத்தந்தாலும் நிறைவு பெறாதவன். அவ்வளவு ஈகை குணம் கொண்டவன். அது மட்டுமல்ல அவனது சபையில் உள்ள அறிஞர்கள் பரிசு நாடி வந்தவர் தங்களைப் பற்றி சொல்லும் திறமையற்றவராயினும் அவரது திறமையைப் பெரிதாக எடுத்துக் கூறி நன்மை செய்பவர். அப்படிப்பட்ட நல்லோர் சூழ்ந்த அவையை உடையவனின் மலைப்பற்றி கூறுகிறேன் கேட்பீர் என்று துவங்குகிறது இப்பகுதி.

இங்கு

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல்

என்ற வாக்கினுக்கேற்ப நன்னன் சபை நல்லறிஞ்சர்களால் விளக்கமுற்றிருந்தது என்பதை உணரமுடிகிறதல்லவா!

அவனை நாடிச்செல்லும் வழியில் அவனது பெரிய ஊர்கள் மிகுந்த செழிப்பானவை அங்கு வானம் மிகுந்து பெய்வதனால் ‘ இட்ட எல்லாம் பெட்டாங்கு விளை’யும் என்கிறார். இட்ட விதைகளெல்லாம் நினைத்தது போல் அருமையான பலனைக் கொடுக்குமாம். இப்படி வளம் நிறைந்து காணப்படுவது புதியதன்று அது அவன் நாட்டிற்கு இயல்பானது என்கிறார்.

இங்கு மூசுண்டைக்கீரை, எள், எள்ளைப் பற்றிச் சொல்லும் போது ஒருகைப்பிடி அளவுக்குள் ஏழுக்காய் என்ற அளவில் அடர்த்தியாக காய்த்திருந்ததாக அழகாக காட்டுகிறார். மேலும் யானைக்குட்டியின் கைப்போல வளைந்திருந்த திணை , வரகு, கொத்துக் கொத்தாக அவரை ஆகியன மிகுந்து விளையுமாம். இப்பயிர்களை தாக்கும் நோய்கள் வருவதில்லையாம் காரணம் மிகுந்த மழை என்கிறார். அதுமட்டுமல்ல இங்கு கடுகு, துவரை, நெல், சோளம், வேல் நட்டுவைத்தாற்போன்று நிறைந்து வளர்ந்து, ஆலைகளுக்கு எடுத்துச் செல்லுமளவிற்கு விளைந்திருக்கும் கரும்பு, அதுமட்டுமின்றி இஞ்சி, இஞ்சியை செய்யாப்பாவை என்கிறார், பாவை என்பது மரத்தால் செய்யப்பட்ட பொம்மை, இங்கு கிழங்கு வளர்ந்திருப்பது பாவை போல் இருப்பதால் செய்யாப்பாவை என்றார். மற்றும் யானையின் கால் போன்று பருத்து கிடக்கும் வள்ளிக்கிழங்கு, வாழை, மா, நாவல் போன்ற பழங்கள் மிகுதியாக விளைந்து வழிப்போக்கரை உண்ணும் படிதடுத்து நிறுத்துமாம்.

இப்படிப்பட்ட வளமான ஊர்களின் வழியாகச் செல்லவேண்டும். சென்றால் அடுத்து கானவர் குடில் வரும் அங்கு தேனும் திணையும் புலால் உணவும் சுற்றத்தோடு உண்ணும் அளவிற்குப் பெறலாம். முன்பு காவடி பார்த்தோமல்லவா! அவ்வாறே, இக்கானவர் யானைத் தந்தத்தின் இருபுறமும் உணவுப் பொருட்களைக் கட்டி எடுத்துச் செல்வர் என்று காட்டுகிறார். இங்கு இரவு தங்கி விட்டு அடுத்து படுகர் வாழும் மலைப்பகுதிக்குச் செல்லுங்கள். அவர்களிடம் நன்னனைக் காண செல்கிறோம் என்றவுடனேயே, அவர்களுடன் உரிமையுடன் பழகலாம். தமது இல்லம் போன்று எங்கும் செல்லலாம் என்றும் அங்கு கிடைக்கும் விருந்தோம்பலையும் அழகாகக் காட்டுகிறார்.

மிக அழகான ஒர் எச்சரிக்கையும் செய்கிறார் புலவர். நீங்கள் நன்னைக்கண்டு பரிசுகள் பெற சென்று கொண்டிருக்கிறீர்கள். இவர்களின் விருந்தோம்பலில் அதை மறந்து மலைக்குறவர் இல்லத்திலேயே தங்கிவிட நினைக்கக் கூடும். அதுமட்டுமல்ல இங்கு விளையும் குவளை மலர்களை மிகுதியாக முகர்ந்தாலும், அக்குறவ மக்களின் விளையாட்டிடத்தைக் காண்டாலும் உயிர் பதைக்கும். எனவே அப்படி தங்காமல் விரைந்து நில நாட்டை அடையுங்கள் என்று அறிவுறுத்துகிறார்.

விளை புனம் நிழத்தலின் கேழல் அஞ்சி
புழைதொறும் மாட்டிய இரும் கல் அடாஅர்
அரும் பொறி உடைய ஆறே நள் இருள் . . . .[195]
அலரி விரிந்த விடியல் வைகினிர் கழிமின்

அப்படி செல்லக் கூடிய வழியின் இடர்களை இப்பொழுது சொல்கிறார். அங்கு கானவர் காட்டுப்பன்றிகளை பிடிக்க பொறிகள் வைத்திருப்பர். இதற்கு ‘இருக்கல் அடாஅர்’ என்று பெயர். காட்டுப்பன்றியைப் பிடிக்க, இன்று எலிக்கு வடை வைப்பதுபோல் அல்லது காட்டு விலங்குகளைப் பிடிக்க இறைச்சி வைப்பது போல் அன்றும் இறைச்சியை வைத்து கட்டியிருப்பர். பன்றி அவ்விறைச்சியை இழுத்ததும்  அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் பெரிய பாறை அதன் மேல் விழுந்து பன்றி கொல்லப்படும். இருட்டில் சென்றால் அப்பாறையில் மோதி விபத்து உண்டாகலாம் எனவே விடியலில் செல்லுங்கள் என்று வழிகாட்டுகிறார்.

மேலும்

பகல் நிலை தளர்க்கும் கவண் உமிழ் கடும் கல்

இரு வெதிர் ஈர் கழை தத்தி கல்லென

கரு விரல் ஊகம் பார்ப்போடு இரிய

உயிர் செகு மரபின் கூற்றத்து அன்ன

வரும் விசை தவிராது மரம் மறையா கழிமின்

இவர்கள் திணைப்புலம் காக்கும் போது யானைகளை விரட்ட இடும் கவண்கல் உயிரைப் போக்குவதாய் இருக்கும். எனவே மரங்களின் பின் மறைந்தவாறே செல்லுங்கள். மிகத் தொலைவிலிருந்து வீசப் படும் கவண்கல், அவ்வளவு துல்லியமாக ஓசை கேட்கும் இடத்தில் உள்ள விலங்கினை குறிபார்த்து எய்யப் படும் என்பது சிறப்பாக பெறப்படுகிறது.

உரவு களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி

இரவின் அன்ன இருள் தூங்கு வரைப்பின்

குமிழி சுழலும் குண்டு கய முடுக்கர்

அகழ் இழிந்து அன்ன கான்யாற்று நடவை

வழூஉம் மருங்கு உடைய வழாஅல் ஓம்பி . . . .[215]

பரூஉ கொடி வலந்த மதலை பற்றி

துருவின் அன்ன புன் தலை மகாரோடு

ஒருவிர்ஒருவிர் ஓம்பினர் கழிமின் . . .   

வழியில் ஆற்று மடுக்கள் இருக்கும். அதில் யானையை விழுங்கக்கூடிய முதலைகாள் இருக்கும். அடர்ந்த மரங்கள் கொண்டப் பகுதியாதலால் இரவினைப் போல் இருள் சூழ்ந்திருக்கும். ஆற்றின் ஓரத்தில் பாதை வழுக்குவதாய் இருக்கும். எனவே குழந்தைகளுடன் அங்கு படர்ந்திருக்கும் வலிமயான கொடிகளைப் பற்றிக்கொண்டு ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பாக உதவிக்கொண்டு செல்வீர். இன்றும் Treking செல்லும் எவரும் இப்படி ஒருவருக்கொருவர் பாதுகாப்பாய் செல்வது நாமறிந்தது தானே!!

இவ்வளவு நுணுக்கமாக வழியையும், பாதையில் ஏற்படும் இன்னல்களையும் கூறி அதை எவ்வாறு கடக்க வேண்டும் என்பதையும் விளக்கியிருப்பது புலவரது நுண்மாண் நுழைபுலத்தைக் காட்டுகிறது.

இவையன்றியும் காரியுண்டிக் கடவுள் என்று விஷம் அருந்தி நீலகண்டனாக திகழும் சிவபெருமானை வணங்குவது பற்றியும் கூறப்பட்டுள்ளது.

அடுத்ததாக மழைப்பொழியும் பொழுது மயில் தோகைவிரித்தாடும், குரங்குகள் தங்கள் குட்டிகளுடன் உயர்ந்த மரங்களில் தாவி விளையாடும், பாறை இடுக்குகளில் தேன் கூடுகள் இருக்கும் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டே செல்லாதீர்கள். அப்படி மலைத்து பார்த்துக் கொண்டிருந்தால் வழுக்கி விழவும், பாதை தவறவும் வாய்ப்புள்ளது. அதனால் விரைந்து கானகம் செல்லுங்கள்.

நெறி கெட கிடந்த இரும் பிணர் எருத்தின்

இருள் துணிந்து அன்ன ஏனம் காணின்

முளி கழை இழைந்த காடு படு தீயின்

அங்கு காட்டுத்தீயால் வெந்து போன பன்றியின் கறி கிடைக்கும் அதை சுத்தப்படுத்தி உண்ணுங்கள், சுனை நீரைப் பருகுங்கள். வழியில் தங்காமல் குகைகளில் உங்கள் வீடுகள் போல் பாதுகாப்பாகத் தங்குங்கள்.

அல் சேர்ந்து அல்கி அசைதல் ஓம்பி

வான்கண் விரிந்த விடியல் ஏற்றெழுந்து

கானகம் பட்ட செம் நெறி கொண்மின் . .

இரவில் நடக்காமல் விடியலில் செல்லுங்கள். வழியில் மலைப்பாம்பு மரம் போல் படுத்திருகும், ஒதுங்கிச் செல்லுங்கள். விழுந்துக் கிடக்கும் பழங்கள் எல்லாவற்றையும் உண்ணாதீர்கள். பூக்கள் எல்லாவற்றையும் நுகராதீர்கள்.இப்படி உண்ணக்கூடியது எது தவிர்க்க வேண்டியது எது என்பதை மிக அழகாகக் காட்டுகிறார்.

அக்காடானது குறவர்களே வழி தடுமாறும் படியாக ஞாயிறே தெரியாத காடு. அங்கு வழிதவறினால், உயர்ந்த பாறைகளில் அமர்ந்து உங்கள் இசைக்கருவிகளை இசையுங்கள், அங்கு இருக்கும் கானவர் வந்து வழி காட்டுவர். 

உண்டற்கு இனிய பழனும் கண்டோர்

மலைதற்கு இனிய பூவும் காட்டி

ஊறு நிரம்பிய ஆறு அவர் முந்துற

நும்மின் நெஞ்சத்து அவலம் வீட . . . .[285]

இம்மென் கடும்போடு இனியிர் ஆகுவிர்

கானவர் இனிய பழங்கள் கொடுத்தும் பூக்கள் சூட்டியும் உங்கள் அவலத்தைப் போக்குவர் என்று வழி காட்டுகிறார்.

இப்படி அக்கானகத்தில் இளைப்பாறி செல்கையில் மலையில் கேட்கும் பலவித ஒலிகளைக் கேட்டவாறே கடந்துச் செல்லலாம் என்கிறார். இதை நாம் முற்பகுதியில் பார்த்தோம்.

பண்டு நற்கு அறியா புலம் பெயர் புதுவிர்

சந்து நீவி புல் முடிந்து இடுமின் .

இதில் நீங்கள் செல்லும் வழியில் புற்களை சேர்த்து முடித்துச் செல்லுங்கள். புதிதாக வருபவர்களுக்கு அது உதவியாக இருக்கும் என்று காட்டில் பாதை அறியும் சில பழக்கங்களையும் காட்டுகிறார்.

அடுத்து கோவலர் வாழும் பகுதிக்குச் செல்லுதல். கோவலர்களின் செயல்கள் அவர்களின் விருந்தோம்பல். வேடர் செய்கை, வழியில் குளித்து சுனை நீரருந்தி, குடிசைகளில் அவரை புளிக்குழம்பு உண்ணல் இப்படி வழினெடுக விவரித்துக் கொண்டே செல்கிறார். கானவர் இடம் விட்டு கோவலர், வேடர் இருக்கும் மேட்டு நிலம் தாண்டி உழவர் இருக்கும் நிலத்தை இப்பொழுது காட்டுகிறார். அங்கு

முள் அரித்து இயற்றிய வெள் அரி வெண் சோறு . . . .[465]

வெள்ளரிக்காயை கத்தியால் வெட்டி இட்டுச் செய்த வெண்சோறு கிடைக்கும் என்கிறார். இப்படியே இந்த நிலம் சேயாற்றில் இரங்கும்.  அதன் வளத்தை எல்லாம் சொல்லி கண் இனிக்கப் பார்த்துக் கொண்டே செல்லுங்கள் என்கிறார்.

இப்படியே நம்மை அழைத்துச் சென்று சேயாற்றின் கரையில் அமைந்த ‘செங்கண்மா’ என்ற நகரத்தில் நிறுத்துகிறார். ‘செங்கண் மா’ என்பது சிவந்த கண்களைக் கொண்ட ஒரு விலங்கு. அவ்விலங்கு நிறைந்த பகுதி என்பதால் காரணப் பெயராக அமைந்து இன்று ‘செங்கம்’ என்று சுருங்கி விட்டதாக ஆராய்ச்சியாளர் காட்டுகின்றனர்.. நன்னனின் இவ்வூர்

நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின்

பதி எழல் அறியா பழம் குடி கெழீஇ

வியல் இடம் பெறாஅ விழு பெரு நியமத்து . . . .[480]

யாறு என கிடந்த தெருவின் சாறு என

இகழுநர் வெரூஉம் கவலை மறுகின்

கடல் என கார் என ஒலிக்கும் சும்மையொடு

மலை என மழை என மாடம் ஓங்கி

துனி தீர் காதலின் இனிது அமர்ந்து உறையும் . . . .[485]

பனி வார் காவின் பல் வண்டு இமிரும்

நனி சேய்த்து அன்று அவன் பழ விறல் மூதூர் .

‘செங்கண்மா’ என்பது சேயாற்றின் கரையில் உள்ளது. அங்குப் பயன்படுத்திய செல்வம் போக, மிஞ்சியிருக்கும் செல்வம் கேட்பாரற்றுத் தூங்கிக் கிடக்கும். குடிமக்கள் அந்த ஊரை விட்டு செல்லாமல் நீண்ட காலமாக அங்கேயே வாழும் குடிமக்களாகவே இருப்பர். காலியிடம் இல்லாமல் நெருக்கமாகக் கட்டப்பட்ட வீடுகளுடன் அதன் கடைவீதி அமைந்திருக்கும். நீரோடும் ஆறுபோல் மக்கள் நடமாடும் தெருக்கள் அமைந்திருக்கும். அந்த ஊரைக் காண்பதற்கு முன்னர், அதனை இகழ்ந்து பேசியவர்கள் மக்கள் வெள்ளத்தைப் பார்த்து வியப்படைவர். குறுந்தெருக்களில் மக்களின் ஆரவாரம், கடலொலி போலவும், இடிமுழக்கம் போலவும் கேட்டுக்கொண்டேயிருக்கும்.

மாடங்கள் மலைபோல் மழைமேகத்தைத் தொடும் அளவு ஓங்கியிருக்கும். ஊரைச் சுற்றியுள்ள காட்டில் பனி பொழிந்துகொண்டேயிருக்கும். பனி பொழியும் அந்தக் காட்டில் பல்வேறு வண்டினங்களின் ஒலி கேட்டுக் கொண்டிருக்கும். அந்த இடத்துக்குச் சென்று விட்டால், நன்னன் அரண்மனை அங்கிருந்து அதிக தொலைவில் இல்லை என்று உணர்ந்து கொள்ளுங்கள் என்று நன்னன் அரண்மனையின் அருகில் நம்மை நிறுத்துகிறார்.

நன்னன் ஊரில் இருப்பவர் மன்னனுக்கு வரிசெலுத்துவது போல் கடமையுடன் உங்களுக்கு விருந்து செய்வர் என்று சொல்லி நன்னனின் வளம் சொல்லி அங்கு காணும் பல்வேறு பொருட்களையும் கூறி நன்னனின் நாளோலக்கம் என்னும் அரசவைக்கு இட்டுச் செல்கிறார்.

கூத்தர்களே அங்கு அவனைப் புகழும் முன் உங்கள் திறமையைக் காட்டும் பண்ணிசையை இசையுங்கள். பிறகு அவனை புகழுங்கள். அவன் நீங்கள் வந்ததே போதும் என்று உங்களை தன்னுடன் அழைத்துச் செல்வான். அவனை அடைவோர் சேயாற்றின் மணலைவிட அதிகமானவர். நன்னனோ சேயாற்றின் வெள்ளம் போல் உதவுபவன். நீங்கள் அவனை விரும்பிச் செல்கிறீர்கள் அவனோ உங்களைக்காட்டிலும் உவகை கொண்டவனாக உதவுவான்.  நவிர மலையில் பெய்யும் மழைப் போல் வளம் தருவான் என்று அவர்களை ஆற்றுப்படுத்துகிறார்.

இவ்வளவு அழகாக இராண்ய முட்டம் என்கிற இன்றைய நீலகிரியிலிருந்து சேயாற்றங்கரையிலுள்ள நன்னனின் ‘செங்கண்மா’, இன்றைய திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ‘செங்கம்’ பகுதி வரை நம்மை கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார். 

இப்பாடலில் பண்டைய தமிழின நானில மக்களின் பண்பாடு, விருந்தோம்பல், பழக்கவழக்கம், செழுமை இவற்றை சொல்லியிருப்பது தமிழர்களாகிய நாம் பெருமையுடன் நினைத்து பார்க்கவேண்டியது.

இன்று இதில் சொல்லப்பட்டுள்ள வழியை கண்டறிந்து இதன் வழிச் சென்று இப்பாதையை சமுக தளத்தில் பதிவு செய்தவர்களும் இருக்கிறார்கள். இது மட்டுமின்றி இன்னும் நமது கலாசாரத்தை அறிய பல ஆராய்ச்சிகளுக்கு இப்பாடல் உதவுவதாய் அமைந்திருக்கிறது.

அண்மையில் https://www.youtube.com/watch?v=5Lmyg9-zj7A&t=3023s என்ற you tube தளத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாடு செய்த நிகழ்வில் மதுசூதனன் கலைச் செல்வன் அவர்கள் பகிர்ந்து கொண்ட செங்கம் சிற்றூரைப் பற்றிய பதிவில் இவ்வூர் பற்றிய செய்திகள் மிகச் சிறப்பாக ஆவனப்படுத்தப்பட்டுள்ளது. அனைவரும் இத் தளத்தை கண்டு இன்பம் துய்க்க வேண்டும் என்பது எனது அவா. மிகச் சிறப்பான பதிவு. யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம். .

மலைபடுகடாம் என்னை மலைக்க வைத்தது என்பதில் ஐயமில்லை.

சங்க இலக்கியத் தொடரில் நாம் ஒரு சிறு துளிகளையே சுவைத்திருக்கிறோம். அதுவோ கடல் போல் மிகப் பெரியதும் ஆழமானதுமாக வியக்கச் செய்கிறது. இத் தொடர் இச்சங்க இலக்கியங்களை மேலும் மேலும் படித்துணரும் ஆர்வத்தைத் தூண்டும் என்று நம்புகிறேன்.

எனது மற்றொரு தொடர் கம்பராமாயண நயம் பாராட்டும் விதமாக அமைந்துள்ள ‘கம்பன் கவித்தேன்’, சுவைக்க அழைக்கிறேன்.


அன்புடன்
உமா